Search This Blog

1.10.09

பெரியார் சிலையை வீதிகளில் மட்டுமல்ல நெஞ்சங்களில் திறந்து வைப்போம்!

பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடிந்துகொண்டிருக்கிறது!

தந்தை பெரியார் சிலையை வீதிகளில் மட்டுமல்ல நெஞ்சங்களில் திறந்து வைப்போம்!
திருவாரூரில் தந்தை பெரியார் சிலையைத் திறந்து முதலமைச்சர் முழக்கம்

திருவாரூரில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலையை தமிழர் தலைவர் கி. வீரமணி தலைமையில், தமிழக முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத்தார் (30.9.2009).

தந்தை பெரியார் சிலையை வீதிகளில் மட்டுமல்ல, நம் நெஞ்சங்களில் திறந்து வைப்போம் என்றார் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

திருவாரூரில் 30.9.2009 அன்று மாலை திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலையை தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்து ஆற்றிய உரை வருமாறு:_

வீரமணியார் எடுத்துக்காட்டியதைப் போல்...

இந்த இனிய எழுச்சி மிகுந்த விழாவில் என்னுடைய அன்புக்குரிய இளவலும் தமிழர் தலைவருமான திராவிடர் கழகத் தலைவர் வீரமணியார் அவர்கள் எடுத்துக்காட்டியதைப்போல், அய்யா, தந்தை பெரியார் அவர்களுடைய சிலையை இங்கே திறந்து வைக்கின்ற வைபவத்தை ஏற்பாடு செய்து என்னையும் கலந்துகொள்கின்ற அரிய வாய்ப்பினை வழங்கியமைக்காக நான் என்னுடைய மனமார்ந்த நன்றியை அவர்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிக்கனமாக காரில் இருந்தபடியே...

பெரியார் அவர்கள் எல்லா வகையிலும் சிக்கனத்தைக் கடைபிடிக்கக் கூடியவர். திருவாரூர் திராவிடர் கழகத் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு தந்தை பெரியார் அவர்களுடைய சிலையைத் திறந்து வைக்கின்ற இந்த விழாவில் மேடை எதுவும் அமைக்காமல் சிக்கனமாக காரில் இருந்தபடியே கருணாநிதியை பேச வைத்திருக்கிறீர்கள் (பலத்த கைதட்டல்).

எனக்கு கட்டளையிட்டு சிக்கனமாக வழங்கியிருக்கின்றார்கள்.

இது ஒன்றே பெரியார் கொள்கையை நாமெல்லாம் எவ்வளவு சிக்கென பிடித்துக்கொண்டு அதை கடைபிடிக்கிறோம் என்பதற்குச் சான்றாகும்.

நான் தனியாக நடத்துகின்ற கூட்டம். இந்த சிலை திறப்பு விழாவுக்காக நடத்தி சிலையைத் திறந்து வைத்த பேசியிருக்கவேண்டும்.

மூல நிகழ்ச்சியாக நடைபெறவேண்டியதை கிளை நிகழ்ச்சியாக...

ஆனாலும், என்னுடைய உடல்நிலை காரணமாக ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளை ஒப்புக்கொண்டபோதே இதுபோன்ற நிகழ்ச்சிகளும் அதற்குக் கிளை நிகழ்ச்சிகளாக அமைந்துவிடுகின்றபொழுது மூல நிகழ்ச்சியாக அமையவேண்டிய நிகழ்ச்சியை இப்படி கிளை நிகழ்ச்சியாக நடத்தவேண்டியிருக்கிறதே என்று மனக்கவலையோடு நான் கலந்துகொண்டாலும், நடக்கிற நிகழ்ச்சி என்னைப் போன்றவர்களை ஆளாக்கிய லட்சக்கணக்கான சுயமரியாதைக்காரர்களை உருவாக்கிய நம்முடைய அரும்பெரும் தந்தை பெரியார் அவர்களுடைய சிலையை திறக்கின்ற இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கின்ற காரணத்தால், அது மட்டுமல்லாமல், எந்த கல்வியறிவு கிராமப்புறங்களிலே சாதாரண, சாமான்ய மக்களுக்கும், ஏழை, எளியவர்களுக்கும் கிடைக்கவேண்டுமென்று பெரியார் அரும்பாடு பட்டாரோ அந்த கல்வி அறிவு, அதுவும் உயர் கல்வி அறிவு மத்திய பல்கலைக்கழகம் ஒன்று நிறுவி அதன் மூலமாக இந்த வட்டாரத்திலே இருக்கின்ற ஏழை, எளிய மாணவர்கள், கிராமப்புறத்து மாணவர்கள் பயன்பெறுகிறார்கள் என்றால், பெரியார் அவர்களுக்கு நாம் ஆற்றுகின்ற கடமை இதைவிட பிறிதொன்று இருக்க முடியாது.

பெரியார் கவலையோடு, ஆசையோடு கொண்டிருந்த கொள்கைகள்

இதைத்தான் அவர் மிகுந்த ஆசையோடு, மிகுந்த கவலையோடு தன்னுடைய வாழ் நாளிலே நிறைவேற வேண்டுமென்று, எதிர்பார்த்த கொள்கைகளிலே ஒன்றாக தந்தை பெரியார் அவர்கள் கொண்டிருந்தார்கள். அந்தக் கொள்கையிலே ஒரு பகுதி இன்றைய தினம் நிறைவேறியிருக்கிறது காலையிலே. அதை நிறைவேற்றி விட்டுத்தான் திருவாரூரில் தந்தை பெரியார் அவர்களுடைய சிலையைத் திறக்கின்ற இந்த விழாவிலே கலந்துகொண்டிருக்கின்றேன்.

என்ன செய்வது அப்படித்தான்...!

இந்த நிகழ்ச்சிக்கு நான் வரவேண்டுமென்று என்னுடைய ஆருயிர் இளவல் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் என்னை கேட்டபொழுது நான் அவர்களிடத்திலே உரிமையோடு திரும்பக் கேட்டேன்.

ஓய்வெடுத்துக் கொள்; ஓய்வெடுத்துக் கொள்; என்று சொல்லிக்கொண்-டேயிருக்கின்றீர்கள். இப்பொழுது ஒவ்வொரு நிகழ்ச்சியாக சேர்ந்துகொண்டே போகிறதே என்று கேட்டபொழுது, என்ன செய்வது அப்படித்தான் என்னுடைய கடமையும் இருக்கிறது. என்னுடைய தோழர்களுக்கு நானும் பதிலளிக்கவேண்டியிருக்கிறது. ஆகவே, நீங்கள் வரும் வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த சிலையைத் திறந்துவிடலாம் என்று குறிப்பிட்டார்கள்.

கம்பீரமான பெரியார் சிலையை திறந்து வைத்திருக்கின்றேன்

அதன்படி அவர்களுடைய முன்னிலையில், இந்த வட்டாரத்திலே உள்ள திராவிடர் கழக வீரர்கள் அவர்களுடைய ஏற்பாட்டில் உருவாக்கப்பட்டிருக்கின்ற கம்பீரமான தந்தை பெரியாருடைய சிலையை திறந்து வைத்திருக்கின்றேன்.

தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளை இன்று நேற்றல்ல, பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார் என்று என்றைக்கு கவிதை எழுதினேனோ அந்தக் காலத்திலேயிருந்து இந்தக் காலம் வரையிலும் (கைதட்டல்). பழைமை லோகத்தை ஈரோட்டுப் பூகம்பத்தால் இடிக்கின்ற அந்தச் செயலைத்தான் நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.

சுயமரியாதைக்காரன் என்ற பெயரோடு தொடரும், தொடரும் என்பதை நான் இந்த நேரத்திலே எடுத்துரைத்து எந்தப் பதவியாக இருந்தாலும், பதவியில் இல்லாவிட்டாலும் சுயமரியாதைக்காரன் என்ற உணர்வோடு இந்த விழாவிலே நான் கலந்துகொண்டிருக்கின்றேன்.

அதற்கு அடையாளமாகத்தான் உங்களை எல்லாம் கேட்டு தந்தை பெரியார் அவர்களுடைய சிலையை உங்கள் முன்னிலையிலே திறந்து வைத்து பெரியார் அவர்களுடைய சிலையை தமிழகத்திலே பல பகுதிகளில், பல திசைகளில், பல நகரங்களில், பல மாநகரங்களில் திறந்து வைத்திருக்கின்றேன்.

நம் நெஞ்சங்களில் பெரியார் சிலை

பெரியார் சிலை இந்த இடத்திலே திறந்து வைத்தால்தான் அது சிலை என்று யாரும் கருதாதீர்கள்.

பெரியார் சிலையை ஒரு வீதியிலே தெருவிலே நான் திறந்து வைக்கின்ற நேரத்திலே கூட அல்ல, அதற்கு முன்பே பெரியார் சிலையை நாம் நம்முடைய நெஞ்சத்திலே திறந்து வைத்திருக்கின்றோம் என்ற அந்த உணர்வோடு பெரியார் வாழ்க! தந்தை பெரியார் வாழ்க! சுயமரியாதை கொள்கைகள் வீரநடை போட வாழ்க! வாழ்க! என்று சொல்லி, உங்களுடைய அன்பான அன்புக்கும், வரவேற்புக்கும் என்னுடைய இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.


-----------------------நன்றி-"விடுதலை" 1-10-2009

0 comments: