Search This Blog

18.10.09

சினிமாவிற்கும் சிறார்களுக்கும் என்ன சம்பந்தம்?


தொ(ல்)லைக் காட்சி

ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு நற்செய்தி வெளிவந்துள்ளது. அது குழந்தைகளின் நலன் பற்றியது. அப்படியென்றால் ஊட்ட உணவு பற்றியதா, பள்ளிக்குப் பிள்ளைகளை எந்த வயதில் அனுப்புவது எந்தப் பள்ளிக்கு அனுப்புவது பற்றியதா என்றால் - அதெல்லாம் இல்லை.

வந்த செய்தி சினிமாவைப் பற்றியது. சினிமாவா? சினிமாவிற்கும் சிறார்களுக்கும் என்ன சம்பந்தம் என்று புருவத்தை மேலும் கீழும் ஏற்றி இறக்க வேண்டாம்.

இங்கே சொல்ல வந்தது வீட்டில் ஒரு விஷக் கருவியை வைத்திருக்கின்றோமே, - சின்னத் திரை என்று செல்லமாக ஒரு பெயர் வைத்திருக்கின்றோமே - அந்தத் தொலைக் காட்சிப் பெட்டிகளைப் பற்றியே.

ஆமாம், நம் நாட்டில் கூட எப்பொழுதாவது இது பற்றிய சிந்தனைகள் வந்து மின்னல் வேகத்தில் மறைவதுண்டு.

ஆமாம், ஆஸ்திரேலிய அரசு என்ன சொல்கிறது?

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த வயதில் உள்ள குழந்தைகள் தொலைக் காட்சி பார்ப்பதால் அவர்களின் மொழிப் பயிற்சி தடை செய்யப்படுகிறது. ஓடி விளையாட வேண்டிய நேரத்தில் ஒரே இடத்தில் இமை கொட்டாது தொலைக் காட்சிகளைப் பார்ப்பதால் உடல் குண்டாகிறது. ஏதோ தீடீர் என்று ஆஸ்திரேலிய அரசு மனசுக்குத் தோன்றியது என்று கூறி அந்தத் தடையைச் செய்துவிடவில்லை. இது குறித்து ஓர் ஆய்வையே ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டுள்ளது. பிறந்த 4 மாதக் குழந்தை நாள் ஒன்றுக்கு 44 நிமிடமும், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தை மூன்று மணி நேரமும் தொலைக் காட்சியில் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் 6 முதல் 8 விழுக்காடு குழந்தைகள் உடல் பருமனாக உள்ளனராம். இதனைத் தடுக்கவே இந்தத் தடை ஆணையாம்.

இவை மட்டுமல்ல, இன்னும் கூடுதல் தகவல்கள் இது பற்றி இருக்கவே செய்கின்றன.

தொலைக்காட்சிப் பெட்டிகளில் விறுவிறுப்பான வன்முறை - பயங்கரவாத நிகழ்ச்சிகளை மணிக்கணக்காகக் குழந்தைகள் பார்க்கும்போது, அவர்களின் மூளைகளில் டோபமைன் என்ற வேதிப் பொருள் அதிகமாகச் சுரக்கும். பின்னர் அவர்கள் பள்ளிக்குச் சென்று படிக்கும்போது, மூளைச் சுரப்பிகள் போதுமான அளவில் பற்றாமல் போய்விடுகின்றன. இதன் காரணமாக பொருள் தெரிந்து அவர்களால் படிக்க முடிவதில்லை -கவனச்சிதறல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

பள்ளிப் படிப்பை முடிக்கும் முன் அவர்கள் பத்தாயிரம் கொலைக்காட்சிகளைப் பார்த்து விடுகிறார்களாம். இதன் மூலம் காரியத்தைச் சாதிக்க வன்முறையே சரியானது என்ற நச்சு எண்ணம் அந்த இளம் குருத்துகளின் மூளையை ஆக்கிரமித்து விடுகிறது. விளம்பரங்கள் குழந்தைகளைக் குறிவைத்தே ஏவப்படுகின்றன என்பதும் இன்னொரு முக்கியமான தகவலாகும்.

பெற்றோர்களே, பிள்ளைகளை வளர்க்கப் போகிறீர்களா? அழிக்கப் போகிறீர்களா?

---------------- மயிலாடன் அவர்கள் 18-10-2009 "விடுதலை" யில் எழுதியகட்டுரை

0 comments: