Search This Blog

28.10.09

மரகத லிங்கத்துக்கு அரும்பெரும் சக்தி உள்ளதா?

மரகதலிங்கம்

நேற்று மாலை ஏடுகளில் ஒரு பரபரப்பான செய்தி.

50 கோடி ரூபாய் மதிப்புள்ள திருத்துறைப்பூண்டி மருந்தீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான மரகதலிங்கம் கைப்பற்றப்பட்டது என்பதுதான் அந்தச் செய்தி.

இது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாம். இந்த மரகதலிங்கத்தை இந்திரனே பூஜித்து வந்தானாம். (இடையில் விட்டுவிட்டானோ!)

லிங்கம் என்றால் ஆண் குறி! அது மரகதத்தில் செய்யப்பட்டதாம்! ஆகா, எப்படிப்பட்ட பக்தி!

இன்னும் இந்த மரகதலிங்கத்துக்கு என்ன கூடுதல் விசேஷம்? (கதை அளப்புக்கு என்ன பஞ்சமா?).

அந்த மரகதலிங்கத்தை முசுகுண்ட சக்ரவர்த்தியிடம் கொடுத்து ஏழு பிரசித்திப் பெற்ற கோயில்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருமாறு இந்திரன் கூறினானாம்.

இதன் பொருள் என்ன? இந்த மரகத லிங்கத்துக்கு அரும்பெரும் சக்தி உள்ளது என்பதுதானே இதன் அய்தீகம்.

இவ்வளவு சக்தி வாய்ந்த அதுவும் தேவர்களின் தலைவனான இந்திரனே வழிபட்டு வந்த லிங்கத்தை கொள்ளையர்கள் எப்படி திருடியிருக்க முடியும்?

அப்படி திருடியிருக்கிறார்கள் என்றால் இந்த லிங்கங்கள் தெய்வ சக்தி வாய்ந்தவை என்பதெல்லாம் அசல் டூப்பாக இருக்கவேண்டும். இரண்டில் ஒன்றுதானே உண்மையாக இருக்கவேண்டும்.

நம் முன் நிற்கும் கேள்விகள் இரண்டே இரண்டுதான். மரகதலிங்கத்துக்குத் மகாசக்தி உண்டென்றால், அதனைத் திருடிச் செல்ல முடியுமா? அதனைத் திருடியிருக்கிறார்கள் என்பதிலிருந்து லிங்கத்துக்குச் சக்தியாவது, புடலங்காயாவது என்பதை மரியாதையாக, நாணயமாக ஒப்புக்கொள்ள வேண்டுமா இல்லையா?

இந்த சிவலிங்கத் திருடர்களைக் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரி யார் தெரியுமா? காதர் பாஷா.

இது என்ன அநியாயம்? சிவலிங்கத் திருட்டை ஒரு சாயபு கண்டுபிடிக்கலாமா? என்று அக்ரகாரத்தார் அலறக்கூடும்.

இது கருணாநிதி சதி என்று இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் கூக்குரல் போட்டாலும் போடுவார்கள் யார் கண்டது?

கடவுளையே கண்டுபிடித்துக் கொடுக்க மனிதர்கள் (காவல்துறையினர்)தான் தேவைப்படுகிறார்கள்.

கடவுளை மற, மனிதனை நினை! என்ற பெரியார் வாக்கு பலித்ததா இல்லையா?

--------------- மயிலாடன் அவர்கள் 27-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

27.10.09

தமிழ்நாடு பத்திரிகையின் வம்புச் சண்டை


தமிழ்நாடு பத்திரிகையின் வம்புச் சண்டை

சுயராஜ்யா, சுதேசமித்திரன் முதலிய பிராமணப் பத்திரிகைகளும் ஸ்ரீமான் சீனிவாச அய்யங்கார் போன்ற பிராமணத்தலைவர்களும் நம்முடன் தொடுக்கும் போர் முடிவு பெறாமல் இருக்கும் பொழுதே தமிழ்நாடு பத்திரிகையும் இது தான் சமயமென்று நம்மை வம்புச்சண்டைக்கிழுக்கின்றது. இம்மாதிரி வம்புச் சண்டைகளுக்கும் நாம் இடம் கொடுக்கக்கூடாதென்று எவ்வளவோ காரியங்களை சகித்துக் கொண்டு நமது உத்தேச காரியத்தை மாத்திரம் பார்த்துக் கொண்டு வந்தாலும் வேண்டுமென்றே வலியவரும் சண்டைகளுக்கு நாம் என்ன செய்யலாம்? தற்காலம் தமிழ் நாட்டில் சுயராஜ்ஜியக்கட்சி என்கிற பெயரை வைத்துக் கொண்டு பிராமணர் அல்லாதாரின் செல்வாக்கை அடியோடு ஒழிக்க வேண்டுமென்கிற கருத்தோடு சில பிராமணர்களும், அவர்கள் பத்திரிகைகளும் காங்கிரஸ் பெயரையும், மகாத்மா பெயரையும் மற்றும் உள்ள அநேக தியாகிகளின் பெயரையும் உபயோகப் படுத்திக்கொண்டு ஸ்தலஸ்தாபனங்களிலும், தேர்தல்களிலும் காங்கிரசிலும் செய்துவரும் கொடுமைகளையும், சூழ்ச்சிகளையும் கண்டு உண்மையிலேயே மனம் பொறாதவராகி எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் இவற்றைத் தடுக்க செய்துவரும் ஒருசிறு தொண்டிற்கும் பிராமணரல்லாதாரில் சில தலைவர்கள் என்போர் நமக்கு உதவி செய்யாவிட்டாலும் நமது முயற்சிக்குக் கெடுதலாவது செய்யாது இருக்க வேண்டாமா என்றுதான் பிராமணரல்லாத தலைவர்களிடம் நாம் உண்மையாய் எதிர்பார்த்தது.


இந்தநிலையில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவின் தேர்தல் சம்பந்தமான அபிப்பிராயங்கள் நமது முயற்சிக்கு சில இடங்களில் கொசவனுக்குப் பல நாளைக்கு வேலை, தடியடிக்காரனுக்கு ஒரே நாள் வேலை என்பது போல் பல தொந்தரவுகளை விளைவிப்பதாகப் பட்டதால் ஸ்ரீமான் நாயுடுவின் அபிப்பிராயங்களை எடுத்துக்காட்ட வேண்டியது நமது கடமையாய் போய்விட்டது. அதற்கு, சரியான சமாதானம் ஒன்றும் சொல்லாமல் ஸ்ரீமான் பட்டாபிராமய்யர் அவர்கள் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் சுயராஜ்ய கட்சி தேசத்து ரோகம் செய்து விட்டது என்று சொன்ன பொழுது ஸ்ரீமான் நேரு அதற்கு தகுந்த சமாதானம் சொல்வதற்கு யோக்கியதையில்லாமல் நான் உன்னை ஒரு தூசி போல் மதிக்கிறேன் என்று சொன்ன அகம்பாவமும்.... பொருந்திய பதில்போல் ஸ்ரீமான் நாயக்கரின் கோபத்திற்கும், பயமுறுத்தலுக்கும் பயந்து ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தம்முடைய கொள்கையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று தமிழ்நாடு பத்திரிகை வம்புச் சண்டைக்கு இழுக்கின்றது. சாதாரணமாக பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத்தலைவர்களும், தான் ஒருவரைப்பற்றி ஏதேனும் குறைகூற வேண்டுமென்று நினைத்துக் கொண்டால் ஒருவர் என்ன சொன்னார் என்ன பேசினார் என்பதை தங்கள் பத்திரிகையில் எடுத்துக் காட்டாமலும், அதைப் பொது ஜனங்களுக்குத் தெரியப்படுத்தாமலும் தங்களுக்குத் தோன்றியபடி பத்திரிகைகளில் எழுதி அவர்கள் இஷ்டத்திற்கு அனுசரணையான பிரச்சாரம் செய்வது வழக்கம், அதைப் பற்றி நாமும் பலதடவை கண்டித்திருக்கிறோம். அதே கொள்கையை தமிழ்நாடு பத்திரிகையும் பின்பற்றுவதென்றால் பிறகு நாம் அதை என்னவென்று நினைப்பது? அதனிடத்தில் இனி என்ன தான் எதிர்பார்க்க முடியாது? எந்த விஷயத்தில் ஸ்ரீமான் நாயக்கர் கோபித்துக் கொண்டார் எந்த விஷயத்தில் ஸ்ரீமான் நாயுடுவை பயமுறுத்தினார் என்று எழுதி அதன் பேரில் ஸ்ரீமான் நாயுடுவின் வீரப்பிரதாபத்தைக் காட்டியிருந்தால் ஒழுங்காயிருக்கும், அப்படியில்லாமல் வீண் வம்புச் சண்டைக்கு இழுப்பது தர்மமா?

நாம் எழுதியதில் ஏதேனும் குற்றமிருக்கின்றதா என்பதை பொது ஜனங்கள் அறியும்படி மறுபடியும் எழுதி இதற்குத் தமிழ்நாடு பத்திரிகை சொல்லும் பதிலையும் சொல்லி விட்டு நிறுத்திக் கொள்கிறோம். இதைப்பற்றி மறுபடியும் தமிழ்நாடு கண்டனமோ மறுப்போ சமாதானமோ எழுதுகிற பொழுது முன்போல் நடந்து கொள்ளாமல் நாம் எழுதியதைப் போட்டு சமாதானமோ கண்டனமோ, மறுப்போ எழுதுமென்று எதிர்பார்க்கிறோம்.

ஸ்ரீமான் நாயுடுவின் பழைய அபிப்பிராயமாவது;

கோயமுத்தூர் தேர்தலின் பொழுது தேர்தலுக்கு நிற்பவர்களின் யோக்கியதையை அறிந்து ஓட்டுச் செய்ய வேண்டுமென்ற ஸ்ரீமான் நாயக்கர் கூறிவந்த பொழுது ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு காங்கிரஸ்காரருக்கே வெற்றி ஏற்படுமாறு ஈசனைப்பிரார்த்திக்கிறேன் என்று ஒரு ஸ்ரீ முகம் விடுவித்தார்.

அதற்கு எதிர்க்கட்சியாளர் ஒரு கடித மெழுதியபொழுது (அக்கடிதம் ஆகஸ்டு மாதம் 30ஆம் தேதி தமிழ்நாடு பத்திரிக்கையின் 9-ஆவது பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.) சுயராஜ்யக் கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு பாமர ஜனங்களை போலிகள் ஏமாற்றி விடாமல் பார்த்துக் கொள்வது தேசியவாதிகளின் கடமையாகும்.... சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்குச் சென்று அதை ஓடவிடாது தடுக்கவே கைப்பற்றுவதாகச் சொன்னார்கள். சட்ட சபைகளைத் தவிர முனிசிபாலிட்டிகளில் ஒத்துழையாமைக்கோ, முட்டுக்கட்டைக்கோ வழி இல்லை. நகர சபைகளில் எந்த விதத்தில் ஜனங்களுக்கு வேலை செய்யலாம் என்பதே அங்கத்தினர்களின் வேலையாயிருக்கிறதே ஒழிய எதிர்த்துப் போராடுவதற்கு அதிகாரவர்க்கம் அங்கு இல்லை. இதனால் ஸ்தல ஸ்தாபனங்களில் ஒருவர் இன்ன கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்கு மட்டும் ஓட்டுக்கொடுத்து விடக்கூடாது. ............. அபேட்சகர்களின் உண்மையான யோக்கியதைகளை அறிந்தே ஓட்டுக்கொடுக்க வேண்டும். நீடித்த காங்கிரஸ்வாதியாயும், வெளிவேஷத்திற்கு மாத்திரமல்லாமல் எப்பொழுதும் கதர் கட்டிக்கொண்டிருப்பவராகவும் பார்த்து ஓட்டுச் செய்யவேண்டும் என்று 30-.8.19-25 தமிழ்நாடு பத்திரிகையில் மேற்படி கோயம்புத்தூர் நண்பருக்கு பதில் கூறு முகத்தான் ஒரு வியாசம் வரைந்துள்ளார். அதற்கு நான்கு நாளைக்குள் திருச்சியில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் தலைமையின் கீழ்கூடிய ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஜாதி பேதமின்றி காங்கிரஸ்காரருக்கே ஓட்டுச் செய்ய வேண்டுமென்று ஒரு செய்தி அனுப்பினார். பாம்பன் பிரசங்கத்தில் காரியத்திற்குக் கதர் உடுத்தி காங்கிரஸ் பெயரைச் சொல்லித்திரியும் கசடர்கள் உங்களை ஏமாற்றி விடக்கூடாது.... நான் ஒரு கட்சியிலும் சேர்ந்தவனல்ல....... எனது வேலைத் திட்டம் எனது நண்பர்களின் யோசனையிலிருந்து வருகிறது .......... என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நகரசபையில் வேலை செய்யத்தகுதியுள்ள ஒரு பிராமணரும், ஒரு பிராமணரல்லாதாரும் அபேட்சகர்களாய் நிற்பார்களானால் கட்சிப்போக்கை கவனியாமல் பிராமணரல்லாதாருக்கேதான் ஓட்டுச் செய்ய வேண்டும். (இது சென்னையில் இரண்டு கனவான்கள் நேரில் கண்டு கேட்டபோது சொல்லியது.)

அதற்கு அடுத்த நாள் தமது அன்புள்ள ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் நிர்மாணதிட்டத்தில் நம்பிக்கை இருப்பதாகத்தான் நம்புவதாயும், நிர்மாணத் திட்டத்தை நம்புபவரும் அனுஷ்டானத்தில் செய்து காட்டுபவரும் காங்கிரஸ் அபேட்சகர் என்று தான் நம்புவதாகவும், அவரை ஆதரிக்கவேண்டுவது பொது ஜனங்களின் கடமை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்ரீமான் நாயுடுவின் தெளிவான அபிப்பிராயமாவது;

1. சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ்வாதிகளை ஸ்ரீமான் நாயுடு ஆதரித்து எழுதிய கடிதங்களை ஸ்ரீமான் நாயக்கர் கண்டிக்கப் புறப்பட்டிருப்பது வேடிக்கையாயிருக்கிறது.

2. உண்மை தேசியவாதியான ஒரு பிராமணனும் காங்கிரசைச் சேராத ஒரு தமிழனும் தேர்தலுக்கு நின்றால் தேசிய பிராமணனைத்தான் தேசம் ஆதரிக்க வேண்டும் உண்மை தேசியவாதியான ஒரு பஞ்சமனுக்கும், மிதவாதியான ஒரு பிராமணனுக்கும் போட்டி ஏற்பட்டால் பஞ்சமனைத்தான் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும்.

3. ஸ்தலஸ்தாபனங்களில் முட்டுக் கட்டைக்கு இடமில்லை என்பது வாஸ்தவமே. அவ்வித அபிப்பிராயம் நாம் அடிக்கடி கூறுவது உண்டு. ஆனால் அடிமைப்பட்ட நாட்டில் சர்க்காரால் ஏற்பட்டிருக்கும் சகல ஸ்தாபனங்களிலும் தேசியவாதிகள் நுழைந்து உட்கார்ந்து கொண்டால் சமயம் வாய்ந்த போது உள்நோக்கமும் சர்க்காரைத் காக்க அனுகூலமாகுமன்றோ?

4 அபேட்சகர்களின் உண்மையான யோக்கியதைகளை அறிந்தே ஓட்டர்கள் ஓட்டுக் கொடுக்க வேண்டுமாம்.

5 ஆனால் ஒருவர் ஒழுக்கத்தில் தர்ம ராஜனாயிருந்தாலும் சர்க்காருக்குச் சாதகமானவராயிருந்தால் அவருக்கு ஓட்டு கொடுக்கக்கூடாதாம்.

6 வேறொருவர் ஒழுக்கத்தில் குறைந்த வராயிருந்தாலும், தேசிய வாதியாயிருந்து நம்-முடைய ஓட்டினாலும், பேச்சினாலும், சர்க்காரின் செல்வாக்கைக் குறைக்கக் கூடியவராயிருந்தால், ஜனங்கள் அவரை ஆதரிக்க வேண்டுமாம்.

காங்கிரஸில் உயர்வு, தாழ்வு கொள்கையை பிராமணர்கள் செய்கையில் காட்டினால், நிர்தாட்சண்யமாக அப்படிப்பட்டவர்களை, காங்கிரசினின்று துரத்திவிடவேண்டுமாம். இதைக் குருகுலப் போராட்டத்தில் செய்து காட்டியிருக்கிறாராம் ........... மேற் கூறியவைகள்தான் ஸ்ரீமான் நாயுடுவின் தெளிவான அபிப்பிராயமாம். மேலும் இவ்வித அபிப்பிராயங்கள் ஸ்ரீமான் நாயுடுவுக்கு எவ்வளவு தெளிவான அபிப்பிராயமாய் இருந்த போதிலும் பொதுஜனங்களுக்கு எவ்வளவு தெளிவைக் கொடுக்கும் என்பதை வாசகர்களே கவனித்துக் கொள்ள வேணுமாய் கோருகிறோம்.

மற்றபடி இவ்வபிப்பிராயத்தின் தத்துவங்களைப் பின்னால் எழுதுவோம்.

ஸ்ரீமான் நாயுடு: தன்னைப்பற்றி அதிகமாய் நினைத்து கொண்டார் என்பதற்குபதில், நாயக்கர் நாயுடுவைப் பற்றி அதிகமாய் நினைத்தாராம், அதனால் தன்னைப் பற்றி அதிகமாய் நினைத்துக் கொள்வது மேலோர்தன்மை போலும்!

-------------------------- குடிஅரசு, துணைத் தலைப்பு, 27.09.1925

26.10.09

நாய்கள் சாப்பிட்ட பின்பே ஊர் மக்கள் சாப்பிட வேண்டுமாம்! விசித்திரமான வழிபாடு

நோபல் பரிசு போல, நம் நாட்டில் சிறந்த ஒரு ஏற்பாடு செய்யவேண்டுமானால், தலைசிறந்த மூட நம்பிக்கையாளர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குத் தனிப் பரிசளிக்கலாம்!

நேரிடையாக அவர்களுக்கு அழைப்புக் கொடுத்து நடத்துவதற்குப் பதிலாக, ரொம்ப விசித்திரமான மூட நம்பிக்கையாளர்பற்றி ஏடுகளில் குறைந்தபட்சம் விடுதலை போன்ற பகுத்தறிவு நாளேடுகளிலாவது அதுபற்றி முழுத்தகவல்களைத் தந்து, பகுத்தறிவை வளர்க்கும் நூல்களைப் பரிசாக அளிக்கலாம்; இல்லையேல் இருட்டில் இருக்கும் இவர்களை வெளிச்சத்திற்கு வர அடையாளச் சின்னமாய் டார்ச்லைட்டினையோ, மற்ற சில வெளிச்சம் தரும் பொருள்களையோ பரிசளிக்கலாம்.

இதோ இன்று ஆங்கில நாளேடு ஒன்றில் வெளியான சுவையான மூட நம்பிக்கையின் உச்சமான செய்தி:

பாட்டியாலாவில் (பஞ்சாப்) உள்ள கான்பூரில் ஒரு கோயில் இருக்கிறது. அதில் விசித்திரமான வகையில் வழிபாடு நடக்கிறது, நாய்களுக்கு.

சீ நாயே! என்று யாரும் அங்கே திட்ட முடியாது; பயபக்தியுடன் கும்பிட்டு வழிபடல் வேண்டும். அந்நாய்கள் உண்ட பிறகே அங்கே உள்ள கிராமப்புற மக்களுக்கு ஊரில் சாப்பிட உரிமையாம். உணவு பொது சமையல் கூடத்திலிருந்து பரிமாறப்பட்டு, சாப்பிட அனுமதியாம்!

அதுவும் எப்படி தெரியுமா?

நீண்டகால பாரம்பரிய பழக்கவழக்கத்தையொட்டி கோயில், நாய்களுக்கு மூன்று வேளை உணவு! முக்கால பூஜை நடத்திய பிறகே அதாவது பைரவமூர்த்தி (நாய்)க்கு உணவு படைத்துச் சாப்பிட வைத்த பின்பே ஊர் மக்களுக்குச் சாப்பிடும் உரிமையும், அனுமதியும் உண்டாம்!

ஆனந்தகிரி என்ற தலைமை அர்ச்சகர் மூன்று காலமும் கோயிலுக்குள் வருவார்; நுழைந்தவுடன் நாய்போல் குரைப்பாராம்! உடனே குரல் கேட்டு, நாய் பகவான்கள் மூவர் வந்தவுடன் மிகுந்த மரியாதை, பயபக்தியுடன் அவர்களுக்கு உணவு பரிமாறப்படுமாம்.

அதுவும்கூட சமைத்துள்ளவைகளில் எவை மிகச் சிறந்தவையோ அவைகளை அவர்களுக்கு அமுது படைக்கப்படுமாம்! ஊர்க்காரர்கள், மக்கள் அதன் பிறகே சாப்பிடவேண்டுமாம்! இது அரச கட்டளை!

இந்த நாய்க் கடவுள்கள் பூஜை எப்படி வந்தது என்பதும் மிகுந்த சுவையான கதையாகவல்லவா இருக்கிறது!

அக்கால மாதம் மும்மாரி பொழிகிறதா? என்று கேட்கும் நமது தெருக்கூத்து ராஜாவைவிட, மிகவும் கேவலமாக இருக்கிறது!

முன்பொரு காலத்தில் பாட்டியாலாவின் மகாராஜா அப்போது அரச குடும்பத்தைச் சேர்ந்த கேப்டன் அமீரீண்ட சிங் அவர்களின் முன்னோர்களில் ஒருவரான ஆலா சிங் என்ற ராஜா, தாசிகளிடையே ஒரு வகையான விசித்திரமான போட்டியை தர்பாரில் நடத்தினாராம்!

ஒரு விலைமாது அப்போட்டியில் 50 கிலோ கஞ்சாவை உட்கொண்ட பின்பும் ஸ்டெடியாக ஆடாமல், அசையாமல் அப்படியே சிலை போல் நின்றாராம்; இதனைப் பார்த்த ராஜா, வியந்து பரிசு அளித்தாராம்!

1695_1765 என்ற காலகட்டத்தில் வாழ்ந்த அந்த மகாராஜா இந்த விலைமகளான பெண்ணுக்கு 150 ஏக்கர் பிகா எஸ்டேட்டினை பரிசாக வழங்கினாராம்.

இந்த விசித்திர குணாதிசயம், ரசனைமிக்க அந்த ராஜா, மற்றொரு அரசு ஆணையையும் போராட்டாராம்!

நாய்கள் சக்தி வாய்ந்த கடவுள்கள் ஆகும். எனவே, கான்பூர் கோயிலில் உள்ள சாமிக்கு பூஜை செய்து முதல் கவளம் உணவை இந்த இரண்டு, மூன்று நாய்களுக்குப் படைக்கவேண்டும் அந்தக் கோயில் அர்ச்சகர்.

அதற்குமுன் காலையிலும், மாலையிலும் அமுது படைக்கும் முன்பு கோயில் அர்ச்சகர் நாய் மாதிரி குரைப்பாராம்! சத்தமாக குரைத்தவுடன், நாய்கள் ஓடோடி வந்து, உடனே அந்த கவள உணவையும், மற்றதையும் சேர்த்து சாப்பிடுமாம்!

அதன் பின்னரே, அந்தக் கோயில் மணி ஓசை வந்த பிறகே, ஊர்ப் பொதுமக்கள் உணவு உண்பார்களாம். இன்றுவரை இந்த மூடப்பழக்கம் (பஞ்சாப்) பாட்டியாலாவில் நீடிக்கிறதாம்! அர்ச்சகர் குரைக்க, நாய்கள் ஓடோடி வந்து உணவு உண்ட பின்பு, ஊர் மக்கள் சாப்பிட வேண்டும் என்கிற வழக்கம் தொடருகிறதாம், இன்றைக்கும்!

வயதான முதியவர்களிடம் இதுபற்றி எந்த எதிர்ப்பும் இல்லையாம்! ஆனால், படித்த இளவட்டங்கள் இதனைப் பரிகசித்து எதிர்க்குரல் கொடுத்து கலகம் செய்யத் தொடங்கிவிட்டனராம்!

ஆனந்தகிரி என்ற அர்ச்சகர் அய்யர் குரைத்து, நாய்களை அழைப்பது 16 ஆம் நூற்றாண்டிலிருந்து 21 ஆம் நூற்றாண்டுவரை நீடிக்கிறதாம்!

என்னே மடமை!

பக்தி வந்தால் புத்தி போகும் என்று எவ்வளவு அழகாகச் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்!

பரவாயில்லை, நம் நாட்டில், எச்சில் இலையில் உள்ள மிச்ச உணவுக்கு நாய்களுடன் போட்டியிட்டு மனிதன் சாப்பிடும் கொடுமையான காட்சி அங்கில்லை என்றுகூட புது வியாக்கியானம் கூறி புகழும் மனிதர்களும் இருப்பார்கள்!

மேலை நாடுகளின் அமெரிக்கா, இங்கிலாந்தில் நாயாகப் பிறப்பது மனிதனைவிட அரிய வாய்ப்பு ஆகும்; காரணம் அவ்வளவு கவனிப்பு பாசப் பொழிவு எல்லாம் நாய்களுக்குக் கிடைக்கும்.

தாய், தந்தையை விட்டுவிட்டு வாழும் அவர்கள் நாய்களையே மிகவும் விரும்பி நேசிக்கிறார்கள்; அங்கே ஒரு நாயைத் திட்டினாலும் அதன் எஜமானர் நீதிமன்றம், வழக்கு என்றுகூடப் போய்விடுகிறார்கள்! அவர்களை வைதால்கூட மறந்து மன்னித்து விடுவார்கள்!

நாய்க்கு உயில் எழுதி வைப்பவர்கள் பலர் அங்கே உண்டு!

நன்றிக்கு நாயைச் சொன்னாலும் இப்படியா? கொடுமை! கொடுமை!! காரணம் நாய் பைரவர்; கடவுளின் வாகனம் என்று குத்தப்பட்ட மூட நம்பிக்கையே!

பக்தி முற்றிய பலர், அதிக அடக்கத்துடன் நாயடியேன் என்று தங்களை அழைத்துக் கொண்டது இம்மாதிரி அந்தஸ்து அடுத்த உலகிலாவது கிடைக்கும் என்பதாலா?

மூட நம்பிக்கையின் தொட்டில் இல்லையா, இது?


----------------26-10-2009 "விடுதலை" யில் கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை

பார்ப்பனர்களை அழைத்து திருமணம் நடத்துவோர்களின் சிந்தனைக்கு...


சுயமரியாதை!

ஒவ்வொரு கிராமத்திலும் கோயில் உள்ளது. ஆனால், புரோகிதர் மகன் புரோகிதம் செய்ய வருவதில்லை. கிராமத்தில் உள்ள புரோகிதனுக்கு 500 ரூபாய் கொடுத்தால் திருமணம் செய்து வைத்துவிடுவர். புதிதாகப் புரோகிதம் செய்யப் புறப்பட்டுள்ளவர்கள் வந்தால் 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். கட்அவுட் வைக்கவேண்டும் என்று இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். இராமகோபாலன்வாள் திருவாய் திறந்து தீர்த்தம் கொடுத்துள்ளார் காஞ்சிபுரத்தில் நடந்த புரோகிதர்கள் மாநாட்டில்.

புரோகிதப் பார்ப்பனர்கள் தட்சணை வாங்கிக்கொண்டு மனிதர்களுக்கு மட்டுமா கல்யாணங்களை நடத்தி வைக்கிறார்கள்? நாய்க்கும் நாய்க்கும், கழுதைக்கும் கழுதைக்கும்கூட மந்திரங்களைச் சொல்லி நடத்தி வைத்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.

சுயமரியாதைத் திருமணம் என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினையல்ல. அது ஓர் இனத்தின் சுயமரியாதைப் பிரச்சினை. பார்ப்பனர் அல்லாதாருக்கு சமஸ்கிருத மந்திரங்களைச் சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு முகூர்த்த நாழிகைக்கு மணமகனுக்குப் பூணூல் மாட்டி, தற்காலிக வருணப் பதவி உயர்வு கொடுத்து, மந்திரங்களைச் சொல்லி கல்யாணத்தை முடித்தவுடன், மறக்காமல் அந்தப் பூணூலைக் கழற்றிக் குப்பைக் கூடையில் போடுவதன் பொருள் என்ன? பூணூலார் விளக்குவாரா?

அவர்கள் நடத்தும் கல்யாணத்தில் எந்த வகை மந்திரங்கள் சொல்லப்படுகின்றன? கீழாத்தூர் சீனிவாசாச்சாரியார் பி.ஓ.எல். என்ற பார்ப்பனரால் மொழி பெயர்க்கப்பட்டு விவாஹ சுபமுகூர்த்த போதினி என்ற பெயரால், பார்ப்பன நிறுவனமான தி லிட்டில் ஃப்ளவர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள நூல் 22 ஆம் பக்கத்தில் அந்தக் கல்யாண மந்திரம் கூறப்பட்டுள்ளது.

ஸோம; ப்ரதமோ விவிதே

கந்தர்வ விவத உத்தர: த்ருதீயோ

அக்னிஷ்டபதி: துரீயஸ்தே

மநுஷ்ய ஜா

இதன் பொருளும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

ஸோமன் முதலில் இவளை (மணமகளை) அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் மனித ஜாதியில் பிறந்தவன் என்று கூறப்பட்டுள்ளது

பார்ப்பனப் புரோகிதனை அழைத்து கல்யாணத்தை நடத்தச் சொன்னால், மணமகள் அதற்குமுன் மூன்று பேர்களுக்கு மனைவியாக இருந்தாள் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டுமே!

அய்ந்து பேருக்கும் தேவி அழியாத பத்தினி என்பது பார்ப்பனர்களின் கலாச்சாரத்துக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். தமிழர்களுக்குப் பொருந்துமா?

பார்ப்பனர்களை அழைத்து தமிழர்கள் கல்யாணத்தை நடத்தினால் மணமகளை விபச்சாரி என்று ஒப்புக்கொண்டதாகப் பொருள். மானம் கருதி அதனை ஒதுக்கி சுயமரியாதைத் திருமணத்தை தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார் என்பதை ராமகோபாலனின் கூட்டம் தெரிந்துகொள்ளட்டும்!

திருமணச் செலவுகூட ஒரு குடும்பத்தின் பத்து அல்லது 15 நாள் வரும்படிக்குமேல் செல்லக்கூடாது என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தாகும். (விடுதலை, 10.6.1970).

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!

------------ மயிலாடன் அவர்கள் 26-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, யோக்கியக்கேடு இல்லாத கடவுள் உண்டா?

பரிகாரம்என்ன?


உலகில் நானறிந்த வரையில் நம் நாட்டு மக்களிடம் இந்துக்கள் என்பவர்களிடம் தயக்கம், நாணயம் என்பது சற்றேறக்குறைய 100-க்கு 90 பேர்களிடம் இருப்பதில்லை. காரணம் என்ன?

நமக்கு கடவுள் இல்லையா? நாம் கடவுள் பக்தி இல்லாதவர்களா? நாம் மதம் அற்றவர்களா? நமக்குக் கடவுள்பயம் இல்லையா? கடவுள் நெறி இல்லையா? நன்மை செய்தால் நற்பயன் கிடைக்கும், தீமை செய்தால் தீய பயன் கிடைக்கும் என்கின்றதான எச்சரிக்கை சாதனங்கள் இல்லையா? நம்மில் பெரியவர்கள் தெய்வீகத் தன்மை கொண்ட மக்கள் என்பவர்கள் ஏற்பட்டு நமக்கு அறிவுரை கூறியவர்கள், கூறுபவர்கள், கூறும்படியான நீதி நூல்கள் இல்லையா? நமக்கு நற்கதி அளிக்கும்படியான கோயில்கள் இல்லையா? நமக்கு குருமார்கள் - மடாதிபதிகள் இல்லையா? இவையும் மற்றும் இவை போன்ற பலவும் ஏராளமாக இருக்கும்போது நமக்கு, நம் மக்களுக்கு - ஏன் ஒழுக்கம், நாணயம், இன-உணர்ச்சி, பொதுநல உணர்ச்சி, யோக்கியத் தன்மை முதலிய நற்குணங்கள் இல்லை? இப்படிப் பட்ட நிலை நமக்கு ஏற்படக் காரணம் என்ன? என்பதை மனிதன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனக்குப் பல ஆண்டுகளாகவே இந்தக் கவலை உண்டு என்பதோடு, எனது தொண்டில் இதை - அதாவது மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியத் தனம், இன உணர்ச்சி ஏற்பட வேண்டுமென்பதை முக்கிய லட்சியமாகக் கொண்டு தொண்டாற்றி வந்திருக்கிறேன். அதை முதன்மையாகக் கொண்டு பிரச்சாரமும் செய்து வருகிறேன்.

எனது இத்தனை ஆண்டு வாழ்க்கையில் 80 ஆண்டு உலக அனுபவத்தில் - நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியத் தன்மைகள் குறைந்துகொண்டே வந்திருப்பதுடன், இன்று அக்குறைவு நிலை உச்ச நிலையடையும் வழியில் மனித சமுதாயமானது சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் எனது கருத்து?

இது பற்றி நான் மிகவும் கவலையடைகிறேன். இவ்விஷயங்களில் இன்றைய நிலை மாறுமா என்பதில் நான் மிகவும் கவலைப்படுகிறேன். மேற்சொன்னபடி எனது பல நாள் 30-40 ஆண்டுகள்- இதற்காகவே நான் செய்து கொண்டு வந்த தொண்டின் காரணமாய் ஏதாவது பயன் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்தால், அடியோடு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவேதான் மேலும் மேலும் கவலையோடு, இந்த நிலை ஏன் ஏற்பட்டது? அதற்கு என்ன பரிகாரம்? என்பதில் நான் மிகவும் சிந்திக்க முயற்சித்து, சதா சிந்திக்கிற வண்ணமாகவே இருக்கிறேன்.

நமக்கு சுயராஜ்யம் வந்து என்ன பயன்? சுதந்திரம் - பூரண சுயேச்சை வந்து என்ன பயன்? நம்மை நாமே ஆண்டுகொள்வதில் (ஜனநாயகத்தில்) என்ன பயன்? இந்த நிலையில் வாழும் மக்களுக்கு அந்நிய ஆட்சி ஏற்படுவதால் தீமை என்ன? என்றெல்லாம் என் மனம் சிந்தனையில் - கவலையில் மூழ்கிக் கிடக்கின்றது. ஏனெனில் இந்த நாட்டில், பொது வாழ்வில் எல்லா மக்களையும் பொறுத்த பொதுத் தொண்டில் சிறிதும் சுய நலமில்லாமல் எனக்குள்ள சகலத்தையும் பொதுவுக்கு ஈடுபடுத்திய தொண்டின் பயனாய், தொண்டின் பெயரால் எவ்வித சுயநல நன்மையும் அடையாமல், உண்மையாகவே ஒரு தொண்டன் - தொண்டனாகவே வாழ்பவன், வாழ வேண்டியவன் என்று கருதிக் கொண்டு, உண்மைத் தொண்டு செய்து வந்ததில் - வருவதில் எனக்கு மேற்பட்ட தொண்டன் யாருமில்லையென்னும் தன்மையில் தொண்டாற்றி வருபவன் நான் என்று கருதிக் கொண்டு தொண்டாற்றி வருவதால், எனக்கு இந்தக் கவலை. அதாவது நம் மக்களில் யோக்கியமானவன் நாணயமானவன், எந்தத் தரத்திலும், எந்த நிலையிலும் ஏன் ஒருவனைக்கூடக் காணமுடியவில்லையே? இருப்பதாகக் கருதக்கூட முடியவில்லையே? என்பனவற்றைக் கருதக் கூடியவனாக, கவலைப்படக் கூடியவனாக இருந்து வருகிறேன்.

இந்த நீண்ட நாள் கவலையில் சிந்தனையின் பயனாக இதற்கு அதாவது இந்த நாட்டில் இன்று இந்தக் காலத்திலும் ஒரு யோக்கியன், நாணயமானவன், ஒழுக்க-மானவன், யோக்கியப் பொறுப்புக்கு ஆளானவன் எந்தத் தரத்திலும் எவனும் இல்லாமல் போனதற்குக் காரணம் : நமது நாட்டிலுள்ள சூழ்நிலை, சுற்றுச்சார்பு, நமது கடவுள்கள், நமது நீதிநெறி, சாத்திரங்கள், தர்மங்கள் இவைபற்றிய புராணங்கள், இதிகாசங்கள், பிரசாரங்கள், பெரியவர்கள், மகான்கள், மகாத்மாக்கள், இன்று இருந்துவரும் அரசாங்க முறை, அரசியலில் ஈடுபடும் மக்கள் தன்மை, அரசியலில் ஒழுக்கம், மத ஒழுக்கம், சமுதாய அமைப்பு முதலிவைகள்தாம் என்கிற முடிவுக்கு வரவேண்டியவனாகி விட்டேன். அது மாத்திரமல்லாமல், மேற்கண்ட காரண காரியங்களில் நல்ல அளவுக்கு மாறுதல் ஏற்படாதவரை நமக்கு மேற்கண்ட தீய குணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படமுடியாது என்துடன், ஏற்படுத்த எவராலும் ஆகாது என்கிற முடிவுக்கு வரவேண்டியனாகி விட்டேன்.

நமது கடவுள்களில் ஒன்று கூட ஒழுக்கமாய், யோக்கியமாய், நாணயமாய், யோக்கியப் பொறுப்புடன் இருந்ததாகக் கடவுள் சம்பந்தப்பட்ட எந்த ஆதாரங்களிலுமே காண முடியவில்லை. அது மாத்திரமல்லாமல், இன்றுள்ள மக்களில் எந்த இழி மக்களிடமிருந்தும் எப்படிப்பட்ட ஒழுக்கம் ஈனம், யோக்கிய ஈனம், நாணயமான காரியங்கள் எதுவும் இன்றுள்ள நம் கடவுள்கள் எதனிடமும் இல்லை என்று சொல்ல முடியாத நிலைமையில்தானே நம் கடவுள்கள் இருந்து வருகின்றன! ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, யோக்கியக்கேடு இல்லாத நம் பதினாயிரக்கணக்கான கடவுள்கள், அவர்களின் பெண்டு பிள்ளைக் கடவுள்களில் ஒரு கடவுளையாவது காட்ட எந்த பக்தனாலாவது குருமார்களினாலாவது கடவுள் கதைகளினாலாவது காட்டமுடியுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கிறேன்.

மற்றும் வேத சாஸ்திர - தர்ம புராண - இதிகாசங்கள் எதிலாவது இன்று நாம் கூறும், விரும்பும் ஒழுக்கம், நாணயம், யோக்கியம், நேர்மை, யோக்கியமாகக் கருதும், நடக்கும் தன்மை மிகுந்திருப்பதாக எந்தப் பக்தன், குரு, பண்டிதன், புலவன் ஒருவனாலாவது காட்ட முடியுமா என்று கேட்கிறேன். அல்லது நமது பெரியோர்கள், முன்னோர்கள், தெய்வீகத்-தன்மை பெற்ற ரிஷிகள், மகான்கள், மகாத்மாக்கள் என்பவர்களில் யாரிடமாவது மேற்கண்ட குணங்களோ அல்லது அறிவோ, பண்போ இருந்ததாக யாராவது காட்ட முடியுமா என்று கேட்கிறேன். பந்தயம் கட்டிக் கேட்கிறேன்.

-------------- தந்தை பெரியார்- விடுதலை தலையங்கம் 1-7-1942

24.10.09

பெரியார் சிலை ஏன்? எதற்கு?

எங்க ஊரு அய்யா சிலை

தந்தை பெரியார் சிலை - திண்டுக்கல
அமைவிடம் : திண்டுக்கல் (டட்லி மேல் நிலைப்பள்ளி அருகில்)
விழாத் தலைவர்: தவத்திரு குன்றக்குடி அடிகளார் M.L.C
திறப்பாளர் : மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி
தொடங்கி வைத்தவர்: கி. வீரமணி M.A.B.L

மறதி என்பது நமக்கிருக்கும் மாபெரும் வியாதி. ஆகவே , நமக்கு நன்றாகத் தெரிந்த விசயங்கள்தான் என்றாலும்கூட அதை அவ்வப்போது ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது.

2007 இல் முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் அவர்கள் ஒரு செவ்வியின்போது, இராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று கேட்டிருந்தார். இந்தக் கருத்து எதிர்பார்த்தது போலவே இந்துத்துவவாதிகளால் இந்தியா முழுவதிலும் சர்ச்சையாக்கப்பட்டது. சர்வதேச கிரிமினலும், கபட வேடதாரியுமான வேதாந்தி என்பவர் முதல்வர் கலைஞரின் தலைக்கு தங்கம் என்று பத்வா அறிவித்தார். அந்த பத்வாவிற்கு தமிழகம் தவிர்த்த இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஆதரவு கிடைத்தது. ஏன்? இதுதான் இந்துத்துவா வாதிகளுக்குப் புரியாத புதிராக இருக்கிறது.

தங்கள் தத்துவத்தின் தலைவர் இராமபிரானை ஒருவர் இழிவுபடுத்துகிறார் என்று தெரிந்தும், அதை பொருட்படுத்தாதது மட்டுமல்ல, அதனைத் தட்டிக் கேட்ட சாமியாரையும், அந்த சாமியாரைச் சேர்ந்த பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் மற்ற மற்ற இந்துத்துவ கும்பல்களையும் ஓர் இந்து திருப்பித்தாக்க முடியுமா? என்ற அய்யம்தான் இராமன் கடவுளே இல்லை என்று கூட அல்ல. கடவுள் என்ற ஒன்றே இல்லை என்று சொல்கிற பகுத்தறிவாளர்களையும் இந்து என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி, இராமனுக்கு எதிராக, இராவணனைக் கொண்டாடுகின்ற ஒரு தலைவருக்குப் பின்னால், இந்து என்று சொல்லிக் கொள்கிறவர்கள் அணி திரள முடியுமா? இதுதான்..... தமிழகம் தவிர்த்த வட இந்தியர்களுக்குப் புரியாத புதிர். அந்தப் புதிரை விடுவிக்கின்ற நாயகன்தான் தந்தை பெரியார். நாயகம்தான் பெரியாரியம்; சரி, இப்போது நாம் எங்க ஊரு அய்யா சிலை பற்றி பார்க்கப் போகிறோம். அதற்கு, இராமன் எந்த பொறி-யியல் கல்லூரியில் படித்தான். அதனைச் சொன்னவர் முத்தமிழ் அறிஞர், கலைஞர் என்பதெல்லாம் எதற்கு என்று தோன்றுகிறதல்லவா?

இது நடந்தது 2007இல் , வாருங்கள் இன்னமும் கொஞ்சம் பின்னோக்கி அதாவது 25.09.1970க்குச் செல்வோம். 2007இல் அய்ந்தாவது முறையாக முதல்வராக இருந்து கொண்டிருக்கும் கலைஞர் சொன்னதுதான் மேலே நாம் கண்டது. முதல் முறையாக முதல்வராக இருக்கும்போது, அதாவது 1970இல் என்ன சொன்னார்? தமிழகத்துக்கு தந்தை பெரியார் எப்போதுமே தேவை எங்கு வைத்துச் சொன்னார். 25.09.1970இல் திண்டுக்கல்லில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் வைத்துச் சொன்னார்.

ஆம்! இந்த வாரம் இடம் பெறப்போவது திண்டுக்கல் நகரின் மய்யப்பகுதியில் புனித மரியன்னை மேல் நிலைப் பள்ளி, டட்லி மேல் நிலைப்பள்ளி இவைகளுக்கு மிக அருகில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலையாகும்.

ஒவ்வொரு சிலைக்கும் ஒரு சிறப்பு உண்டு. இந்த சிலைக்குக் கூடுதலான சிறப்புகள் ஏராளம். தலைவனின் சிலையை அவருடைய தொண்டன் திறந்து வைப்பது. அதுவும் எப்படிப்பட்ட பின்னணியில் பகுத்தறிவை கொள்கையாகக் கொண்ட ஓர் அரசியல் கட்சி தேர்தலிலே வென்று தந்தை பெரியாரிடம் பணியாற்றிய ஒருவரே முதல்வராகவும் இருக்கக்கூடிய சூழலில். அப்பப்பா....... இதுபோல அதிசயம் உலகில் வேறுண்டா? தந்தை பெரியாரின் வெற்றியை எவ்வளவுதான் சொன்னாலும் முழுமையானதாக சொல்லி விட்டதாக கருத முடியாது. அதுமட்டுமா? தந்தை பெரியார் சிலை ஒரு பக்கம். அந்த சிலையே உயிராக ஒருபக்கம், தந்தை பெரியாரின் கொள்கைகளையே ஏற்று அதை செயல்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் கலைஞர் ஒரு பக்கம், தந்தை பெரியாருக்குப் பின் இந்த இயக்கத்தை மிகச் சரியாக வழிநடத்தப் போகின்ற, அய்யாவின் அடிச்சுவட்டை இம்மியளவும் பிசகாமல் பின்பற்றப் போகின்ற தலைவர் கி. வீரமணி ஒரு பக்கம், தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒரு பக்கம், ஜி. ராமச்சந்திரன் எம்.பி, ஜி.டி.நாயுடு, மதன கோபால்..... அப்பப்பா.... இதன் சிறப்புக்கு வேறென்ன வேண்டும்.

விழாவில் முதல்வர் கலைஞர் பார்ப்பன நாளிதழ்களுக்கு சுருக்கென்று உரைக்கும் வண்ணம் சூடு போட்டார்.

இங்கே ஏராளமான மக்கள் கூடியிருக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சி பற்றி விடுதலை, நம்நாடு, முரசொலி, தினத்தந்தி, மாலை முரசு தவிர பிற ஏடுகள் எப்படி வெளியிடும் தெரியுமா? அடிகளார் தலைமை வகித்தார், கருணாநிதி சிலையைத் திறந்தார், ஜி.டி. நாயுடுவும், பிறரும் கலந்துகொண்டார்கள் என்று எங்கோ ஒரு மூலையில் செய்தி போடும். பத்திரிகைகள் போக்கு அப்படி; பல லட்சம் விற்பனையாகும் பத்திரிகையை நம்பி கழகம் என்றுமே இருந்ததில்லை பத்திரிகை பலமின்றியே கழகம் வளர்ந்-தது. ஆட்சியைப் பிடித்தது. எங்களுக்கு என்று உள்ளவை மக்கள் எனும் பத்திரிகைகளே. அவர்களது இதயங்களையே நாங்கள் படிக்கிறோம். இதை யெல்லாம் நினைக்கும்போது தந்தை பெரியார் எப்போதும் தேவையே என்று கூற வேண்டியதிருக்கின்றது.

முத்தாய்ப்பாக இறுதியில் தந்தை பெரியார்

சிலைகளும், கல்வெட்டுகளுமே அழியாமல் நிலையாக நின்று பகுத்தறிவு பரப்பும். ஆகவே, நமக்குப் பின்வரும் சந்ததியினர் அறிவு பெற இவற்றை எல்லா இடங்களிலும் நிறுவுவீர். என்று கூறிவிட்டு இன்னும் வெட்ட வெளிச்சாமாக ஏன் தன்னுடைய சிலைகளை வைக்கச் சொல்கிறேன் என்று அவருக்கே உரிய பாணியில் சொல்கிறார் பாருங்கள்.

மற்ற எவரும் சொல்ல வெட்கப்படுகிற, பயப்படுகிற செய்தியை சொல்லப் போகிறேன். என்னவென்றால், இதுபோன்ற சிலைகள் ஊர்தோறும் சந்து பொந்துகளிலெல்லாம் வைக்க வேண்டும். இந்த சிலைகளை மட்டும் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை; நமது முதலமைச்சருக்கு, இராமச்சந்திரனுக்கு, ஜி.டி. நாயுடுவுக்கு, வீரமணிக்கு, மதுரை முத்துவுக்கு இப்படி பகுத்தறிவு கொள்கை உடையவர்களுக்கெல்லாம் சிலைகள் வைக்க வேண்டும். கடவுள்களுக்கு எப்படி எங்கு பார்த்தாலும் சிலைகள் வைத்திருக்கிறார்களோ அதுபோன்று கண்ட கண்ட இடங்களில் எல்லாம் இச்சிலைகளை வைக்க வேண்டும். அப்போதுதான் கொஞ்சமாவது அறிவுவயப்பட முடியும். கண்ட அயோக்கியன் எல்லாம், என்னை விட ஆயிரம் மடங்கு அயோக்கியன் எல்லாம் கடவுளாக இருக்கிறானா இல்லையா? அவன் சிலை எங்கு பார்த்தாலும் இருக்கின்றனவா இல்லையா? இவைகளெல்லாம் எதற்காக இருக்கின்றன? இவற்றை எல்லாம் எதற்காக வைத்தான்? நம்மை மடையனாக்கவும் தேவடியா மகனாக்கவும்தானே. ஆகவே, நாம் வீதிகள் தோறும் இதுபோன்று சிலைகள் வைக்காவிட்டாலும் மண்ணில், சிமெண்டில் செய்து சிறு பொம்மைகளையாவது வைத்து அதனடியில்,

கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்,

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்,

கடவுளை வணங்குகின்றவன் காட்டுமிராண்டி ,

என்று எழுதவேண்டும் என்று கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்களிடம் வேண்டுகோளாக வைத்தார்.

அய்யா சொன்னது சரியாகத்தான் இருக்கிறது. ஆண்டாண்டு காலமாக கடவுள் என்கின்ற கருத்தை, கடவுள் பொம்மைகளை வைத்துதானே பிரச்சாரம் செய்து, அந்தக் கருத்தை மக்கள் மறந்துவிடாமல் இருக்க வைத்

திருக்கிறார்கள். ஆகவே உண்மையையும்கூட இப்படி இடைவிடாத பிரச்சாரத்தின் மூலமாகத்தான் நிலைநிறுத்த முடியும். அப்படித்தான்? அய்யாவின் வழியில் அயராத பிரச்சாரத்தின் மூலமாக அவர் கூறியபடியே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக சிலைகளை நிறுவிக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமா? அதனுடைய பலனையும் நாம் கண்கூடாக கண்டு கொண்டு இருக்கிறோமே!

அந்த வகையில் திண்டுக்கல்லில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலையும் அய்யாவின் பணியை அயராமல் செய்துகொண்டு இருக்கிறது. இப்படி சிலைகளைப் பார்த்து, அதில் வடித்துள்ள வாக்கியங்களைப் படித்து புத்திக் கொள்முதல் செய்து கொண்டவர்களை கணக்கு எடுத்துவிட முடியாது. ஆனால், ஓசையில்லாமல் தந்தை பெரியாரின் தத்துவங்களை ஏற்றுக்கொள்ளச் செய்யும் பணியில் தந்தை பெரியாரின் சிலைகள் இடைவெளியில்லாமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் திண்டுக்கல்லில் அமைந்துள்ள இந்த சிலையும் தன் பணியை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.


சிலை அமைக்கப் பாடுபட்டவர்கள்

பெரியார் பெருந்தொண்டர்கள், கே.டி.ஓ.எஸ். முத்துக்கருப்பன் பூமண்டலம், கிருஷ்ணமூர்த்தி, பெயிண்ட் வணிகர் காளியப்பன். வழக்கறிஞர். கொ. சுப்பிரமணியன், சுப. ஜெகந்நாதன்.


- உடுமலை வடிவேல்
தகவல்: இரா. வீரபாண்டி
தலைவர், மாவட்ட திராவிடர் கழகம் திண்டுக்கல்.

---------------------நன்றி:-"விடுதலை" ஞாயிறுமலர் 17-10-2009

பணம் சேர்ப்பது முக்கியமல்ல பண்புகளைச் சேருங்கள்


நம்முடைய நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுவதுமே பணம் சேர்ந்துவிட்டால் எல்லாம் வந்து விடும் என்று நினைத்து, பலர் பணத்தைப் பல வழிகளிலும் சேர்ப்பதையே தம் வாழ்நாள் இலட்சியமாகக் கருதி, அதற்கு எம்முறையிலாவது முயல வேண்டுமென்றே வாழ்கிறார்கள்!

செல்வம் - வரும் வழி எப்படியிருந்தால் என்ன? பணம் சேர்ந்தால் போதும் என்ற நினைப்பில் உழன்று கொண்டு பணம் சேர்க்கும் திடீர் பணக்காரர்களுக்குக் கிடைக்கும் மரியாதை(?) பெரிதும் முகஸ்துதியாளர்கள் தரும் மரியாதையே; உண்மையான நிலைத்த புகழோ, மரியாதையோ அதனால் ஏற்படாது.

குணத்தால் உயர்ந்தால்தான் அது நிரந்தரம்; பணத்தால் உயர்ந்தால் அது தற்காலிகம் மட்டுமல்ல, அற்பனுக்குக் கிடைத்த பெருமையே!

பணத்தை தேவைக்கு மேல் சேர்த்துவிட்டு, என்ன செய்வது என்று தெரியாதவர்களுக்காகவே பெரிய துணிக்கடைகள் இருக்கின்றன போலும்!

தங்கத்தால் ஆன ஒரு பட்டுப்புடவை 40 லட்ச ரூபாயாம்! இவர்களைப் பார்த்து சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை! இந்தியா ஏழை நாடாம்!

பெண்களின் நகை மோகமும், பட்டுப்புடவை வியாதியும்தான் பெரிதும் அவர்களை அடிமையாக்கிடும் கருவிகள் என்றார் சரியாக தந்தை பெரியார்.

மனித ஜீவன்களுக்கு சுதந்திர, சமத்துவ வாழ்வு முக்கியம்; பதவி, பணத்திமிர் ஆடம்பரங்களைக் காட்டுவது அல்ல.

சில ஆண்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? கழுத்தில் போட்டு வரும் தங்க வடக்கயிறு போன்ற சங்கிலிகளும், இடித்தால் சுவரே விழும்; மோதிரங்களும் அதிலும் விரல்கள் பத்திலும் அணியும் அழகு ஒரு அழகா? அருவருக்கத்தக்கச் செயலா_ நமக்குப் புரியவில்லை.

இப்படி பணம் சேர்த்துவிட்டு, தலைகால் தெரியாமல்_- வள்ளல் பெயரெடுக்க சிலர், புகழைத் தேடி வேட்டையாடுவோர் உண்டு. அந்தப் புகழ் போதையே அவர்களைக் கொன்று விடும் என்பது உறுதி. ஏனெனில், அவர்கள் நுனிக்கொம்பு ஏறினால் அது உயிர்க்கிறுதியா விடும் என்றாரே வள்ளுவர். உச்சாணிக் கிளைக்குப் போய்விட்டேன்; அதற்கு மேலும் ஏறப் போகிறேன் என்றால் கிளை முறிந்து உயரத்திலிருந்து பிழைக்க முடியாதவர்கள் ஆகி விடுவார்கள் என்கிறார் வள்ளுவர்!

மனிதர்களுக்குப் பண்புதான் முக்கியமே தவிர, பணத்தால் வரும் பெருமை முக்கியமாகக் கூடாது.

வலது கையில் தான் கொடுத்தது _ இடது கைக்குக்கூடத் தெரியக் கூடாது என்று நடந்து கொள்பவர்களே உண்மையான வள்ளல்கள்!

அவர்கள் விளம்பரத்தை விரும்பாத விஞ்சிய புகழுக்குரியவர்கள்!

ஆனால், தான் காலணா கொடுத்தவுடன், அதற்கு நாலணா விளம்பரம் தேவை என்று நினைப்பவர்கள் வள்ளல்கள் அல்ல; மன நோயாளிகள்!

எவ்வளவுதான் அளவுக்கு அதிகமாக பணம் ஒருவரிடத்தில் இருந்தாலும், அவரிடம் பண்பு இல்லை என்றால் அப்பெருஞ்செல்வமானது - நல்ல பசும்பால், அது வைக்கப்படும் பாத்திரத்தின் குற்றத்தால் கெட்டுவிடுவதுபோல் சீரழிந்து போய்விடும் என்கிறார் வள்ளுவர்; மிக அழகான உவமை அல்லவா?

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று

(குறள்: 1000)

ஒருவர் பணம் சேர்ப்பதில் காட்டும் அக்கறையைவிட, பண்புடையவராக இருக்க வேண்டும் என்று கருதுவதே முக்கியம்.

-------------------13-10-2009 "விடுதலை" யில் கி.வீரமணி அவர்கள் எழுதிய "வாழ்வியல் சிந்தனைகள்" கட்டுரை

22.10.09

முல்லை பெரியாறு அணை பிரச்சினை

முல்லை பெரியாறு அணை பிரச்சினை:
இரட்டை வேடம் போடும் மத்திய அமைச்சர்
ஜெய்ராம் ரமேஷிடமிருந்து துறையை மாற்றவேண்டும்
தமிழர் தலைவர் அறிக்கை

முல்லை பெரியாறு பிரச்சினையில் மத்திய இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷி டமிருந்து நீர்ப்பாசனத் துறை மாற்றப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

முல்லை பெரியாறு அணைக்கட்டுப் பிரச்சினை, மதுரை மற்றும் தேனி போன்ற பல தென்மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையாகும்.

கேரளத்தில் அமைந்துள்ள அச்சுதானந்தன் அரசு, இந்த முல்லை பெரியாறு அணையை உயர்த்திட உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு இருந்தும், அதனைத் தடுத்து, இல்லாத ஊருக்குப் போகாத பாதை அமைப்பதுபோல, தாங்கள் தனி அணை கட்டவேண்டும் என்று வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அத்தனை அடாமுயற்சிகளையும் மேற்கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தி.மு.க. அரசிற்கு எதிரான ஆயுதமா?

தமிழ்நாட்டில் தமிழக அரசு அதனைத் தடுத்து நிறுத்திட கலைஞர் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு, கட்சி வேறுபாடு, அரசியல் மாறுபாடு இன்றி எல்லா கட்சிகளும், அமைப்புகளும் ஒத்துழைப்புத் தந்து, ஒரே குரலில் பேசாமல், வழக்கம்போல் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா இதில் அரசியல் செய்கிறார்; அவரது கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகளும் அதற்கு ஆதரவான வகையில் நம்மிடையே ஒருமித்த கருத்தில்லை; என்று காட்டி, தி.மு.க. அரசிற்கு எதிராக இது ஒரு ஆயுதம் என்றுதான் அற்பத்தனமாகக் கருதி, 6 கோடி தமிழர்களின், தமிழ்நாட்டின் நலத்தையும், உரிமையையும் எதிரிகளுக்குக் காட்டிக் கொடுப்பது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்!

கேரளத்தைப் பாரீர்!

கேரளத்தைப் பாருங்கள்; அங்கே எல்லா அரசியல் கட்சிகளும் ஓர் அணியில் ஒரே குரலில் தமிழ்நாட்டுக்கு எதிரானதாக உள்ள இப்பிரச்சினையில் கேரள அரசின் அதீத நடவடிக்கைகளுக்குக் கண்களை மூடிக்கொண்டு ஆதரவுக்கரம் நீட்டுகிறார்கள்!

இங்கோ எல்லோரும் தனித்தனிதான்

ஏகமனதாகி இவர் நம்மை எதிர்ப்பதெங்கே?

என்ற புரட்சிக்கவிஞரின் கவிதைக்கேற்ப தமிழர்களின் பரிதாப நிலை.

மத்தியில் உள்ள இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் என்ற கன்னடப் பார்ப்பனர் இதில் இரட்டை வேடம் போட்டுள்ளார்!

முல்லை பெரியாறு அணையை ஆய்வு நடத்த கேரளாவிற்கு ரகசியமாக அனுமதியளித்துவிட்டு, பிறகு ஏதேதோ சொல்லியிருக்கிறார். நுனி நாக்கு ஆங்கிலத்தை மட்டும் மந்திரியாவதற்குப் பெரும் தகுதியாகக் கருதும் மத்திய அரசின் தலைமை காரணமாகத்தான், இதுபோன்ற கொள்ளிக் கட்டைகளை எடுத்து தலையைச் சொறிந்துகொள்ளும் நிலை அங்கே உள்ளது!

அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிடமிருந்து துறை மாற்றப்படவேண்டும்

தி.மு.க. ஆட்சியையே அலர்ஜியாகக் கருதும் அவரது உள்ளம் தி.மு.க.காங்கிரஸ் கூட்டணி எப்படியாவது உடையாதா? என்று திட்டமிட்டு வேலை செய்வதாகத் தெரிகிறது.

இவரிடம் உள்ள இந்தத் துறையை மாற்றி யாராவது அனுபவம் மிகுந்த தங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் பிரதமர் அவசரமாக ஒப்படைக்க முன்வரவேண்டும்.

மதுரையில் முதலமைச்சர் பங்கேற்கும் கண்டனக்கூட்டம்

இவரது இந்த பாரபட்ச நடவடிக்கையை எதிர்த்து மதுரையில் நவம்பர் முதல் தேதி மாபெரும் கண்டனக் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் முதல்வர் கலைஞர் கலந்துகொள்வார் என்றும் தி.மு.க. அறிவித்திருப்பது, மிகவும் வரவேற்கத்தக்கது; காலத்தே எடுக்கப்பட்ட தவிர்க்க இயலாத நன் முடிவு.

கூட்டணி என்றால் எதற்கும் வாய்மூடி மவுனமாக இருக்கவேண்டும் என்பதில்லை.

உரிமைக்குக் குரல் கொடுப்பதும், உறவுக்குக் கைகொடுப்பதும் என்பதில் முன்பு உள்ளதுதான் முக்கியம் இப்போது.

இந்திய ஒருமைப்பாடு படும்பாடு, எப்படியிருக்கிறது பார்த்தீர்களா?

வாதாட போராடவேண்டும்

இதேபோல், பல பிரச்சினைகளிலும் நாம் வாதாட, போராடவேண்டியவைகள் உள்ளன. சேது சமுத்திரத் திட்டம்போல பல பணிகள் தமிழ்நாட்டு அரசுக்கும், கட்சிகளுக்கும் இருக்கின்றன!

எனவே, இந்தக் குரல் ஓங்கட்டும்!

தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
22.10.2009

இப்படியும் கோயில் வழிபாடு, திருவிழா


நாகரிகமா?

கருநாடக மாநிலம் குடகு மாவட்டம் கோனி கொப்பா அருகே தேவபுரா என்னும் கிராமம்; அய்யப்பா பத்ரகாளி என்னும் கோயில் இருக்கிறது. மே மாதத்தில் இரண்டு நாள்கள் விழா நடைபெறுகிறது.

குடகு மாவட்டத்தில் சித்தாபுரா, மார்தாரி, கோனி கொப்பா, வீராஜ் பேட்டை, பொன்னம்பேட்டை, பாலிபெட்டா, தித்திமத்தி போன்ற இடங்களிலிருந்து ஆண், பெண் பக்தர்கள் திரண்டு வருவார்களாம்.

இங்கு ஆயுதப் பூஜை கொண்டாடுவதுபோல, வீட்டில் பயன்படுத்தும் கருவிகளையெல்லாம் வைத்துப் படைப்பார்களாம்.

ஆண்கள், பெண்கள் வேடம் தரித்து வண்ணப் பொடிகளைப் பூசிக்கொண்டு ஊர்வலமாக வருவார்களாம்.

ஊர்வலமாகச் செல்லும்போது நடக்கும் சமாச்சாரம்தான் முக்கியமானது. கடைகளுக்கும், வீடுகளுக்கும் சென்று கொச்சைத்தனமான, கெட்ட வார்த்தைகளை அசிங்க அசிங்கமாகப் பேசி நன்கொடை கேட்பார்களாம். செலவு போக மீதிப் பணத்தை கோயில் உண்டியலில் போடுவார்களாம்.

இப்படியும் கோயில் வழிபாடு, திருவிழா, பக்தி அநாகரிகங்கள் இந்த அர்த்தமுள்ள இந்துமதத்தில்.

இங்கு சேலம் அன்னதானப் பட்டியில் துடைப்ப அடி வழிபாடு நடக்கவில்லையா?

பீடி சாமியார், சுருட்டு சாமியார், எச்சில் சாமியார், பீர் சாமியார், கெட்ட வார்த்தை பேசும் சாமியார் என்று ரகரகமாக அர்த்தமுள்ள இந்து மதத்தில் புழுத்துக் காணப்படவில்லையா?

இந்தக் கேடு கெட்ட அநாகரிகமான சாமியார்களைத் தேடி பக்தர்கள் செல்வதில்லையா? காணிக்கைகளைக் கொடுப்பதில்லையா?

அதில் ஒரு ரகம்தான் இந்தக் கருநாடகத் திருவிழாவும்.

அறிவுக்கு விரோதம்

ஒழுக்கத்துக்கு விரோதம்

நாகரிகத்துக்கு விரோதம்

பொருளாதாரக் கேடு

காலக்கேடு

மனித உழைப்பு நாசம்

ஒட்டுமொத்தமாக ஒரே வரியில் சொல்லவேண்டுமானால், மனிதத் தன்மைக்கே விரோதமான காட்டுமிராண்டித்தனமான பக்தியை இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் அனுமதிக்கலாமா?

இதுகுறித்துப் பேசினால் மத விஷயத்தில் தலையீடு. மனம் புண்படுகிறது என்று ஓலமிடுவது எவ்வளவு கேவலம்?

நிர்வாண சாமியார்களின் கால்களை தம் தலையில் வைத்து ஒற்றிக்கொள்ளும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வாழும் நாட்டில், பாமரர்களைக் குற்றம் சொல்லி என்ன பயன்?

------------ மயிலாடன் அவர்கள் 22-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

21.10.09

கடவுள் ஒரு கல் அல்லது உலோகம். சக்தியாவது, புடலங்காயாவது?


கஜராஜன்

காஞ்சிபுரத்தில் நாள்தோறும் சங்கராச்சாரியார்கள் வழிபடும் காமாட்சியம்மன் கோயிலில் தீபாவளியன்று ஒரு அசாம்பாவிதம் நடைபெற்றது. (காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரும் ஒரு தீபாவளிநாளில்தான் கைது செய்யப்பட்டார் என்பதும் நினைவுக்கு வருகிறது) கோயில், சாமி இவற்றைக் கடந்து மனிதநேயம் உள்ளோர் துடிதுடித்துப்போன நிகழ்வு யானைப்பாகனின் பரிதாப மரணம்!.

கோயில் வளாகத்திற்குள்தான் இது நிகழ்ந்தது! இதற்கு என்ன சமாதானம்? சொல்லப் போகிறார்கள்! அவா அவா தலையெழுத்து என்று கூறி அருவருப்பான முறையில் சமாதானம் சொல்லப் போகிறார்களா?

அவர்கள் நம்பும் ஆன்மிக முறையிலேயே கூடக் கேட்கிறோம்.

தன் காலை, முதலை பிடித்தவுடன், கஜேந்திரன் (யானை) கண்களில் நீர் மல்க, ஆதிமூலமே! என்று அலறியவுடன் விஷ்ணு தன் கருட வாகனத்தில் ஓடோடி வந்து, சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜராஜனுக்கு (யானைக்கு) விடுதலை அளித்ததோடு முதலை வடிவில் இருந்த கந்தர்வனுக்குச் சாப விமோசனமும் அளித்தார் என்று கதையளக்கிறார்களே. அவர்களைப் பார்த்துதான் இந்தக் கேள்வி. முதலை தன்னைக் கவ்வியது என்றவுடன் குரல் கொடுக்கத் தெரிந்த கஜேந்திரன், இப்பொழுது இன்னொரு உயிர்க்கு வேட்டு வைத்துவிட்டானே. இது எந்த ஊர் நியாயத்தை, தர்மத்தைச் சேர்ந்தது?

காமாட்சியம்மன் கோயிலில் பணியாற்றிய ஒரு தொழிலாளியை, அதுவும் கஜராஜனுக்கு அன்றாடம் பணிவிடை செய்துகொண்டிருந்த அதன் பாகனை குரூர முறையில் கொன்று கேட்டோர் நெஞ்சமெல்லாம் துடிதுடிக்க வைத்த சம்பவத்துக்கு ஆன்மிக முறையில் கூறப்படும் சமாதானம் என்ன?

இதற்கு முன்பேகூட இதே காஞ்சி காமாட்சியம்மன் கோயில் யானைக்கு நோய் ஏற்பட்டு, ஏராளமாகச் செலவு செய்து கால்நடை மருத்துவர்களால் பெருமுயற்சி எடுத்தும், அணு அணுவாகத் துடிதுடித்து செத்ததே! காமாட்சியம்மன் காப்பாற்றினாளா?

அன்றாடம் பூஜை செய்யும் ஜெயேந்திரருக்கே நல்ல புத்தி கொடுக்க முடியவில்லை; சிறைக்குச் செல்லாமல் காப்பாற்ற முடியவில்லை. இந்த நிலையில் யானைக்கா நல்ல புத்தியைக் கொடுக்கப் போகிறது. பாகனையும்தான் காப்பாற்றப் போகிறது? இதில் ஒரு சுரண்டல் தனத்தைப் பாருங்கள். கோயிலில் பரிகாரப் பூஜை செய்யப்பட்டு நடை திறக்கப்பட்டதாம். அபவாதம் என்றாலும், அதனை லாபமாக மாற்றும் இந்தப் பார்ப்பன சூழ்ச்சியை என்னென்பது!

கோயில் ஒரு கட்டடம்; அதற்குள் வைக்கப்பட்டு இருக்கும் கடவுள் ஒரு கல் அல்லது உலோகம். சக்தியாவது, புடலங்காயாவது?

புத்தியிருந்தால் சிந்திக்கவும்.

----------- மயிலாடன் அவர்கள் 19-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

உயர்-உச்ச நீதிமன்றத்தில் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்டவர் ஜஸ்டிஸ் வரதராஜன்

ஜஸ்டிஸ் வரதராஜன்

நீதியரசர் ஏ. வரதராஜன் அவர்கள் மறைவுற்றார் (வயது 89) இவர் ஒரு வலாறு படைத்தவர். சென்னை உயர்நீதிமன்றம் தோன்றி நூறு ஆண்டுகள் கடந்துவிட்டனவே இதுவரை இந்த நீதிமன்றத்தில் ஒரே ஒரு தாழ்த்தப்பட்டவர் நுழைய முடியவில்லையே ஏன்? என்ற வினாவைத் தொடுத்தார் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் ஒரு வினாவைத் தொடுத்தார் என்றால், அதற்கான பதில் வந்தே தீரும். அதுவும் முதலமைச்சராகக் கலைஞர் இருந்தால் விடை கிடைக்காமல் போகுமா?

தென்னார்க்காடு மாவட்டத்தில் மாவட்ட நீதிபதியாக இருந்த அப்பாஜி வரதராஜன் அவர்களைத் தேடிப்பிடித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக அமர்த்தப் பெற்றார் (15.2.1973).

ஆம், உயர்ஜாதியினரின் கர்ப்பக்கிரகமாக இருந்த உயர்நீதிமன்றம் முதல் முதலாக சமூகநீதிக்குச் சிம்மாசனம் அளித்து உபசரித்தது.

தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தாலும், பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, வாய்ப்புக் கொடுத்தால் தங்கள் திறமைகளைத் தீர்மானமாக நிரூபித்துக் காட்டுவார்கள். அந்த அடிப்படையில்தான் அடுத்து உச்சநீதிமன்றத்திற்கும் சென்றார் ஜஸ்டிஸ் வரதராஜன் அவர்கள் (10.12.1980).

உயர்நீதிமன்றத்தில் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்டவர் மட்டும் அல்லர் உச்சநீதிமன்றத்திற்குள்ளும் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்டவர் என்ற பெருமைமிகு அணிகலனும் அவருக்கே கிடைத்தது. அங்கும் தன் தனித்தன்மையான முத்திரையினைப் பதித்து முறைப்படி ஓய்வு பெற்றார் (16.8.1985).

கழகம் நடத்திய தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு, தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலையை வெளியிட்ட பெருமையும் அவருக்கே உண்டு.

கழகம் நடத்திய சமூகநீதி மாநாடுகளில் எல்லாம் பங்கேற்று தம் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

இன்னொரு முக்கியமான தகவலும், அவரைப்பற்றி உண்டு.

உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் தாழ்த்தப்பட்டவர் நீதிபதியாக அமர்த்தியாயிற்று. குடியரசுத் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்டவர் வரக்கூடாதா என்ற குரலையும் திராவிடர் கழகம்தான் ஒலித்தது.

1987 இல் அதற்கான முயற்சியில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மேற்கொண்டார். டில்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களையெல்லாம் சந்தித்து கருத்து உருவாக்கும். அந்த நேரத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திடீரென்று ஆர்.வி. கிருஷ்ணய்யரை வேட்பாளராக அறிவித்து முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டது. கடைசியில் ஆர். வெங்கட்ராமய்யர் வெற்றி பெற்றார்.

பல முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களுக்குச் சொந்தக்காரரான நீதியரசர் ஏ. வரதராசன் அவர்களை மிகக் கவுரவமாக நினைவு கூர்வோம்!

------------------ மயிலாடன் அவர்கள் 21-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

கமலகாசனும், - அக்ரகாரவாசிகளும்

கமல் 50

50 ஆண்டுகாலம் திரைப்படத் துறையில் கால் பதித்த கமலகாசனுக்கு பிரம்மாண்டமான விழா எடுக்கப்பட்டுள்ளது. ஏடுகளிலும், இதழ்களிலும் அட்டைப்படக் கதாநாயகனாகவும் அவரே ஜொலிக்கிறார்.

குமுதத்தில் (7.10.2009) அவரின் பேட்டியும் வெளிவந்துள்ளது.

ஒரு காலத்தில் விடி யற் காலையில் குளிச்சிட்டு ஈரத் துணியோடு பூஜையை முடிச்சிட்டு, வீட்ல இருக்கிற வங்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவுபூர்வமான வரிகள் என்னைப் புரட்டிப் போட்டுடுச்சி என்று எடுத்தவுடனேயே வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார் என்கிறது குமுதம்.

குமுதத்தில் சொன்னது இன்னும் பொருத்தம்தான். ஊரில் கிடக்கும் புராணக்-குப்பைகள், ஓட்டை உடைசல்களையெல்லாம் ஒப்பனை செய்து ஊர்வலம் விடும் ஏடாயிற்றே! நன்றாக மூக்கை வெட்டுகிற மாதிரி அதில் பேட்டி தந்துள்ளார். அதற்காகவும் ஒரு சபாஷ் போடலாம் போலத்தான் தோன்றுகிறது.

கமலகாசன் மட்டுமல்ல, மனந்திறந்து தந்தை பெரியார் அவர்களின் நூல்களைப் படிப்போர் யாராக இருந்தாலும் கமலகாசன் நிலைக்கே ஆளாவார்கள் என்பதில் அய்யமில்லை.

அய்யய்யோ அவர் சாமியில்லை என்கிறவர். அந்த நூலைத் தொடாதே, தீண்டாதே, பார்க்காதே, படிக்காதே! என்று ஆரம்பத்திலேயே அச்சக் குரல் கொடுத்து வேண்டுமானால் தடுக்கலாமே தவிர, அதனைத் தொட்டுப் படித்துவிட்டால், எந்தக் கொம்பனாக இருந்தாலும், அறிவுலக ஆசானின் வரிகளை வரித்துக்கொண்டுதான் தீருவார்கள்.

இவ்வார ஆனந்தவிகடனிலும் (14.10.2009) கடவுள்பற்றிய கருத்தை சற்று வித்தியாசமாகச் சொல்லுகிறார்.

நான் கடவுள் இல்லைன்னு சொல்லலை, இருந்தால் நல்லா இருக்குமேன்னுதான் சொல்றேன் என்கிறார். தசாவதாரத்திலும் இதையேதான் கூறுகிறார்!

கடவுள் ஒருவர் இருந்து மக்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுப்பாரேயானால், யார்தான் வேண்டாம் _ இல்லை என்று சொல்லப் போகிறார்கள்? அப்படி ஒருவர் இல்லையே என்பதுதானே பகுத்தறிவாளர்களின் கவலை.

கடவுள் ஒருவர் இருந்து நேராக வந்துவிட்டால் கடவுள் இருக்காருன்னு சொல்லிட்டுப் போறோம் என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லவில்லையா?

கலை உலகின் ஜாம்பவான் ஒருவரின் வாயிலிருந்து இத்தகு கருத்துகள் வெளிவருவது பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு வலிமை சேர்ப்பதே! அதேநேரத்தில் அக்ரகாரவாசிகள் இவரை எப்படியெல்லாம் உள்ளுக்குள் வறுத்துக் கொட்டுவார்கள்! ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்!

---------------- மயிலாடன் அவர்கள் 20-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை



20.10.09

எதற்காக பெரியாரும், திராவிடர் கழகமும் தீபாவளியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்கின்றனர்?


மிரட்டலா?

தன்மானம் உள்ள தமிழா, தீபாவளி கொண்டாடலாமா? ஆரிய திராவிடப் போராட்டத்தை மய்யப்படுத்தி புனையப்பட்ட கதையே தீபாவளி பூமிக்கும் பன்றிக்கும் பிள்ளை பிறக்குமா? தீபாவளிப் பண்டிகை அறிவுக்குப் பொருந்துமா? பூமாதேவிக்கும் மகாவிஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளை எப்படி அரக்கனானான்? என்ற வினாக்களை இன்று நேற்று அல்ல தன்மான இயக்கம் தோற்று விக்கப்பட்ட காலந்தொட்டு 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏடுகளில், இதழ்களில் எழுதப்பட்டும் வருகின்றன. நாடெங்கும் தீபாவளி கண்டனப் பொதுக் கூட்டங்களும் நடத்தப்படுவதுண்டு.

விருதுநகரில் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த அடிப்படையில் சிறப்பாக சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டன.

அதில் காணப்படும் வாசகம் வருமாறு:

பொருளாதாரப் பேரழிவு!

சுற்றுச்சூழல் சீர்கேடு!

சுகாதாரக் கேடு! உயிர்ப்பலி!

ஆரிய ஆபாசப் பண்டிகை!

தீபாவளியைப் புறக்கணிப்போம்!

என்று அந்தச் சுவரொட்டிகளில் கூறப்பட்டு இருந்தது.

இதில் என்ன குற்றம்? என்ன பிழை? ஒரே ஒரு வரியை கால் புள்ளி, அரைப் புள்ளியை மறுக்க முடியுமா?

இவற்றை மறுக்கவியலாத எதிர்த்துக் கருத்துச் சொல்ல வக்கில்லாத சில பேர் இந்து முன்னணி என்ற பெயரால் சிவகாசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனராம். இதற்காகக் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனராம். சுவரொட்டி வெளியிட்டவர்கள்மீதும், அச்சிட்ட அச்சகத்தின்மீதும் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளாராம்.

உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒரு வகையில் இதனை வரவேற்கிறோம். நீதிமன்றத்திலேயே இந்த ஆபாச, மூடத்தன தீபாவளி பண்டிகையைப்பற்றி அக்குவேர் ஆணி வேராகக் கிழித்திட திராவிடர் கழகத்துக்குக் கிடைத்த அரியதோர் நல்ல சந்தர்ப்பமாகவே இதனைக் கருதுகிறோம்.

மக்கள் மத்தியில் விஞ்ஞான சிந்தனையைத் தூண்டுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டமே கூறியுள்ளது. இதனைப் புரிந்து கொள்ளாதவர்களாக காவல்துறை அதிகாரிகள் இருப்பார்களேயானால், அவர்களும் தெரிந்து கொள்ள வைக்கக் கிடைத்திட்ட கிடைத்தற்கரிய சந்தர்ப்பமாகவேகூட இதனை எடுத்துக் கொள்வோம்.

அதே நேரத்தில் இந்து முன்னணியில் உள்ள அப்பாவித் தமிழர்கள் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? எதற்காக தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் தீபாவளியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்கின்றனர் என்பது குறித்து திறந்த மனத்தோடு சிந்திக்க வேண்டாமா?

வேதங்களிலும், இதிகாசங்களிலும், புராணங்களிலும் அரக்கர்கள், அரசுர்கள், ராட்சதர்கள் என்ற எழுதப்பட்டவர்கள் எல்லாம் திராவிடர்களே என்று வரலாற்று ஆசிரியர்கள் (பார்ப்பனர்கள் உள்பட) எழுதி இருக்கிறார்களே, அதுபற்றி தெரியுமா? ஏன், ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியினர் தூக்கிப் பிடிக்கும் விவேகானந்தர்கூட இதே கருத்தைச் சொல்லியிருப்பதை அறிவார்களா?

இந்த உண்மையைத் தெரிந்து கொண்டால் திராவிடர் கழகம் ஏன் தீபாவளிப் பண்டிகையை எதிர்க்கிறது என்பதற்கான அடிப்படைக் காரணத்தைப் புரிந்து கொண்டு இருக்க முடியுமே!

இராமாயணத்தில் சம்புகனை இராமன் வெட்டிக் கொன்றதும், நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா கொன்றதும், சூரபத்மனை சுப்ரமணியன் சம்ஹாரம் செய்ததும் எல்லாம் ஆரியர் ஆரியரல்லாதாரை அழித்தொழித்தது தானே!

காந்தியாரைக் கொலை செய்த கோட்சேக்கு விழா எடுப்பவர்களுக்கு இதெல்லாம் புரிவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் ஆறாவது அறிவைக் கொண்டு அவர்களும் சிந்திக்க முற்பட்டால் மனிதர்களாகலாமே!

தமிழ்நாடு முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் தீபாவளி வாழ்த்துச் சொல்லாததன் அருமையை இந்த இடத்தில் சுட்டிக்காட்டி, பகுத்தறிவாளர்கள் சார்பாக பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


-------------------"விடுதலை" தலையங்கம் 19-10-2009

யார் இந்தக் கந்தன்? புராணப்படி இவன் பிறப்பு என்ன? எதற்காக இந்த கந்த சஷ்டி?


கந்தர் சஷ்டியாம்!

ஏடுகளை, இதழ்களை திறந்தால் கந்தசஷ்டி, கந்த சஷ்டி என்ற கூத்துகள்தாம். தீபாவளி முடிந்தது என்றால், அடுத்து ஒரு படையெடுப்பு நடத்தப்படவேண்டாமா? வாரம், மாதம் என்று தொடர்ந்து இந்துப் பண்டிகைகளில் மூழ்கடித்து நம் மக்களை மூச்சுத்திணற வைக்காவிட்டால் அவர்கள் பிழைப்பு என்னாவது? இதற்கடுத்து கார்த்திகைத் தீபம் என்று கதைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

யார் இந்தக் கந்தன்? புராணப்படி இவன் பிறப்பு என்ன? எதற்காக இந்த கந்த சஷ்டி? யாருக்காவது தெரியுமா?

கந்தன் பிறப்பைக் கேட்டாலோ, படித்தாலோ புழுத்த நாய் குறுக்கே போகாதே!

உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாய்விட்டது; அதை எங்களால் தாங்க முடியவில்லை. ஆகவே, அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு அவர்களை அழிக்-கக்கூடிய வல்லமை பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற்றுத்தரவேண்டும் என்று வேண்டினார்கள். அதற்குச் சிவனும் இணங்கி பார்வதியைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளைபெறும் முயற்சியில் அவளோடு கலவி செய்ய இறங்கினானாம்.

தொடர்ந்து 1,000 வருடங்கள் கலவி செய்துகொண்டே சிவனும், பார்வதியும் இருந்தார்களாம். ஆனால், குழந்தை பிறக்காததைக் கண்டு தேவர்கள், இனி பிள்ளை பிறந்தால் இந்த உலகே தாங்காது; அவ்வளவு வலிமை உள்ளதாக இருக்கும். அது இந்த உலகத்தையே அழித்தாலும் அழித்துவிடும் என்று தேவர்கள் சிவனிடம் சென்று வேண்டிக் கலவி செய்வதை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.

அதற்கு சிவன், நீங்கள் சொல்லுவதுபோல் நிறுத்திக் கொள்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. நிறுத்தினால் அதிலிருந்து வரும் வீரியத்தை என் செய்வது என்றதும், உடனே தேவர்கள் தங்கள் கைகளை ஏந்தி அதில் விடும்படிக் கேட்டார்களாம். அதன்படி தேவர்கள் அனைவரின் கையிலும் வீரியத்தை விட்டு, சிவன் குடிக்கும்படி கூற, அவர்களும் குடித்தனராம். மீதி வீரியத்தை சிவன் கங்கையில் விட்டானாம்.

கங்கை அதைத் தாங்காமல் கொதிக்க ஆரம்பித்துவிட்டதாம். வீரியத்தைக் குடித்த தேவர்களுக்கு கர்ப்ப நோய் வந்துவிட்டதாம்.

அவர்கள் சிவபிரானிடம் சென்று வணங்கி, தங்கள் கர்ப்பநோய்க்கு மருந்து கேட்க, அவர் அதற்கு, காஞ்சிபுரத்திலுள்ள சுரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கினால் கர்ப்பம் கலையும் என்று கூறினாராம். அதன்படி தேவர்கள் அக்குளத்தில் மூழ்கிக் கர்ப்பத்தைக் கலைத்துக் கொண்டார்களாம்.

கங்கையில் ஓடிய சிவ வீரியமானது, ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடியதால், ஆறு குழந்தைகள் ஆயிற்றாம். அதனை ஆறு பெண்கள் எடுத்துப் பால் கொடுத்து வளர்த்தனராம். ஆறு பேர்கள் பால் கொடுப்பது என்பது சிரமமாக இருப்பதாக எண்ணி, அவர்கள் ஆறு பேரையும் ஒன்றாக அணைத்துப் பால் கொடுக்கையில், முகம் 6 ஆகவும் (தலைகள்), கைகள் 12 ஆகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதையாம். ஸ்கலிதத்திலிருந்து உதித்ததால், ஸ்கந்தன் என்று பெயர் உண்டாயிற்றாம்.

ஸ்கந்தம் என்றால், விந்து என்று பொருள். கந்தன் என்ற சுப்பிரமணியக் கடவுளின் பிறப்பு யோக்கியதையைக் கண்டீர்களா?

இதுதான் ஸ்கந்தனாகிய கந்தனின் பிறப்பு!

இந்த யோக்கியதை உடைய ஒரு கடவுளின் பெயரால் ஒரு வார காலம் தெருப்புழுதியாம்! கந்தன், சுப்பிரமணியன், முருகன் எல்லாம் ஒன்றுதான். சில புலவர்கள் இதில் குறுக்குச்சால் ஓட்டுவார்கள். தமிழர்களின் முருகன் வேறு, ஆரியர்களின் கந்தன் வேறு என்றெல்லாம்கூடக் கூறுவார்கள்.

அது உண்மையென்றால், முருகனுடைய அறுபடை வீடு என்று சொல்லப்படும் இடங்களில் எல்லாம் கந்த சஷ்டி என்ற பெயரால் விழாக்கள் நடத்துவது ஏன்?

ஒவ்வொரு வீட்டுக்கும் அற்புதங்களை சிலாகிப்பது ஏன்? திருப்பரங்குன்றம் என்றால் தெய்வானையின் கையை முருகன் பிடித்த இடமாம். திருச்செந்தூர் என்றால் பத்மாசுரனை சம்ஹாரம் செய்த ஸ்தலமாம். கந்தர் சஷ்டி கவசம் இக்கோயிலில்தான் இயற்றப்பட்டதாம்.

மூன்றாம் படை வீடு பழனியாம் _ ஒரு பழத்துக்காக விநாயகனும், முருகனும் சண்டை போட்ட இடமாம். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை கட்டி வைத்துள்ளனர்.

எண்கண் ஊரில் உள்ள முருகன்மீது ஒரு அற்புதத்தைத் திணித்துள்ளனர். இங்குள்ள முருகனின் சிலையை வடித்த சிற்பிக்குக் கண் பார்வை கிடையாதாம்.

பொரவச்சேரி முருகனை மனதில் வைத்து சிலையைச் செதுக்கினாராம். சிலையின் கண்களை சிற்பி திறந்தபோது கண் பார்வையற்ற அந்தச் சிற்பிக்கும் கண் பார்வை வந்ததாம். எல்லாம் விட்டாலாச்சாரியார் படக்கதைதான். இந்தச் சிற்பிக்குத் தான் கண் தெரியாதே. பொரவச்சேரி முருகன் உருவத்தை எப்படி மனதில் இறுத்தி சிலையைச் செதுக்கினாராம்?

கேள்வி கேட்டால், எந்தக் கடவுள்தான் கால் ஊன்றி நிற்க முடியும்? கதைக்குக் கால் இல்லை என்பது இதுதானோ!

அசிங்கத்துக்குப் பொட்டு வைப்பதுதான் மதத் திருநாளா?

---------------------"விடுதலை" தலையங்கம் 20-10-2009

19.10.09

கடவுள் செய்யவேண்டியதை மனிதனைக் கொண்டு ஏன் சொல்ல வேண்டும்?




கடவுள் செய்யவேண்டியதை – சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும்? அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன் அவர் வரவில்லை? இப்போது கிருஸ்துவை ஏற்காதவர்கள், நம்பாதவர்கள், வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு இவ்வளவு தான் சக்தியா? இது போலத்தானே இஸ்லாம் மதம் என்பதும் சொல்லப்படுகிறது? முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு? குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம்.கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா? கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா? உலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும் ஏன் சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை? முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான்? மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப் பயன்படுவதில்லையே! ஏன்? கடவுள் சொல், அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு மாத்திரம் தெரிய வேண்டும்? இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது! இதுதான் கடவுள் தன்மையா? இவையெல்லாம் மனிதத் தன்மையா? மனிதக் கற்பனையா? தெய்வத்தன்மையா? ஒரு சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால் அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம், மகன், குமாரன், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும்? இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும்? இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம், தூதர்கள், சமயங்கள், மதங்கள், போதகர்கள் இருக்க வேண்டிய அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால் இவையெல்லாம் மூட நம்பிக்கை, அதாவது அறிவைக் கொண்டு சிந்திக்காமல் கண்முடித்தனமாய் நம்ப வேண்டியவை ஆகின்றனவா இல்லையா? இது மனிதர் என்பவர்களுக்கு ஏற்றதா என்று கேட்கிறேன்.

இதற்காகக் கோபிப்பதில் பயன் என்ன? மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால் மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய முடியும்? அறிவுள்ளவர்களே! பகுத்தறிவாதிகளே! சிந்தித்துப்பாருங்கள்! இது சந்திர மண்டலத்திற்கு மனிதன் போய் வரும் காலம்; காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே சிந்தித்துப்பாருங்கள்! பின் சந்ததி மக்களை மடையர்களாக்காதீர்கள்!


------------------14-06-1971 "உண்மை" இதழில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்.

18.10.09

சினிமாவிற்கும் சிறார்களுக்கும் என்ன சம்பந்தம்?


தொ(ல்)லைக் காட்சி

ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு நற்செய்தி வெளிவந்துள்ளது. அது குழந்தைகளின் நலன் பற்றியது. அப்படியென்றால் ஊட்ட உணவு பற்றியதா, பள்ளிக்குப் பிள்ளைகளை எந்த வயதில் அனுப்புவது எந்தப் பள்ளிக்கு அனுப்புவது பற்றியதா என்றால் - அதெல்லாம் இல்லை.

வந்த செய்தி சினிமாவைப் பற்றியது. சினிமாவா? சினிமாவிற்கும் சிறார்களுக்கும் என்ன சம்பந்தம் என்று புருவத்தை மேலும் கீழும் ஏற்றி இறக்க வேண்டாம்.

இங்கே சொல்ல வந்தது வீட்டில் ஒரு விஷக் கருவியை வைத்திருக்கின்றோமே, - சின்னத் திரை என்று செல்லமாக ஒரு பெயர் வைத்திருக்கின்றோமே - அந்தத் தொலைக் காட்சிப் பெட்டிகளைப் பற்றியே.

ஆமாம், நம் நாட்டில் கூட எப்பொழுதாவது இது பற்றிய சிந்தனைகள் வந்து மின்னல் வேகத்தில் மறைவதுண்டு.

ஆமாம், ஆஸ்திரேலிய அரசு என்ன சொல்கிறது?

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த வயதில் உள்ள குழந்தைகள் தொலைக் காட்சி பார்ப்பதால் அவர்களின் மொழிப் பயிற்சி தடை செய்யப்படுகிறது. ஓடி விளையாட வேண்டிய நேரத்தில் ஒரே இடத்தில் இமை கொட்டாது தொலைக் காட்சிகளைப் பார்ப்பதால் உடல் குண்டாகிறது. ஏதோ தீடீர் என்று ஆஸ்திரேலிய அரசு மனசுக்குத் தோன்றியது என்று கூறி அந்தத் தடையைச் செய்துவிடவில்லை. இது குறித்து ஓர் ஆய்வையே ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டுள்ளது. பிறந்த 4 மாதக் குழந்தை நாள் ஒன்றுக்கு 44 நிமிடமும், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தை மூன்று மணி நேரமும் தொலைக் காட்சியில் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் 6 முதல் 8 விழுக்காடு குழந்தைகள் உடல் பருமனாக உள்ளனராம். இதனைத் தடுக்கவே இந்தத் தடை ஆணையாம்.

இவை மட்டுமல்ல, இன்னும் கூடுதல் தகவல்கள் இது பற்றி இருக்கவே செய்கின்றன.

தொலைக்காட்சிப் பெட்டிகளில் விறுவிறுப்பான வன்முறை - பயங்கரவாத நிகழ்ச்சிகளை மணிக்கணக்காகக் குழந்தைகள் பார்க்கும்போது, அவர்களின் மூளைகளில் டோபமைன் என்ற வேதிப் பொருள் அதிகமாகச் சுரக்கும். பின்னர் அவர்கள் பள்ளிக்குச் சென்று படிக்கும்போது, மூளைச் சுரப்பிகள் போதுமான அளவில் பற்றாமல் போய்விடுகின்றன. இதன் காரணமாக பொருள் தெரிந்து அவர்களால் படிக்க முடிவதில்லை -கவனச்சிதறல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

பள்ளிப் படிப்பை முடிக்கும் முன் அவர்கள் பத்தாயிரம் கொலைக்காட்சிகளைப் பார்த்து விடுகிறார்களாம். இதன் மூலம் காரியத்தைச் சாதிக்க வன்முறையே சரியானது என்ற நச்சு எண்ணம் அந்த இளம் குருத்துகளின் மூளையை ஆக்கிரமித்து விடுகிறது. விளம்பரங்கள் குழந்தைகளைக் குறிவைத்தே ஏவப்படுகின்றன என்பதும் இன்னொரு முக்கியமான தகவலாகும்.

பெற்றோர்களே, பிள்ளைகளை வளர்க்கப் போகிறீர்களா? அழிக்கப் போகிறீர்களா?

---------------- மயிலாடன் அவர்கள் 18-10-2009 "விடுதலை" யில் எழுதியகட்டுரை

பதவியா? பொதுஜன சேவையா? ஒரு ஆய்வு



பொதுவாக ஸ்தலஸ்தாபனங்களின் நிர்வாகத்தையும் பொறுப்பையும் உத்தேசிக்கையில் ஸ்தலஸ்தாபனங்களில் ஸ்தானம் பெறுவது தொண்டு செய்வதற்காகவா பதவியை அனுபவிப்பதற்காகவா என்பதை பெரும் பான்மையான ஓட்டர்கள் உணர்வதே இல்லை. நம்மைப் பொறுத்தவரையிலும் நாம் அதை ஒரு பதவியெனக் கருதுகிறோமேயன்றி அதை ஒரு பொது ஜன சேவையென நாம் கருதுவதேயில்லை. உதாரணமாக, எவ்வித பொது ஸ்தல ஸ்தாபனங்களில் அங்கம் பெற்றாலும் அங்கம் பெற்றவர் அதை ஒரு பதவியாகவே மதித்து அதைப்பிறருக்குக் காட்டிப் பெருமை அடைவதின் பொருட்டாக தம்முடைய பெயருக்குக் கீழ் அப்பதவியின் பெயரையும் அச்சடித்துக் கொள்கிறார். தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கும் அதை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார். அந்நியர் இவருடைய கவுரவங்களைப் பற்றிப் பேசும் பொழுதும் அதைசுட்டிக் காட்டுகின்றனர்.

அல்லாமலும் இந்தத் தேர்தல் ஸ்தானம் பெறுவதின் பொருட்டு ஆயிரம், பதினாயிரம், இருபதினாயிரம் செலவும் செய்கின்றனர் யாரைப்பிடித்தால் தாங்கள் தேர்தலில் வெற்றி பெறலாமெனக் கருதி லஞ்சம் கொடுத்து ஏஜண்டுகளையும் நியமிக்கிறார்கள் தேர்தல் காலங்களில் தங்களுக்கு எதிராக நிற்கும் அபேட்சகர்களை உண்மைக்குமாறாகவும் மனச் சாட்சிக்கு விரோதமாகவும் வேண்டுமென்றே தூஷிக்கின்றனர். தேர்தல்களில் ஸ்தானம் பெறுவதை ஒரு வெற்றி தோல்வியென மதிக்கின்றனர். தங்களால் செய்யக்கூடாத காரியங்களையெல்லாம் செய்வதாகப் பொய் பேசி ஜனங்களை ஏமாற்றுகின்றனர்.

ஓட்டர்களுக்கு நிலைமைக்குத் தகுந்த விதமாக லஞ்சம் கொடுக்கின்றனர். உண்மையில் பொது நன்மையின் பொருட்டு இவர்கள் தேர்தலுக்கு நிற்பார்களே ஆனால் இவ்வித அயோக்கியச் செயல்கள் புரிய அவர்களது மனம் ஒருப்படுமா? நூறுபேர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பின் அதில் ஒருவராவது உண்மையாளராயிருப்பாரென நம்ப இடமிருக்கின்றதா? பொது நன்மைக்குப் பாடுபடுபவர்களின் யோக்கியதை இப்படித்தானிருக்குமா?

உண்மையாக பொது ஜன சேவை செய்ய வேண்டுமென்ற ஆசையிருப்பின் தேர்தலில் போட்டிபோட்டு இழிவான செயல்கள் பல செய்தேதான் பொது மக்களுக்கு உழைக்க வேண்டுமா? வெளியிலிருந்து கொண்டு ஒரு நகர பரிபாலன சபையின் உள்ளிருந்து செய்யும் செயல்களைச் செய்ய முடியாதா? ஒரு நகரபரிபாலன சபையை எடுத்துக் கொண்டால் அதற்குப் பல அங்கத்தினர்களும் ஒரு தலைவரும் இருந்தால்தான் அது நடைபெறுமா?

இவர்கள் இல்லாவிடின் நகர பரிபாலன சபை நடை பெறாதா? நகர பரிபாலன சபை சட்டப்படி சிப்பந்திகளை நியமித்து விட்டு கையெழுத்துப் போடத் தெரிந்த ஒரு இயந்திர பொம்மையும் அது ஆட்டுகிறபடி தலை ஆட்டுவதற்குப் பத்துப் பூனைக்குட்டிகளையும் உட்கார வைத்து விட்டால் நகர பரிபாலன சபை இயந்திரம் ஓடுமா ஓடாதா?

நகர பரிபாலன சபையில் மனிதர்கள் சென்று உட்காருவதனாலும் அவர்களில் ஒருவருக்கொருவர் உள்ள துவேஷத்தாலும் சுய நலத்தாலும் கலகம் விளைகின்றதே அன்றி நகர பரிபாலன சபையின் நிர்வாகத்தில் கலகம் விளைவதற்குச் சிறிதும் இடமில்லை. தாலுகாபோர்டு, டிஸ்டிரிக்டுபோர்டு முனிசி பாலிட்டி, யூனியன் என்று சொல்லப்படுவது கிரமப்படி சர்க்காரார் செய்ய வேண்டிய வேலை அவர்கள் செய்வதாயிருப்பின் இவற்றிற்கென்று ஒரு தனி வரி வசூலிக்க வேண்டி வருமே என்றும் நிர்வாகத்தில் ஏதாவது குறை ஏற்பட்டால் ஜனங்களுக்கு நேராகத் தெரிந்து விடுமென்றும், சாதாரண ஜனங்கள் வெகு சுலபமாக சர்க்காரை குறை கூறி விடுவாரே என்றும் யோசித்து இவ்விதக்கஷ்டங்களினின்றும் தப்புவதற்காக தந்திரமாய் பொது ஜனங்கள் கையில் ஒப்பு வித்து விட்டார்கள். இதனால் சர்க்காருக்கு மற்றொரு லாபமும் ஏற்பட்டுப் போய்விட்டது.

அதாவது, எலெக்ஷன் என்றும் அதற்கு ஓட்டு என்றும் பல முறைகளை ஏற்படுத்தியதால் பட்டணங்களிலோ, கிராமங்களிலோ உள்ள செல்வாக்குள்ளவார்கள் ஒன்று சேராதபடி தேர்தல்களில் நின்று போட்டி போட்டு ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டு ஒற்றுமை இல்லாமல் ஊர் இரண்டு பட்டிருப்பதற்கு ஓர் அனுகூலமாகி விட்டது.

இவற்றைத் தவிர, இந்தத் தேர்தல்களினாலோ ஸ்தல ஸ்தாபனங்களில் அங்கம் பெறுவதினாலோ தேசத்திற்கு ஓர்வித நன்மையும் உண்டாகப் போவதில்லை. ஆகையினால் ஓட்டர்களாயிருப்பவர்கள் தாங்கள் ஓட்டுச் செய்யும் போது பொது நன்மை செய்வதற்குரியவர்கள் யார் என்று தேடிக்கொண்டு அர்த்தமில்லாது கஷ்டப்படுவதைவிட இந்தப் பதவியை வகிப்பதற்கு அந்தஸ்து உடையவர் எவர், அருகதை உடையவர் எவர், பாத்தியம் உடையவர் எவர் என்பதை யோசித்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்வார்களே ஆனால், ஓட்டர்கள் தங்கள் கடமையைச் செய்தவர்களாவார்கள்.

-------------------------- "குடிஅரசு" தலையங்கம், 06.09.1925

பார்ப்பனர்கள் அனைவரும் ஒன்றுபோல் பேசுகின்றனரே எப்படி?


கைபர்-சைபர்

பத்திரிகைச் செய்தி: பவளப் பாறைகள் சேதத்தைத் தடுக்கும் வகையில், செயற்கைக்கடல் மீன்கள் உற்பத்தி செய்வது குறித்து ஏழு மாநில அதிகாரிகளுக்கான பயிற்சி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் தொடங்கியது.

டவுட் தனபாலு: அரசே, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேத்தறேன்னு பவளப் பாறைகளை அழிக்கவேண்டியது... அப்புறம் அவங்களே சேதத்தைத் தடுக்க செயற்கை மீன்களை உற்பத்தி செய்யவேண்டியது... இதுக்குப் பேர்தான், குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடறதா?

இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதுபற்றி ஆலோசித்து வருவதாக, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். அப்படி ஒருவேளை குடியுரிமை வழங்கினால் இலங்கையிலிருந்து, ஒட்டுமொத்தமாக தமிழர்கள் இங்கு வந்துவிட வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

- தினமலர், 15.10.2009,
பக்கம் 8

ஈழத் தமிழர் பிரச்சினையானாலும், சேது சமுத்திரத் திட்டமானாலும், தமிழ் செம்மொழி என்றாலும், தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்றாலும், தமிழ் தமிழன் தமிழ்நாடு என்பவற்றில் இந்தப் பார்ப்பனர்கள் கோணல் கழிவெட்டிக் கொண்டு இருக்கிறார்களே! தமிழ் செம்மொழி ஆனால், வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா? கத்தரிக்காய் விலை குறையுமா? ஏழை வீட்டு விசைத்தறி நிற்காமல் ஓடுமா? என்ற கேள்வியை எழுப்புகிறது தினமலர்.

தினமலர் என்பது ஒரு குறியீடுதான்; துக்ளக் சோ ராமசாமி முதற்கொண்டு கல்கி மார்க்சியம் பேசும் இந்து ராம் உள்பட, இராமகோபாலன் மற்றும் ஜெயேந்திர சரசுவதிவரை கொஞ்சம்கூடப் பிசிறின்றி, சுருதி பேதம் இல்லாமல் பார்ப்பனர்கள் ஒரே மொழியில் பேசுகின்றனரே எப்படி? காரணம் என்ன?

பார்ப்பனரும் தமிழர்கள்தான் என்று முரட்டுத் துணிச்சலாகக் கருத்து சொல்லுகின்ற மெத்த படித்த மேதாவிகள் சிந்திக்கவேண்டாமா?

கைபர் கணவாய் கூட்டத்துக்கு பூர்வீக இடம் என்பது இப்போது சைபர் ஆகிவிட்டதால், ஏற்பட்ட ஆத்திரத்தின் வெளிப்பாடுதானே இவை!

தங்களுக்கு இல்லாதது மற்றவர்களுக்கும் இருக்கவே கூடாது என்கிற தாராள மனம்தான் இதற்குக் காரணம்.

தமிழா, தமிழனாக இரு!

தமிழா இனவுணர்வு கொள்!

-------------- மயிலாடன் அவர்கள் 16-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

பக்தியின் யோக்கியதை என்ன? சிந்திப்பீர் தமிழர்களே!

ஒரு கரண்டியில் இவ்வளவு நஞ்சு!

நீதிபதி தினகரனை உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கலாம் என ஆராய ஒரு குழுவை நியமித்திருப்பது ஏற்புடையதல்ல. நீதிபதி தினகரன் பேரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை யானவையா என்பதைக் காட்டிலும், அவர் குற்றச் சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறாரா என்பதே முக்கியம். கல்கி தலையங்கத்தில் இவ்வாறு எழுதுகிறது.

நமது விமர்சனம்:

இந்த ஞானோதயம் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால விஷயத்திலும், பொய் வயது புகழ் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இராமச்சந்திர அய்யர்வாள் விஷயத்திலும் ஏன் ஏற்பட வில்லையாம்?

தினகரன் சூத்திரன். மற்ற இருவரும் பிர்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணர்கள் என்பதுதானே காரணம்?

என் இலக்கு கடவுள்தான் என்ற தலைப்பில் ஒரு பேட்டி. பேட்டி கொடுத்துள்ளவர் ஓவியர் எஸ்.பூஷன்.

கேள்வி: நீங்கள் வரையும் ஓவியத்திற்கு ஆதார சக்தி எது?

ஓவியர் பூஷன்: என்னை வரைய வைப்பதே அந்த சக்திதான். ஓவியங்களை வரைவது நானில்லை. நான் வெறும் காரணி. இதை உணர்ந்து சொல்லுகிறேன்.

நமது விமர்சனம்:

அப்படி என்றால் மனித சக்தி என்பதற்கு என்னதான் அர்த்தம்?

திறமைக்கும், புகழுக்கும், சாதனைக்கும் காரணி கடவுள்தான் என்றால் இவற்றின் எதிர்மறையான செயல்களுக்கும் காரணி யார் என்ற கேள்வி எழவில்லையா?

இவர் ஓவியர். இப்படிச் சொல்லுகிறார்.


உலகப் புகழ் பெற்ற சிற்பி கணபதி ஸ்தபதி என்ன சொல்லுகிறார்?

ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்கிறார்கள் கடவுளை? அவர் எப்படி இருப்பார்ன்னு யாருக்குத் தெரியும்? எங்களால் மட்டும் எப்படி அப்படி தத்ரூபமாக ஒரு கல்லில் அவரைக் கொண்டு வரமுடிகிறது? கோயிலுக்குள் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனைப் பரவசப்படுறீங்க?

நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு சிலையா மாறணும்; அந்தக் கல்லுக்கு உயிர் வரணும். அப்பத்தான் கையைக் கூப்பி வணங்கமுடியும். அந்த உயிரை யாரு கொடுக்கிறாங்க? நாங்கதானே! எங்க கிட்ட அப்படி என்னதான் வித்தை இருக்குன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? (கல்கி 11-.6.-2006)

நமது விமர்சனம்:

கடவுள் சக்திதான் எங்களை வரைய வைக்கிறது என்கிறார் ஓவியர் எஸ்.பூஷன். கடவுளையே உருவாக்குபவர்கள் நாங்கள்தான் என்கிறார் கை தேர்ந்த சிற்பி. இரண்டுமே கல்கி ஏட்டில் வந்த பேட்டிதான். இதற்கு மேல் சிந்திக்க வேண்டியது வாசகர்கள்தான்

அசோகவனம் இன்று என்று ஒரு கட்டுரை. தேவமணி ரஃபேல் என்பவர் எழுதியுள்ளார். அவரின் இலங்கைப் பயணத்தில் சில காட்சிகள்.

மழை ஓய்ந்துவிட்டது. கோயிலை விட்டு வெளியேவந்து காரில் ஏறும்போது, தமிழ் பேசும் பள்ளி மாணவர்கள் சிலர் பாதையில் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் டேய்! குடல் போகுது, மிதித்துவிடாதே! என்று மற்றவர்களை எச்சரிப்பது கேட்டது. அது என்ன குடல்? நாமும் அருகில் சென்று குனிந்து பார்த்தோம். ஒரு அடி நீளத்தில் ராட்சச மண் புழுக்கள் பாதையில் ஊர்ந்து கொண்டிருந்தன. அந்தப் பையன்களிடம் கேட்டோம். இவற்றை ஏன் குடல் என்கி-றீர்கள்? என்று.

இது இராவணின் குடல்; சேர், மழை பெய்துவிட்டால் வெளியே வந்துவிடும் என்றார்கள். பெயர் என்ன? எனக் கேட்டோம். கல்யாண ராமன் என்றான் பையன்.

நுவரெலியாவில் நாம் பயணித்தபோது, நெடுஞ்சாலைகளைப் புதுப்பித்து வெட்டப்பட்ட மண்சரிவுகளில் ஒரு கரிய மண் அடுக்கு ஊர் முழுவதுமே இருந்தது. சில இடங்களில் மேற்பரப்பிலேயே காண முடிந்தது. இராவணன் அனுமன் வாலில் தீ வைத்ததால், அதைக் கொண்டு ஆஞ்சநேயர் ஊரையே எரித்தார் அல்லவா? அதனால் ஏற்பட்ட கரிதான் இந்தக் கரிய மண் என்கிறார்கள்.

நமது விமர்சனம்:

இராமாயணம் நடந்த கதையல்ல. ஆரிய திராவிடப் போராட்டத்தைச் சித்திரிக்கும் கதை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

இந்தக் கற்பனைக் கதையை நிலை நாட்ட, ஆரியர்கள் தங்கள் மேலாண்மையை நிலைநாட்ட எப்படி எப்படியெல்லாம் கதை கட்டி விட்டுள்ளனர் என்பதைக் கவனிக்க வேண்டும்.

கரிசல் மண் இலங்கையில் மட்டும்தான் உள்ளதா? உலக நாடுகளில் இல்லையா? அங்கெல்லாம் அனுமான் சென்று ஊரை எரித்தானா?

இராமாயணம் என்ற கற்பனைக் கதையை மக்கள் நெஞ்சில் என்றென்றும் பதியும்படிச் செய்ய என்னென்ன தந்திரங்களை யெல்லாம் உருவாக்கி யுள்ளார்கள்.

மயிலாடுதுறை பக்கத்தில் சீதை வாய்க்கால் என்று பெயர். அதற்கு என்ன காரணம் சொல்லுகிறார்கள் தெரியுமா? அது வழியாகத்தான் சீதை நடந்து சென்றாள் என்பார்கள். பக்கத்தில் மறையூர். இந்த ஊரில் இருந்துதான் ராமன் மறைந்து இருந்து வாலியைக் கொன்றான் என்பார்கள்.

இன்னொரு ஊர் பக்கத்தில். அதன் பெயர் கொல்லுமாங்குடி. இங்குதான் மான் உருவில் இருந்த மாரீசனை இராமன் அம்பு எறிந்து கொன்றான் என்பார்கள். இப்படி ஒவ்வொரு ஊரிலும் அவிழ்த்து விடப்பட்ட கட்டுக்கதைகள்.

பார்ப்பனர்களின் பிரச்சாரத் தந்திரம் என்பதற்கு முன் கொயபல்சுகள் பிச்சை வாங்கவேண்டும். தமிழ்நாட்டில் தமிழர் நடத்தும் தொலைக் காட்சியிலேயே இராமாயணத் தொடர் வந்து விட வில்லையா?


பத்துடையீர், ஈசன் பழவடியீர்

பாங்குடையீர்! -

இது திருவெம்பாவைப் பாடல். இதில் பத்து என்றால் பக்தி என்று பொருள். இந்தப் பக்தி யிருந்தா, பத்து உங்களுக்குக் கிடைக்கும். அந்தப் பத்து என்ன?

(1) தத்துவரூபம் (2) தத்துவ தரிசனம் (3) தத்துவசுத்தி (4) ஆன்மரூபம் (5) ஆன்மதரிசனம் (6) ஆன்மசுத்தி (7) சிவரூபம் (8) சிவதரிசனம் (9) சிவயோகம் (10) சிவபோகம்.

நமது விமர்சனம்:

இந்த பத்து கிடைப்பதால் என்ன பயன்? பாரத நாடு தான் பக்திக்குப் பெயர்போன நாடாயிற்றே. இந்தப் பத்தும் கிடைத்துவிட்டதாகவே வைத்துக் கொள்வோம். அதனால் விளைந்த பயன் என்ன?

100 க்கு 77 பேருக்கு நாள் வருவாய் ரூபாய் இருபதாம். இதை வைத்துக் கொண்டு நாக்கை வழித்துக் கொள்ளலாம் -அவ்வளவுதான்! உலக அரங்கில் பொருளாதாரத்தில், வாழ்க்கைத் தரத்தில் 136 ஆவது இடத்தில் இருக்கிறதே - இந்தப் பத்தும் பத்து வழிக்கக்கூடப் பயன்படாதே!

இந்தப் பக்தி, சிவனைச் சுற்றியே வருகிறதே. கிறித்துவனின் நிலை என்ன? முசுலிமின் நிலை என்ன? இந்தப் பத்து (பக்தி), இல்லாமல் பகுத்தறிவுவாதியின் வாழ்க்கைத் தரம் என்ன தாழ்ந்து விட்டது.

பக்தியின் சின்னமான ஜெயேந்திர சரஸ்வதியைப் பார்த்த பிறகுமா பக்திப் பிலாக்கணம்?

நான் சந்நியாசம் கொண்டேன் என்று யார் சொன்னது? அதெல்லாம் ஒன்றும் கிடையாது என்று நீதிமன்றத்திலேயே சொல்லி தம்பிக்குப் பக்தியினால் திரட்டிய சொத்தை எழுதி வைத்த ரமண ரிஷியைப் பார்த்த பிறகாவது பக்தியின் யோக்கியதை என்ன என்று எடை போடவேண்டாமா?

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பனனுக்கு மோட்சம் கொடுத்தானே சிவன் மாபாதகம் தீர்த்த படலம் - திருவிளையாடல் புராணம் - அந்த சிவரூபம், சிவதரிசனம், சிவபோகம் கிடைத்து என்ன பயன்?

உண்மையான பக்திக்கு அடையாளம் தாயைப் புணர்வதுதானா? தந்தையைக் கொல்வதுதானா? குன்றில் உறையும் சிங்கப் பிரான் - கன்னத்தில் காயமும், கால் மாற்றி ஆடிய பெருமானும் அலங்காரமே ஆத்ம திருப்தி என்று இன்னும் பல உண்டு. தீராத விளையாட்டு விட் டலன் சந்ததியாளர்களும் உண்டு. இவை அத்தனைச் சமயச் சாரங்களும், வெளி வந்தது கல்கி ஏட்டில்தான். - அதுவும் ஒரே ஒரு இதழிலேயே (4.-10.-2009) இவ்வளவு நச்சுக் குப்பிகள்.

ஒரு கரண்டி நஞ்சினால் ஓராயிரம் உயிர்களைக் கொல்ல முடியாதா? ஒரே ஒரு இதழில் இத்தனைப் பக்தி நஞ்சுகளையும் கொட்டியிருப்பதே யார் குடலை உருவ? யார் அறிவை முடக்க? யார் பொருளைச் சுரண்ட? யார் வயிற்றில் அறுத்து வைக்க?

எந்தக் காரணத்தை முன்னிட்டும் பக்தியின் பிடியிலிருந்து நம் மக்கள் விடுதலை பெற்றுவிடக் கூடாது; அப்படிப் பெற்றுவிட்டால், அது பார்ப்பன சமூத்தில் விழுந்த இழவாக முடியுமே!

அதற்காகத்தான் இவ்வளவு குப்பைகளும், ஒட்டடைகளும். இதைத்தான் பக்தி முற்றிய தமிழன் காசு கொடுத்து வாங்கி கண்களில் ஒத்திக் கொள்கிறான்.

இதனைப் படித்தால் கடுகு மூக்கு அளவுக்காவது கருத்து வளருமா? எள் மூன்று முனைக்காவது எழுச்சி ஏற்படுமா? ஏற்றம்தான் பிறந்திடுமா? காதொடிந்த ஊசி அளவுக்காவது வெளிச்சம் ஏற்படுமா? முனை மழுங்கிய குண்டூசி அளவுக்காவது முயற்சியும், முனைப்பும்தான் முகிழ்த்திடுமா?

இந்த முட்டாள்தனமான பார்ப்பன உலகத்தில் இருந்து நோயிலிருந்து விடுபட இதோ சில மூலிகைக் கொழுந்துகள். மூளையைப் பிடித்து ஆட்டும் மொத்த நோய்களுக்கும் கைகண்ட மாமருந்து:

"எப்படியோ பல மதங்கள், பல தெய்வங்கள், பல வேதங்கள், பல சமயங்கள் கற்பிக்கப்பட்டாகி விட்டன. அவை ஒவ்வொன்றினாலும் மக்களை அடிமைப்படுத்தியாகி விட்டது. குரங்குப் பிடியாய் இவற்றைப் பிடித்துக் கொண்டு சமய ஞானம் பேசுகின்றவர்களிடம் காலத்தைக் கழிப்பது வீண் வேலையாகும். மக்கள் மிருகப் பிராயத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

மண்ணையும், சாம்பலையும் குழைத்துப் பூசுவதே சமயமாகி விட்டது.

பார்ப்பானுக்கும், பாழாண்டிக்கும் அழுவதே தர்மமாகிவிட்டது.

கூடா ஒழுக்கங்களும், அண்டப் புரட்டுகளும், ஆகாயப் புரட்டுகளும் நிறைந்த புராணக் குப்பைகளைத் திருப்பித் திருப்பிப் படிப்பதே காலட்சேபமாகிவிட்டது.

ஒழுக்கத்தினிடத்திலும், சத்தியத்தினிடத்திலும் மக்களுக்குள்ள கவலையே அடியோடு போய்விட்டது.

பணக்காரன் ஏழையை அடிமைப்படுத்துவதே முறையாய் போய்விட்டது.

வலுவுள்ளவன் வலுவில்லாதவனை இம்சிப்பதே ஆட்சியாகி விட்டது.

தந்திரசாலிகள் சாதுக்களை ஏமாற்றுவதே வழக்கமாகிவிட்டது.

அயோக்கியர்கள் யோக்கியர்களை உபத்திரவப் படுத்துவதே நீதியாகிவிட்டது. வலிவுடையவனாகவோ, அயோக்கியனாகவோ இல்லாதவன் வாழ்வதற்கு இந்த உலகத்தில் இடமே இல்லாமல் போய்விட்டது.

இவற்றை சீர்திருத்த ஒரு காலத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? இதனால் கலகம் உண்டாகுமானால் அதற்காகக் பின் வாங்க வேண்டுமா? திருந்தினால் திருந்தட்டும்; இல்லாவிட்டால் ஒழியட்டும் என்கிற இரண்டிலொன்றான கொள்கையிலே இறங்கியிருக்கிறோம். மானம் கெட்ட மத்திய வாழ்வு இனி வேண்டுவதல்ல."

--------------------தந்தை பெரியார் (குடிஅரசு 4-5-1930)

பரம் - ஆத்மார்த்தம், விதி அல்லது கடவுள் செயல் என்று சொல்லப்படும் இம்மூன்றையும் அழிக்கிற தைரியமும், சக்தியும் உடையவர்களே மனிதனுக்கு விடுதலை சம்பாதித்துக் கொடுக்க அருகராவார்கள்.

-------------------------- தந்தை பெரியார் (குடிஅரசு 4-5-1930)

கையாலாகதவனுக்குக் கடவுள் துணை; அறிவில்லாதவனுக்கு ஆண்ட-வன் செயல்; இவற்றை உணர முடியாதவனுக்கு தலைவிதி

தந்தை பெரியார் (குடிஅரசு 13-12-1931)

சிந்திப்பீர் தமிழர்களே!

---------------------17-10-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை