Search This Blog

10.10.09

யார் பொருத்தமான மணப்பெண்?


யார் பொருத்தமானவர்?

யார் பொருத்தமான மணப்பெண் என்ற வினாவை எழுப்பி சில தகவல்களை வெளியிட்டுள்ளது இந்தியா டுடே இதழ் (14.10.2009).

இந்திய ஆண் தனக்கேற்ற மனைவிக்கான தேடலில் பாரம்பரிய அளவுகோல்களுக்குப் பதில் நடைமுறை தேவைகளை முக்கிய அம்சமாகக் கருத ஆரம்பித்திருக்கிறான் என்ற பீடிகையோடு சில தகவல்களைக் கொடுத்துள்ளது இவ்விதழ்.

1960_களில் அழகான அனைத்துத் திறமைகளும் பெற்ற கன்னிப் பெண், ஒரே ஜாதி, நல்ல குடும்பம் முக்கியம்.

1970_களில் கான்வென்ட் கல்வி பெற்ற மிடுக்கான, அழகான அப்பாவியான பெண் தேவை.

1980_களில் உயரமான, அழகான, ஒல்லியான, படித்த, குடும்பப் பாங்கான பெண் தேவை.

1990_களில் அதிகம் சம்பாதிக்கக் கூடிய நல்ல உடல் தகுதியுடைய குடும்பப் பாங்கான பெண் தேவை.

2000_களில் ஒத்த ரசனை உள்ள, படித்த, வேலை பார்க்கும் பெண் தேவை. அழகு, ஜாதி, ஜாதகம் எதுவும் முக்கியமில்லை.

அழகு என்பது பார்ப்பவர் மனதைப் பொறுத்தது என்று 42 விழுக்காடு ஆண்கள் கூறுகின்றனர்.

வேலை பார்க்கும் படித்த பெண்கள் தேவை என்று 47 விழுக்காடு விரும்புகின்றனர்.

சிந்தனைப் போக்கில் சீரான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கவே செய்கின்றன.

பெண்கள் கல்வி என்பது தனி வாழ்விலும், சமூக வாழ்விலும் மிகவும் அவசியம் தேவைப்படுகிறது. ஆண் கல்வி 82 விழுக்காடாகவும், பெண் கல்வி 64 விழுக்காடாகவும் தமிழ்நாட்டில் இருக்கிறது. (கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, விடுதலை 9.9.2008, பக்கம் 4).

இந்திய அளவில் ஆண்கள் கல்வி 75.85 விழுக்காடு; பெண்களின் கல்வி நிலை 54.16 விழுக்-காடு ஆகும். இந்தப் புள்ளி விவரத்டு இன்னொரு யதார்த்த நிலையும் முக்கியமானதாகும். இந்தியாவில் 40 விழுக்காடு பெண்கள் விவசாயிகள்; உழைக்கும் பெண்களில் 75 விழுக்காட்டினர் பெண்களே!

இவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் எதிர்பார்க்கும் கல்வித் தகுதி உடையவர்கள் அல்லர். இன்னொரு பக்கத்தில் இந்தியாவில் ஆயிரம் ஆண்கள் என்றால், பெண்களின் எண்ணிக்கை 933.

இதன்மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள படித்த மேல்தட்டு பெண்களுக்குத்தான் பொருளாதாரம் உள்ளிட்ட நலன்களையும் உள்ளடக்கிய வளவாழ்வு கிடைக்கிறது. நவீன வாழ்வின் வசந்தத்தை அனுபவிப்பவர்கள் ஒரு தட்டாகவும், அதனைக் கனவு காண்பவர்கள் இன்னொரு தட்டாகவும் இருக்கும் நிலை கவனத்துக்குரியதாகும்.

பெண் கல்வி, வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 50 விழுக்காடு, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் ஆண்களுக்குச் சமமான வாய்ப்பு, பெண்களுக்குக் கிட்டும்பொழுதுதான் இந்த ஏற்றத்தாழ்வுப் பள்ளம் நிரப்பப்படும்.

யார் பொருத்தமான மணமகன், மணமகள் என்பது பற்றி விரிவாகத் தகவல்களைத் திரட்டித் தந்திருக்கக்கூடிய இந்தியா டுடே இதழ் இந்தக் கண்ணோட்டத்தில் சமுதாயத்தின் எதார்த்த நிலையைக் காணத் தவறிவிட்டது.

பெண்கள் மணமகனைப் பார்த்துத் தொடுக்கும் வினாக்களும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

1. உங்கள் பெற்றோர் வீட்டிலிருந்து எவ்வளவு தூரத்தில் நாம் குடியிருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

2. எல்லா வீட்டு வேலை, சமையலையும் நானேதான் செய்யவேண்டுமா?

3. கூட்டாக வங்கிக் கணக்கு தொடங்க வலியுறுத்துவீர்களா?

4. நான் வேறு ஊருக்கு மாறவேண்டும் என்று வந்தால், என் வேலையை விடவேண்டும் என்று சொல்வீர்களா?

5. குழந்தைகள் பிறந்தால் வேலைக்குச் செல்லவேண்டாம் என்று எதிர்பார்ப்பீர்களா?

இத்தகு வினாக்களைப் பெண்கள் எழுப்புவதாகக் கூறப்பட்டுள்ளது.

பெண்கள் மத்தியில் வெடித்து எழுந்திருக்கக் கூடிய மாற்றத்தின் மணத்தை இதன்மூலம் நுகர முடிகிறது.

ஜாதகப் பொருத்தத்தைவிட குருதிப் பொருத்தம், மருத்துவச் சான்றுபற்றியும் வினா எழுப்பி, ஆண், பெண் இரு பாலர்களின் கருத்துகளையும் கேட்டிருந்தால் வளர்ச்சிச் சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதாக இருந்திருக்கும்.

அண்மைக்காலமாக திராவிடர் கழகத் தலைவர் திருமண மேடைகளில் இந்தப் பிரச்சினை குறித்த விவாதத்தைத் தட்டி எழுப்பி வருகிறார். அது மேலும் விரிவாகப் பேசப்பட்டு, நடைமுறைக்கு வருவது ஆரோக்கியமான வாழ்வுக்கான அஸ்திவாரமாகும்.

பிரயோசனமான பிரச்சினை குறித்து இந்தியா டுடே அலசியிருப்பது வரவேற்கத்தக்கதே!

--------------------"விடுதலை"தலையங்கம் 6-10-2009

0 comments: