அரசு இடங்களில் ஆக்கிரமிப்பு கோயில்களா?
பொது இடங்களில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் எந்தவிதக் கோயில்களும் கட்ட அனும திக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது.
அரசுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துக் கோயில்கள் நிறைய கட்டப்பட்டு இருக்கின்றன. சாலைகளில் கட்டப்பட்டுள்ள கோயில்கள் ஏராளம்! மழைக்கால காளான்கள் போல, இக்கோயில்கள் திடீர் திடீர் என முளைக்கின்றன. இவற்றைக் காலி செய்வதில் அரசு தன் இயலாமையைப் பல இடங்களில் காட்டி வருகிறது.
இத்தகைய கோயில்களில் எந்த விதப் புனிதமும் கிடையாது என்று தெளிவாகக் கூறி உச்சநீதிமன்றம், இவற்றை அகற்றி அப்புறப்படுத்தும் வழிமுறைகளை அரசு செய்திட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுப் பயன்பாட்டுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள கோயில்களை அகற்றும்போது பிரச்சினைகள் உருவாகும் நிலை உண்டுதான் என்றாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான வழி முறைகளை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் எம்.கே. சர்மா ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
புதிதாக எந்தக் கோயிலும் அரசு இடங்களில் கட்டப்படக்கூடாது. கட்டுவதை அனுமதிக்கக் கூடாத வகையில் கடும் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியம் இதற்கான உறுதிமொழியை அளித்தார். எல்லா மாநில அரசுகளுடனும் கலந்து ஆய்ந்து முடிவெடுத்து அரசு இடங்களையும் பொது இடங்களையும் ஆக்ரமித்துக் கோயில் கட்டுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மத்திய அரசுக்குக் கெடு
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை செப்டம்பர் 29-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்குக் காலக் கெடு விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
இது தொடர்பான வழக்கே குஜராத் மாநில அரசின் நடவடிக்கையால்தான் வந்துள்ளது. அகமதாபாத் மாநகராட்சி எல்லையில் மட்டுமே 1200 இந்துக் கோயில்களும் 260 இசுலாமிய வழிபாட்டு இடங்களும் இருக்கின்றன. இவை பொதுப் பயன்பாட்டுக்கும், போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக இருப்பதால் அவற்றை அகற்ற வேண்டும் எனப் பொது நல வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டது. அதன் மீது தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், எந்த விதப் பாகுபாடும் காட்டாமல் எல்லா மதக் கோயில்களையும் இடித்துத்தள்ளுமாறு 2006-இல் ஆணையிட்டது.
அதன்படி ஆக்ரமிப்புகளை இடிக்கும் பணி நடைபெற்றபோது, குஜராத் உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து மத்திய அரசால் மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை அனுமதித்து உயர்நீதிமன்றத் தீர்ப்பை இடைக்காலத் தடை செய்து 2006 மே மாதம் 4-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
அந்த வழக்கு விசாரணையின்போதுதான், பொது இடத்திலோ, அரசு இடத்திலோ ஒரு கோயில் கட்டப்பட்டாலும்கூட, அந்த இடத்திற்குத் தொடர்புடைய அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்பும்கூட மாநில, மத்திய அரசுகளின் ஆணைகள் இந்த வகையில் தெளிவாகவே உள்ளன; என்றாலும் பொது இடங்களிலும், அரசுக்குச் சொந்தமான இடங்களிலும் கோயில்கட்டும் பணிகள் தங்குத் தடையின்றி நடந்து கொண்டு தானிருக்கிறது.
நமது கோரிக்கையை ஏற்று, சென்னை மாநகராட்சி நிருவாகம் வடசென்னை - புதுவண்ணை பெரியார் பூங்கா வாயிலில் கட்டப்பட்ட கோயிலினை இடித்துள்ளது. இது பனிப்பாறையின் ஒருமுனைதான் (Tip of the Iceberg) பொது மக்களின் நலன் கருதியும், மதச் சார்பற்ற தன்மையின் பண்பு கருதியும், மக்கள் மத்தியில் மூண்டெழும் மத மாச்சரியச் சச்சரவுகளைத் தவிர்க்கும் தன்மையிலும், சட்டத்தின் மரியாதை, நீதிமன்ற தீர்ப்பின் அடையாளம் கருதியும் அத்துமீறி, சட்டம்மீறி கட்டப்படும் அனைத்து மதக் கோயில்களையும் இடிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
கடவுள், மதம், வழிபாடு என்பவை ஒரு வீட்டின் பூஜை அறைக்குள் இருக்க வேண்டிய தனிப்பட்ட மனிதரின் தனி விஷயமாகும்.
அது பொது இடத்தில் நடமாடுமானால், மதமாச்சரியம் நடமாடும் இந்தியாவில் மனித ரத்தத்தை பசியாற அன்றாடம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
பொது இடங்களில், அரசுக்குரிய இடங்களில் கோயில் கட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகளே பொறுப்பு என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கறாராகவே கூறி விட்டது. இதற்கு மேலும் அதிகளவில் அலட்சியம் காட்டலாமா? அரசும்தான் கண்டும் காணாமல் இருக்க முடியுமா?
-------------------"விடுதலை"ஞாயிறுமலர் 10-10-2009
0 comments:
Post a Comment