கருநாடக மாநிலத்தில் தலைமை நீதிபதியாக இருக்கும் நீதியரசர் பி.டி. தினகரன் உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார் என்றதும் அவர்மீது சேற்றை வாரி இறைக்க ஒரு கூட்டம் இங்கு தயாரானது. குறிப்பாக இந்து ஏட்டின் அலுவலகம்தான் இதற்கான திட்டத்தைத் தீட்டியது. அவர் ஏதோ ஊழல் செய்து-விட்டார்; விவசாயிகளின் நிலங்களை அபகரித்துவிட்டார் என்று பழி சுமத்திக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தனர்.
இந்த இடத்தில்தான் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் களத்தில் குதித்தார்.
பி.டி. தினகரன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது சுமத்தப்படாத குற்றச்சாற்று, கருநாடக மாநிலத் தலைமை நீதிபதியாக அவர் சென்றபொழுது எழுப்பப்படாத குற்றச்சாற்று, அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆகப் போகிறார் என்றவுடன் அவசர அவசரமாக ஆர்ப்பரித்து எழுவது ஏன்?
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக வருவது என்பது எப்பொழுதாவது நிகழக்கூடிய வாய்ப்பு அதனையும் தட்டிப் பறிக்க முயலும் சக்திகளை அடையாளம் காட்டியதுதான் மானமிகு வீரமணி அவர்கள் செய்த குற்றமா?
இதில் இந்து ஏட்டுக்கு என்ன நிலைப்பாடோ அதேதான் துக்ளக் ராமசாமிக்கும்; ஆனாலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் யாராவது விபீஷணர்கள் கிடைக்கமாட்டார்களா என்று தேடித்தேடி கடைசியாக பழ. கருப்பையாவைக் கையும் களவுமாகப் பிடித்து, அவரை விட்டு துக்ளக்கில் எழுத வைக்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டவர்கள் தவறு செய்தால் அதனைக் கண்டிக்கக்கூடாதா? பார்ப்பனர்கள் செய்தால்தான் தண்டிக்கவேண்டுமா? இது என்ன வீரமணியின் புதிய மனுதர்மமா என்று சவடால் செய்து துக்ளக்கில் எழுதியுள்ளார்.
நீதித்துறையிலே முக்கியமான இடங்களுக்குத் தமிழர்கள் வரும்போதெல்லாம் புழுதி வாரித் தூற்றுவது குறுக்குச்சால் ஓட்டுவது என்பதெல்லாம் பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலையே!
சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் தமிழர் நீதிபதி சிதம்பரம் நாகபூசணம் சோமசுந்தரம் என்பவர்தான். ஆனால், அவர் வரக்கூடாது; அந்த இடத்திற்கு தனது மருமகன் வி.கே. திருவேங்கடாச்சாரிதான் வரவேண்டும் என்பதற்காக இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உறுப்பினரான என். கோபால்சாமி அய்யங்கார், பிரதமர் நேருவரை சென்று தலையிடச் செய்த வரலாறெல்லாம் இந்தக் கற்றுக்குட்டிகளுக்குத் தெரியுமா?
அன்றைய முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் உறுதியாக இருந்த நிலையில் தனது முதலமைச்சர் பதவியைக்கூட ராஜினாமா செய்ய முன்வந்த நிலையில்தான் நேருவே பின் வாங்க நேர்ந்தது.
முதல் இந்தியர் நீதிபதி என்று பெருமையாகச் சொல்லுவார்களே திருவாரூர் டி. முத்துசாமி அய்யருக்கு, நீதிபதி பதவி கொடுக்கக் கூடாது என்று எதிர்ப்புக் கிளம்பியதால், அதற்காகவே தொடங்கப்பட்டதுதான் இந்து ஏடு என்ற விவரம் தெரியுமா? வேண்டுமானால் இந்து ஏடு வெளியிட்டுள்ள "A Hountred years of the Hindu" என்ற நூலின் முன்னுரையைப் படித்துப் பார்க்கட்டும். இந்தத் தகவல் உண்மையா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளட்டும்.
அந்த முத்துசாமி அய்யர் யார் என்றால், கணவன் மனைவியை அடிக்கலாம்; அதில் ஒன்றும் குற்றம் இல்லை என்று மனுதர்மத்தை ஆதாரம் காட்டி தீர்ப்பு சொன்னவர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய பட்டமளிப்பு உரையில் அவர் தெரிவித்த கருத்தைத் தெரிந்துகொண்டால், பார்ப்பனர்களின் உண்மை உருவம் தெரியும்.
வெள்ளைக்கார ஆரியரும், இந்தியாவில் உள்ள ஆரியர்களும்தான் இந்தியாவை ஆளவேண்டும் என்பது இறைவன் விதித்த ஏற்பாடு என்று பேசியவர்.
அத்தகைய ஒருவர் நீதிபதியாக வரவேண்டும் என்பதற்காகவே முதன்முதலில் ஒரு பக்க இந்து ஏட்டைத் தொடங்கியது அக்ரகாரம்.
வெகுகாலத்திற்கு முன்பு போகவேண்டாம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.கே. சபர்வால் மீது குற்றச்சாற்று எழுந்ததே. அந்தக் குற்றச்சாற்றில் உண்மை இருக்கிறது என்று நீதித்துறை வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றே கூறியதே. நடுவண் அரசின் கண்காணிப்பு ஆணையத்திடமும் அந்தக் குழு புகார் செய்ததே. அதுபற்றியெல்லாம் இந்து எழுதியதுண்டா? துக்ளக் கண்டுகொண்டது உண்டா?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஒய்.கே. சபர்வால் இருந்தபோது, அவரின் மகன்கள் பல்பொருள் அங்காடி உரிமையாளர்களுடன் வணிகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். அதன் பிறகே டில்லியில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களை மூடி முத்திரையிடுவதற்கான ஆணையை தலைமை நீதிபதி சபர்வால் தலைமையிலான நீதிமன்ற அமர்வு பிறப்பித்தது. பல்பொருள் அங்காடி உரிமையாளர்களிடமிருந்து தனது மகன்கள் சில பயன்களைப் பெறுவதற்காக இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று நீதித்துறை வல்லுநர்கள் குழு கண்காணிப்பு ஆணையத்திடம் மனு ஒன்றைக் கொடுத்ததே, அதைப்பற்றிப் பேச்சு மூச்சு உண்டா?
நீதித்துறையில் ஊழலா? என்று நெட்டி முறித்து பேனா வாலைச் சுழற்றும் இந்தக் கருப்பையாக்கள் அப்பொழுதெல்லாம் எங்கே போனார்கள்?
தப்பித் தவறி எப்பொழுதாவது ஒரே ஒரு தாழ்த்தப்பட்டவர் நினைத்தே பார்க்க முடியாத உச்சநீதிமன்ற நீதிபதியாக வரும்போது மட்டும்தான் ஊழலைத் தூக்கிப் பிடித்து ஒப்பாரி வைப்பார்களா?
பெரியார் திடலில் கீதையின் சூழ்ச்சியும், குறளின் மாட்சியும் என்பது குறித்து (2005 பிப்ரவரி 7) உரையாற்றுகையில் பார்ப்பான் _ தமிழர் என்று கிழி கிழி என்று கிழித்தாரே. அந்தப் புத்தி இப்பொழுது எங்கே மேயப் போயிற்று என்பதுதான் திருவாளர் பழ. கருப்பையாவைப் பார்த்து நாம் எழுப்பும் கேள்வியாகும்.
கீதை ஒரு சார்பு நூல் என்று கூறினாரே அந்தப் புத்தியை இந்த இடத்தில் செலுத்திப் பார்த்திருந்தால் உண்மை புரிந்திருக்கும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த ராமச்சந்திர அய்யர் என்ற பார்ப்பனர் தன் பதிவேட்டில் பிறந்த தேதியைத் திருத்தி பதவி நீட்டித்தாரே. தந்தை பெரியார் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் இந்தக் குட்டை உடைத்தவுடன், விடுப்பில் சென்று அப்பொழுது குடியரசுத் தலைவராக ராதாகிருஷ்ணன் என்ற பார்ப்பனர் இருந்த காரணத்தால், அவர் தயவால் எந்தவிதத் தண்டனைக்கும் ஆளாகாமல் சவுகரியமாகத் தப்பித்தாரே. ஒரு பைசா குறையாமல் ஓய்வு பலன்கள் அனைத்தையும் முழுச் சுளையாகப் பெற்றுச் சென்றாரே (1964); அப்பொழுதெல்லாம் இந்து ஏடு என்ற ஒன்று இருந்ததில்லையா? ஏன் எழுதவில்லை? கருப்பையாக்கள் தெரிந்துகொள்ள-வேண்டிய, திருந்திக் கொள்ளவேண்டிய இடம் இதுதான்.
பி.டி. தினகரன்பற்றி வரிபிளந்து எழுதும் இந்தக் கூட்டம் அப்பொழுது எங்கு போயிற்று? பூணூல் பாசம் அபிமானம் அவர்களைக் கட்டிப் போடவில்லையா?
மைசூரில் பி மேடப்பா என்ற தலைமை நீதிபதியை நஞ்சு வைத்துக் கொல்ல முயற்சிக்கப்பட்டதே (எல்.எஸ். ராஜீ அய்யங்கார்) அந்தக் குற்றவாளியைக் காப்பாற்றிட இந்தியாவின் உள்துறை அமைச்சர் ஆச்சாரியாரும் (ராஜாஜியும்), சபாநாயகர் அனந்தசயனம் அய்யங்கார்களும் பிரயத்தனப்பட்டதெல்லாம் புரியுமா?
இதுபற்றி Caste mark என்ற கட்டுரையை கரண்ட் பத்திரிகையில் (17.11.1951) ஆசிரியர் டி.எப். காரகா எழுதியதைப் படித்தது உண்டா? நூறு ஆண்டு கழிந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்முதலாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஏ. வரதராசன் அவர்களைக் கொண்டுவர தந்தை பெரியாரும், முதல்வர் கலைஞரும் பட்டபாடும் கொஞ்சமா, நஞ்சமா?
இந்தச் சமூகநீதி வரலாற்றையெல்லாம் உணர்ந்தவர்களுக்குத்தான் - வலி உணர்ந்தவர்களுக்குத்தான் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நீதியரசர் பி.டி. தினகரனுக்காக ஏன் பரிந்து பேசுகிறார் என்பதற்கான உண்மை விளங்கும்.
சமூகப் பொறுப்பற்ற சழக்கர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பணப்பையை நிரப்பிக் கொள்ள அரிதாரங்களை அடிக்கொரு தடவை மாற்றிக்கொள்ளும் ஆசாமிகளா சமூகநீதிக் காவலர் வீரமணியை நோக்கி விரலை நீட்டுவது?
வீரமணிக்குச் சான்றிதழ் அளிக்க விவேகிகள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்; சமூகநீதியாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்; அதேபோல அவரிடம் சான்றிதழ் பெறக் காத்துக் கொண்டிருப்பவர்களும் கணக்கில் அடங்கமாட்டார்கள். அந்தக் கணக்கில் வர முடியாதவர்கள் வாந்தி எடுக்கின்றனர்.
மன்னனை எனக்குத் தெரியும். ஆனால், மன்னனுக்கு என்னைத் தெரியாது என்றானாம் ஒருவன்.
பழ கருப்பையாக்களும் அப்படித்தான்.
--------------------12-10-2009 "விடுதலை" யில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை
1 comments:
எல்லாம் சரி அந்த 440 ஏக்ரா நிலம் எப்படி வந்ததுன்னு சொல்லவில்லை. உங்களுக்கு கூட தெரியாத? ஒருவேளை பெரியார் அண்ணா எல்லாம் கனவுல வந்து கொடுத்தாங்கன்னு சொன்னாலும் சொல்லுவீங்க இல்லையா? இது பிறப்பால் வந்த குற்றச் சாட்டு அல்ல நடத்தையால் வந்தது. அதுக்கு அவர் பதில் சொல்லட்டும். நாம் ஏன் கவலைப் படனும்.
Post a Comment