Search This Blog

23.7.10

கீதையும், குறளும்! - 3


நாம் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தை
மாற்றுவதற்கு என்ன பணி செய்தோம்?

நாம் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தை மாற்றுவதற்கு என்ன பணி செய்தோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுமென்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தஞ்சையில் (9.7.2010) அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பேரப் பிள்ளைகள் அப்பாக்களை விட, தாத்தாக்களைத்தான் விரும்பும். தாத்தாக்களும் பேரப்பிள்ளைகளிடம்தான் ஈடுபாட்டோடு இருப்பார்கள். தாத்தாவிடம் பேரப் பிள்ளை கேட்கும், இதுதாம்மா வள்ளுவர் எழுதிய திருக்குறள் என்று தாத்தா காட்டுகிறார்.

சின்ன பிள்ளைகளுக்கு எந்தப் புத்தகத்தைக் காட்டினாலும் படம் இருக்கிறதா என்று தான் பார்ப்பார்கள். இயல்பாக இருக்கக் கூடிய ஓர் ஆசை. உடனே பேரப்பிள்ளை தாத்தாவைப் பார்த்துச் சொல்லும்: திருக்குறளில் படம் இல்லையே என்று. உடனே தாத்தா சொல்லுவார்: இதில் படமில்லை கருத்துதான் இருக்கும் என்று. இந்த படம் எங்கேயிருக்கிறது என்று குழந்தை கேட்கும். குறளில் கோயில் இல்லையம்மா என்று தாத்தா பதில் சொல்லுவார். ஒரே வார்த்தையில் ரொம்ப அழகாக பேரப் பிள்ளைக்கு அவர் உணர்த்துகிறார். கோயில் என்பதைப் பற்றிச் சொல்லும் பொழுது புலவர் எழுதுகின்றார். கோயில் என்றால் மன்னன் இல்லம் வாழ்ந்த அரண்மனை என்ற பொருள் மறைக்கப்பட்டு கடவுள் எழுந்தருளியுள்ள இடம் என்று எல்லோரும் எண்ணும்படியான, நம்பும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டது.

பார்ப்பனர்கள் சூழ்ச்சிமிக்கவர்கள்

பார்ப்பனர்கள் சூழ்ச்சித் திறன் மிக்கவர்கள் என்பதையும், தமிழர்கள் ஏமாளிகள் என்பதையும் இதிலிருந்து தெளிவாகத் தெரியலாம் என்று அழகாக புலவர் சிவ.வீரையன் எழுதியிருக்கின்றார். இப்படி எத்தனையோ இருக்கிறது. கோயில்கள் எப்படி வந்தன?

சாணக்கியருடைய கவுடில்யருடைய அர்த்த சாஸ்திரம் இருக்கிறதே, அதில்தான் கோயில்கள் என்பதே வந்தன. அதற்கு முந்திய நூற்றாண்டில் கோயில்களே கிடையாது. அதுவும் எதற்காகத் துவக்கப்பட்டது என்று சொன்னால், அரசர்கள் வருமானத்தைப் பெருக்குவதற்காக உருவாக்கப்பட்டது இது. பேய் இருக்கிறது, பிசாசு இருக்கிறது என்று சொல்லி மக்களை கோவிலுக்கு வரவழைத்து அன்றைக்கு கருவூலத்தில் பணம் சேர்த்தார்கள். நீ கடவுளைக் காட்டி, ஒரு இடத்தைக் காட்டி, செய் என்று முதன்முதலில் சொல்லிக் கொடுத்தவன் சாணக்கியன் கவுடில்யன். இது அர்த்தசாஸ்திரத்திலே இருக்கக் கூடிய கருத்துகள். ஆனால் பலபேருக்கு இந்தச் செய்திகள் போய்ச் சேருவதில்லை.

பழைமைக்கு புது மெருகேற்றுவது

காரணம் நம்நாட்டின் ஊடகங்கள் மூடநம்பிக்கைகளை ஆணி அடிக்கக் கூடியவை. நம்நாட்டுப் புலவர்கள் பழைமைக்குப் புதுமை மெருகேற்றக் கூடியவர்கள். இது பெரிய ஆபத்தானது. ஆகவேததான் இப்படிப் பட்ட நூல்கள் மூலமாக துணிந்து பல கருத்துகளை வீரையன் அவர்கள் சொல்லியிருக்கின்றார்.

இன்னும் பல நூல்களை அவர் எழுத வேண்டும். வீரையன் அவர்களுக்கு அவரது குடும்பத்தினர் எல்லோரும் உறுதுணையாக இருந்து இந்த நூல்களை வெளியிட வேண்டும்.

பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் ஆய்வு

பெரியார் நூலக வாசகர் வட்டம் என்ற பெயராலே நாங்கள் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமையும் நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு வருகின்றோம். அந்த கூட்டத்திலே பல அறிஞர்கள் பேசுவார்கள். நூல்களை ஆய்வு செய்வார்கள். பெரியார் நூலக வாசகர் வட்டத்திலே இந்த நூலைப்பற்றி அங்கும் ஆய்வு செய்யவேண்டும்.

இந்தக் கருத்துகள் பரவவேண்டும். இந்த நூலை பல ஏடுகளுக்கு மதிப்புரைக்கு அனுப்பினீர்களேயானால் அது வந்து சேர்ந்தது என்று சொல்ல மாட்டார்கள். மதிப்புரையும் எழுத மாட்டார்கள்.

அலட்சியப்படுத்தி ஒன்றுமில்லாமல் செய்வது

மதிப்புரையில் மறுப்புரை எழுதினாலும் அதை நாம் சந்திக்கலாம். ஆனால் அவர்களுக்கு என்ன முறை என்று சொன்னால் இந்தக் கருத்துகளை மறுக்கமாட்டார்கள். மறுத்தால் இது விளம்பரம் ஆகிவிடும். என்பதற்காக விளம்பரமே கொடுக்காமல் இதை மறைக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ரொம்ப அழகாகச் சொல்கிறார். ஆங்கிலத்தில் சொல்லியிருக்கின்றார். அமைதியாக அலட்சியப்படுத்தி ஒன்றும் இல்லாமல் செய்வது இதைப்பற்றி பேசினால் வெளியே போய்விடும் செய்தி. பல நூல்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

ஆடிப்பெருக்கில் ஆற்றில் விட்டவர்களாயிற்றே!

தமிழர்கள் தங்களுடைய எத்தனையோ நூல்களை ஆடிப்பெருக்கிலே விட்டுவிட்டார்கள். ஆற்றில் ஓலைச் சுவடியிலிருந்து பல நூல்களை விட்டுவிட்டனர். எனவே சங்கடம் ஒரு பக்கம். ஒருபக்கம் அவருடைய உடல்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றதே தவிர, அவருடைய அறிவு ஒவ்வொரு நாளும் கூர்மையாகிக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எழுத்திலும் அது ஒளியூட்டக் கூடியதாகவே இருக்கிறது.

இலக்குடன் கூடிய தமிழர் சமுதாயம்

இலக்கு இயம் தமிழர் சமுதாயத்தை எந்த இலக்குக்கு அழைத்துப் போக வேண்டும் என்ற குறிக்கோளோடு அவர்களுடைய வாழ்க்கை அமைந்திருக்கிறது

எத்தனையோ பேர் நீண்ட நாள்கள்கூட வாழலாம். எவ்வளவு காலத்திற்கு நாம் வாழுகிறோம் என்பது முக்கியமல்ல,

நாம் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தை மாற்றுவதற்கு என்ன பணி செய்தோம் என்பதுதான் மிக முக்கியம்.

அவர்களுக்கு நோய் ஒரு பக்கம் இருந்தாலும் சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கின்றார்களே, அதுதான் மிக முக்கியம்.

விருதுகளைப் பற்றிக் கவலை இல்லை

இனிமேல் அவர்களுக்கு விருதுகளைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால், தன்னுடைய சமுதாயத்திலே இருக்கிற விழுதுகளைப் பற்றி அவர் நினைக்கிறார்.

இந்த விழுதுகள் பழுதுபடாத விழுதுகளாக ஆக வேண்டும். இவர்களுக்கு அறிவார்ந்த சிந்தனைகள் வரவேண்டும் என்று நினைத்துத்தான் நல்ல நூல்கள் எழுதியிருக்கின்றார்கள்.

பெரியார் சொல்வதுபோல சொல்லியிருக்கிறார்

ஆகவே, இந்த இரண்டு நூலும் மிகச் சிறப்பான நூல். அதற்கு முன்னால் இவர் எழுதிய நூல்களைப் பார்த்து அவரைப் பாராட்டியிருக்கிறேன். எனக்கு மிக வியப்பாக இருந்தது. அவ்வளவும் முழுக்க, முழுக்க தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு துணிச்சலோடு சொல்லுவார்களோ அதேபோல அவர்கள் கொஞ்சம் கூட பின் வாங்காமல் யார் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக்
கவலைப்படாமல் தன்னுடைய கருத்தை, நெஞ்சில் நினைப்பதை செயலில் காட்டியிருக்கின்றார்.

மருத்துவ வளர்ச்சி நோயைப் போக்கும்

இப்பொழுது நாம் நல்ல மருத்துவ வளர்ச்சி காலத்தில் இருக்கின்றோம். இந்த மருத்துவ வளர்ச்சி அவர்களுடைய நோயைப் போக்குவதற்கு பயன்படும். அதைவிட நம்முடைய நல்லெண்ணமும், நம்முடைய பாராட்டும் அவரை உற்சாகப்படுத்தும். அவருடைய சிந்தனை கருத்தாழமிக்க சுரங்கமாக இருக்கிறது.

ஆகவே அடுத்துவரும் சித்திரக்குடியைச் சார்ந்த பேராசிரியர் அய்யா ராமநாதன் அவர்களை உங்களுக்குத் தெரியும்.

புலவர்களுக்கெல்லாம் புலவர் இராமநாதன்

புலவர்களுக்கெல்லாம் புலவர் என்ற பாராட்டுதலைப் பெற்றவர் புலவர் இராமநாதன் அவர்கள். பெரியார் பேருரையாளர் புலவர் இராமநாதன் அவர்கள் தன்னுடைய இறுதிக் காலத்தைப் பெரியார் திடலிலேதான் கழித்தார்கள். அவர்கள் வகுப்பெடுத்தார்கள். பெரியாரியலுக்குப் பல நூல்களை எழுதினார்கள்.

இராமநாதன் நினைவு இலக்கியப் பரிசு

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் இராமநாதன் அவர்களுடைய பெயராலே பேராசிரியர் இராமநாதன் அவர்களுடைய நினைவாக இலக்கியப் பரிசு என்று நாங்கள் அறிவித்தோம்.

அதிலே முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசாக இந்த நூல்கள் ஏற்கப்படுகின்றன. (கைதட்டல்) அதற்குரிய விழாவை நாங்கள் நடத்துவோம். அதற்குரிய வாய்ப்புகளில் அவரைத் தொல்லைப் படுத்தாமல் நடத்தவேண்டுமென்று நினைக்கின்றோம்.

திராவிடர் கழகத்தின்
சார்பில் பரிசுக்குரிய நூல்

திராவிடர் கழகத்தின் சார்பில் பரிசுக்குரிய நூலாக இது தேர்வு செய்யப்படுகிறது என்பதை மகிழ்ச்சியோடு சொல்லி, பேராசிரியர் இராமநாதன் அவர்களுடைய பெயராலே அமைந்த பரிசு இது.

ஏனென்னால் அவரும் பெரிய புரட்சியாளர். அப்படிப்பட்ட ஒருவர் துணிச்சலோடு அவர்கள் கருத்துகளை சொல்லுவார்கள்.

இராமநாதன், அய்யா அவர்கள் யாரைப்பற்றியும் கவலைப்பட மாட்டார். அதே துணிச்சலோடு புலவர் சிவ.வீரையனார் அவர்கள் நூல்களை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். அதை நாம் சுவைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்கு அவருடைய ஆயுள் நீள வேண்டும். நீளும் என்று நாம் நினைக்கின்றோம். காரணம் நமக்கொன்றும் மூடநம்பிக்கை இல்லை. இது அறிவியல் காலம்.

இன்றைக்கு முடியும்

எனவே தினம் தினம் புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. நேற்று முடியாத சங்கத்திகள் எல்லாம் இன்றைக்கு முடியும் என்ற நம்பிக்கை ஊட்டக் கூடியவர்களாக இருக்கின்றன. எனவே நம்பிக்கையோடு நாங்கள் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் என்று சொல்லி உங்களுக்கு வாழ்த்துகள். எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். தமிழ் கூறும் நல்லுலகத்தின் நன்றி என்று கூறி விடை பெறுகிறேன்.

இந்த நேரத்திலே வீரையன் அவர்களுடைய வாழ்விணையர் அவர்களை நாம் வெகுவாகப் பாராட்ட வேண்டும் (கைதட்டல்).

சுமை தாங்கியாக...

ஒவ்வொருவரும் இப்படி ஒரு வாழ்க்கை இணையரைப் பெற்றால் மற்றவருடைய துன்பம் குறையும். தன் கணவருடைய சங்கடங்களை எல்லாம் அவர்கள் சுமந்து கொண்டிருக்கின்றார்கள். சுமை தாங்கியாக இருக்கிறார்கள்.,

சங்கடங்களை எல்லாம் தாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அது போலவே இந்த நூலை நான் படித்தேன்.

ஆசைத்தம்பி அவர்கள் திருவொற்றியூரிலே தங்கியிருக்கின்ற பொழுது குறிப்பிட்டிருக்கின்றார்கள். அது நமது நெஞ்சைத் தொட்டது. எனவே அவர்களுக்கும் பகுத்தறிவாளர்கள் சார்பாக நமது நன்றியைத் தெரிவித்து சிவ.வீரையன் அவர்களை வாழ வைப்போம். அவரை மகிழவைப்போம். அதன் மூலமாக நாம் அறிவு பெறுவோம், ஆற்றல் பெறுவோம், எழுச்சி பெறுவோம், மூடநம்பிக்கைகளைத் தகர்ப்போம். சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என்பதை நிறுவுவோம் என்று கூறி எனது உரையை முடிக்கிறேன்.

_இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


---------------------"விடுதலை” 23-7-2010

0 comments: