காஷ்மீர் எரிமலை!
காஷ்மீர் பகுதியிலிருந்து சமீப காலமாக வந்து கொண்டிருக்கும் தகவல்கள் அதிர்ச்சியூட்டக் கூடியவையே!
முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
காஷ்மீர் மக்கள் நினைத்திருந்தால் அவர்கள் பாகிஸ்தானோடு தொடக்கத்தில் இணைந்திருக்கலாம்; அவ்வாறு முடிவு எடுக்காமல் இந்தியாவில் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். ஆனாலும், காஷ்மீர் தொடர்பான பிரச்சினை அன்று தொட்டு இன்றுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது ஓயாத புயலாக வீசிக்கொண்டிருக்கிறது.
காஷ்மீருக்கென்று தனித்த சில வாய்ப்புகளும், சலுகைகளும் கொடுக்கப்பட்டு இருப்பது உண்மையே! அந்தச் சலுகைகளைக்கூட கொடுக்கப்படக் கூடாது என்கிற இந்துத்துவா வெறிக் கும்பல் ஒன்று இந்தியாவில் இருக்கத்தான் செய்கிறது.
காஷ்மீர்ப் பிரச்சினைக்காக இந்தியாவின் நிதி கணிசமான அளவுக்குச் செலவிடப்படுகிறது என்பது யதார்த்தமான உண்மையாகும்.
இப்பொழுது அங்கு ஏற்பட்டு இருக்கும் பிரச்சினை காஷ்மீர் முசுலிம் மக்களுக்கும், இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலாக உருவெடுத்தது பெரிதும் வருந்தத்தக்கதாகும்.
என்கவுன்ட்டர்கள் என்ற பெயரில் மாணவர்கள், இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர் என்ற குற்றச்சாற்று பெரிதாக எழுந்துள்ளது.
காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட நியமிக்கப்பட்டுள்ள சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சாதாரண போராட்டங்களைக் கூட ஜனநாயக முறையில் எதிர்கொள்ளும் உணர்வைப் பெற்றவர்கள் அல்லர் என்று முன்னாள் காவல்துறை அதிகாரி (அய்.ஜி.) ராம்மோகன் கூறியிருக்கிறார்.
தென்னிந்திய ஊடக ஆணையத்தின் தலைவர் கே.கே. கட்யால், காஷ்மீரில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிக அழகிய பகுதியாகிய காஷ்மீர் பிரச்சினைகளின் முள்காட்டில் சிக்கிக் கொண்டு தவியாய்த் தவிக்கிறது.
காஷ்மீர்ப் பிரச்சினை இந்தியாவிற்கான பிரச்சினையாக மட்டுமல்லாமல், பாகிஸ்தான் சம்பந்தப்பட்டதாகவும் எப்படியோ ஆக்கப்பட்டுவிட்டதால், தீர்வுகள் கிடைப்பதில் பெரும் சிக்கல்களும், தடைகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
இந்தப் பிரச்சினையில் மூன்றாவது நாடு தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் சொல்லுகிறது. அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா அடித்துச் சொல்லுகிறது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் எந்த அளவுக்கு நெருக்கமும், நேசமும் அதிகரிக்கிறதோ அந்த அளவுக்குத்தான் காஷ்மீர்ப் பிரச்சினையும் இலகுவாகும் என்ற கருத்தும் உண்டு. இரு நாடுகளுக்கும் இடையே பேருந்து போக்குவரத்துகள்வரை ஒரு பக்கம் நடைபெற்றாலும் காஷ்மீர் எரிமலை மட்டும் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் முழு நேரப் பணியாளனான நெருப்பை உமிழ்ந்து கொண்டேயிருக்கிறது.
காஷ்மீர் சிங்கம் என்று மதிக்கப்படும் ஷேக் அப்துல்லா தமது அரசியல் கட்சியின் பெயரில்கூட, முஸ்லிம் மாநாடு என்றிருந்ததை தேசிய மாநாடு என்று மாற்றிக் கொண்டார்.
1947 இல் பாகிஸ்தானால் தூண்டி விடப்பட்ட பழங்குடி மக்கள் காஷ்மீரைக் கைப்பற்ற நெருங்கிக் கொண்டிருந்தபோது சிறீநகரில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் முன் அந்தச் சிங்கம் கர்ச்சனை செய்தது.
பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ள கொள்ளையர்கள் சிறீநகரில் இருந்து சில மைல் தூரத்திற்குள் வந்துவிட்டனர். அவர்கள் இஸ்லாம் என்னும் முழக்கத்தை ஒலிக்கின்றனர். என்னுடன் நிற்கப் போகிறீர்களா? அல்லது அவர்களுடனா என்பதை முடிவு செய்யுங்கள்.
என்னோடு நிற்பது என்று முடிவு செய்தால், இந்துக்கள், முசுலிம்கள், சீக்கியர்கள் அனைவரும் சகோதரர்களே எனும் கொள்கையுடன், அவர்களோடு நீடித்து வாழ ஒப்புக்கொள்கிறோம் என்று அர்த்தம்.
இவ்வாறு நான் பேசுவதை துரோகியின் மொழியாக (கஃபீர்) நீங்கள் கருதினால், உங்களுடைய வாள்களை உயர்த்துங்கள். துரோகிகளை தாக்கவோ, கற்பழிக்கவோ நீங்கள் விரும்பினால், நான் உங்களின் முதல் துரோகி! எனவே, எனது இல்லத்தில், எனது குடும்பத்தில் இருந்து அதனைத் தொடங்குங்கள் என்றாரே அந்த உணர்வைக் கட்டிக் காக்கும் இந்தியத் தலைவர்கள் காஷ்மீரிலும், இந்தியாவிலும் இல்லாததுதான் இன்றையப் பிரச்சினைகளுக்குக் காரணமா?
இந்தியா ஒரு நாடு என்ற கண்ணோட்டத்தில் தேசிய இனங்களின் மொழி, பண்பாடு உள்ளிட்ட உரிமைகளை உதாசீனப்படுத்தக் கூடாது கூடவே கூடாது என்ற பாலபாடத்தை இந்தியா கற்றுக் கொள்வதாகுக!
---------------- "விடுதலை” தலையங்கம் 20-7-2010
3 comments:
காலை வணக்கங்கள் தோழர் !
காஷ்மீரில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு மக்களின் விருப்பம் நிறைவு செய்யப்படுமென்று ஐ .நா .வில் நேரு அறிவித்ததை இந்திய அரசாங்கம் நிறைவேற்ற முன்வருவதே பிரச்சனைக்கான ஒரே தீர்வாகும் . அருந்ததி ராய் காஷ்மீர் குறித்து சொன்னதின் மைய்யக் கருத்தை நான் வழிமொழிகிறேன் !
வருகிறேன் தோழர் !
பிரிவினைவாதிகள் நலனை விட, தேசநலன் தான் முக்கியம்! கல்லெறியில் ஈடுபட்டு, தலையில் மண்ணெறிந்து கொள்பவர்,கஷ்மீரிகள்! சீக்கியர்கள், பொதுநலன் வேண்டி, தங்களிடம் இருந்த, பிரிவினைவாதிகளை ஒடுக்கியதைப்போல், கஷ்மீரிகளும், தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தினால் தான், அமைதி ஏற்படும்!
காஷ்மீர் பிரச்சினைக்கான எனது இந்த தீர்வைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மொத வேலையா பாகிஸ்தானுக்கும் நமக்கும் உள்ள முதலும் முடிவுமான பிரச்சினையான காஷ்மீரை ஐ. நா.ஆக்டிவிட்டீஸுக்குனு ஒதுக்கி ஒப்படைச்சுரனும். அதனோட பாதுகாப்பை சர்வதேச ராணுவம் ஏத்துக்கிடறாப்ல செய்யனும்.
பாக் தரப்புல ஆஜாத் காஷ்மீர், நம்ம தரப்புல பாக் ஆக்குபைட் காஷ்மீர்னு சொல்ற பகுதியையும் ஐ. நா சபைக்கு ஒப்படைக்க சொல்லி பாக் மேல அழுத்தம் கொண்டுவரனும். (சீனா விஷயத்துலயும் இதே ஃபார்முலாவ ஃபாலோ பண்ணலாம்)
Post a Comment