Search This Blog

17.7.10

பக்தர்கள் போர்வையில் நாத்திகர்கள்


நாத்திகர்கள் யார்?

கடவுளை மறுப்பவர்கள் மட்டுமா? கடவுளை நம்புகிறவர்களும், பரப்புபவர்களும் நாத்திகர்கள்தான் என்று சொன்னால், அது எப்படி? என்ற கேள்வி எழலாம்.

ஆனாலும் உண்மை அதுதான். கடவுளை நம்பிக் கொண்டே அதே நேரத்தில் அவர்கள் செயல்படும் வகைகளை ஒழுங்காகக் கவனிப்பவர்களுக்கு, ஆமாம், ஆமாம். இவர்கள் நெற்றியில் பட்டை இருந்தாலும், நாமம் இடம் பிடித்திருந்தாலும், உத்திராட்சம் தொங்கினாலும் இவர்களும் நாத்திகர்கள்தாம் என்பது புரியாமல் போகாது.

கோவில்களில் சிலைகள் அதாவது மூல விக்ரகத்தில் உள்ள அந்தக் கடவுள்கள், கல்லாலோ உலோகங்களாலோ செய்யப்பட்டிருந்தாலும், அவை சக்தி உடையவைதான், மந்திர உச்சாடனம் செய்யப்பட்டு இருப்பதால் அவை சக்தி உடையவவைகளாகத்தான் இருக்கின்றன என்று பக்தர்கள், பாகவதர்கள், அர்ச்சகர்கள், சங்கராச்சாரியார்கள், ஊடகப் பார்ப்பனர்கள் அடித்துச் சொல்லுவார்கள், சாதிப்பார்கள் அல்லவா?

ஒவ்வொரு கோவிலுக்கும் தலப் புராணங்கள் வேறு எழுதப்பட்டு அவற்றின் மகாத்மியங்களை வண்டி வண்டியாக வெளியிடுவார்கள்.

சனி தோஷம் கழியவேண்டுமா? திருநள்ளாறு வாருங்கள் திருவாரூருக்கும் வருகை செய்யுங்கள். சுகப்பிரசவம் ஆகவேண்டுமா? சித்தன்னவாசல் மாத்ருபூதேஸ்வரர் அன்னை சுகந்த குந்தளம்பாளைத் தரிசியுங்கள். வளமான வாழ்க்கை தேவையா? வாருங்கள், கோடி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்யுங்கள். இழந்த பொருள்களை மீண்டும் பெறவேண்டுமா? தஞ்சை புரீஸ்வரனைக் (திருவையாறு அருகில்) கும்பிடுங்கள்... வழக்குகளில் வெற்றி பெறவேண்டுமா? கொல்லங்குடி வெட்டுடையான் காளி (சிவகங்கை அருகில்) சந்நிதானத்துக்கு வந்து சரணடையுங்கள்.

கலியாணம் ஆகவேண்டுமா? கடன் தொல்லை தீரவேண்டுமா? பிள்ளைப் பேறு வேண்டுமா? எல்லாவற்றிற்கும் ஸ்பெஷல் கோவில்கள், கடவுள்கள் இந்து மதத்தில் இருப்பதாக தடபுடல் தவில் அடிக்கிறார்கள். ரொம்பசரி, இவர்கள் சொல்லும் இந்தக் கோவில்களுக்கும், கடவுள்களுக்கும் இவ்வளவு பெரிய சக்தியும், விசேஷ சமாச்சாரங்களும் இருப்பது உண்மையானால், அந்தக் கடவுள்களுக்கு தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதா?

ஆனால் இந்தக் கடவுள் பக்தி நாத்திகர்கள் என்ன சொல்லுகிறார்கள்? என்ன செய்கிறார்கள்?

இதோ ஒரு செய்தி. மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவிலில் குளிரூட்டப்பட்ட பாதுகாப்பு மய்யம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான தண்டம் அதாவது, செலவு ரூ.37 லட்சமாம் (தகவல்: தினமலர், 16.7.2010, பக்கம் 3)

எதற்காக இந்தக் குளிரூட்டப்பட்ட பாதுகாப்பு அறையாம்?

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 200 க்கும் மேற்பட்ட கோவில்களில் உள்ள அய்ம்பொன் கடவுள் சிலைகளைப் பாதுகாக்கத்தான் இந்தத் தடபுடல் பாதுகாப்பு ஏற்பாடாம். இது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் இந்து அறநிலையத் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருவிழா காலங்களில் மட்டும் இப்படி பாதுகாக்கப்பட்ட கடவுள் சிலைகள் தக்க காவல்துறை பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட கோவில்களுக்குக் கொண்டு வரப்படுமாம். திருவிழா முடிந்தவுடன் மீண்டும் பாதுகாப்புடன் பாதுகாப்பு மய்யத்துக்குக் கொண்டு செல்லப்படுமாம்.

இப்பொழுது சொல்லுங்கள், கோவில்களில் இருக்கும் கடவுள்களுக்குச் சக்தியாவது, வெண்டைக்காயாவது. அதெல்லாம் ஒன்றும் கிடையாது. அவை வெறும் பொம்மைகள் என்று பக்தர்கள், அர்ச்சகர்கள், இந்து அறநிலையத் துறையினர் ஒப்புக் கொள்கிறார்களா இல்லையா?

பக்தி, சக்தி என்பது பேச்சில்தான். ஆனால் செயலிலோ வேறு மாதிரிதான்.

பக்தர்கள் போர்வையில் நாத்திகர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா?

-------------கருஞ்சட்டை 17-7-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

அ.முத்து பிரகாஷ் said...

பேரன்பு தோழர் ஓவியா அவர்களுக்கு ,
மிக நீண்ட இடைவெளியில் சொந்த வீட்டிற்கு வரும் மகனைப் போன்று இருக்கிறது இந்த பின்னூட்டம் ...எங்கே போனாய் என்று தந்தை கேட்காவிடிலும் வருந்தாவிடிலும் திரும்பி திருந்தி வந்தமைக்காய் மகிழ்ந்தாலும் ,மகனின் எண்ணங்களில் வருத்தங்கள் சொல்ல இயலாதவை !

சற்றே சிந்திக்கும் எந்த ஒரு பக்தனும் இயல்பாகவே நாத்திகவாதி ஆவது திண்ணம் ... அதுவும் தங்களின் பதிவுகள் பகுத்தறிவாளர்களை உருவாக்கும் இயந்திரங்களாக செயல் பட்டு வருகின்றன ...

பக்தர்கள் ஆத்திகத்தின் தோல் கொண்டுள்ள பகுத்தறிவாளர்கள் தாம் ... நாம் செய்ய வேண்டியது தோலுரித்து அவர்களின் இயல்பை வெளிக் கொணர்வதுமட்டுமே ... அதை தான் தாங்கள் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறீர்கள் ..எவ்வித பிரதிபலனும் எதிர்பாராது ...

அன்பின் வணக்கங்கள் தோழரே !

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி