கஜராஜன்
காஞ்சிபுரத்தில் நாள்தோறும் சங்கராச்சாரியார்கள் வழிபடும் காமாட்சியம்மன் கோயிலில் தீபாவளியன்று ஒரு அசாம்பாவிதம் நடைபெற்றது. (காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரும் ஒரு தீபாவளிநாளில்தான் கைது செய்யப்பட்டார் என்பதும் நினைவுக்கு வருகிறது) கோயில், சாமி இவற்றைக் கடந்து மனிதநேயம் உள்ளோர் துடிதுடித்துப்போன நிகழ்வு யானைப்பாகனின் பரிதாப மரணம்!.
கோயில் வளாகத்திற்குள்தான் இது நிகழ்ந்தது! இதற்கு என்ன சமாதானம்? சொல்லப் போகிறார்கள்! அவா அவா தலையெழுத்து என்று கூறி அருவருப்பான முறையில் சமாதானம் சொல்லப் போகிறார்களா?
அவர்கள் நம்பும் ஆன்மிக முறையிலேயே கூடக் கேட்கிறோம்.
தன் காலை, முதலை பிடித்தவுடன், கஜேந்திரன் (யானை) கண்களில் நீர் மல்க, ஆதிமூலமே! என்று அலறியவுடன் விஷ்ணு தன் கருட வாகனத்தில் ஓடோடி வந்து, சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜராஜனுக்கு (யானைக்கு) விடுதலை அளித்ததோடு முதலை வடிவில் இருந்த கந்தர்வனுக்குச் சாப விமோசனமும் அளித்தார் என்று கதையளக்கிறார்களே. அவர்களைப் பார்த்துதான் இந்தக் கேள்வி. முதலை தன்னைக் கவ்வியது என்றவுடன் குரல் கொடுக்கத் தெரிந்த கஜேந்திரன், இப்பொழுது இன்னொரு உயிர்க்கு வேட்டு வைத்துவிட்டானே. இது எந்த ஊர் நியாயத்தை, தர்மத்தைச் சேர்ந்தது?
காமாட்சியம்மன் கோயிலில் பணியாற்றிய ஒரு தொழிலாளியை, அதுவும் கஜராஜனுக்கு அன்றாடம் பணிவிடை செய்துகொண்டிருந்த அதன் பாகனை குரூர முறையில் கொன்று கேட்டோர் நெஞ்சமெல்லாம் துடிதுடிக்க வைத்த சம்பவத்துக்கு ஆன்மிக முறையில் கூறப்படும் சமாதானம் என்ன?
இதற்கு முன்பேகூட இதே காஞ்சி காமாட்சியம்மன் கோயில் யானைக்கு நோய் ஏற்பட்டு, ஏராளமாகச் செலவு செய்து கால்நடை மருத்துவர்களால் பெருமுயற்சி எடுத்தும், அணு அணுவாகத் துடிதுடித்து செத்ததே! காமாட்சியம்மன் காப்பாற்றினாளா?
அன்றாடம் பூஜை செய்யும் ஜெயேந்திரருக்கே நல்ல புத்தி கொடுக்க முடியவில்லை; சிறைக்குச் செல்லாமல் காப்பாற்ற முடியவில்லை. இந்த நிலையில் யானைக்கா நல்ல புத்தியைக் கொடுக்கப் போகிறது. பாகனையும்தான் காப்பாற்றப் போகிறது? இதில் ஒரு சுரண்டல் தனத்தைப் பாருங்கள். கோயிலில் பரிகாரப் பூஜை செய்யப்பட்டு நடை திறக்கப்பட்டதாம். அபவாதம் என்றாலும், அதனை லாபமாக மாற்றும் இந்தப் பார்ப்பன சூழ்ச்சியை என்னென்பது!
கோயில் ஒரு கட்டடம்; அதற்குள் வைக்கப்பட்டு இருக்கும் கடவுள் ஒரு கல் அல்லது உலோகம். சக்தியாவது, புடலங்காயாவது?
புத்தியிருந்தால் சிந்திக்கவும்.
----------- மயிலாடன் அவர்கள் 19-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment