இந்துவா?
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னையில் நடத்திய சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழாவில் இந்தோனேசியாவிலிருந்து எஸ்றா சற்குணம் வாங்கி வந்த குல்லாவை நிதியமைச்சர் அன்பழகன் தலையில் காதர் மொய்தீன் அணிவித்தார்.
எஸ்றா சற்குணம் பேசுகையில் குல்லாவை வாங்கியவர் கிறிஸ்தவர்; அணிவிப்பவர் இஸ்லாமியர்; பெற்றவர் அன்பழகன் இதுதான் சமூக நல்லிணக்கத்திற்கு அடையாளம் என்றார்.
இதுவரை செய்தியாக வெளியிட்ட தினமலர் (7.10.2009) கடைசியாக தனக்கே உரித்தான விஷக் கொடுக்கை நீட்டியுள்ளது. வழங்கியவர் கிறிஸ்தவர்; அணிவித்தவர் இஸ்லாமியர்; பெற்றவர் இந்துன்னு சொல்லிருக்கனும்.... என, முன்வரிசை வி.அய்.பி. ஒருவர் கமுக்கமாக கமென்ட் அடித்தார்.
தனக்குத் தைரியமிருந்தால் தினமலரின் கருத்து என்று குறிப்பிட்டிருக்கவேண்டும். யாரோ வி.அய்.பி.யாம்; அவர் தலையில் சுமத்திவிட்டு வழக்கமான பார்ப்பன முறையில் நைசாக நழுவப் பார்க்கிறது.
தந்தை பெரியார் அவர்களின் தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள், அண்ணாவின் ஆரிய மாயையை ஒழுங்காகப் படித்தவர்கள், பக்தியை மறந்து புத்தியைப் பயன்படுத்துபவர்கள், தன்மானத்தை விரும்புபவர்கள் எப்படி தங்களை இந்து என்று சொல்லிக் கொள்வார்கள்?
(இந்து என்றால் திருடன், விபச்சாரி மகன் என்றல்லவா கூறப்பட்டுள்ளது!).
மானமிகு மாண்புமிகு பேராசிரியர் க. அன்பழகன் அவர்களுக்காக யாரும் வக்காலத்து வாங்கவேண்டிய அவசியம் இல்லை. அவரே இதில் தெளிவானவர்.
இதுகுறித்து ஒரு எடுத்துக்காட்டைக் கூறவேண்டுமானால், வாசகர்களை 27 ஆண்டுகளுக்குமுன் அழைத்துச் செல்லவேண்டும்.
1982 மார்ச் 24 இல் பள்ளத்தூர் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி தினமலர் கும்பலின் செவுளில் அறைவதற்குப் போதுமான சாட்டையாகும்.
பார்ப்பன உயர்வை ஏற்கிறவன்தான் இந்து என்று தம்பட்டம் அடிப்பான். பிராமணர்களுக்கு முன்னாலே அனைவரும் சூத்திரன்தான். செட்டி நாட்டரசர் முத்தையா செட்டியாரும் சூத்திரர்தான். இங்கே ஏழையாக இருக்கிற வலையரும், பிராமணருக்கு முன்னாலே சூத்திரர்தான். எங்களைப்போல அமைச்சர்களாக இருந்தவர்களும் சூத்திரர்கள்தான். ஆக எல்லோரும் சூத்திரர்கள்தான். நான் இதைச் சொல்கிறபோது, பிராமணர்களைக் கண்டிப்பதற்குக்கூட அல்ல; நமக்குப் புத்தி வரவேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன்.
நாம் யார் என்றால், ஜாதி அடிப்படையை ஏற்றுக்கொள்ளாத வழியிலே வந்தவர்கள் என்ற காரணத்தால்தான் நாங்கள் இந்துக்கள் அல்ல...
நான் இந்துவும் அல்ல, முஸ்லிமும் அல்ல, கிறிஸ்தவனும் அல்ல. எனக்கென்று ஒரு மதம் இருந்தால் நான் மனிதன் என்ற மதத்தைச் சேர்ந்தவன். (விடுதலை, 25.3.1982).
இப்படி முழங்கிய பேராசிரியர் எப்படி தன்னை இந்து என்று ஒப்புக்கொள்வார்?
தினமலரே! விஷக் கொடுக்கை உண்மையான திராவிட இயக்கத்தவர்களிடம் நீட்டவேண்டாம்!
------------ மயிலாடன் அவர்கள் 8-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment