Search This Blog

16.10.09

தீபாவளி - தமிழர்களின் திருவிழா அல்ல!



முன்குறிப்பு:

தீபாவளியை கொண்டாட தமிழ்நாடு தயாராகி வருகிறது. துணிக்கடைகளில் கூட்டம் பிதுங்கி வழிவதும், எந்த பக்கம் திரும்பினாலும், முதலாளிகள் தங்கள் பொருளை விற்று தீர்ப்பதற்கு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ரயில்களிலும், பேருந்துகளிலும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிரம்பிவிட்டன. இடம் கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிறார்கள். ஆங்காங்கே தீபாவளிக்காக வாங்கப்படும் வெடிகள் பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன. நிற்க.

தீபாவளி - தமிழர்களின் திருவிழா அல்ல! இந்துக்களின் திருவிழா. பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததைத்தான், நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார். பண்பாட்டு துறை ஆய்வாளர் தொ. பரமசிவன், இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தார், பிறகு, திருநெவேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியராகவும், பதிவாளராகவும் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.

தீபாவளி

இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, எண்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் தேசிய திருவிழா போலக் காட்டப்படுகிறது. ஆயினும் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப்பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவேதான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில் கூடத் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் இந்துக்களின் திருவிழாவாக அமைகிறது.

தீபாவளி, தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவ நிலைகளோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா. பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியின் அடையாளமான வெடி, அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப+ஆவ(லி)ளி) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருக்கார்த்திகைத் திருவிழாவே. நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும். இந்த நாளே பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் இருபத்து நாலாம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும். தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுகொண்டார். ஆகவே, பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மாகாவீரர் இறந்த நாளையே ஆகும். விசயநகரப் பேரரசான, இந்து சாம்ராஜ்ஜியம், தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தக் காரணம் பற்றியே தமிழ்ப் பிராமணர்களைவிட, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் பக்தி சிரத்தையுடன் கொண்டாடுகின்றனர். வடநாட்டு இந்துக்களிடமும் சமணர்களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ்நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி நாளைக் குறிக்கும் சடங்காகும். தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இத்திருவிழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல கங்கா ஸ்நானம் செய்து கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. ஆகவே உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.

நரகனைக் கொன்ற நாள் நல்லநாள் விழாவா என்று பாரதிதாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.

------------------தொ.பரமசிவன் எழுதிய
பண்பாட்டு அசைவுகள் நூலிலிருந்து.
பக்.58, 59

3 comments:

மு.இரா said...

நன்றி... ஒவியா இதில்லாம் தமிழனுக்கு புரியாது...
அவனுக்கு லீவ் கிடைச்சா.. என்ன வேணும்னா.. பண்ணுவான்.

தமிழன் said...

holiyave tamilarkal sirappaka kondaadu kiraarkal deepavaliyai pattri sollava venum

www.naalayavidiyal.blogspot.com

தமிழன் said...

holiyai kondaadum tamilan deepavaliyai vittu vaikkava poraan


www.naalayavidiyal.blogspot.com