Search This Blog

8.10.09

ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை ஓர் ஆய்வு

முள்வேலிக்குள் முடக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கே விடிவில்லாத நிலையில்
தமிழ்நாட்டில் அகதிகளாக இருப்பவர்களுக்குக் குடியுரிமை என்பது நியாயமானதே!
இதிலும்கூட அரசியல் என்பது தேவையற்றது

தமிழர்
தலைவர் அறிக்கை

தமிழ்நாட்டில் அகதி களாக உள்ள ஈழத் தமிழர் களுக்குக் குடியுரிமை என்ற தி.மு.க.வின் நிலைப்பாட்டை ஆதரித்தும், இதிலும்கூட அரசியல் பார்வை தேவை யற்றது என்று கூறியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காஞ்சியில் தி.மு.க. நடத்திய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்மானம், இங்கே அகதிகளாக வந்து அகதிகள் முகாம்களிலே வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நம் நாட்டில் குடியுரிமை வழங்க மத்திய அரசினை வற்புறுத்தும் தீர்மானம் ஆகும்!

இதனை உண்மையாகவே தமிழர்களுக்காகப் பரிவு காட்டுவோர் அனைவரும் வரவேற்பர். நடிப்புக்காக, ஒப்புக்காக, தேர்தல் வெற்றி நப்பாசையைக் கொண்டு, தனி ஈழம் பெற்றுத் தருவோம் என்றெல்லாம் திடீரென்று அன்று வாய்ச்சவடால் அடித்த எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, தேர்தல் தோல்விக்குப் பிறகு இதுபற்றி இதுவரை வாய் திறக்கவே இல்லை.

எதிர்க்கட்சித் தலைவரின் ஆற்றாமை

ஆனால், இப்போது அன்றாட அறிக்கைத் தலைவியாக அரசியல் நடத்தும் இந்த அம்மையார், மேற்கண்ட தீர்மானத்தால் ஈழத் தமிழர் அகதிகளுக்கு ஒரு பயனும் விளையாது என்று கூறி, தனது ஆற்றாமையை, கலைஞர்மீது, தி.மு.க. அரசுமீது உள்ள ஆத்திரத்தைக்காட்டி, தனது அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்!

இதனால் மிகப்பெரும்பலன், அகதிகளாக வந்த இவர்கள் மீண்டும் இலங்கையில் ஈழப் பகுதியில் சொந்த மண்ணுக்குத் திரும்புவது அவ்வளவு எளிதல்ல என்ற நிலை உள்ளது. காரணம், அங்கேயுள்ள ராஜபக்சே என்ற கொடுங்கோலன் சிங்கள வெறித்தனத்தைக் கொட்டி, மூன்றரை லட்சம் தமிழர்கள் தமிழ்க் குடும்பங்களை போர் முடிந்து சுமார் 6 மாதங்கள் ஆன நிலையில்கூட, இன்னமும் முள்வேலிக்குள்ளே அடைத்து வைத்து, அடிமைகளிலும் மிகக் கேவலமான நிலையில் வைத்துள்ளார்.

யார் சொன்னாலும் கேட்க மறுக்கும் ராஜபக்சே

அய்.நா., அல்லது இதைக் கண்டிக்கும் அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள் ஆகியவற்றின் நியாயமான அறிவுரைகளையே கேட்க மறுத்து, அங்குள்ள முள்வேலித் தமிழர்களை மீண்டும் அவரவர் வீடு திரும்ப முடியாமல் அடைத்து வைத்துக் கொடுமையின் கோரத்தாண்டவம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

அதோடு இந்திய அரசின் வேண்டுகோளை அவ்வரசு மதிக்கவே இல்லை. மேலும், சீனா, பாகிஸ்தானுக்கு அந்நாட்டில் இடம் தந்து, இந்திய அரசின் பாதுகாப்பு, இறையாண்மைக்கே ஆபத்து விளைவித்துக் கொண்டிருக்கிறது.

கெஞ்சும் - கொஞ்சும் மத்திய அரசு

இந்திய அரசும், அங்குள்ள முள்வேலித் தமிழர்களாக உள்ளவர்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்ப மயிலே மயிலே இறகு போடு! என்று கெஞ்சிக் கேட்கிறது அல்லது கொஞ்சிப் பேசுகிறது.

ஒரு கடுமையான எச்சரிக்கை இந்தியா தரப்பிலிருந்து குறிப்பிட்ட கெடுவுக்குள் அவர்களை அவரவர் இடத்தில் குடியமர்த்தாவிட்டால், கடும் விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்பதை உள்ளடக்கியதாக அவ்வெச்சரிக்கை அமையவேண்டும்.

இந்நிலையில், இங்குள்ள நம் ஈழத்துச் சொந்தங்களுக்கு, நாம் குடியுரிமை வாங்கித்தருவதன்-மூலம், அவர்கள் உள்ளபடியே முகாம்களுக்குள்ள வேற்றாராக எண்ணாது அவரவர் பணி செய்து, குடியுரிமை (Stateless People) மூலம் நமக்குள்ள அத்துணை உரிமைகளையும் அவர்கள் அனுபவிக்கும் நிலையை உருவாக்கிடலாம்!

தாய் மண்ணுக்குச் செல்ல விரும்பினால்...

அவர்கள் தங்களது தாய் மண்ணிற்குச் செல்ல விரும்பினால் அதற்குரிய சூழல் அங்கே வந்து, அவர்கள் திரும்பிட எந்தத் தடையும் இல்லையே!

இன்று அவர்கள் காவல் துறை கண்காணிப்பில்தான் உள்ளார்கள்; அவர்களது குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்புகளைக்கூட வழங்க முடியாத சூழ்நிலைதானே உள்ளது?

இவை குடியுரிமைமூலம் முற்றாக மாற்றப்படுமே!

ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தமும்,
தமிழர்கள் குடி அமர்த்தலும்

ஸ்ரீமாவோ _ சாஸ்திரி ஒப்பந்தத்தின் விளைவாக நாடில்லா மக்கள் என்று கூறி இலங்கைத் தமிழர்களில் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, அவர்கள் இங்கும் உரிமையற்றவர்களாகவும், அங்கும் இருக்க முடியாத நிலையில்,

அவர்களைத் தமிழ்நாடு ஏற்று, கலைஞர் ஆட்சியில் முன்பு நீலகிரி மாவட்டத்திலும் வேறு பல மாவட்டங்களிலும் குடியமர்த்தி, தொழில் செய்ய வாய்ப்புள்ளவர்களுக்கு அனுமதி அளித்து, வாழ வைத்தார்களே! இன்றும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழுகிறார்கள், என்பது கொடநாடு எஸ்டேட்டில் வாழும் இந்த அம்மையாருக்கு எப்படி தெரியாமல் போயிற்று?

எனவே, பழைய கே.பி. சுந்தராம்பாள் அம்மையார் பாட்டுபோல், என்ன? என்ன? என்ன? என்று கேட்பதன்மூலம் இங்குள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நலத்திற்குக் கேடு செய்கிறார்.

தே.மு.தி.க. அவைத் தலைவரின் கூற்று

இவரைப்போல தே.மு.-தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் அவர்களும், அங்குள்ள முள்வேலித் தமிழர்களைப்பற்றிக் கவலைப்படாத போக்கு மாதிரி இதனைக் கண்டித்து அறிக்கை விடுப்பதும் மிகவும் தவறானது.

அங்கே உள்ளவர்களுக்காகப் போராடும் அதே நேரத்தில், இங்குள்ள அகதிகள், முழுச் சுதந்திரம் பெற்று அதன் அனுகூலங்களை அனுபவிக்க வேண்டும் என்றால், இவர்கள் ஏன் குறுக்குசால் ஓட்டவேண்டும்?

உள்துறை அமைச்சரை மத்திய அரசு சில நாள்களுக்குமுன் இதுபற்றிப் பேசிட அனுப்பி, அவர்கள் இதுபற்றிப் பேசிய நிலையில், ஏன் இவர்கள் முட்டுக்கட்டை போடவேண்டும்?

எங்கும் அரசியல் எதிலும் அரசியல்தானா? கலைஞரோ, தி.மு.க.வோ செய்தால் எல்லாம் தவறுதானோ!

என்னே இவர்களது அரசியல் ஞானம்!

ஒப்பனைக் கண்ணீரும் -உண்மைக் கண்ணீரும்!

ஒப்பனைக் கண்ணீருக்கும், உண்மைக் கண்ணீருக்கும் உள்ள வேறுபாட்டை அறியாதவர்களல்லர் இங்குள்ள தமிழர்களும், ஈழத் தமிழர்களும்.

இப்பிரச்சினையை விளக்கி நாடெங்கும் கூட்டங்களை நடத்திடவேண்டும்.

தலைவர்
திராவிடர் கழகம்.

------------------"விடுதலை" 7-10-2009

0 comments: