ரங்கநாதர் லாட்டரி அடிக்கிறார்
ஸ்ரீரங்கம் ரங்கனாதர் குடும்பச் செலவுக்கு இந்தபத்து வருஷகாலமாய் லாட்டரி அடித்துக் கொண்டு வந்திருக்கிறார். இதைப் பார்த்து நான் ஒரு சிறிதும் வருத்தமோ அதிசயமோ அடையவில்லை, ஏனெனில் உலகில் சோம்பேறிகள் கஞ்சிக்கே லாட்டரி அடிக்கவேண்டும் என்பதுதான் எனது ஆசை.
இந்த ரங்கனாதன் என்னும் ஆசாமி ஒரு பெண்டாட்டிக்கு இரண்டு பெண்டாட்டி கட்டிக்கொண்டு போதாக்குறைக்கு ஒரு கூத்தியாரையும் வைத்துக்கொண்டு இருக்கும் மனிதன். இவன் சோத்துக்கு லாட்டரி அடிக்க வேண்டியது சகஜமேயாகும். அதிலும் இந்த பாழும் ரங்கனாதன் யாதொரு வேலையும் செய்யாமல் தினம் ஐந்துவேளை சாப்பிட்டுவிட்டு என்னேரமும் விட்டம்போல் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டேயிருந்தால் இப்படிப்பட்ட சோம்பேறிகள் சோத்துக்கு லாட்டரி அடிக்கவேண்டியது அவசியம்தானே. இதில் அதிசயமென்ன இருக்கின்றது? நமது ஜனங்களுக்கு புத்தி இருக்கு மானால் இந்த ரங்கனாதனை இந்த பூலோகத்தைவிட்டு வைகுண்டத்திற்கே அனுப்பி இருப்பார்கள். நமது ஜனங்களுக்கோ கடுகளவு புத்தியும் கிடையாது. பிரத்தியார் சொல்லையும் கேழ்ப்பதில்லை. ஆகையால் இந்த ரங்கனாதன் லாட்டரி அடிக்கிறது மாத்திரமல்லாமல் இந்த ரங்கனாதனிடம் பக்திசெலுத்தி வழிபடும் மக்களும் சோத்துக்கும், கஞ்சிக்கும் லாட்டரி அடிச்சால்தான் நமக்குச் சந்தோஷமாய் இருக்கும். ஏன் என்றால் எப்படிப்பட்ட கடவுளை வணங்குகிறார்களோ அப்படிப்பட்ட குணம்தான் வணங்கு பவர்களுக்கும் உண்டாகும் என்பது ஒரு ஆஸ்திகக் கொள்கையாகும்; இது உண்மையானால் இப்படித்தானே இருக்கவேண்டும். இந்தக் கடவுள்கள் ரஷ்யாதேசத்தில் இருக்குமானால் இந்தப்படி சோம்பேறியாய் எந்நேரம் பார்த்தாலும் படுத்துக் கொண்டே ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பதற்கு துப்பாக்கி குந்தாவினால் இடித்து எழுப்பி வேலை வாங்குவார்கள். அந்தப்படி வேலை செய்யா விட்டால் மேல்லோகத்துக்கு அனுப்பிவிட்டு பக்தர்களுக்கு “உங்களுடைய கடவுள் சோம்பேறியாய் இருந்ததால் மேல்லோகத்துக்கு அனுப்பப்பட்டு விட்டார். வேண்டுமானால் நீங்களும் சீக்கிரம் மேல்லோகம் சென்று அவரைச் சந்தித்துக் கொள்ளுங்கள்” என்று கடிதம் எழுதிவிடுவார்கள்.
நம்முடைய நாடு சோம்பேறிகள் அதிகம் உள்ள நாடு ஆனதால் இந்தக் கடவுள்களை இன்னம் வைத்துக் கொண்டு இந்தப்படி லாட்டரி அடிக்கச் செய்ய வேண்டியிருக்கிறது.
ஓ ரஷ்யக் கொள்கையே! இந்தக் கடவுள்களை ஒழிக்கவாவது சீக்கிரம் இந்தியாவுக்கு வரமாட்டாயா? கஷ்டப்பட்டு உழைக்கும் மக்கள் முப்பது கோடிபேர்கள் இரண்டு கையையும் கூப்பி கூவி அழுது அழைக்கின்றோமே உனக்கு மனம் இளகவில்லையா?
------------------------- சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை - ”குடி அரசு” - 17.09.1933
0 comments:
Post a Comment