மீள் குடியேற்றம்
தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை சென்றுள்ளனர். முகாமில் உள்ள தமிழர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், இலங்கை அமைச்சர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து வருகின்றனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் இரு கருத்துகளைக் கூறியுள்ளனர். ஒன்று தமிழர்களின் மீள் குடியேற்றம்; இரண்டாவது தமிழர்களின் வாழ்வுரிமைக்கான உத்தரவாதம்.
நூற்றுக்கு நூறு மிகச் சரியாகவே தாங்கள் இருக்கும் இந்த நிலையில் இந்தத் தேவையான இரு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர்.
பொதுவாக ஈழத் தமிழர்கள் கல்வியில் முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்கள். ஆனால், கடந்த காலங்களில் அது வெறும் கனவாக ஆக்கப்பட்டது என்பது யாருக்குத்தான் தெரியாது? வாழ்வுரிமையே கேள்விக்குறியாக்கப்பட்ட ஓர் இனத்திற்கு, கல்வி வாய்ப்பு மட்டும் எங்கிருந்து குதிக்கப் போகிறது?
எந்த ஒரு மக்கள் நல அரசும் தம் நாட்டுக் குடிமக்களுக்குச் செய்யவேண்டிய கடமைதான் இந்தக் கோரிக்கைகளில் அடங்கியிருக்கிறது. எந்த ஒரு கோரிக்கையும் அளவு கடந்ததாக இல்லை.
இன்னும் சொல்லப்போனால், இலங்கை அரசுகூட இந்தக் கோரிக்கைகளைச் செயல்படுத்துவதாக ஏற்கெனவே ஒத்துக்கொண்டிருப்பதைத்தான் அம்மக்கள் வலியுறுத்துகிறார்கள்.
இலங்கை சென்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரும்பி வந்து தாங்கள் நேரில் கண்டவை கேட்டவை கருத்துப் பரிமாறியவை என்கிற அடிப்படையில் அறிக்கை ஒன்றைத் தயாரித்து தமிழக முதலமைச்சரிடம் அளிப்பார்கள். முதலமைச்சர் அவர்களும் மத்திய அரசிடம் அதன் அடிப்படையில் கோரிக்கைகளை வலியுறுத்துவார் என்பதில் அய்யமில்லை.
கடந்த காலங்களில் இந்திய அரசு ஈழத் தமிழர்கள் விஷயத்தில் நடந்துகொண்டு வந்திருக்கின்ற போக்கு தமிழர்களுக்கு மட்டுமல்ல; நடுநிலை கண்ணோட்டத்தோடு சீர்தூக்கிப் பார்க்கும் எவருக்கும் திருப்தி அளிக்காது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் எழுப்பிய ஒரு கேள்வி: ராஜீவ் காந்தி கொலையைக் காரணம் காட்டி இலங்கையில் இத்தனை ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். இன்னும் எத்தனை மக்கள் கொல்லப்படப் போகிறார்கள்? என்பதுதான் அந்தக் கேள்வி.
மிகவும் நெருடலான கேள்விதான். ஈழத்து மக்களின் உணர்வை இதன்மூலம் இந்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும்.
இந்திய அரசு இந்த உணர்வோடு நடந்துகொண்டதன் விளைவு வேறு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
சீனாவும், பாகிஸ்தானும் கைகோத்துக்கொண்டு இலங்கையின் தோள்பக்கம் நிற்பதாகக் காட்டிக்கொண்டு, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான ஏற்பாடுகளை மிகவும் வெற்றிகரமாகச் செய்து வருவதை மறுக்க முடியுமா? மறந்துவிடத்தான் முடியுமா?
போர் முடிந்துவிட்டது என்று அறிவித்த சிங்கள அரசு, இந்தியாவின் பிரதிநிதிகளாக இலங்கை சென்ற எம்.கே. நாராயணன், வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கரமேனன் ஆகியோரிடம் அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லையே!
இந்த நிலையில், இலங்கை அதிபரை இதுகுறித்து விளக்கம் கேட்க இந்திய அரசு கடமைப்படவில்லையா?
இலங்கைக்குத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றிருக்கும் இதே காலகட்டத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தம்பியும், வடக்கின் வசந்தம் சிறப்பு செயல் தலைவருமான பசில் ராஜபக்சே ஏடுகளுக்குக் கொடுத்துள்ள பேட்டி என்ன? வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த தமிழர்களுடன், சிங்களர்களும் மீள் குடியமர்த்தப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார்.
முன்பு இருந்த நிலைக்கும், இப்பொழுதுள்ள சூழலுக்கும் அடிப்படையில் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. இன்றைய சூழலில் தமிழர்களும், சிங்களர்களும் ஒரே பகுதியில் அடுத்தடுத்து வாழக்கூடிய சுமூக நிலை உண்டா என்பதை யதார்த்தக் கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும்.
ஓரிடத்தில் ஏற்படும் ஒரு சிறு மோதல்கூட காட்டுத்தீயாக மாறக்கூடிய ஆபத்துக்கு வழிவகுக்கும் ஆதலால், தமிழர்களின் தாயகப் பகுதியில் சிங்களர்களைக் குடியேற்றுவதைத் தவிர்க்கவேண்டும்.வருமுன் காப்பதே புத்திசாலித்தனமாகும்.
-------------------"விடுதலை" 13-10-2009
0 comments:
Post a Comment