Search This Blog

2.10.09

கணவனை மதியாத பெண்ணை நாயை விட்டுக் கடிக்கும்படி செய்ய வேண்டுமாம்!

பெண்களது உரிமைகளெல்லாம் தங்களது உரிமைகளாகப் பாவிக்கிறார்கள் ஆடவர்கள்; அவர்களை மக்களினத்துக்கே தாய் என்றும் கருதுகிறார்கள். இத்தகைய லட்சியங்களைக் கொண்டவர்களின் மனதிற்கு ஒவ்வாத ஸ்லோகங்கள் சில ஸ்மிருதிகளில் இருக்கின்றன. இது ரொம்பவும் விசனிக்கத்தக்க காரியம்.

பெஜவாடாவிலிருந்து வெளிவரும் இந்திய சுயராஜ்யம் என்னும் பத்திரிகையின் இதழ் ஒன்றை ஒரு நிருபர் எனக்கு அனுப்பியிருக்கிறார். ஸ்மிருதிகளில் பெண்களின் நிலை என்னும் விஷயமாக அதில் ஒரு கட்டுரை இருக்கிறது. சில முக்கியமான குறிப்புகளை மட்டும் யாதொரு மாற்றமும் செய்யாமல் அதிலுள்ளபடி கீழே கொடுத்திருக்கிறேன்.

கணவன் காமுகனாகவும், ஒழுக்கம் கெட்டவனாகவும் நல்ல குணங்கள் அற்றவனாகவும் இருக்கலாம். அதைப் பற்றி மனைவி கவலைப்படக் கூடாது. அவனைத் தெய்வமாகவே மதித்து நடந்து கொள்ள வேண்டும்.

(மனு 5_154)

கணவனுடைய சொல்லைத் தட்டாது நடத்தவே மனைவியின் உயர்ந்த தர்மம்

(யாக்ஞவல்கியர் 1.18)

யாகம் சடங்கு நோன்பு முதலியன பெண்களுக்கு உரியன அல்ல. கணவனுக்குத் தொண்டு செய்வதனாலேயே வானுலகத்தில் அவளுக்கு உயர்ந்த பதவி கிட்டும்.

(மனு 5-_145)

கணவன் உயிருடன் இருக்கும்போது சடங்கு, நோன்பு முதலியன அனுஷ்டிக்கிற மனைவி, கணவனுடைய வாழ்நாளையே குறைத்து விடுகிறாள். அதனால் அவளுக்கு நரகந்தான் கிடைக்கும். பெண்கள் புண்ணிய ஸ்தலங்களுக்குப் போய்த் தீர்த்தமாட விரும்புவது, வீணான காரியம். அதற்குப் பதிலாக, கணவனது பாதத்தையோ, உடம்பையோ கழுவி, அந்தத் தண்ணீரைக் குடித்தல் மேலான காரியம். அப்படிக் குடிப்பதால், அந்தப் பெண்களுக்கு மேலான பதவி கிட்டும்.

(அத்ரி 136_137)

கணவனைவிட மேலான உலகம் மனைவிக்கு வேறு கிடையாது. கணவனுக்கு மாறாய் நடக்கிற பெண்ணுக்கு கணவன் போகும் உலகம் இறந்தபின் கிட்டாது. எனவே எந்தக் காரணத்தைக் கொண்டும் மனைவி அவனுக்கு அதிருப்தியாக நடக்கக் கூடாது.

(வசிஷ்டர் 12_14)

கணவனை மதியாது பிறந்த வீட்டையே பெருமைப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கும் பெண்ணை பெரிய கூட்டத்தின் மத்தியில் நிறுத்தி, நாயை விட்டுக் கடிக்கும்படி அரசன் செய்ய வேண்டும்.

(மனு 8_371)

கணவன் சொல்வதைத் தட்டி நடக்கும் பெண் பரிமாறுகிற உணவை ஒருவரும் சாப்பிடக் கூடாது. அவளை விபச்சாரியாகவே கருத வேண்டும்

(அங்கீராஸ் 69)

நோயாளியாகவோ, குடிகாரனாகவோ கெட்ட பழக்கங்கள் உடையவனாகவோ கணவன் இருந்த போதிலும் அவனுக்கு மனைவி கீழ்படிந்து நடக்க வேண்டும். நடக்காதவளை ஆடையாபரணங்களைப் பறித்துக் கொண்டு, சமூகத்திலிருந்து மூன்று மாத காலம் வரை விலக்கி வைக்க வேண்டும்.

(மனு 10_8)

பெண்களது உரிமைகளெல்லாம் தங்களது உரிமைகளாகப் பாவிக்கிறார்கள் சில ஆடவர்கள், அவர்களை மக்களினத்துக்கே தாய் என்றும் கருதுகிறார்கள். இத்தகைய இலட்சியங்களைக் கொண்டவர்களின் மனதிற்கு ஒவ்வாத ஸ்லோகங்கள் சில ஸ்மிருதிகளில் இருக்கின்றன. இது ரொம்பவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும். வைதிகர்கள் சார்பாக வெளிவரும் ஒரு செய்திப் பத்திரிகையில் மேலே குறிப்பிட்டிருக்கும் ஸ்லோகங்களை மதத்தின் பகுதி என்று குறிப்பிட்டிருப்பதற்கு நாம் கவலைப்பட வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

ஸ்மிருதிகளில் வேறு எத்தனையோ ஸ்லோகங்கள் பெண்களை மிகவும் மதித்து அவர்களுக்கு உயரிய ஸ்தானத்தை அளித்திருக்கின்றன. நீதிக்கு மாறுபட்டவை யாயும் முன்னுக்குப்பின் முரண்பாடானவை யாயும் பல ஸ்லோகங்கள் ஒரே ஸ்மிருதியில் இருக்கின்றனவே, அந்த ஸ்மிருதிகளை நாம் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். ஸ்மிருதிகளின் பெயரினால் அச்சடிக்கப்பட்டிருக்கும் எல்லாவற்றையுமே நாம் தெய்வ வாக்காகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். எது உண்மையானது, எது இடையில் வந்தது, எது நல்லது, எது கெட்டது என்பதை ஒவ்வொருவரும் முடிவு கட்டிவிடலாம் என்பது இயலாத காரியம். ஸ்மிருதிகளின் பெயரால் வந்திருக்கும் எல்லாப் புத்தகங்களையும் ஒன்று திரட்டி, மதம், நீதி, ஒழுக்கம் ஆகியவற்றிற்கு எவை புறம்பாக இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் களைந்து எறிய நிபுணர்கள் அடங்கிய கமிட்டி ஒன்றை நிறுவ வேண்டும். அக்கமிட்டியாரால் வெளியிடப்படும் பதிப்பு ஹிந்துக்களுக்கு மிகவும் பயனுடையதாகலாம். இந்தப் புனிதமான காரியத்தை ஹிந்து மதத் தலைவர்களும், பொது ஜனங்களும் ஆதரிப்பார்களா என்ற சந்தேகம் வேண்டாம். தொண்டு செய்யும் ஆர்வத்தோடு செய்யப்படுகிற எந்தக் காரியமும் நிச்சயமாக நல்ல பலனைக் கொடுக்கும். ஹிந்து மதத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருப்பவர்களுக்கு இந்தப் பதிப்பு உதவியாக இருக்கும்.

(ஹரிஜன் பத்திரிகை கட்டுரையிலிருந்து)

0 comments: