Search This Blog

5.10.09

இந்துக்களின் கொடிய வழக்கம்






இம்மாதம் வெளியான மாடர்ன் ரிவ்யு எனும் மாதச் சஞ்சிகையில் மோசமான ஒரு பெண் கொலையைப் பற்றிக் கீழ்காணும் விவரங்கள் காணப்படுகின்றன அவை வருமாறு :

பத்து வயதுள்ள லீலாவதியென்னும் பெயருள்ள தனது மனைவியைக் கொன்றதாக ஜோகேந்திர நாத்கான் என்பவன் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிபதி பேஜ் என்பவரால் மரண தண்டனை விதிக்கப்பட்டான்.

இப்பெண்ணின் பெற்றோர் கல்கத்தாவிலுள்ள சங்கரிதோலா சந்தில் மிட்டாய்க் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இப்பெண்ணுக்கும் ஜோகேந்திரநாத் கானுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் மணம் நடந்தது. பெண், பெற்றோர் வீட்டிலேயே இருந்து வந்தாள். மனைவியைத் தன்னூருக்கு அழைத்துச் செல்லக் கணவன் சென்ற பிப்ரவரி 9 ஆம் தேதி மாமனார் வீட்டுக்க வந்தான். அடுத்த அய்ந்து நாட்களும் சுபதினமல்லவென்று கூறி சின்னாட் கழித்து மனைவியை அழைத்துச் செல்லும்படி பெண்ணின் பெற்றோர் விரும்பினார்கள். அதற்கிசைந்த அவன் மாமனார் வீட்டிலேயே தங்கியிருந்தான். முதல் இரண்டுநாள் இரவிலும் புருஷனும் மனைவியும் ஒரே அரையில் படுக்கை கொண்டனர். மூன்றாம் நாளாக புருஷனுடன் ஒரே அறையில் உறங்கப் பெண் மறுத்து தாயாருடன் படுக்கை கொண்டாள். பிப்ரவரி 12 இரவு வெற்றிலை பாக்கு வேண்டுமென ஜோகேந்திரன் கேட்க, அவைகளைக் கொடுத்து வரும்படி தாயார் மகளை அனுப்பினாள். பெண் அறைக்குள் சென்றதும் கணவன் அறையை தாழிட்டுக் கொண்டான். சற்று நேரம் பொறுத்து பெண்ணின் அழுகுரலையும், வரிசையாக அடிகள் விழும் சத்தத்தையும் பெண்ணின் தாயாரும், பக்கத்திலுள்ளவர்களும் கேட்டனர். தாயார் அறைக்குள் ஓடிப்பார்க்க இரத்த வெள்ளத்தில் தன்மகள் தரைமேல் முகம் கவிழ்ந்து கிடப்பதைக் கண்ணுற்றனள். இரத்தம் தோய்ந்த கல் குழவியொன்று பக்கத்தில் கிடந்தது. இக்குழவியால் மண்டை உடைக்கப்பட்டு மூளை தெறித்துக் கிடந்தது

ஆ! கொடுமை! கொடுமை!! இக்கோரமான கொலையை பாதகச் செயலைக் கேள்வியுற்ற இந்திய மக்கள் அனைவரும் மனம் பதைபதைப்பர்; உள்ள முருகுவர்; உடலம் நைவர்; கண்ணீரை ஆறாய்ப் பெருக்குவர்; கரைகாணாத் துன்பக் கடலில் வீழ்வர்; இளஞ் செல்வச் சிறுமியர்களாக இருப்பின் நெருப்பில் வீழ்ந்த புழுப்போல் துடி துடிப்பர். பெண்மக்கள் எனுஞ் செல்வம் படைத்த தாயரும், தந்தையரும் மனங்கலங்கி, மாய்ந்து, வெய்துயிர்த்து நிற்பர்; விம்மி; விம்மி அழுவர். இக்கொலைக் கொடியோனுக்கு விதித்த தண்டனை போதாது, போதாது என ஒவ்வொருவரின் உள்ளமும் அறை கூவா நிற்கும். இக்கொலைப் பாதகனைச் சித்திரவதை செய்தலே சிறந்ததண்டனையென ஒவ்வொருவரும் எண்ணுவர்.

இக்கொடிய நிகழ்ச்சி எமதுள்ளத்தில் தோற்றுவித்த எண்ணங்களை யெல்லாம் எடுத்துரைக்கப்புகின் இவ்வேடு முழுவதும் போதாதென்றே கூறுவோம். இக்கொடுஞ் செயலை எண்ணி எண்ணி அழுவதாற் பயனென்னை? உள்ளமுருகுவதாற் பயனென்னை? கொலைப் பாதகன் ஜோகேந்திரநாத் கானைக் கடிந்து நோவதால் பயனென்னை? இத்தகைய கொடிய செயல்கள் நிகழ்வதற்குக் காரணமென்ன வென ஆராய்ந்து, இனியும் அவ்வாறு நிகழா வண்ணம் ஏற்ற முறைகளைக் கையாள முற்படுவதே அறிவுடைமையாகும். கடந்த செயலைக் கருதி மனம் புழுங்குவதால் ஒரு பயனும் விளையாது. இத்தகைய செயல்களின் விளைவுக்குக் காரணமாக உள்ள இழி தகைமையை, கொடிய வழக்கங்களை ஒழிக்க வழி கோலுதல் அறிவாளிகளின் கடன்; தாய், தந்தையரின் கடன்; சமூகத்தினரின் கடனாம்.

இக்கோரமான கொலைச் செயல்களுக்குக் காரணமாக இருப்பது, பால் மணம் மாறாச் சிறுமியர்களை காமவிகாரத்தாற் கட்டுண்டு விலங்குகளைப் போல் திமிர் கொண்டலையும் இளம் வாலிபர்களுக்கு வதுவை செய்து அவர்பால் ஒப்புவிக்கும் கொடிய குற்றமான வழக்கமென்று நாம் திண்ணமாகக் கூறுவோம். இத்தகைய கொடிய, அக்கிரமமான வழக்கம் இந்து சமயத்தின் பேரால் நடைபெறுவது நமக்குப் பேரவமானம்; நமது சமயத்தின் நற்பெயரை நாசமாக்கி நாமும் அழிவென்னும் பெருங்குழியில் வீழ்ந்து இறப்போம்.

உண்பதும் உறங்குவதும், பூண்டதும் மணவினை செய்வதும் மக்கள் பெறுதலும் சமயக் கோட்பாடுகள் எனக் கூறின் இதனினும் அறியாமை வேறுளதோ? ஆண்டவனிடத்து மக்களைக் கொண்டு உய்விக்கும் அறிவு வழியே, ஆன்மநெறியே சமயமல்லாது, சமூகக் கட்டுப்பாடு குலையாமல், சமூகம் என்றும் அழிவுறாமல் நின்று நிலவுதற்கான முறைகளில் சேர்க்கப் படுவனவாகிய இவையெல்லாம் சமயநெறி எனக் கூறுதல் மடமையேயாகும்.

நமது நாட்டின்கண் தோன்றிய அறநூல்கள் எல்லாம் ஒரு சிறிது ஆண்டவனைப் பற்றியும், அவனை அடையும் நெறியைப் பற்றியும் கூறிப்பெரும்பாலும் சமூக வாழ்க்கையை மக்கள் இன்னவிதமாக நடத்துதல் வேண்டுமெனக் கூறா நிற்பன. அவ்வற நூல்களில் காணும் சமூக வாழ்க்கையைப் பற்றிய விதிகள் காலம், இடம், மக்களின் மனப்பான்மை இவற்றிற்கேற்ப மாறி, மாறி இருக்கும் அவ்விதிகள் இவ்விந்திய நாட்டிலேயே ஒரே பெற்ற தாய் இருக்கக் காண்கிறோமல்லோம். அவ்விதிகளை காலத்திற்குத் தக்கவாறும், இடத்திற்கேற்றவாறும் மாற்றியமைத்துக் கொள்ளுதல் கூடாதென்று நியதி இல்லை. பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவலகாலவகையினானே என ஆன்றோர் கூறியுள்ளார்கள். மக்கள் செய்யும் மணவினை சமூக வாழ்க்கையைச் சார்ந்தே நடைபெறுவதாகும்.

குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்குத் தகுதியற்ற பருவத்தில் உள்ள சிறுமியர்களை மணம் என்னும் கயிற்றினால் பிணித்து, குடும்பம் என்னும் குழியில் வீழ்த்தி கணவன் என்னும் விலங்கனைய காவலாளி கையில் ஒப்புவிக்கும்படி எந்த அற நூலும், எந்ததர்ம சாத்திரமும் போதிக்கவில்லை என்பதை மக்கள் உணரல் வேண்டும்.

மணவினை நிகழுங் காலத்தில் ஓதப்பெறும் மந்திரங்களே எமது கூற்றின் உண்மையை உள்ளங்கை நெல்லியென விளக்கிக்காட்டும். ஒன்றுமறியாத, விளையாட்டு விருப்பம் அகலாத பத்து வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறுமியர்களுக்கு மணமுடிக்க வேண்டுமெனச் சாத்திரங்கள் கூறுகிறதெனக் கூறுபவர்கள் விரிந்த கல்வியும், பரந்த அறிவும், மக்கள் மேம்பாடுறுவதில் பெருங்கவலையும் உடைய ராயிருந்த நமது முன்னோர்களின் மீது பெரும் பழி சுமத்துபவர்களாவார்கள். இக்கொடிய விதிகள் எல்லாம் பிற்காலத்தவரால் சுயநலங்கருதியும், பொருளாசை கொண்டும் எழுதி வைக்கப்பட்டனவேயாம்.

இளஞ் சிறுமியர்களுக்கு மணஞ் செய்யாவிடில் பெற்றோர் எரிவாய் நரகிடை வீழ்வர் என யாரோ சில மானிடப்பதர்கள் கூறியதை வேதவாக்காகக் கொண்டு நம்மவர் அறிவிழந்து, கண்மூடி, வைதிகம், வைதிகம் என்று வாயாற்பிதற்றி கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுப்பது போல் தமதருமைச் செல்லச் சிறுமியர்களை படுகுழியில் தள்ளி, சமூக நாசத்தையும், நாட்டின் அழிவையும் தேடும் பாதகச் செயலைவிட கொடுமையான செயல் வேறுண்டோ? இக்கொடுஞ்செயலினும் ஜோகேந்திரன் கொலை கொடிதோ? பால் மணம் மாறாக் குழந்தைப் பருவமுள்ள கணவன் இன்னானென அறிந்து கொள்ளவும் முடியாத புருட பாரியர் இயல்பு இத்தன்மைத்து என்றறிந்து கொள்ள இயலாத காமஞ்சாலா இளமையுடையளாய் கணவனுடன் உடலின்பம் நுகரும் பருவமும், ஆற்றலும் பெற்றிராத, மக்களைப் பெறுதற்குப் போதிய உடல் உரமும், உறுப்புகளின் வளர்ச்சியும் படைத்திராத நமதருமைப் பெண்மணிகளுக்கு, பொம்மைக் கல்யாணம் செய்வது போன்று மண முடித்து, மணமகன் பால் விடுத்து வைக்கும் கொடியவழக்கத்தை நமது நாட்டு மக்கள் கைக்கொண்டிருக்கு மட்டும் இத்தகைய கொடிய,கோரமான கொலைகள் நடைபெற்றுத்தான் வருமென்பதை நமது மக்கள் உணரல் வேண்டும். சமயம் அழியும், சமூகம் அழியும் என்ற மூடக்கொள்கைகளினால் கட்டுப்பட்டு மக்கள் அறியாமை என்னும் இருளில் கிடந்துழலும் வரையில் இத்தகைய கொலைகள் நிகழ்ந்து தான் வரும். அந்தோ! இந்திய மக்களே உமது நிலைக்கு இரங்குகின்றோம்.

சமய உண்மையை உணரார்கள்; சமூக வாழ்க்கை நிலையை அறியார்கள். மூடக் கொள்கைகளும், மூட நம்பிக்கையும் தான் இவர்கள் கண்ட உண்மைகள். விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவது போல், எல்லாமறிந்தும் இளஞ்சிறுமியர்களுக்கு மணஞ்செய்து, பின்னர் அவர்களுக்கு நேரும் கதியைக் கண்டு ஏன் அழுகிறீர்கள்? மாய்ம்மாலக் கண்ணீர் விடுகிறார்களென உலகம் உங்களைப் பழித்துரைக்காதா? இளம்வயதில் மண முடிப்பதினால். நேரும் துன்பங்களை நேரில் தாமாகவே அநுபவித்திருந்தும், தாய்மார்கள் இக்கொடிய வழக்கத்தை அறவே ஒழிக்க முன்வராதிருப்பது பெருங் குற்றமாகும் வேலியே பயிரை மேய்ந்தால் வேறு யார் துணை பயிருக்கு! பத்து மாதம் சுமந்து, பெற்று, சீராட்டித் தாலாட்டிப் பொன்னேபோல் போற்றி வளர்த்த பெண் செல்வங்களுக்குத் தாய்மார்களே எமனாக ஏற்பட்டு விட்டால் அவரைக் காப்பாற்றுபவர் யாவர்?

ஆண்மக்கள் தான் உயர்ந்தவர்கள்; பெண் மக்கள் தாழ்ந்தவர்கள்; ஆண் மக்கள் தான் அறிவு நிறைந்தவர்; பெண் மக்கள் அறிவில்லாதவர் என்ற கீழான எண்ணமும் இக்கொடுஞ் செயல்களுக்குக் காரணமாகும். இந்தக் தாழ்ந்த எண்ணம் நம்மவர்களை விட்டு அகலல் வேண்டும்; ஆண் மக்களும், பெண்மக்களும் சரி, நிகர்சமானம் என்ற எண்ணம் வளர்தல் வேண்டும். ஆண்மக்களைவிடப் பெண்மக்கள் எவ்வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்லர்; சமூக வாழ்க்கையில், குடும்ப வாழ்க்கையில் ஆண் மக்களுக்கு உள்ள உரிமைகள்,பொறுப்பு பெண் மக்களுக்கும் உண்டு என்ற உயரிய,பரந்த விரிந்தநோக்கம் நம்மவரிடை உதயமாதல் வேண்டும். அன்றே, அப்பொழுதே, அக்கணமே இத்தகைய கோரமான, மனதைப் பிளக்கும் கொடிய கொலைகள் நிகழா வண்ணம் செய்து விடலாம்.

தமிழ்நாட்டுத் தாய்மார்களே! தந்தைகளே!! உங்களுடைய பொறுப்பை உணர்ந்து நடவுங்கள். வங்காளத்தில்தான் இக்கொலையென்று நினையாதீர்கள். நமது கண்முன் நாடோறும் நடைபெறும் கொலைகளும், சித்திரவதைளும் உங்களுக்குத் தோன்ற வில்லையா? இக்கொடிய வழக்கத்தை ஒழிக்க முற்படாவிடில் பல்லாயிரக்கணக்கான இளஞ்சிறுமியர்களின் சாபங்கள் உங்களைச் சூழ்ந்து கொடிய வேதனைக்குள்ளாவீர்கள்! அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை என்பதை உணருங்கள்!

இக்கொடிய வழக்கத்தைத் தொலைக்க அந்நிய ஆங்கில அரசாங்கத்தார் துணை புரிவார்கள். நிச்சயம், இஃது அவருக்கு நன்மையையும் வருவாயையும் கொடுக்காதல்லவா? சமயம், சமயம் என்று வறிதே கூக்குரலிட்டு ஏமாற்றித்திரியும் அர்த்தமில்லாத வைதிகர்களாகிய திரு. டி. அரங்காச்சாரியார்கள் போன்ற சட்ட சபை அங்கத்தினர்களின் உதவியை நாடாதீர்கள்! தெய்வத்திருக்கோயில்களில் தேவதாசிகள் இருந்தே ஆக வேண்டுமென்று வாய் கூசாது சட்டசபையில் கூறும் படிற்றொழுக்கமுடைய அங்கத்தினர்களை எதிர்பார்த்து ஏமாறாதீர்கள் இது உங்கள் கடமையல்லவா? நீங்களே சீர்திருத்தஞ் செய்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நமது நாடு சுய ஆட்சி பெற்று நடக்கும் காலையில் இக்கொடிய வழக்கங்கள் புதைக்கப்படும் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

---------------------- "குடி அரசு", கட்டுரை, 07.06.1925

2 comments:

Anonymous said...

உங்கள் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட , உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்களுக்கு நீங்கள் கடைசியாக எழுதிய ஐந்து பதிவுகளை சிறு படங்களாக வலது அல்லது இடது பக்கத்தில் இடம்பெறச் செய்ய இந்த gadaget ஐ இணையுங்கள்
gadget ஐ பெற இங்கே செல்லவும்

tamil10 .com சார்பாக
தமிழினி
நன்றி

benza said...

Well done brother - - - ou are a brave boy.