Search This Blog

3.7.10

மொழி மானமும், இனமானமும் மூண்டு எழட்டும்

குதிகால் முதல் குடுமி வரை


செந்தமிழுக்கு உரிய இடம் அருங்காட்சியகம் தான்! இந்த சிறிய மெழுகுவத்தியைக் கொண்டு அய்.பி.எல்., கிரிக்கெட் விளையாட்டுத் திடலுக்கே ஒளியூட்ட முனையும் வேலை பலிக்காது - தினமணி 20.6.2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் 2010 ஜூன் 23 முதல் 27 முடிய 5 நாள்கள் நடைபெற்றுள்ளது.

இவ்வளவு பெரிய மக்கள் கடலை யாரும் பார்த்திருக்க முடியாது.

இவ்வளவு பெரிய ஏற்பாடுகள் செய்வது என்பதும் இயலாத ஒன்றே!

உலகில் பல நாடுகளிலுமிருந்தும் தமிழாய்ந்த பெரு மக்கள் பங்கேற்றனர் என்ற சிறப்பு இம்மாநாட்டுக்கு உண்டு.

செம்மொழி மாநாட்டோடு தமிழ் இணைய தள மாநாடும் இணைந்து நடந்தது, இன்னொரு கூடுதல் சிறப்பு. இம்மாநாட்டில் பங்கேற்ற அறிஞர் பெரு மக்கள் 300; தமிழ் ஆய்வரங்கில் கலந்துகொண்டோர் 200 - மொத்தம் 500 பேர் பங்கேற்றுப் பெருமை சேர்த்தனர்.

இணையதள மாநாட்டினை ஒட்டியும் தனி மலர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 130 அரும் கட்டுரைக் கருவூலங்கள் மணம் வீசுகின்றன.

மாநாட்டுச் சிறப்பு மலர் தனி 129 கட்டுரைகள், 34 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

பொதுக் கண்காட்சி, இணையதளக் கண்காட்சி, புத்தகச் சந்தை என்று அறிவார்ந்த அணிகலன்களும் உண்டு.

கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் என்று முத்தமிழும் கொஞ்சி விளையாடியது.

இனியவை நாற்பது என்ற மகுடமிட்டு அணி வகுத்த ஊர்வலத்தின் மாட்சி இருக்கிறதே எழுதி மாளாது.

தமிழனாகப் பிறந்த அத்தனை பேரும் பூரிப்படைந்தனர். தாய்த் தமிழுக்குக் கிடைக்கும் பெருமையெல்-லாம் தமக்கே கிடைத்தது என்ற உணர்ச்சிப் பெருக்கால் திக்குமுக்காடினர்.

நினைக்கும் தொறும், நினைக்கும் தொறும் தேனுண்ட வண்டாக ரீங்காரம் பாடுகிறது நெஞ்சத்தடாகம்.

ஆனால் இன்னொரு கூட்டம் இந்நாட்டில் இருக்கிறது.

அந்தக் கூட்டத்தைப் பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் அவருக்கே உரித்தான முறையில் படம் பிடித்துக் காட்டியும் உள்ளார்.

தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழினிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீதுதான்

(திராவிட நாடு 2.11.1947 பக்கம் 18)

ஆரியத்தின்மீது கொண்ட வெறுப்பினால் அல்ல ஆரியம் கடைப்பிடித்து வரும் நடைமுறைகளைக் கருத்துக் கண் கொண்டு பார்த்து கட்டுரை தீட்டியுள்ளார் அண்ணா என்பதே சரி!

தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற அறிவிப்பு வந்தது முதல் அக்கிரகாரத்தில் நெருப்புப் பிடித்தது போல ஆத்திரம் கொண்டு நஞ்சைக் கக்குகிறார்கள்.

கேள்வி: தமிழ் மொழியை செம்மொழியாகச் சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்?

பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.. ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும்; ஒருவேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும், தமிழ் மக்கள் அனைவரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை மறந்து, தம் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளில் சேர்ப்பர்; சக தமிழர்களுடன் தமிழிலேயே பேசுவர்.... இவ்வளவும் நடக்கப் போகிறது பாருங்கள்!

(தினமலர் 13.6.2004)

தமிழ்ச் செம்மொழியாக அறிவிக்கப்பட்டால் பிரியாணி கிடைக்கும் என்று சொன்னார்கள் யார்? இவர்களாகவே கேள்வி கேட்டுக் கொண்டு இவர்களாகவே பதில் சொல்லுகிறார்கள் என்றால் இவர்களில் அடித்தளத்தில் ஊற்றெடுத்துப் பீறிட்டுக் கிளம்பும் தமிழ் வெறுப்பு என்னும் நஞ்சுக்கு இதைவிட வேறு அடையாளமும் தேவைப்படுமோ!

இவர்கள் (பா.ஜ.க.,) மத்தியில் ஆட்-சியில் இருந்தபோது ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டு என்று அறிவித்து கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டியழுதார்களே, அப்பொழுது வீட்டுக்கு வீடு நெய் சோறு பொத்துக் கொண்டு வந்து விழுந்ததோ என்று நம்மால் கேட்க முடியாதா?

கொலைக் குற்றவாளியாகத் திரியும் காஞ்சி சங்கராச்சாரியாருக்குக் கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி, வெட்கம் சிறிதுமின்றி ஊருக்கு ஊர் பவளவிழா நடத்திக் கொண்டு இருக்கிறார்களே இதனால் ஏழை நெசவாளர் வீட்டுத்தறி நிற்காமல் இயங்குகிறதா காஞ்சிபுரத்தில்?

தமிழ்ச்செம்மொழி அறிவிப்பு என்றவுடன் குதிகாலிலிருந்து குடுமி வரை பற்றிக் கொண்டு கிளம்புகிறதே தினமலருக்கு அதே தினமலர் அய்யர்தானே கோவை மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை படிக்கிறார். ஏன் இந்த இரட்டை வேடம்?

பேசு நா இரண்டுடையாய் போற்றி என்ற ஆபி டூபே ஆரியர்களைப்பற்றி அர்ச்சித்தது இந்த அர்த்தத்தில் தானோ!

கோவை செம்மொழி மாநாடு என்றவுடன் துக்ளக் சோ ராமசாமிக்கு தூக்கமே வரவில்லை. தூற்றி எழுதுவதன் மூலம் ஆற்றிக் கொள்கிறார். சொறி பிடித்தவன் ரத்தம் வர சொறிந்து சொறிந்து சுகம் அனுபவிப்பதுபோல எழுதுகோலைச் சுழற்றுகிறார்.

பக்கத்துக்குப் பக்கம் தமிழ்மீது சேறுவாரி இறைப்புதான்.

போதும் போதாதற்கு விபீடண ஆழ்வார்கள் வேறு கிடைத்து விடுகிறார்கள் அல்லவா! அதனால் துள்ளிக் குதிக்கிறார். தமிழர்களின் உணர்வுகள் துள்ளி எழாது என்று மனப்பால் குடிக்கிறார்.

கேள்வி: தமிழில் பெயர்ப் பலகை வைப்பது எந்த விதத்தில் தமிழை வளர்க்கும்? கடைக்காரர்களைத் தமிழில் பெயர் வைக்கச் சொல்லக் கட்டாயப்படுத்துவது சட்டப்படி சரியா?

பதில்: பெயர்ப் பலகைகளுக்குச் சில வரைமுறைகளைச் செய்வது, மாநகராட்-சிகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதுதான். Wine Shop என்ற பெயர்ப் பலகை இருந்தால் தமிழ் வளர்ச்சி தடைப்படும் என்றும், விஸ்கி பிராந்தி கடை என்று பெயர்ப் பலகை இருந்தால் தமிழ் வளரும் என்றும் எப்படிச் சொல்ல முடியும்?

(துக்ளக் 30.6.2010)

தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்-களில் தமிழில் விளம்பரப்பலகை வைக்க வேண்டும் என்பது தமிழ்ப் பேசும் மக்-களின் அடிப்படை உணர்வு. அதனை ஒரு கூட்டம் கொச்சைப்படுத்துகிறது என்றால் தமிழர்களின் உணர்வோடு விளையாடிப் பார்க்க ஆசைப்படுகிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி: இந்தியாவில் வேறு எந்த மொழிக்கு இதுபோன்ற ஆடம்பரமான மாநாடு நடந்தது என்று கூற முடியுமா?

பதில்: கூற முடியாது. அப்படி நடக்காததால்தான் அந்த மொழிகளெல்லாம் அழிந்து போய்விட்டன. தமிழைத் தவிர மற்ற மொழிகள் எல்லாம் இப்படி அழிந்துவிட்டதால் மற்ற மாநிலங்களில் எல்லாம் மக்கள் பே... பே... ப... பா.. என்றுதான் பேசிக் கொள்கிறார்கள்.

(துக்ளக் 30.6.2010 பக்கம் 10)

செத்துச் சுண்ணாம்பாகிப் போன சமஸ்கிருதத்துக்கே மாநாடு கூட்டவில்லையா?

உலகத் தமிழ் மாநாடு கலைஞர் ஆட்சியில் மட்டும்தான் கூட்டப்பட்டுள்ளதா? ஜெயலலிதா கூட்டினாரே, எம்.ஜி.ஆர். கூட்டியதும் உண்டே! அப்பொழுதெல்லாம் சோ கூட்டத்துக்கு எழுதுகோல் கிடைக்கவில்லையா?

கலைஞரையும் தாக்க வேண்டும்; தமிழையும் சிறுமைப்படுத்த வேண்டும் _ ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்த வேண்டும் என்கிற வேதியப் புத்தி இதற்குள் பதுங்கி இருக்கிறதல்-லாமல் வேறு என்ன?

துக்ளக்கில் சோ ராமசாமிதான் தன் அக்கிரகாரப் புத்தியை இப்படி காட்டுகிறார் என்றால் இந்தத் துக்ளக்கில் தயாரிக்கப்பட்ட நெய்ப் பண்டமாகிய திருவாளர் வைத்தியநாதய்யரை ஆசிரியராகக் கொண்ட தினமணி தன் திரிநூல்வேலையைக் காட்டுவதையும் கவனிக்கத் தவறக் கூடாது.

