“தீண்டப்படாதார்”கள் நிலைமை
“இந்து மதத்தில்” தீண்டப்படாதவர்கள் என்பவர்களின் பரிதாபகரமான நிலமையைப் பற்றி நாம் அடிக்கடி எழுதி வந்திருக்கிறோம். இன்றைய தினம் நமது நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது கேவலமான நிலையை உணர்ந்து தாங்கள் பார்க்கக் கூடாதவர்களாகவும் நெருங்கக் கூடாதவர்களாகவும், தொடக் கூடாதவர்களாகவும் இதர “இந்திய” மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் வருவதிலிருந்து தங்களை மீட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையினால் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் பூனாவில் கோயில் பிரவேசம் சம்பந்தமாக சத்தியாக்கிரகம் நடைபெற்று அதன் வேகம் இன்னும் குறையாமல் அவ்விடத்திய மக்களது உணர்ச்சியைத் தட்டி யெழுப்பியிருக்கிறது. வட இந்தியாவில் காசி முதலிய பல இடங்களிலும் இதே மாதிரியாக தாழ்த்தப்பட்டவர்களின் கிளர்ச்சி அதிகமாகும் அடையாளங்களும் காணப்படுகின்றன. தென் இந்தியாவில், அதிலும் முக்கியமாக தமிழ் நாட்டில் நமது சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்து வேரூன் றிய சில வருஷங்களுக்குள்ளாகவே, சிறிது காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் பொது ஜனங்களுக்கு சிறிது கவலை ஏற்பட்டிருப்பதோடு கூட அவர்களுக்கும் தங்கள் கேவலமான நிலைமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசையும் உண்டாயிருக்கிறது.
“தீண்டாதார்” விஷயத்தில் சைவர்கள் என்போர்களும் வைஷ்ணவர்கள் என்போர்களும் இதுகாறும் மக்களை ஏமாற்றி நந்தனார் கதையையும், திருப்பாணாழ்வார் கதையையும் மாத்திரம் காண்பித்து விட்டுத் தப்பித்துக் கொண்டது போல் இனி செய்ய முடியாதென்பதையும் நன்கு உணர்ந்து கொண்டார்கள். மேலும் ஆதிதிராவிடர்களும் ஏனைய தாழ்த்தப்பட்ட மக்களும் அவரவர்கள் சமூக மகாநாடுகள் கூடி தங்களது அபிவிருத்திக்கு வேண்டிய எற்பாடுகளையும் செய்துகொண்டே வருகிறார்கள். ஆகவே, தற்போது தமிழ் நாட்டிலும் சிதம்பரம், ஈரோடு, விழுப்புரம், திருச்சி போன்ற இடங்களில் கோயில் நுழைவு சம்பந்தமான கிளர்ச்சிகளோ, அல்லது உணர்ச்சியோ நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அறிகிறோம். திருவாங்கூர் சமஸ்தானத்திலும் தீண்டப்படாதார் என்று ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கும் லட்சக்கணக்கான “ஈழுவர்களும்” “புலையர்களும்” கோயில் நுழைவு சம்பந்தமாக மிகப் பிடிவாதமான கிளர்ச்சிகள் செய்து கொண்டு வருவதாகவும் அறிகிறோம். இவர்களது கிளர்ச்சிகள் முழுதும் வெற்றி பெறுவதும் இயலாததும் வேறு விஷயமானாலும், இவர்களது முயற்சியின் தத்துவத்தை கூர்ந்து கவனிப்போருக்கு நமது “இந்து மதத்திற்கு” முடிவு காலம் நிர்ணயிக்கக் கூடிய சந்தர்ப்பம் நெருங்கிக்கொண்டு வருகிறது என்பதை மாத்திரம் யாரும் மறுக்க முடியாது.
கோயில் நுழைவு சம்பந்தமாக நமது அபிப்பிராயத்தை அடிக்கடி தெரிவித்திருக்கிறோம். “தீண்டப்படாதவர்கள்” கோயிலுக்குள் போய் விடுவதால் உடனே அவர்களுக்கு “மோட்சமோ” அல்லது “கடவுள் அனுக் கிரகமோ” கிட்டிவிடும் என்பதல்ல. பின் என்னவெனில், கோவில்களில் தான நமது கடவுள்கள் என்பவைகள் வசிப்பதாக “இந்து மதம்” கூறுகிறது. அதேதான் நடவடிக்கையிலும் மக்கள் சொல்லிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். “தீண்டப்படாதவர்கள்” கோயிலுக்குள் நுழைவதாலோ, அல்லது “கடவுள் களின்” சிலைகளின் பக்கத்தில் போவதாலோ, அந்தக் “கடவுள்கள்” செத்துப் போகுமென்றும், அதனால் “இந்து மதத்”திற்கே அழிவு வந்து விடுமென்றும் கூக்குரல் போடுகின்ற சனாதன தர்மக் கூட்டத்தார்களுக்கும், சைவக் கூட்டத் தார்களுக்கும், வைஷ்ணவக் கூட்டத்தார்களுக்கும், அவ்விதம் அது உண்மை யானால் அத்தகைய லேசான உயிரை வைத்துக் கொண்டிருக்கிற “கடவுள்கள்” இருப்பதைவிட ஒழிந்து போவதே நலம் என்பதையும், இதைப் பொறுக்க முடியாத “இந்து மதமும்” இருப்பதைவிட அழிவதே மேல் எனவும் நிரூபித்துக் காண்பிக்க வேண்டியே இந்தக் கோயில் நுழைவு இயக்கம் தோன்றியிருக்கிறது என்று சொல்வோம். இதர பொது இடங்களைவிட கோயில்களை முக்கியமாக எடுத்துக் கொண்ட கருத்தின் உண்மையை இது சமயம் வெளியிட்டு விடவேண்டுமென்று நினைக்கிறோம். தாழ்த்தப்பட்டவர்கள், “இந்து மத”க் கோயில்களுக்குள் செல்ல உத்தேசிப்பது “கடவுள்” மேலிருக்கும் பக்திப் பெருக்கினால் அல்ல என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகிறோம். ஏனெனில், அவரவர்களை அடிமைப்படுத்துவதற்கும், அவரவர்கள் பகுத்தறிவை உபயோகத்திலிருந்து தடுப்பதற்கும் போதுமான “கடவுள்களும்” தரகர்களும், பூசாரிகளும், அவரவர்கள் சமூகத்திலேயே போதுமானவரையில் இருப்பதால் மேலும் நம்முடைய “கடவுள்களும்” தரகர்களும் வந்துதான் அவர்களை வீணாக்க வேண்டும் என்ற அவசியமில்லை, அல்லது அவர்களது “கடவுள்க ளுக்கு” இருக்கும் சக்தியை விட நமது “கடவுள்களுக்கு” அதிகமாக இருக் கிறது என்ற நம்பிக்கையுமல்ல. பின் என்ன வெனில், கோயில்கள்தான் நமது தேசத்தில் சாதிப்பிரிவையும் சமயப் பிரிவையும் உண்டாக்குவதற்குக் காரணமா யிருந்தன வென்பதற்கும், இன்றும் அவைகள் தான் காரணமாயிருக்கின்றன வென்பதற்கும் அத்தாட்சிகள் தேட வேண்டிய அவசியமில்லை. சர்க்காரால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற பொது இடங்களாகிய தபால் ஆபீஸ், ரயில்வே ஸ்டேஷன், கோர்ட்டுகள் முதலானவைகள் எப்படி ‘தீண்டப்படாத’ மக்களை ஒன்றுபடுத்த உபயோகப்பட்டு வருகின்றனவோ அதேபோல் ‘இந்துமதத்’ தினால் ஏற்படுத்தப்பட்ட கோயில்களும், சத்திரங்களும் தீர்த்தங்களும், ஸ்தலங்களும்தான் தீண்டாமையை நிலை நிறுத்தவும் அதிகப்படுத்தவும் உபயோகப்பட்டு வருகின்றன. ஆதலால்தான் இதர பொது இடங்களை விட கோயில்களிலேயே முதன் முதல் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது உரிமையை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதுகின்றோம்.
அதுவுன்றி, பார்ப்பனப் புரட்டை அப்படியே கண்ணுக்கெதிராகக் காட்டக் கூடியது கோயில்களே என்பது நமது அபிப்பிராயம். எப்படியெனில், எங்கோ மூலையில் கிடக்கும் கல்லை எடுத்து வந்து உருவமாக்கி, அதை நட்டு வைத்து, அதற்கு மந்திரம் மூலமாக உயிர் உண்டாக்கி வெறும் கல்லை “கடவுளாக்”கக் கூடிய சக்தியானது, ஆறறிவுடைய மக்களின் ஒரு பெரும் பகுதியாரை, அவர்களுடைய தீண்டப்படாத தன்மையிலிருந்து விலக்கி இதர மக்களோடு சமமாகச் சேர்க்க முடியவில்லையென்றால், அந்த சக்தியோ, அல்லது மந்திரமோ எவ்வளவு தூரம் புரட்டு என்பதும், இந்த அயோக்கியத் தனமான புரட்டு எத்தனை ஆயிர வருஷங்களாக நமது நாட்டில் கேட்பாரில் லாமல் நடந்து வந்திருக்கிறதென்பதும் பொது ஜனங்களுக்கு நன்கு விளங்கும். இன்னும் கடவுள் என்பதற்கும், அதை வணங்குகிறவனுக்கும் மத்தியில் தரகர்கள் இருந்து கொண்டு பாமர மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து சோம்பேறித் தனமாக வயிறு வளர்த்துவரும் கூட்டத்தாரினுடைய சூழ்ச்சிகளும் கோயில் நுழைவு மூலியமாய் பொது ஜனங்களுக்கு வெட்ட வெளிச்சமாக விளங்கிவிடும் என்பதும் நமது கடைசி முடிவு. மேலும் “இந்து” மதமானது ஆதி முதல் இதுவரையில் சாதிப் பாகுபாட்டின் மீதே நடைபெற்று வருகிறது என்பதையும் நிரூபிக்க வேண்டிய காலமும் கிட்டிவிட்டது. சாதியையும், சில்லரை சமயப்பிரிவுகளையும் அடிப்படையாகக் கொண்ட “இந்து” மதமானது சாதிவேரையும், பார்ப்பனீய வேரையும் வெட்ட ஆரம்பித்தவுடனேயே உச்சியிலிருக்கும் இலை, தழைகளோடு அடிமரமும் சேர்ந்து ஆட்டங்காண ஆரம்பிக்கும் காட்சியையும் மக்கள் காண வேண்டிய காலமும் கிட்டிவிட்டது. இன்னும் “ஸ்ரீராமானுஜர் சகல ஜாதியாரையும் ஒன்றுபடுத்தியதும் திருப்பாணாழ் வாரை வணங்கக் கூடியதுமான எங்கள் வைஷ்ண மதத்தில் தீண்டாமை வித்தியாசம் கிடையாது. அது மிகவும் உயர்ந்தது” என்று வாய் வேதாந்தம் பேசி தப்பித்துக் கொண்டு வந்த வைஷ்ணவர்களும், “நந்தனாருக்கு மோட்சம் கொடுத்ததும் அவரையும் 63 நாயன்மார்களுள் ஒருவராய் வணங்கி வருவது மாகிய எங்கள் சைவ மதத்தில் தீண்டாமை வித்தியாசம் கிடையாது” என்று வீண்வாய்மிரட்டல் மிரட்டி ஏமாற்றி வந்த சைவர்களும் இனி இந்த விஷய மானது நடைமுறையில் வந்தபின் எவ்வாறு நடந்து கொள்ளப்போகிறார்கள் என்பதையும் நேருக்கு நேர் பார்க்க வேண்டிய சந்தர்ப்பமும் கிட்டிவிட்டது. மேலும் காங்கிரஸ் என்பதின் பெயரால் தீண்டாமை விலக்குக்காக கோடிக்கணக் கான ரூபாய்கள் வசூலித்து இதுவரையில் மேடையின் மீது கர்ஜித்து வந்த கூட்டத்தார்களும் ‘சுயராஜ்யம்’, ‘சுயராஜ்யம்’ என்று கூக்குரல் போடும் “தேசபக்தர்”களும் இனி இவ்விஷயத்தில் எவ்வளவு தூரம் உண்மையாக நடந்து கொள்ளப்போகிறார்கள் என்பதையும் பொது மக்கள் அறியவேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் தீண்டாதார் விஷயத்தில் பாடுபடு வதாக வாக்களித்து சட்டசபை முதலிய பொது ஸ்தாபனங்களில் “தீண்டாதா ரின்” பிரதிநிதியாக இடம் பெற்றும் இன்னும் அதே காரணமாக பட்டங்கள் உத்தியோகங்கள் பெற்றும் உள்ளவர்களாய் தீண்டப்படாதார்களுக்காகவே பத்திரிகைகள் நடத்தி வருபவர்களும் ஆகிய இவர்களெல்லாம் இத்தகைய நெருக்கடியான நிலைமையில் எவ்வளவு தூரம் முன்னணியிலிருந்து ஊக்கத் துடன் வேலை செய்யப் போகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டிய சந்தர்ப் பம் கிடைத்திருக்கிறது. ஆகவே, இப்போது நமது நாட்டில் வீறு கொண்டெழுந் திருக்கும் இவ்வுணர்ச்சியானது - அதன் வெற்றி தோல்வி ஒரு பக்கமிருக்க, அதற்கு உண்மையில் தடையாக இருப்பவர்கள் யார் யார் என்பதையும், என்னென்ன காரணங்களினால் தீண்டப்படாதவர்கள் நிலைமை கேவலமாய் இருக்க நேர்ந்தது என்பதையும், அக்காரணங்களை எந்தெந்த வழிகளில் ஒழிக்க வேண்டும் என்பதையும் ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தையும் அளித்திருக்கிறது. இந்தக் கோயில் நுழைவு இயக்கத்திற்கு ஆதாரமாக அநேக சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு வரு வதையும் நாம் பார்த்து வருகின்றோம். உதாரணமாக திரு.ஜெயகர் அவர்கள் தீண்டாமையை ஒழிக்கக்கூடிய ஒரு தீர்மானத்தை பம்பாய் சட்டசபையில் சமீபத்தில் கொண்டு வரப் போவதாகவும் அறிந்து மகிழ்கின்றோம். அந்தத் தீர்மானத்திற்கு டாக்டர் அம்பேத்கார் போன்ற பிரமுகர்கள் உதவியாயிருந்து வேலை செய்வார்களெனவும் தெரிகிறது.
இவர்களுடைய முயற்சி வெற்றிபெற்று சட்டமும் செய்யப்படுமே யானால், பெண்கள் சமூகத்திற்கு சாரதா சட்டம் எவ்வித பலத்தையளித்திருக் கிறதோ அதே மாதிரி, தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் இந்த சட்டமும் பெரிய பலமாக இருக்கும் என்பதற்கு ஐயமில்லை. பம்பாய் மாகாணத்தைப் பார்த்தாகிலும் நமது மாகாண சட்டசபையில் உள்ளவர்கள் தங்கள் கடமையைச் சிறிது நினைத்துப் பார்க்க ஆரம்பிப்பார்களா என்பது நமக்கு சந்தேகமாகவே இருக்கிறது.
இந்த நிலைமையில், பொது மக்களின் கடமை என்ன என்பதை மாத்திரம் நாம் விளக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கின்றோம்.
‘இந்து மதத்’தைக் காப்பாற்றுவதாகச் சொல்லுபவர்களெல்லாம் இந்த விஷயத்தில் அதிக சிரத்தையெடுத்து தங்கள் கடமையைச் செய்யாவிடில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான ‘தீண்டப்படாதவர்கள்’ முஸ்லிம்களாகவும் கிறிஸ்துவர்களாகவும் மாறிக் கொண்டிருப்பது மேலும், மேலும் பெருகிக் கொண்டே வரும் என்பதற்குக் கொஞ்சமும் சந்தேகமில்லை. பெண்கள் விதவைகளாயிருந்து கஷ்டப்படுவதைவிட உடன்கட்டை ஏறுவதாயிருந்த பழைய வழக்கங்கூட எவ்வளவோ மேலானது என்று சொல்லுகிறோமோ அதேபோல், மக்கள் தீண்டப்படாதவர்களாயிருந்து, குளம், ரஸ்தா முதலிய பொது இடங்களின் சௌகரியத்தை அனுபவிக்க முடியாமல் கஷ்டப்படுவதைப் பார்க்கிலும், முகம்மதியர்களாகவாவது மாறி மனிதர்களாக வாழ்வது மேலானது என்று தைரியமாய் கூறுவோம். அவ்வித அவசியம் நேர்ந்து அதைத் தவிர தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு வேறு மார்க்கம் இல்லையென்று முடிவாய்க் காண்போமானால் நாம் அதை வற்புறுத்திக் கூறியாவது அவர்களது துன்பங்களை இந்த க்ஷனமே ஒழிக்க வேண்டிய மார்க்கத்தில் இறங்கிவிட வேண்டியதாகத்தான் வரும். இதில் ஒன்றும் இரகசியமோ மறைபொருளோ கிடையாது. மனிதனுக்கு ஒரு மதமுமே அவசியமில்லை யென்ற கொள்கையை யுடையோமாயினும் கொடுமைப்பட்டு அறியாமையில் அழுந்திக் கிடக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு கைகண்ட பலனாக விடுதலையளிக்கக் கூடியது முகம்மதிய மதம் என்ற கருத்தில்தான் சொல்கிறோமே யொழிய இதர மதங்களில் இல்லாத “மோட்சமோ” “புண்ணியமோ” முகம்மதிய மதத்தில் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தினால் அல்ல. அப்படிச் செய்வதால் பிறகு எல்லோரையும் சேர்த்து மதம் என்ற சேற்றிலிருந்து விடுவிப்பதற்கு ஏற்படும் கஷ்டத்தையும் நாம் உணராமலில்லை. ஆனால், “தீண்டப்படாதவர்கள்” நிலைமையில் இதர ஜாதி இந்துக்கள் எனப்படுவோரும் இருந்தால் இந்த நிலையில் வேறு என்னதான் செய்யக் கூடும் என்பதை வாசகர்கள் சற்று பொறுமையோடு யோசித்துப் பார்க்கும்படி கோருகிறோம். ஆகவே, இத்தகைய நிலையை நமது நாட்டில் உண்டாக்கிவிடாமல் தீண்டாமைக் கொடுமையை உடனே தாமதமன்னியில் ஒழிப்பதற்குப் பொது ஜனங்கள் எவ்வளவு கடமைப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அறிவுறுத்தும் பொருட்டே இதை எழுதினோம். ஆதலால் கோயில் நுழைவு விஷயத்தில் பொது மக்கள் தங்கள் கடமையைச் செய்வதோடு முக்கியமாக சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட அன்பர்கள் அனைவரும் தீவிரமாக வேலை செய்யக் கடமைப்பட்டிருக் கின்றார்கள் என்பதை ஞாபகப்படுத்துகிறோம்.
---------------- தந்தைபெரியார் - “குடி அரசு” - தலையங்கம் - 22.12.1929
0 comments:
Post a Comment