ஜஸ்டிஸ் வரதராஜன்
நீதியரசர் ஏ. வரதராஜன் அவர்கள் மறைவுற்றார் (வயது 89) இவர் ஒரு வலாறு படைத்தவர். சென்னை உயர்நீதிமன்றம் தோன்றி நூறு ஆண்டுகள் கடந்துவிட்டனவே இதுவரை இந்த நீதிமன்றத்தில் ஒரே ஒரு தாழ்த்தப்பட்டவர் நுழைய முடியவில்லையே ஏன்? என்ற வினாவைத் தொடுத்தார் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் ஒரு வினாவைத் தொடுத்தார் என்றால், அதற்கான பதில் வந்தே தீரும். அதுவும் முதலமைச்சராகக் கலைஞர் இருந்தால் விடை கிடைக்காமல் போகுமா?
தென்னார்க்காடு மாவட்டத்தில் மாவட்ட நீதிபதியாக இருந்த அப்பாஜி வரதராஜன் அவர்களைத் தேடிப்பிடித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக அமர்த்தப் பெற்றார் (15.2.1973).
ஆம், உயர்ஜாதியினரின் கர்ப்பக்கிரகமாக இருந்த உயர்நீதிமன்றம் முதல் முதலாக சமூகநீதிக்குச் சிம்மாசனம் அளித்து உபசரித்தது.
தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தாலும், பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, வாய்ப்புக் கொடுத்தால் தங்கள் திறமைகளைத் தீர்மானமாக நிரூபித்துக் காட்டுவார்கள். அந்த அடிப்படையில்தான் அடுத்து உச்சநீதிமன்றத்திற்கும் சென்றார் ஜஸ்டிஸ் வரதராஜன் அவர்கள் (10.12.1980).
உயர்நீதிமன்றத்தில் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்டவர் மட்டும் அல்லர் உச்சநீதிமன்றத்திற்குள்ளும் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்டவர் என்ற பெருமைமிகு அணிகலனும் அவருக்கே கிடைத்தது. அங்கும் தன் தனித்தன்மையான முத்திரையினைப் பதித்து முறைப்படி ஓய்வு பெற்றார் (16.8.1985).
கழகம் நடத்திய தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு, தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலையை வெளியிட்ட பெருமையும் அவருக்கே உண்டு.
கழகம் நடத்திய சமூகநீதி மாநாடுகளில் எல்லாம் பங்கேற்று தம் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.
இன்னொரு முக்கியமான தகவலும், அவரைப்பற்றி உண்டு.
உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் தாழ்த்தப்பட்டவர் நீதிபதியாக அமர்த்தியாயிற்று. குடியரசுத் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்டவர் வரக்கூடாதா என்ற குரலையும் திராவிடர் கழகம்தான் ஒலித்தது.
1987 இல் அதற்கான முயற்சியில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மேற்கொண்டார். டில்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களையெல்லாம் சந்தித்து கருத்து உருவாக்கும். அந்த நேரத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திடீரென்று ஆர்.வி. கிருஷ்ணய்யரை வேட்பாளராக அறிவித்து முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டது. கடைசியில் ஆர். வெங்கட்ராமய்யர் வெற்றி பெற்றார்.
பல முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களுக்குச் சொந்தக்காரரான நீதியரசர் ஏ. வரதராசன் அவர்களை மிகக் கவுரவமாக நினைவு கூர்வோம்!
------------------ மயிலாடன் அவர்கள் 21-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment