Search This Blog

12.10.09

பெரியார் நூல்களை ஏன் நாட்டுடைமை ஆக்கவில்லை?


அட, விபீஷணர்களே!

நினைவிருக்கிறதா? அவர் பெயர் பழ.கருப்பையா. இப்பொழுது எந்தக் கட்சியில் இருக்கிறார்? அவருக்கே தெரியாதபோது வேறு யாருக்குத்தான் தெரிய முடியும்.? வரிசையாகத் தமிழ் நாட்டுக் கட்சிகளில் ஒரு சுற்று வந்து விட்ட வாலிபர் அவர்.

திடீர் என்று தேர்தல் நேரத்தில் இதுதான் நல்ல அறுவடை சமயம் பசை என்று கருதி அண்ணா தி.மு.க.வி.ல் சரண் அடைந்தார்.

ஆமாம், அக்கட்சிக்கு என்று இருக்கும் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அப்படியே கசக்கிப் பிழிந்து ஒரு கிளாசில் குடித்து முடித்தார் மேடையில் சண்டப் பிரசண்டம் செய்தார். இப்பொழுது அதில் தான் ஒண்டிக் கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை.

பார்ப்பனர்களைப் பற்றி பெரியார் திடலிலே அடேயப்பா, எப்படியெல்லாம் சண்ட மாருதம் செய்தார்!

இப்பொழுது பார்ப்பன சோ. ராமசாமியின் துக்ளக்கும், அவரின் சீடரான வைத்தியநாதய்யர் வாளின் தினமணியும் இடம் கொடுக்கிறது என்றவுடன் தன் பேனா ரவுடிசத்தைக் காட்டியுள்ளார்.

எங்கெங்கெல்லாம் விபீஷணர்கள் இருக்கிறார்கள் என்கின்ற அங்க மச்ச அடையாளத்துடன் கூடிய முகவரிப் பட்டியல் பார்ப்பனர்களிடத்தில் எப்பொ-ழுதுமே தயாராக உண்டு. தினமணியில் (7.10.2009) முழங்கியிருக்கிறார் பாருங்கள், அடேயப்பா, அடிவருடித்தனத்தின் ஆணி வேருக்கு சென்றிருக்கிறார்.

காந்தியோடு காங்கிரசின் பணி முடிந்து விட்டது. பெரியாரோடு திராவிடர் கழகத்தின் பணி முடிந்து விட்டதாம். அண்ணாவோடு தி.மு.க.வின் பணியும் முடிந்துவிட்டதாம். அதற்கு மேல் அந்தக் கட்சிகள் தேவையில்லையாம்.

சரி. எம்.ஜி.ஆரோடு அ.தி.மு.க. பணி முடிந்து விட்டது. மூட்டை கட்டவேண்டியதுதான் என்று ஏன் எழுதவில்லை? மூட்டை அடிக்கவேண்டியதில் இன்னும் நிலுவை இருக்கிறதோ!

அண்ணாவோடு தி.மு.க.வின் பணி முடிந்து விட்டது என்றால், அ.தி.மு.க. எங்கிருந்து குதித்ததாம்? இதுதான் அவர் நிலைப்பாடு என்றால் அண்ணா தி.மு.க.வுடன் அவர் அய்க்கியமானது எப்படி? தேவை முற்றுப் பெற்றுவிட்ட திராவிடக் கட்சியின் மேடைப் பேச்சாளராக ஆனது என்ன அறிவு நாணயம்? பேச கூலி கிடைக்கிறதே. விட்டு விட முடியுமா?

பெரியார் திடலில் மேடை கிடைத்தால் அங்கு ஒரு வசனம்; துக்ளக்கில், தினமணியில் இடம் கிடைத்தால் அங்கு சில வஜனம்; -இன்னும் எங்கு இடம் கிடைக்கும் என்று திருவோட்டோடு அலைவதாகக் கேள்வி.

இப்பொழுது தமிழ்நாட்டில் சில அறிவு ஜீவிகள் எழுத்தாளர்கள் என்ற போர்வையில் வேட்டியை முழங்காலுக்கு மேல் இறுக்கிக் கட்டிக் கொண்டு எழுத்துச் சண்டியர்த்தனம் செய்யப் புறப்பட்டுள்ளார்கள் அந்தப் பட்டியலிலும் கொஞ்சம் சேர்ந்து பார்ப்போமே, - பார்ப்பன ஜடகோபங்கள் அப்பொழுதுதான் கிடைக்கும் என்று சேர்ந்து கொண்டுள்ளார்.

இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணர் பரம்பரை வளர்ந்து வருவதுதான்

- தந்தை பெரியார் 17.9.1969

பெரியார் நூல்களை ஏன் நாட்டுடைமை ஆக்கவில்லை? ஆக்கக் கூடாது - ஆக்க முடியாது என்பதற்கு அறிவார்ந்த விளக்கங்கள் கொடுத்த பிறகும் அரை வேக்காடுகள் ஆலாபரணங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

பெரியார்தம் நூல்களை வெளியிட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்கிற ஓர் அமைப்பை தந்தை பெரியார்அவர் காலத்திலேயே செய்து வைத்த ஏற்பாடு பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த அமைப்பு பெரியார் காலத்திலிருந்தே தொடர்ந்து நூல்களை வெளியிட்டுக் கொள்கை பரப்பிக்கொண்டு வருகிறது என்ற தகவலை இரண்டாவதாகத் தெரிந்து கொள்ள வேண்டும்!

நானூறுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன - மக்களிடத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்கிற மூன்றாவது தகவலையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான்காவதாக, இது பற்றிய உண்மைத் தகவல் களையெல்லாம் ஒழுங்காகத் தெரிந்து கொள்ள அந்த இயக்கத்தின் அதிகாரப் பூர்வமான ஏடான விடுதலையைப் படிக்க வேண்டும்.

பெரியார் தன்னுடைய சொத்துக்கள் என்று கூறும்போது நூல்களைப் பற்றி மட்டும் குறிப்பிடவில்லை - அதன் உரிமையைப் பற்றியும் தெளிவு படுத்தியுள்ளார். சில குழப்பநாயனார்கள், விபீஷணர்கள் தமிழ்நாட்டில் மலிவாகத் தோன்றுவார்கள் என்று தந்தை பெரியாருக்குத் தெரியாதா? அதன் காரணமாகவே அவர் காலத்திலேயே இதனைத் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

காந்தியாரானாலும், நேருவாக ஆனாலும் ராஜாஜியானாலும், அவர்களின் நூல்கள் குறிப்பிட்ட அறக்கட்டளைகளைத் தவிர மற்றவர்களால் வெளியிடப் படமுடியாது. பெரியார் நூல்களை அரசுடைமை ஆக்க வேண்டும் என்பவர்கள் கூட காந்தியார் நூல்களை ஏன் அரசுடைமை ஆக்கவில்லை என்று கேள்வி எழுப்புவதில்லை.

மாபெரும் சமூகப் புரட்சியாளரின் நூல்களை யாரும் வெளியிடலாம் என்று திறந்துவிட்டு பெரியார் ஜாதக கதைகளை வெளியிட வைக்க வேண்டும் என்று கருதுகிறார்கள் போலும். மானமற்ற ஒரு எதிரி இனம் - வரலாற்றிலே திரிபு வாதங்களை திணிப்பதற்காக உள்ள திரிநூல் கூட்டம் ஒன்று - டைனசர் கும்பல் ஒன்று வாய் பிளந்து காத்துக் கொண்டிருப்பது - இந்த அறிவு ஜீவிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே!

வால்மீகி இராமாயணத்தைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனர்களின் ஆதாரங்களை எடுத்து வைத்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், அடுத்தடுத்த பதிப்புகளில் அந்தப் பகுதிகளையெல்லாம் மாற்றியதை தந்தை பெரியார்அவர்களே பொதுக் கூட்டங்களில் பேசியதுண்டே!

சாமி சிதம்பரனார் அவர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன என்ற சாக்கில் அவர் எழுதிய தமிழர் தலைவர் நூலினை பதிப்பித்த ஒரு பதிப்பகம் தமிழர் தலைவர் என்று தலைப்பிட்டு அடைப்புக் குறிக்குள் (Life History of E.V.Ramasamy Naicker) என்று வெளியிட்டுள்ளதே! ஜாதி ஒழிப்பு ஜாம்பவானாகிய தந்தை பெரியார் அவர்கள் வாழ்க்கை வரலாற்று நூலின் தலைப்பையே அவர் கொள்கைக்கு எதிராக சிதைக்கும் அளவில் அமைப்புகள் உள்ள ஒரு நாட்டில், திராவிடர் கழகத்துக்குக் கூடுதலான பொறுப்பும் எச்சரிக்கையும் தேவைப்படுகிறதே!

தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை, பேச்சுகளை, எழுத்துகளை எந்த வடிவத்தில் எந்தத் தலைப்பில் வெளியிடுவது, எப்பொழுது வெளியிடுவது என்பதெல்லாம் - அதற்கான அதிகாரப் பூர்மான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்ய வேண்டிய ஒன்றாகும்.

ஏன் அப்படி வெளியிடவில்லை? ஏன் இப்படி வெளியிடுகிறீர்கள்? என்ற கேள்விகள் எல்லாம் விதண்டாவாதப் பட்டியலில் அடைக்கப்பட வேண்டியவை. தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை முற்றிலும் ஏற்றுக் கொண்டவர்களுக்கும், அரைகுறைகளுக்கும் வேறுபாடு உண்டே!

முதலில் பெரியார் நிறுவனம் வெளியிட்டுவரும் நூல்களை ஒழுங்காகப் படிக்கட்டும். விடுதலையின் மூலம் அந்த நிறுவனத்தின் செயல்பாட்டைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கட்டும். பார்ப்பான் விளம்பரம் கொடுக்கிறான் என்பதற்காக அவன் காலைக் கழுவிக் குடிக்க ஆசைப்பட வேண்டாம்.

பெரியார் சொத்து சொத்து என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் ஒரு கூட்டமும் நாட்டில் உண்டு. பணம் சேர்த்து வைத்ததுதான் பெரியார் செய்த பிழையாம் - கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார் இந்தக் காரைக்குடி கொலம்பஸ்.

பெரியார் விட்டுச் சென்ற சொத்துகள் பலவும் கட்டடங்கள், அச்சகம், நூல்கள் என்று விரியும். பெரியாருக்குப் பிறகு இவற்றை மேலும் வளர்த்திருக்கிறார்களா - அல்லது தேய்மானம் அடையச் செய்திருக்கிறார்களா?

ஓகோ, வளர்த்ததுதான் பஞ்சமா பாதகமோ! நல்ல வாய்ப்பு. இது போன்ற பெருச்சாளிகள் இங்கு வந்து சேரவில்லை. ஜெயலலிதா சொத்து குறித்து கொஞ்சம் பேசிப்பார்க்கட்டும். பழைய கருப்பையாவுக்குப் பேசப் பல்லிருக்காது.

(குறிப்பு: துக்ளக்கில் பழ. கருப்பையா எழுதிய கட்டுரைக்கான பதிலடி நாளை).


---------------"விடுதலை" 11-10-2009

1 comments:

Prapa said...

அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
நேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..