செந்தமிழுக்கும், சங்கத் தமிழுக்கும் உரிய இடம் அருங்காட்சியகம்தான்! அவற்றை அங்கேயே விட்டு வைத்திடுக! செந்தமிழ் என்பது (சிறிய) மெழுகு வர்த்திதான் அதைக் கொண்டு அய்.பி.எல். கிரிக்கெட் விளையாட்டுத் திடலுக்கே ஒளியூட்ட முனையும் வேலை பலிக்காது

(தினமணி ஞாயிறுமலர் 20.6.2010)

உதாரணம்கூட அவாளுக்குப் பிடித்தமான அவாள் காட்டில் மழை பெய்யும் கிரிக்கெட்தான்.

செத்துப்போன சமஸ்கிருதத்தை வைத்துக் கொண்டிருக்கும்போதே பார்ப்பனர்களுக்கு இவ்வளவு மண்டைக் கொழுப்பு என்றால் அது பேசும் மொழியாக இருந்திருந்தால் அடேயப்பா, இவர்கள் காலால் நடப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? தமிழர்களிடத்தில் மொழி உணர்வும், இனவுணர்வும் தேவை அதற்கு மாநாடுகளும் தேவைதான் என்பதை இந்தக் கூட்டத்தைப் பார்த்த பிறகாவது தமிழர்கள் எண்ண வேண்டாமா?

செம்மொழி மாநாட்டை கேலி பேசும் தினமணியின் பொறுப்பாசிரியர் இதே வைத்தியநாதய்யர்தான் மாநாட்டு வெளிநாட்டுப் பேராளர் தொடர்புக் குழு உறுப்பினராம்! என்னே அறிவு நாணயம்!

கோவை மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் இந்த உணர்வைத்தான் பிரதிபலித்தார்.

தமிழை நீசப்பாஷை _ சூத்திரப் பாஷை என்று சொல்லும் கூட்டத்தை அவர் அடையாளப்படுத்தினார். நமஸ்காரம் வணக்கம் ஆனதும், அக்ராசனாதிபதி தலைவர் என்றதும், வந்தனோபசாரம் நன்றியாக மலர்ந்ததும் திராவிட இயக்கத்தால் அல்லவா என்பதையும் நினைவூட்டினார்.

இன்னும் சொல்லப் போனால் திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் தனிக் கருத்தரங்கமேகூட கோவை மாநாட்டில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

அதே நேரத்தில் பல தலைவர்களும், கவிஞர்களும் திராவிட இயக்கத் தாக்கத்தை இடியாக, மின்னலாகக் காட்டவே செய்தனர் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே!

தமிழன் வீட்டுப் பிள்ளைக்குத் தமிழில் பெயர் சூட்டுவோம். தமிழிலேயே பேசுவோம், சமஸ்கிருதப் படையெடுப்புக்கு ஆளான தமிழன் ஊர்ப் பெயர்களை மீண்டும் தமிழுக்குக் கொண்டு வருவோம்!

மொழி மானமும், இனமானமும் மூண்டு எழட்டும் அதில் முப்புரி நூல் சாம்பலாகட்டும்!


தமிழில்பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்

திருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் (சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற காஞ்சி சங்கராச்சாரியார்) ஒருநாள் தங்கியிருந்த போது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்துவைத்தார். ஏன் தாத்தாச்சாரியாரே.. .நாம எவ்வளவோ சபை நடத்துறோம். உபன்யாஸம் பண்றோம். ஹோமம் பண்ரோம். ஆனா... பிராமணாளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ? இல்லியே... அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு இவர் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே... என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன். நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி?... ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே ஆழ்வார்களோட பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ?...

திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்தத் திட்டத்தை தெரிவித்தபோது அவரது கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.

இதப்பாரும்...எல்லா கோயில்கள்லயம் திருப்பாவை திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச்சேரும். ஏன்னா... நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும். தமிழ். என்ன சொல்றீர்? என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.

நாங்கள் இப்படி பெரிய திட்டம் பற்றி சத்தமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தபோதும்... சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள். அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக்கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக் கூட நாங்கள் பேசிக்கொள்வது புரியாது.

ஏன் ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன? என்று மகாபெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்:

உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒருநாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்?... புரிந்து நடந்து கொள்... என்றேன். அப்போதும் அந்த கேள்வியை கேட்டவர்களுக்கு புரியவில்லை. உங்களுக்கு...?

----------------(இந்து மதம் எங்கே போகிறது) அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்


இதன் பொருள் புரிகிறதா? தமிழ் நீஷப்பாஷை என்பதும் சமஸ்கிருதம் தெய்வப் பாஷை என்பதும் அவாளின் உறுதியான எண்ணம். தமிழில் பேசிவிட்டால் தோஷம் ஏற்பட்டு விடும்; உடனே குளிக்க வேண்டுமாம் என்ன புரிகிறதோ தமிழர்களே!

--------------- மின்சாரம் அவர்கள் 3-7-2010 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

0 comments: