தமிழ்நாடு பத்திரிகையின் வம்புச் சண்டை
சுயராஜ்யா, சுதேசமித்திரன் முதலிய பிராமணப் பத்திரிகைகளும் ஸ்ரீமான் சீனிவாச அய்யங்கார் போன்ற பிராமணத்தலைவர்களும் நம்முடன் தொடுக்கும் போர் முடிவு பெறாமல் இருக்கும் பொழுதே தமிழ்நாடு பத்திரிகையும் இது தான் சமயமென்று நம்மை வம்புச்சண்டைக்கிழுக்கின்றது. இம்மாதிரி வம்புச் சண்டைகளுக்கும் நாம் இடம் கொடுக்கக்கூடாதென்று எவ்வளவோ காரியங்களை சகித்துக் கொண்டு நமது உத்தேச காரியத்தை மாத்திரம் பார்த்துக் கொண்டு வந்தாலும் வேண்டுமென்றே வலியவரும் சண்டைகளுக்கு நாம் என்ன செய்யலாம்? தற்காலம் தமிழ் நாட்டில் சுயராஜ்ஜியக்கட்சி என்கிற பெயரை வைத்துக் கொண்டு பிராமணர் அல்லாதாரின் செல்வாக்கை அடியோடு ஒழிக்க வேண்டுமென்கிற கருத்தோடு சில பிராமணர்களும், அவர்கள் பத்திரிகைகளும் காங்கிரஸ் பெயரையும், மகாத்மா பெயரையும் மற்றும் உள்ள அநேக தியாகிகளின் பெயரையும் உபயோகப் படுத்திக்கொண்டு ஸ்தலஸ்தாபனங்களிலும், தேர்தல்களிலும் காங்கிரசிலும் செய்துவரும் கொடுமைகளையும், சூழ்ச்சிகளையும் கண்டு உண்மையிலேயே மனம் பொறாதவராகி எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் இவற்றைத் தடுக்க செய்துவரும் ஒருசிறு தொண்டிற்கும் பிராமணரல்லாதாரில் சில தலைவர்கள் என்போர் நமக்கு உதவி செய்யாவிட்டாலும் நமது முயற்சிக்குக் கெடுதலாவது செய்யாது இருக்க வேண்டாமா என்றுதான் பிராமணரல்லாத தலைவர்களிடம் நாம் உண்மையாய் எதிர்பார்த்தது.
இந்தநிலையில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவின் தேர்தல் சம்பந்தமான அபிப்பிராயங்கள் நமது முயற்சிக்கு சில இடங்களில் கொசவனுக்குப் பல நாளைக்கு வேலை, தடியடிக்காரனுக்கு ஒரே நாள் வேலை என்பது போல் பல தொந்தரவுகளை விளைவிப்பதாகப் பட்டதால் ஸ்ரீமான் நாயுடுவின் அபிப்பிராயங்களை எடுத்துக்காட்ட வேண்டியது நமது கடமையாய் போய்விட்டது. அதற்கு, சரியான சமாதானம் ஒன்றும் சொல்லாமல் ஸ்ரீமான் பட்டாபிராமய்யர் அவர்கள் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் சுயராஜ்ய கட்சி தேசத்து ரோகம் செய்து விட்டது என்று சொன்ன பொழுது ஸ்ரீமான் நேரு அதற்கு தகுந்த சமாதானம் சொல்வதற்கு யோக்கியதையில்லாமல் நான் உன்னை ஒரு தூசி போல் மதிக்கிறேன் என்று சொன்ன அகம்பாவமும்.... பொருந்திய பதில்போல் ஸ்ரீமான் நாயக்கரின் கோபத்திற்கும், பயமுறுத்தலுக்கும் பயந்து ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தம்முடைய கொள்கையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று தமிழ்நாடு பத்திரிகை வம்புச் சண்டைக்கு இழுக்கின்றது. சாதாரணமாக பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத்தலைவர்களும், தான் ஒருவரைப்பற்றி ஏதேனும் குறைகூற வேண்டுமென்று நினைத்துக் கொண்டால் ஒருவர் என்ன சொன்னார் என்ன பேசினார் என்பதை தங்கள் பத்திரிகையில் எடுத்துக் காட்டாமலும், அதைப் பொது ஜனங்களுக்குத் தெரியப்படுத்தாமலும் தங்களுக்குத் தோன்றியபடி பத்திரிகைகளில் எழுதி அவர்கள் இஷ்டத்திற்கு அனுசரணையான பிரச்சாரம் செய்வது வழக்கம், அதைப் பற்றி நாமும் பலதடவை கண்டித்திருக்கிறோம். அதே கொள்கையை தமிழ்நாடு பத்திரிகையும் பின்பற்றுவதென்றால் பிறகு நாம் அதை என்னவென்று நினைப்பது? அதனிடத்தில் இனி என்ன தான் எதிர்பார்க்க முடியாது? எந்த விஷயத்தில் ஸ்ரீமான் நாயக்கர் கோபித்துக் கொண்டார் எந்த விஷயத்தில் ஸ்ரீமான் நாயுடுவை பயமுறுத்தினார் என்று எழுதி அதன் பேரில் ஸ்ரீமான் நாயுடுவின் வீரப்பிரதாபத்தைக் காட்டியிருந்தால் ஒழுங்காயிருக்கும், அப்படியில்லாமல் வீண் வம்புச் சண்டைக்கு இழுப்பது தர்மமா?
நாம் எழுதியதில் ஏதேனும் குற்றமிருக்கின்றதா என்பதை பொது ஜனங்கள் அறியும்படி மறுபடியும் எழுதி இதற்குத் தமிழ்நாடு பத்திரிகை சொல்லும் பதிலையும் சொல்லி விட்டு நிறுத்திக் கொள்கிறோம். இதைப்பற்றி மறுபடியும் தமிழ்நாடு கண்டனமோ மறுப்போ சமாதானமோ எழுதுகிற பொழுது முன்போல் நடந்து கொள்ளாமல் நாம் எழுதியதைப் போட்டு சமாதானமோ கண்டனமோ, மறுப்போ எழுதுமென்று எதிர்பார்க்கிறோம்.
ஸ்ரீமான் நாயுடுவின் பழைய அபிப்பிராயமாவது;
கோயமுத்தூர் தேர்தலின் பொழுது தேர்தலுக்கு நிற்பவர்களின் யோக்கியதையை அறிந்து ஓட்டுச் செய்ய வேண்டுமென்ற ஸ்ரீமான் நாயக்கர் கூறிவந்த பொழுது ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு காங்கிரஸ்காரருக்கே வெற்றி ஏற்படுமாறு ஈசனைப்பிரார்த்திக்கிறேன் என்று ஒரு ஸ்ரீ முகம் விடுவித்தார்.
அதற்கு எதிர்க்கட்சியாளர் ஒரு கடித மெழுதியபொழுது (அக்கடிதம் ஆகஸ்டு மாதம் 30ஆம் தேதி தமிழ்நாடு பத்திரிக்கையின் 9-ஆவது பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.) சுயராஜ்யக் கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு பாமர ஜனங்களை போலிகள் ஏமாற்றி விடாமல் பார்த்துக் கொள்வது தேசியவாதிகளின் கடமையாகும்.... சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்குச் சென்று அதை ஓடவிடாது தடுக்கவே கைப்பற்றுவதாகச் சொன்னார்கள். சட்ட சபைகளைத் தவிர முனிசிபாலிட்டிகளில் ஒத்துழையாமைக்கோ, முட்டுக்கட்டைக்கோ வழி இல்லை. நகர சபைகளில் எந்த விதத்தில் ஜனங்களுக்கு வேலை செய்யலாம் என்பதே அங்கத்தினர்களின் வேலையாயிருக்கிறதே ஒழிய எதிர்த்துப் போராடுவதற்கு அதிகாரவர்க்கம் அங்கு இல்லை. இதனால் ஸ்தல ஸ்தாபனங்களில் ஒருவர் இன்ன கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்கு மட்டும் ஓட்டுக்கொடுத்து விடக்கூடாது. ............. அபேட்சகர்களின் உண்மையான யோக்கியதைகளை அறிந்தே ஓட்டுக்கொடுக்க வேண்டும். நீடித்த காங்கிரஸ்வாதியாயும், வெளிவேஷத்திற்கு மாத்திரமல்லாமல் எப்பொழுதும் கதர் கட்டிக்கொண்டிருப்பவராகவும் பார்த்து ஓட்டுச் செய்யவேண்டும் என்று 30-.8.19-25 தமிழ்நாடு பத்திரிகையில் மேற்படி கோயம்புத்தூர் நண்பருக்கு பதில் கூறு முகத்தான் ஒரு வியாசம் வரைந்துள்ளார். அதற்கு நான்கு நாளைக்குள் திருச்சியில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் தலைமையின் கீழ்கூடிய ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஜாதி பேதமின்றி காங்கிரஸ்காரருக்கே ஓட்டுச் செய்ய வேண்டுமென்று ஒரு செய்தி அனுப்பினார். பாம்பன் பிரசங்கத்தில் காரியத்திற்குக் கதர் உடுத்தி காங்கிரஸ் பெயரைச் சொல்லித்திரியும் கசடர்கள் உங்களை ஏமாற்றி விடக்கூடாது.... நான் ஒரு கட்சியிலும் சேர்ந்தவனல்ல....... எனது வேலைத் திட்டம் எனது நண்பர்களின் யோசனையிலிருந்து வருகிறது .......... என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நகரசபையில் வேலை செய்யத்தகுதியுள்ள ஒரு பிராமணரும், ஒரு பிராமணரல்லாதாரும் அபேட்சகர்களாய் நிற்பார்களானால் கட்சிப்போக்கை கவனியாமல் பிராமணரல்லாதாருக்கேதான் ஓட்டுச் செய்ய வேண்டும். (இது சென்னையில் இரண்டு கனவான்கள் நேரில் கண்டு கேட்டபோது சொல்லியது.)
அதற்கு அடுத்த நாள் தமது அன்புள்ள ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் நிர்மாணதிட்டத்தில் நம்பிக்கை இருப்பதாகத்தான் நம்புவதாயும், நிர்மாணத் திட்டத்தை நம்புபவரும் அனுஷ்டானத்தில் செய்து காட்டுபவரும் காங்கிரஸ் அபேட்சகர் என்று தான் நம்புவதாகவும், அவரை ஆதரிக்கவேண்டுவது பொது ஜனங்களின் கடமை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஸ்ரீமான் நாயுடுவின் தெளிவான அபிப்பிராயமாவது;
1. சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ்வாதிகளை ஸ்ரீமான் நாயுடு ஆதரித்து எழுதிய கடிதங்களை ஸ்ரீமான் நாயக்கர் கண்டிக்கப் புறப்பட்டிருப்பது வேடிக்கையாயிருக்கிறது.
2. உண்மை தேசியவாதியான ஒரு பிராமணனும் காங்கிரசைச் சேராத ஒரு தமிழனும் தேர்தலுக்கு நின்றால் தேசிய பிராமணனைத்தான் தேசம் ஆதரிக்க வேண்டும் உண்மை தேசியவாதியான ஒரு பஞ்சமனுக்கும், மிதவாதியான ஒரு பிராமணனுக்கும் போட்டி ஏற்பட்டால் பஞ்சமனைத்தான் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும்.
3. ஸ்தலஸ்தாபனங்களில் முட்டுக் கட்டைக்கு இடமில்லை என்பது வாஸ்தவமே. அவ்வித அபிப்பிராயம் நாம் அடிக்கடி கூறுவது உண்டு. ஆனால் அடிமைப்பட்ட நாட்டில் சர்க்காரால் ஏற்பட்டிருக்கும் சகல ஸ்தாபனங்களிலும் தேசியவாதிகள் நுழைந்து உட்கார்ந்து கொண்டால் சமயம் வாய்ந்த போது உள்நோக்கமும் சர்க்காரைத் காக்க அனுகூலமாகுமன்றோ?
4 அபேட்சகர்களின் உண்மையான யோக்கியதைகளை அறிந்தே ஓட்டர்கள் ஓட்டுக் கொடுக்க வேண்டுமாம்.
5 ஆனால் ஒருவர் ஒழுக்கத்தில் தர்ம ராஜனாயிருந்தாலும் சர்க்காருக்குச் சாதகமானவராயிருந்தால் அவருக்கு ஓட்டு கொடுக்கக்கூடாதாம்.
6 வேறொருவர் ஒழுக்கத்தில் குறைந்த வராயிருந்தாலும், தேசிய வாதியாயிருந்து நம்-முடைய ஓட்டினாலும், பேச்சினாலும், சர்க்காரின் செல்வாக்கைக் குறைக்கக் கூடியவராயிருந்தால், ஜனங்கள் அவரை ஆதரிக்க வேண்டுமாம்.
காங்கிரஸில் உயர்வு, தாழ்வு கொள்கையை பிராமணர்கள் செய்கையில் காட்டினால், நிர்தாட்சண்யமாக அப்படிப்பட்டவர்களை, காங்கிரசினின்று துரத்திவிடவேண்டுமாம். இதைக் குருகுலப் போராட்டத்தில் செய்து காட்டியிருக்கிறாராம் ........... மேற் கூறியவைகள்தான் ஸ்ரீமான் நாயுடுவின் தெளிவான அபிப்பிராயமாம். மேலும் இவ்வித அபிப்பிராயங்கள் ஸ்ரீமான் நாயுடுவுக்கு எவ்வளவு தெளிவான அபிப்பிராயமாய் இருந்த போதிலும் பொதுஜனங்களுக்கு எவ்வளவு தெளிவைக் கொடுக்கும் என்பதை வாசகர்களே கவனித்துக் கொள்ள வேணுமாய் கோருகிறோம்.
மற்றபடி இவ்வபிப்பிராயத்தின் தத்துவங்களைப் பின்னால் எழுதுவோம்.
ஸ்ரீமான் நாயுடு: தன்னைப்பற்றி அதிகமாய் நினைத்து கொண்டார் என்பதற்குபதில், நாயக்கர் நாயுடுவைப் பற்றி அதிகமாய் நினைத்தாராம், அதனால் தன்னைப் பற்றி அதிகமாய் நினைத்துக் கொள்வது மேலோர்தன்மை போலும்!
-------------------------- குடிஅரசு, துணைத் தலைப்பு, 27.09.1925
2 comments:
vaalththukkal tholare
நன்றி சங்கர்.
Post a Comment