Search This Blog

4.10.09

மைல்கல்லுக்கு ஆயுதபூஜையாம்! நவீன வரகுணபாண்டியர்கள்!!


நவீன வரகுணபாண்டியர்கள்

கி.பி.792 முதல் 835 வரை பாண்டி நாட்டை ஆண்டு வந்தவன் வரகுணபாண்டியன் எனும் அரசன்.


வீராதி வீரனான அவன் பக்திப்படுகுழியில் வீழ்ந்து பகுத்தறிவை இழந்த மகா மகா மூடன்.

படித்தால் இப்படிக்கூடவா ஒருவன் இருப்பான் அதுவும் அரசனாக இருந்தவனே இப்படியும் இருந்திருக்க முடியுமா? எளிதில் நம்ப முடியவில்லையே; என்னதான் பக்திப் பாம்பு கொத்திக் குத்தினாலும் - இப்படியா கூறு கெட்டவனாக இருப்பான் என்று எவரும் கருதவே செய்வார்கள்.

கோயில் முற்றத்தில் நாய் மலம் கிடந்தது. பணியாள் என்ன செய்வான்? துடைப்பத்தால் அப்பறப்படுத்தினான். சரியாகத் தானே செய்திருக்கிறான்.
வரகுணப் பாண்டியனுக்கோ மீசை துடித்தது. அட அற்பப்பயலே! ஆண்டவன் சந்நிதானத்தில் நாய் போட்ட விட்டை மலம் என்றால் சாதாரணமா?

நாய் விட்டை என்றாலும் அது கிடக்கும் இடம் ஆண்டவனுக்குரிய இடமாயிற்றே புனிதமானதாயிற்றே! என்று கூறி, மணி பூண்ட தன் திருக்கரம் இரண்டாலும் எடுத்தான் என்றால் பக்தியின் பரம பாமரத்தனத்தை பரிதாபத்தை என்னென்று எடுத்துரைப்பது!

ஒரு நாள் கோயில் சாமியின் நகையைப் புரோகிதன் திருடினான். அவனைக் கையும் களவுமாகப் பிடித்த சேவகன் வரகுணன் முன் கொண்டு வந்து நிறுத்தினான்.

அந்த அர்ச்சகன் உடல் முழுவதும் திருநீற்றுப் பட்டை, நெற்றியிலும் அதே! கழுத்திலும் உருத்திராட்சக் கொட்டை சிவமேனியனாகக் காட்சி அளித்தான் அந்தப் புரோகிதத் திருடன்.


சிவன் கோலத்தில் இந்த அடாத செயலைச் செய்தனையே, உன் தகுதிக்கு இது அழகோ என்று அரசன் அரற்றவில்லை.

மாறாக மன்னவன் ஆசனத்திலிருந்து ஓடோடிச் சென்று புரோகிதன் கையில் இருந்த விலங்கினை அகற்றி எறிந்து, அந்தத் திருடன் காலில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டான். காரணம் அவன் திருட்டுச் செயலல்ல அவன் அணிந்திருந்த சிவச் சின்னமும் கோலமும் தான்.

குளம் ஒன்றில் தவளைகள் கத்தின. அரசர் காதுக்கு அந்தச் சத்தம் எப்படி கேட்டது தெரியுமா? அரகரா அரகரா என்று காதில் விழுந்ததாம்.

இந்தத் தவளைகளுக்கு என்னே சிவபக்தி என்று கண்ணீர் உகுத்து, அந்தக் குளத்தில் கருவூலகத்திலிருந்த பொற்காசுகளையெல்லாம் வாரி இறைத்தானாம்.

இதுபோல இன்னும் செய்திகள் உண்டு வரகுணனைப்பற்றி. இது ஏதோ நமது கைச் சரக்கல்ல திருவிடை மருதூர்மும் மணிக்கோவைப் பாடலில் காணப்படும் சரக்குகள்தான் இவை:

வெள்ளை நீறு மெய்யிற்கண்டு கள்ளன் கையிற் கட்டவிழ்ப்பித்தும்
ஓடும் பன்னரி யூளைகேட்டரனைப்
பாடின வென்று படாம்பல வளித்தும் குவளைப் புனலிற் றவளை யரற்ற
ஈசன் றன்னை யேத்தின வென்று
காசும் பொன்னுங் கலந்து தூவியும்
வழிபடு மொருவன் மஞ்சனத் தியற்றிய
செழுவித எள்ளைத் தின்னக் கண்டு
பிடித்தலு மவனிப் பிறப்புக் கென்ன
இடித்துக் கொண்டவ னெச்சிலை நுகர்ந்தும்
மருதா வட்டத் தொருதனிக் கிடந்த
தலையைக் கண்டு தலையுற வணங்கி
உம்மைப் போல வெம்மித் தலையும்
கிடக்க வேண்டுமென் றடுத்தடுத் திரந்துங்
கோயின் முற்றத்து மீமிசை கிடப்ப
வாய்த்த தென்று நாய்க்காட்ட மெடுத்துங்
காம்பவிந் துதிர்ந்த கனியுடுக் கண்டு
வேம்புகட் கெல்லாம் விதான மமைத்தும்
விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று
புரிகுழற் றேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வரகுண தேவரும்

எப்பொழுதோ எட்டாம் நூற்றாண்டில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு இப்பொழுது என்ன அவசரம் என்ன பொருத்தம்?

இதோ ஒரு சேதி சேலம் கழகத் தோழர்கள் சி.பூபதி; ஆர். இளவரசன் ஆகியோர் சேலம் பதிப்பு தினத்தந்தியில் (29.09.2009 பக்கம் 15) வெளிவந்த ஒரு செய்தியை விடுதலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். (முதல் பக்கம் பெட்டி செய்தி காண்க)

(மைல்கல்லுக்கு ஆயுதபூஜை

ஏற்காடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணி யாளர்கள், ஏற்காடு மலைப்பாதையில் உள்ள மைல்கல்லுக்கு ஆயுத பூஜை கொண்டாடினார்கள். இதில் உதவிக் கோட்ட பொறியாளர் அசோக்குமார், உதவி பொறியாளர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்க சேலம் மாவட்ட பொருளாளர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மைல் கல்லுக்கு பூஜை நடப்பதை படத்தில் காணலாம்.)


பார்த்தீர்களா செய்தியினை. இவர்கள் ஒன்றும் பாமரர்கள் அல்லர்; படித்தவர்கள்; பொறியியல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் அரசு அதிகாரிகள்; கை நிறைய சம்பளம் வாங்குபவர்கள்.

இத்தகு நிலையில் உள்ளவர்கள் மைல் கல்லுக்கு மாலை போட்டு பொட்டிட்டு கும்பிடுபோடுகிறார்கள் என்றால் இவர்களுக்கும் அந்த வரகுணபாண்டியனுக்கும் என்ன வேறுபாடு?

கழகப் பொதுக் கூட்டங்களில் நாம் சொல்லுவது உண்டு.

மைல் கல்லுக்குக்கூட மாலை போட்டு மைல் லீஸ்வரர்! என்று அழைப்பார்கள். வண்டியில் ஏற்றிச் செல்லப்படும் செங்கல் குவியலில் ஒன்று கீழே குத்திட்டு விழுந்தால் அதற்கும் குங்குமப் பொட்டிட்டு செங்கல்லீஸ்வரர் என்பார்கள் என்று கழகக் கூட்டங்களில் சொல்லுவதுண்டே!

சொல்லுவது என்ன, இதோ பார் நாங்கள் மைல் லீஸ்வரர் கடவுளை கண்டுபிடித்து விட்டோம் என்று காட்டிக் கொண்டு விட்டார்களே

விபத்து நடக்காமல் இருக்க சாலை விதிகள் உண்டு. இன்னும் ஏராளமான காரணங்கள் உண்டு. அவற்றைக் கடைப்பிடித்தால் விபத்துக்கள் குறையும். அதை விட்டு விட்டு மைல் கல்லை விழுந்து கும்பிட்டால் விபத்துகள் நடக்காது என்று நம்பினால் இவர்களின் படிப்பறிவை பக்தியால் பலியான பகுத்தறிவை என்னென்று நகைப்பது!

இந்திய அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கான அடிப்படைக் கடமை என்னும் பகுதியில் நான்காம் (ஏ) பாகம் 51 ஏ இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் என்ற பகுதியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

விஞ்ஞான ரீதியான அணுகுமுறை மனிதாபிமானம் மற்றும் ஆராய்ச்சி ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவை வளர்க்-கப்பாடுபட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு குடிமகனின் கடமையும்கூட என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இங்கு என்னடா என்றால், பொறியியல் படித்த அதிகாரிகளே மைல் கல்லுக்கு மாலை போட்டு அதுவும் ஆயுதப் பூசை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

உருப்படுமா நாடு?

தந்தை பெரியார் அவர்கள் மிக அழகாக நச்சென்று சொன்னாரே, நம் நாட்டுப் படிப்பு என்பது வயிற்றுப் பிழைப்புக்கு லைசென்ஸ் என்று அது பொய்யாகிப் போய் விடலாமா!

அதனைத்தான் இந்த பொறியியல் படிப்பாளிகள் நிரூபித்துக் கொண்டி-ருக்கிறார்கள்.

--------------------மின்சாரம் அவர்கள் 3-100-2009 "விடுதலை"ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: