மிரட்டலா?
தன்மானம் உள்ள தமிழா, தீபாவளி கொண்டாடலாமா? ஆரிய திராவிடப் போராட்டத்தை மய்யப்படுத்தி புனையப்பட்ட கதையே தீபாவளி பூமிக்கும் பன்றிக்கும் பிள்ளை பிறக்குமா? தீபாவளிப் பண்டிகை அறிவுக்குப் பொருந்துமா? பூமாதேவிக்கும் மகாவிஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளை எப்படி அரக்கனானான்? என்ற வினாக்களை இன்று நேற்று அல்ல தன்மான இயக்கம் தோற்று விக்கப்பட்ட காலந்தொட்டு 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏடுகளில், இதழ்களில் எழுதப்பட்டும் வருகின்றன. நாடெங்கும் தீபாவளி கண்டனப் பொதுக் கூட்டங்களும் நடத்தப்படுவதுண்டு.
விருதுநகரில் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த அடிப்படையில் சிறப்பாக சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டன.
அதில் காணப்படும் வாசகம் வருமாறு:
பொருளாதாரப் பேரழிவு!
சுற்றுச்சூழல் சீர்கேடு!
சுகாதாரக் கேடு! உயிர்ப்பலி!
ஆரிய ஆபாசப் பண்டிகை!
தீபாவளியைப் புறக்கணிப்போம்!
என்று அந்தச் சுவரொட்டிகளில் கூறப்பட்டு இருந்தது.
இதில் என்ன குற்றம்? என்ன பிழை? ஒரே ஒரு வரியை கால் புள்ளி, அரைப் புள்ளியை மறுக்க முடியுமா?
இவற்றை மறுக்கவியலாத எதிர்த்துக் கருத்துச் சொல்ல வக்கில்லாத சில பேர் இந்து முன்னணி என்ற பெயரால் சிவகாசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனராம். இதற்காகக் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனராம். சுவரொட்டி வெளியிட்டவர்கள்மீதும், அச்சிட்ட அச்சகத்தின்மீதும் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளாராம்.
உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒரு வகையில் இதனை வரவேற்கிறோம். நீதிமன்றத்திலேயே இந்த ஆபாச, மூடத்தன தீபாவளி பண்டிகையைப்பற்றி அக்குவேர் ஆணி வேராகக் கிழித்திட திராவிடர் கழகத்துக்குக் கிடைத்த அரியதோர் நல்ல சந்தர்ப்பமாகவே இதனைக் கருதுகிறோம்.
மக்கள் மத்தியில் விஞ்ஞான சிந்தனையைத் தூண்டுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டமே கூறியுள்ளது. இதனைப் புரிந்து கொள்ளாதவர்களாக காவல்துறை அதிகாரிகள் இருப்பார்களேயானால், அவர்களும் தெரிந்து கொள்ள வைக்கக் கிடைத்திட்ட கிடைத்தற்கரிய சந்தர்ப்பமாகவேகூட இதனை எடுத்துக் கொள்வோம்.
அதே நேரத்தில் இந்து முன்னணியில் உள்ள அப்பாவித் தமிழர்கள் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? எதற்காக தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் தீபாவளியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்கின்றனர் என்பது குறித்து திறந்த மனத்தோடு சிந்திக்க வேண்டாமா?
வேதங்களிலும், இதிகாசங்களிலும், புராணங்களிலும் அரக்கர்கள், அரசுர்கள், ராட்சதர்கள் என்ற எழுதப்பட்டவர்கள் எல்லாம் திராவிடர்களே என்று வரலாற்று ஆசிரியர்கள் (பார்ப்பனர்கள் உள்பட) எழுதி இருக்கிறார்களே, அதுபற்றி தெரியுமா? ஏன், ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியினர் தூக்கிப் பிடிக்கும் விவேகானந்தர்கூட இதே கருத்தைச் சொல்லியிருப்பதை அறிவார்களா?
இந்த உண்மையைத் தெரிந்து கொண்டால் திராவிடர் கழகம் ஏன் தீபாவளிப் பண்டிகையை எதிர்க்கிறது என்பதற்கான அடிப்படைக் காரணத்தைப் புரிந்து கொண்டு இருக்க முடியுமே!
இராமாயணத்தில் சம்புகனை இராமன் வெட்டிக் கொன்றதும், நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா கொன்றதும், சூரபத்மனை சுப்ரமணியன் சம்ஹாரம் செய்ததும் எல்லாம் ஆரியர் ஆரியரல்லாதாரை அழித்தொழித்தது தானே!
காந்தியாரைக் கொலை செய்த கோட்சேக்கு விழா எடுப்பவர்களுக்கு இதெல்லாம் புரிவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் ஆறாவது அறிவைக் கொண்டு அவர்களும் சிந்திக்க முற்பட்டால் மனிதர்களாகலாமே!
தமிழ்நாடு முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் தீபாவளி வாழ்த்துச் சொல்லாததன் அருமையை இந்த இடத்தில் சுட்டிக்காட்டி, பகுத்தறிவாளர்கள் சார்பாக பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
-------------------"விடுதலை" தலையங்கம் 19-10-2009
0 comments:
Post a Comment