Search This Blog

19.10.09

கடவுள் செய்யவேண்டியதை மனிதனைக் கொண்டு ஏன் சொல்ல வேண்டும்?




கடவுள் செய்யவேண்டியதை – சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும்? அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன் அவர் வரவில்லை? இப்போது கிருஸ்துவை ஏற்காதவர்கள், நம்பாதவர்கள், வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு இவ்வளவு தான் சக்தியா? இது போலத்தானே இஸ்லாம் மதம் என்பதும் சொல்லப்படுகிறது? முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு? குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம்.கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா? கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா? உலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும் ஏன் சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை? முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான்? மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப் பயன்படுவதில்லையே! ஏன்? கடவுள் சொல், அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு மாத்திரம் தெரிய வேண்டும்? இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது! இதுதான் கடவுள் தன்மையா? இவையெல்லாம் மனிதத் தன்மையா? மனிதக் கற்பனையா? தெய்வத்தன்மையா? ஒரு சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால் அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம், மகன், குமாரன், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும்? இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும்? இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம், தூதர்கள், சமயங்கள், மதங்கள், போதகர்கள் இருக்க வேண்டிய அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால் இவையெல்லாம் மூட நம்பிக்கை, அதாவது அறிவைக் கொண்டு சிந்திக்காமல் கண்முடித்தனமாய் நம்ப வேண்டியவை ஆகின்றனவா இல்லையா? இது மனிதர் என்பவர்களுக்கு ஏற்றதா என்று கேட்கிறேன்.

இதற்காகக் கோபிப்பதில் பயன் என்ன? மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால் மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய முடியும்? அறிவுள்ளவர்களே! பகுத்தறிவாதிகளே! சிந்தித்துப்பாருங்கள்! இது சந்திர மண்டலத்திற்கு மனிதன் போய் வரும் காலம்; காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே சிந்தித்துப்பாருங்கள்! பின் சந்ததி மக்களை மடையர்களாக்காதீர்கள்!


------------------14-06-1971 "உண்மை" இதழில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்.

1 comments:

வால்பையன் said...

இஸ்லாமிய, கிறுஸ்துவ கடவுள்கள் ஆணுமல்லாதவர்கள், பெண்ணுமல்லாதவர்கள் ஏன் ஒரு வேளை அவர்கள் மனிதர்களே இல்லாமல் இருக்கலாம்! ஒரு நாய்குட்டியாகவோ, பூனை குட்டியாகவோ கூட இருக்கலாம்!
அவர்களால் நேரடியாக பேசமுடியாது!
அதற்காக சம்பளத்துக்கு ஆள் வைத்திருப்பார்கள்!

இந்தியாவில் இருக்கும் புத்திசாலிகள் அதை நம்பமாட்டாங்கன்னு தெரிஞ்சி தான், கிருஸ்னர் போர் நடக்கும் போது நிறுத்தி சாவகாசமா கதை சொன்னாருன்னு, மத்தவங்கள்ளாம் வாயை பார்த்துகிட்டு இருந்தாங்கன்னு சொல்லியிருக்காய்க!