புலவர் குழந்தை
கொங்கு நாட்டுத் தங்கக் கரும்பு புலவர் குழந்தை அவர்கள் திராவிடர் இயக்கத்திற்குக் கிடைத்திட்ட பெரும் புலவர் ஆவார். இன்று அவருடைய பிறந்தநாள் (1906).
கவிச் சக்ரவர்த்தி கம்பன் என்பார் தமிழர்களைக் காட்டிக் கொடுத்து இராமாயணம் எழுதினான் என்றால் நமது புலவர் குழந்தை. தமிழினத் தன்மானச் செருக்குடன் இராவண காவியம் தீட்டி தம் பெரும் புலமை கம்பனுக்குக் குறைவானதல்ல என்று கம்பீரமாகக் காட்டிய தீரர் ஆவார்.
கம்ப இராமாயணம் புகழ்பாடும் இரா.பி.சேதுப்பிள்ளைகூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தைப் பலபடப் புகழ்ந்துள்ளார்.
தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!
நான் கம்ப ராமாயணக் கவிச் சுவையில்
கட்டுண்டு கிடந்தனன்.
தங்கள் இராவண காவியம்
அக்கட்டை அவிழ்த்துவிட்டது
என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
கம்ப இராமாயண அன்பர் என்று அறிமுகமான புலவர் அய்யன்பெருமாள் கோனாரோ ஒருபடி மேலே சென்று புகழ்ந்துள்ளார்.
இனி யொரு கம்பனும் வருவானோ
இப்படி யும்கவி தருவானோ?
கம்பனே வந்தான்
அப்படிக் கவிதையும் தந்தான்
என்று கம்பன் அடிபொடியாழ்வார்களையே ஒப்புக்கொள்ளச் செய்த ஒப்பாரில்லாப் புலவர் மாணிக்கம் நமது புலவர் குழந்தை ஆவார்.
1948 இல் காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்ட இராவண காவியம் கலைஞர் அரசால் 1971 இல் தடை நீக்கம் செய்யப்பட்டது.
காங்கிரசின் இனவுணர்வுக்கும், திராவிட இயக்கத்தின் இனவுணர்வுக்கும் இடையே உள்ள ஒப்புவமை இதுதான்!
தந்தை பெரியார் நெறியில் நின்று திருக்குறளுக்குத் தனிச் சிறப்புமிக்க உரையும் எழுதிய பெருமை இந்தப் பெருமகனாரையே சாரும்.
தமிழ்ப் புலவர்கள் எல்லாம் தமிழரை இழிவு படுத்தும் புராணக் கருத்துகளைப் பாடிவந்தனர். அதற்கு மாறாக இராவண காவியத்தைச் செய்து தமிழரின் இழிவைப் போக்கிய புலவர் குழந்தை அவர்களைப் பாராட்டுகிறேன். இக் காவியத்தைப் பள்ளிகளில் பாடமாக வைக்கவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்களே பாராட்டினார்கள் என்றால் புலவர் குழந்தையின் பெருமைக்கு வேறு எந்த மகுடம் தேவை?
-------------------- மயிலாடன் அவர்கள் 1-7-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment