சீனாவின் வாலாட்டம்
இந்தியா _ சீனா உறவில் மீண்டும் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான் கைபட்டாலும் குற்றம், கால்பட்டாலும் குற்றம் என்ற ஒரு நிலைப்பாட்டை சீனா எடுத்து வருவதாகத் தெரிகிறது.
அருணாச்சல மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலையொட்டி பிரச்சாரத்திற்கு அம்மாநிலத்திற்கு இந்தியப் பிரதமர் சென்றால், அருணாச்சலப் பிரதேசத்திற்கு இந்தியப் பிரதமர் எப்படி செல்லலாம் என்று சீனா கேள்வி தொடுக்கிறது.
இதன்மூலம் அருணாசலப் பிரதேசம் சீனாவுக்குச் சொந்தம் என்று மறைமுகமாகத் தெரிவிக்கிறது, அச்சுறுத்துகிறது.
காஷ்மீரிலிருந்து சீனாவுக்குச் செல்லுவோருக்கு தனித்தாளில் சீனத் தூதரகம் அனுமதி வழங்கியது பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.
பொதுவாக பயணிகள் பாஸ்போர்ட்டில்தான் சம்பந்தப்பட தூதரகம் முத்திரையைக் குத்தும். ஆனால், சீனாவோ தனித்தாளில் விசாவினை வழங்கி வருகிறது.
இதனை ஏற்றுக்கொள்ளாமல் இந்தியக் குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்; அதற்குப் பிறகும் சீனத் தூதரக அதிகாரிகள் முரண்டு பிடித்து வருகின்றனர்.
அருணாச்சலப்பிரதேசத்திலிருந்து சீனா செல்லுவோருக்கும் அவ்வாறே பாஸ்போர்ட்டில் முத்திரை குத்தாமல் தனித்தாளில் அனுமதி வழங்கியது சீனத்தூதரகமே.
சீனா இப்படியெல்லாம் செய்வதற்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று இந்தியா நினைப்பதற்குக் காரணம் இருக்கிறது.
இந்தியாவிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள இலங்கையை பல வகைகளிலும் தன்வசப்படுத்திக்கொண்டு விட்டது சீனா.
ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இலங்கைக்கு உதவுவதுபோல மெல்ல நடை எடுத்து வைத்து, இப்பொழுது சீனா வைத்ததே சட்டம் என்ற நிலை இலங்கைத் தீவில்.
இந்தியாவுக்கு எதிர்ப்பாக இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடப்பட்ட வகையில் காய்களை நகர்த்தி அதில் முழு வெற்றியையும் சீனா பெற்றுவிட்டது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள கசப்பான உறவை உலகம் அறிந்ததே! இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு பல வகைகளிலும் உதவுவதில் சீனா முனைப்புக் காட்டி வருகிறது. சீனாவின் ஒத்துழைப்போடு பாகிஸ்தான் அணுகுண்டு சோதனையை நடத்தியதையும் இந்த இடத்தில் இணைத்துப் பார்க்கவேண்டும்.
சீனா, பாகிஸ்தான், இலங்கை மூன்றும் கைகோத்துக் கொண்டு ஆசியக் கண்டத்தில் தனது வலிமையை நிலை நிறுத்திக்கொள்ளும் நோக்கம் சீனாவுக்கு இருப்பதை இந்த நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன.
இந்தியா, சீனா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கிட்டதட்ட ஒரே காலகட்டத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள், வளர்ச்சி அடைய வேண்டிய நாடுகளாகும்.
இனி போர் என்று வந்துவிட்டால், வெற்றி, தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அணுகுண்டுகளைக் கைவசம் வைத்துள்ள நாடுகள். இந்த நிலையில் போர் என்று வந்துவிட்டால், அதுவும் அணு ஆயுதப் போராக அது மாறினால் ஒட்டுமொத்த மானுடத்துக்கே அழிவாக முடியும்.
1962 இல் சீனா _ இந்தியா யுத்தம் இரு நாடுகளிடையேயும் பெரிய அளவு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. உலகின் மக்கள் தொகையில் முதல் இடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் இருக்கும் நிலையில், இந்த இரு நாடுகளிடையேயும் மோதல் போக்கு என்பது விரும்பத்தக்கதல்ல.
இந்த நாடுகள் ஒற்றுமையைக் காட்டும் பட்சத்தில், ஆசியக் கண்டத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் தலையெடுக்க முடியாத ஒரு நிலையை உண்டாக்கிவிடும்.
போருக்காக பெரும் பணத்தை செலவழிக்காமல் மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு அது பயன்பட வாய்ப்பு பெரிதும் இருக்கிறது.
ஆடு ஓநாய் கதைகளை சீனா பேசிக்கொண்டிராமல், பெரும் மக்கள் தொகையைக் கொண்ட சீனா மக்களின் வளர்ச்சிப் பாதையில் கவனம் செலுத்தட்டும்!
ருசியா சிதறுண்டபின் கம்யூனிசத்துக்குச் சேதாரம் ஏற்பட்டுள்ளது. சீனா தவறாகச் செயல்பட்டு மிச்ச சொச்சத்தையும் ஒரே அடியாகக் காலி செய்திட வேண்டாம்!
------------------"விடுதலை"தலையங்கம் 17-10-2009
0 comments:
Post a Comment