பரிகாரம்என்ன?
உலகில் நானறிந்த வரையில் நம் நாட்டு மக்களிடம் இந்துக்கள் என்பவர்களிடம் தயக்கம், நாணயம் என்பது சற்றேறக்குறைய 100-க்கு 90 பேர்களிடம் இருப்பதில்லை. காரணம் என்ன?
நமக்கு கடவுள் இல்லையா? நாம் கடவுள் பக்தி இல்லாதவர்களா? நாம் மதம் அற்றவர்களா? நமக்குக் கடவுள்பயம் இல்லையா? கடவுள் நெறி இல்லையா? நன்மை செய்தால் நற்பயன் கிடைக்கும், தீமை செய்தால் தீய பயன் கிடைக்கும் என்கின்றதான எச்சரிக்கை சாதனங்கள் இல்லையா? நம்மில் பெரியவர்கள் தெய்வீகத் தன்மை கொண்ட மக்கள் என்பவர்கள் ஏற்பட்டு நமக்கு அறிவுரை கூறியவர்கள், கூறுபவர்கள், கூறும்படியான நீதி நூல்கள் இல்லையா? நமக்கு நற்கதி அளிக்கும்படியான கோயில்கள் இல்லையா? நமக்கு குருமார்கள் - மடாதிபதிகள் இல்லையா? இவையும் மற்றும் இவை போன்ற பலவும் ஏராளமாக இருக்கும்போது நமக்கு, நம் மக்களுக்கு - ஏன் ஒழுக்கம், நாணயம், இன-உணர்ச்சி, பொதுநல உணர்ச்சி, யோக்கியத் தன்மை முதலிய நற்குணங்கள் இல்லை? இப்படிப் பட்ட நிலை நமக்கு ஏற்படக் காரணம் என்ன? என்பதை மனிதன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எனக்குப் பல ஆண்டுகளாகவே இந்தக் கவலை உண்டு என்பதோடு, எனது தொண்டில் இதை - அதாவது மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியத் தனம், இன உணர்ச்சி ஏற்பட வேண்டுமென்பதை முக்கிய லட்சியமாகக் கொண்டு தொண்டாற்றி வந்திருக்கிறேன். அதை முதன்மையாகக் கொண்டு பிரச்சாரமும் செய்து வருகிறேன்.
எனது இத்தனை ஆண்டு வாழ்க்கையில் 80 ஆண்டு உலக அனுபவத்தில் - நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியத் தன்மைகள் குறைந்துகொண்டே வந்திருப்பதுடன், இன்று அக்குறைவு நிலை உச்ச நிலையடையும் வழியில் மனித சமுதாயமானது சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் எனது கருத்து?
இது பற்றி நான் மிகவும் கவலையடைகிறேன். இவ்விஷயங்களில் இன்றைய நிலை மாறுமா என்பதில் நான் மிகவும் கவலைப்படுகிறேன். மேற்சொன்னபடி எனது பல நாள் 30-40 ஆண்டுகள்- இதற்காகவே நான் செய்து கொண்டு வந்த தொண்டின் காரணமாய் ஏதாவது பயன் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்தால், அடியோடு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவேதான் மேலும் மேலும் கவலையோடு, இந்த நிலை ஏன் ஏற்பட்டது? அதற்கு என்ன பரிகாரம்? என்பதில் நான் மிகவும் சிந்திக்க முயற்சித்து, சதா சிந்திக்கிற வண்ணமாகவே இருக்கிறேன்.
நமக்கு சுயராஜ்யம் வந்து என்ன பயன்? சுதந்திரம் - பூரண சுயேச்சை வந்து என்ன பயன்? நம்மை நாமே ஆண்டுகொள்வதில் (ஜனநாயகத்தில்) என்ன பயன்? இந்த நிலையில் வாழும் மக்களுக்கு அந்நிய ஆட்சி ஏற்படுவதால் தீமை என்ன? என்றெல்லாம் என் மனம் சிந்தனையில் - கவலையில் மூழ்கிக் கிடக்கின்றது. ஏனெனில் இந்த நாட்டில், பொது வாழ்வில் எல்லா மக்களையும் பொறுத்த பொதுத் தொண்டில் சிறிதும் சுய நலமில்லாமல் எனக்குள்ள சகலத்தையும் பொதுவுக்கு ஈடுபடுத்திய தொண்டின் பயனாய், தொண்டின் பெயரால் எவ்வித சுயநல நன்மையும் அடையாமல், உண்மையாகவே ஒரு தொண்டன் - தொண்டனாகவே வாழ்பவன், வாழ வேண்டியவன் என்று கருதிக் கொண்டு, உண்மைத் தொண்டு செய்து வந்ததில் - வருவதில் எனக்கு மேற்பட்ட தொண்டன் யாருமில்லையென்னும் தன்மையில் தொண்டாற்றி வருபவன் நான் என்று கருதிக் கொண்டு தொண்டாற்றி வருவதால், எனக்கு இந்தக் கவலை. அதாவது நம் மக்களில் யோக்கியமானவன் நாணயமானவன், எந்தத் தரத்திலும், எந்த நிலையிலும் ஏன் ஒருவனைக்கூடக் காணமுடியவில்லையே? இருப்பதாகக் கருதக்கூட முடியவில்லையே? என்பனவற்றைக் கருதக் கூடியவனாக, கவலைப்படக் கூடியவனாக இருந்து வருகிறேன்.
இந்த நீண்ட நாள் கவலையில் சிந்தனையின் பயனாக இதற்கு அதாவது இந்த நாட்டில் இன்று இந்தக் காலத்திலும் ஒரு யோக்கியன், நாணயமானவன், ஒழுக்க-மானவன், யோக்கியப் பொறுப்புக்கு ஆளானவன் எந்தத் தரத்திலும் எவனும் இல்லாமல் போனதற்குக் காரணம் : நமது நாட்டிலுள்ள சூழ்நிலை, சுற்றுச்சார்பு, நமது கடவுள்கள், நமது நீதிநெறி, சாத்திரங்கள், தர்மங்கள் இவைபற்றிய புராணங்கள், இதிகாசங்கள், பிரசாரங்கள், பெரியவர்கள், மகான்கள், மகாத்மாக்கள், இன்று இருந்துவரும் அரசாங்க முறை, அரசியலில் ஈடுபடும் மக்கள் தன்மை, அரசியலில் ஒழுக்கம், மத ஒழுக்கம், சமுதாய அமைப்பு முதலிவைகள்தாம் என்கிற முடிவுக்கு வரவேண்டியவனாகி விட்டேன். அது மாத்திரமல்லாமல், மேற்கண்ட காரண காரியங்களில் நல்ல அளவுக்கு மாறுதல் ஏற்படாதவரை நமக்கு மேற்கண்ட தீய குணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படமுடியாது என்துடன், ஏற்படுத்த எவராலும் ஆகாது என்கிற முடிவுக்கு வரவேண்டியனாகி விட்டேன்.
நமது கடவுள்களில் ஒன்று கூட ஒழுக்கமாய், யோக்கியமாய், நாணயமாய், யோக்கியப் பொறுப்புடன் இருந்ததாகக் கடவுள் சம்பந்தப்பட்ட எந்த ஆதாரங்களிலுமே காண முடியவில்லை. அது மாத்திரமல்லாமல், இன்றுள்ள மக்களில் எந்த இழி மக்களிடமிருந்தும் எப்படிப்பட்ட ஒழுக்கம் ஈனம், யோக்கிய ஈனம், நாணயமான காரியங்கள் எதுவும் இன்றுள்ள நம் கடவுள்கள் எதனிடமும் இல்லை என்று சொல்ல முடியாத நிலைமையில்தானே நம் கடவுள்கள் இருந்து வருகின்றன! ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, யோக்கியக்கேடு இல்லாத நம் பதினாயிரக்கணக்கான கடவுள்கள், அவர்களின் பெண்டு பிள்ளைக் கடவுள்களில் ஒரு கடவுளையாவது காட்ட எந்த பக்தனாலாவது குருமார்களினாலாவது கடவுள் கதைகளினாலாவது காட்டமுடியுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கிறேன்.
மற்றும் வேத சாஸ்திர - தர்ம புராண - இதிகாசங்கள் எதிலாவது இன்று நாம் கூறும், விரும்பும் ஒழுக்கம், நாணயம், யோக்கியம், நேர்மை, யோக்கியமாகக் கருதும், நடக்கும் தன்மை மிகுந்திருப்பதாக எந்தப் பக்தன், குரு, பண்டிதன், புலவன் ஒருவனாலாவது காட்ட முடியுமா என்று கேட்கிறேன். அல்லது நமது பெரியோர்கள், முன்னோர்கள், தெய்வீகத்-தன்மை பெற்ற ரிஷிகள், மகான்கள், மகாத்மாக்கள் என்பவர்களில் யாரிடமாவது மேற்கண்ட குணங்களோ அல்லது அறிவோ, பண்போ இருந்ததாக யாராவது காட்ட முடியுமா என்று கேட்கிறேன். பந்தயம் கட்டிக் கேட்கிறேன்.
-------------- தந்தை பெரியார்- விடுதலை தலையங்கம் 1-7-1942
0 comments:
Post a Comment