Search This Blog

17.10.09

50 ஆண்டுகாலமாக தீபாவளியைப் புறக்கணிக்கும் 12 கிராமங்கள்


பட்டாசு இல்லை - பலகாரம் இல்லை- புத்தாடை இல்லை
50 ஆண்டுகாலமாக தீபாவளியைப் புறக்கணிக்கும் 12 கிராமங்கள்

தமிழனுக்குச் சொந்தமில்லாத பண்டிகையான தீபாவளியை சிவகங்கை மாவட்டத்தின் 12 கிராம மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக கொண்டாடாமல் புறக்கணித்து வருகின்றனர்.

ஆரியர்களின் திருவிழாவான தீபாவளி, எவ்வித காரண காரியமும் இல்லாமல் அறியாமையால் தமிழ்நாட்டிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையை பகுத்தறிவாளர்கள் புறக்கணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 12 கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில்லை. தீபாவளிக்காக புத்தாடைகளோ, இனிப்பு வகைகளோ, பட்டாசுகளோ இப்படி எதுவுமே வாங்குவதில்லை. அதனை ஒரு பண்டிகையாகவே அவர்கள் கருதுவதில்லை. எஸ்.மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைப்பட்டி, சந்திராபட்டி, எம்.வலையப்பட்டி, கச்சாப்பட்டி,தொப்பபட்டி,கிலுகிலுப்பைபட்டி, இடைப்பட்டி, திருப்பதிப்பட்டி, கலுங்குப்பட்டி மற்றும் இந்திரா நகர் என சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள 12 கிராம மக்களும் தீபாவளி கொண்டாடுவதில்லை. கடந்த 50 ஆண்டுகளாக இந்த முடிவை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

கூடுதல் கடன் சுமை

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் கால கட்டத்தில்தான் (அக்டோபர்-நவம்பர் மாதம்)அப்பகுதியில் விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெறும் காலம் ஆகும்.இக்காலகட்டத்தில் விவசாயப் பணிகளில் தீவிரக் கவனம் செலுத்துவதுடன் அதற்காக பெரும் தொகை பணமும் செலவு செய்யப்படுகிறது. இச்சூழ்நிலையில் ஆரியர்களால் கட்டுக் கதையாக உருவாக்கப்பட்டு அது தமிழர்களிடத்திலும் திணிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பண்டிகையைக் கொண்டாடுவது என்பது கூடுதல் கடன் சுமையைத்தான் உருவாக்கும் என்பது இங்குள்ள மக்களின் கருத்தாக உள்ளது.

வெளிநாடுகளிலும் கொண்டாடுவதில்லை

இந்த 12 கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றாலும் கூட அங்கும் தீபாவளி கொண்டாடுவதில்லையாம். அதேபோல் இந்தியாவின் பிற பகுதிகளில் அவர்கள் எங்கு வசித்தாலும் கூட தீபாவளியைக் கண்டு கொள்வதில்லை என்கிறார்கள். மேலும் இந்தக் கிராமத்துப் பெண்களை வேறு கிராமத்து இளைஞர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தாலும் கூட அவர்களுக்கு தலை தீபாவளி எல்லாம் கிடையாது.-அவர்களுக்கு தீபாவளி சீர் என்பதெல்லாம் வழங்கப்படுவதில்லை என்கிறார்கள் இங்குள்ள இளைஞர்கள்.

பொங்கல்தான் விழா

விவசாய அறுவடை எல்லாம் முடிந்து மக்களிடம் பணம் புரளும் காலகட்டமான தை மாதத்தில் கொண்டாடப்படும் தமிழர் திருவிழாவான பொங்கல் திருநாளைத்தான் இப்பகுதி மக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை நிரூபிக்கும் பல்வேறு வீர விளையாட்டுகளும் பொங்கல் திருவிழாவின் போது ஒரு வார காலத்திற்கு இப்பகுதி மக்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சென்னை, கோவை போன்ற நகரங்களில் வசிக்கும் இப்பகுதி மக்கள் தவறாமல் பொங்கல் திருவிழாவில் உற்சாகத்துடன் வந்து கலந்து கொள்கிறார்கள். தீபாவளியைப் புறக்கணிக்கும் 12 கிராம மக்களும் பாராட்டுக்குரியவர்களே! இது போன்ற சிந்தனைகள்இந்தியா முழுவதும் பரவவேண்டும்.


-------------------"விடுதலை" 17-10-2009


0 comments: