Search This Blog

15.10.09

பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புக்குப் பலியாகிவிட்டான்- தமிழன்

மோதிரம்

தமிழில் பெயர் சூட்டப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் சென்னை மாநகராட்சி சார்பில் தலா ஒரு கிராம் மோதிரம் வழங்கப்படும் என்று மாநகராட்சி மேயர் வணக்கத்திற்குரிய மா. சுப்பிரமணியன் அறிவித்து, செயல்படுத்தியும் வருகிறார். இதுவரை 280 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆயிரம் குழந்தைகளுக்கு இந்தப் பரிசு கிடைக்கவிருக்கிறது.

ஒரு வகையில் மகிழ்ச்சிதான் என்றாலும், தமிழ்நாட்டில் தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டவேண்டும் என்ற உணர்ச்சியை ஆர்வத்தை தூண்ட வேண்டிய அவலம், அவசியம், நெருக்கடி ஏற்பட்டுள்ளதை நினைத்தால் நெஞ்சம் கனக்கிறது.

ஏ, தாழ்ந்த தமிழகமே! என்று அறிஞர் அண்ணா கொடுத்த அந்தத் தலைப்புதான் நினைவிற்கு வருகிறது.

அந்த அளவுக்குத் தமிழன், பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புக்குப் பலியாகிவிட்டான். தன்மான இயக்கம் தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, பெயர் வைப்பதிலும் ஒரு புரட்சி நிகழ்த்தப்பட்டது.

நாராயணசாமி_ நெடுஞ்செழியன் ஆனதும், இராமையா_ அன்பழகன் ஆனதும், சோமசுந்தரம்_ மதியழகன் ஆனதும், அரங்கசாமி_ அரங்கண்ணல் ஆனதும் எல்லாம் இந்த விழிப்புணர்வின் உந்துதலால்தான்.

அறிவுக்கொடி, அன்புமணி, அருமைக்கண்ணு என்ற பெயர்களைக் கேட்டால், என்ன தந்தை பெரியார் சூட்டிய பெயரா என்று கேட்டுவிடலாம்.

அறிவுக்கொடி என்று பெயர் சூட்டியதெல்லாம் அருமையிலும் அருமை! கற்பனையிலும் கசிந்துருகும் அறிவுத் தேனின் சுவையை என்னென்று சொல்லுவது!

ஒரு காலகட்டத்தில் இளங்கோ என்றும், செங்குட்டுவன் என்றும், அறிவுடை நம்பி என்றும், வேள் பாரி என்றும், நெடுஞ்செழியன் என்றும், நச்சினார்க்கினியன் என்றும், மாசாத்தியார் என்றும், நப்பின்னை, நச்செள்ளை, நற்சோணை என்றும் பெயர்கள் சூட்டப்பட்ட தமிழ்நாட்டில் இன்றைய நிலை என்ன?

கேசவன் என்று பெயர் சூட்டியுள்ளானே பொருள் புரியுமா? மயிரான் என்பதுதானே இதன் பொருள்! அதிலும் ஆதிகேசவன் வேறு வெட்கப்படவேண்டாமா?

நம் ஊர் சின்னத் திரையில் குழந்தைகளுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லப்படுகிறதே, அதனைக் கூர்ந்து கவனித்ததுண்டா? இதோ ஒரு நாள் எடுத்துக்காட்டு:

ஜனப்பிரியா, நிஷா, விஜயலட்சுமி, சினேகா, ஆகாஷ், சாதனா, பூஜா, ரேவதி, புவனா, அகல்யா, கார்த்திக், சாருகேஷ், சுவாதி, பூபேந்திரா, அட்சயா, ஸ்ரீராம், அசின், ஷ்யாம், பர்-வேஷ், சுகன்யா, பானுப்ரியா, பாக்யலட்சுமி, உதயகுமார் இத்தியாதி... இத்தியாதி....

நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா? பெயரைக் கொண்டு தமிழன் வீட்டுப் பிள்ளை என்று சொல்லும் நிலை போய்விட்டதே!

பார்ப்பனியம் என்னும் படுபாதகப் பண்பாட்டுக் கொள்ளி தமிழன் தலையில் வைக்கப்பட்டுவிட்டதே! இந்தப் படையெடுப்பிலிருந்து தமிழனை முழுமையாக மீட்கும் ஒரு நற்கூறுதான் சென்னை மாநகர மேயரின் தமிழ்ப் பெயர் சூட்டினால் மோதிரம் என்னும் முயற்சி. பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம், மற்றவர்களும் பின்பற்றலாமே!

------------ மயிலாடன் அவர்கள் 14-100-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

2 comments:

Chittoor Murugesan said...

பெருமதிப்பிற்குரிய தமிழ் ஓவியா அவர்களே !
தங்கள் மறுமொழிக்கு நன்றி. ஒரு முறை அண்ணா விடுதலை பத்திரிக்கையில் தலையங்கம் எழுதினாராம். அதை படித்த பெரியார் மாடியேறி சென்று அண்ணாவை பாராட்டினாராம். தங்கள் மறுமொழிகண்டதும் எனக்கு இந்த நிகழ்ச்சிதான் நினைவுக்கு வந்தது.

நன்றி.

dondu(#11168674346665545885) said...

//நாராயணசாமி_ நெடுஞ்செழியன் ஆனதும், இராமையா_ அன்பழகன் ஆனதும், சோமசுந்தரம்_ மதியழகன் ஆனதும், அரங்கசாமி_ அரங்கண்ணல் ஆனதும் எல்லாம் இந்த விழிப்புணர்வின் உந்துதலால்தான்.//
அப்ப கருணாநிதி, ராமசாமி? இதைத்தான் ஊருக்கு மட்டும் உபதேசம்னு சொல்லுவாங்க. அது சரி காட்டுமிராண்டி மொழியிலே பேர் வச்சுக்க பிடிக்குமா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்