Search This Blog

1.7.10

எங்கே போனது இந்து மத அடையாளமும், உணர்வும்?


அடையாளம் ஆபத்தா?

சென்னையில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு பா.ஜ.க. முன்னணி தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ள கருத்து எவ்வளவு நச்சுத் தன்மை கொண்டது என்பதை தமிழர்கள் உணர வேண்டும்.

இலங்கையிலும் தமிழர்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு இங்கு நாம் எவ்வளவுதான் போராடினாலும் தமிழகத்தைத் தாண்டி அது எடுபடவில்லை, மற்ற மாநிலத்தவர்கள் அது தமிழர்களின் பிரச்சினை என்று ஒதுங்கி விட்டார்கள். தமிழர்கள் என்ற அடையாளத் தினால் ஒட்டு மொத்த இந்தியர்களின் ஆதரவைப் பெற முடியாமல் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

மலேசியத் தமிழர்களின் அவல நிலை குறித்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேசுவதற்கு பா.ஜ.க. எம்.பி. ஒருவர் ஏற்பாடு செய்தபோது, மேற்கு வங்க எம்.பி.கூட கலந்து கொண்டார். ஆனால் தமிழக எம்.பி.க்கள் யாரும் வரவில்லை. அதாவது இந்து என்ற அடையாளத்துடன் மலேசியத் தமிழர்கள் போராடுவதால் வங்காளிகளின் ஆதரவு கிடைத்தது. ஆனால் தமிழர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. மொத்தத்தில் தமிழர்கள் என்ற அடையாளப் பிரச்சினையால் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார் கள். அதுவே அவர்களின் அழிவுக்கும் காரணமாக உள்ளது. (தினமணி, 30.6.2010 பக்கம் 6) என்று திரு. இல.கணேசன் கூறியுள்ளார்.

இது எவ்வளவு பெரிய ஆபத்தான, நஞ்சு கொப்பளிக்கும் கருத்து என்பதைத் தமிழர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டு, தமிழர்கள் மத்தியில் தமிழன் என்ற இன உணர்வும், தமிழ் மொழி உணர்வும் வளர்க்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் (அந்த மாநாட்டின் கருத்தரங்கில் இல.கணேசன் பேசியுள்ளார். என்பதும் கவனிக்கத்தக்கது.) அந்த உணர்வு மேலோங்கினால் தங்களுக்குப் பேராபத்து என்பதை துல்லியமாக உணர்ந்த நிலையில், தமிழன் என்ற அடையாளம் வேண்டாம்;- அது தமிழர்களின் அழிவுக்குத்தான் பயன்படும்; மாறாக இந்து என்ற உணர்வுடன் வாழுங்கள் துன்பத்திலிருந்து விடுபடுவீர்கள் என்ற கருத்தில் பேசுகிறார் என்றால் அதன் பொருள் என்ன?

இனவுணர்வு அழிந்து, மத உணர்வு தலை தூக்க வேண்டும் என்பதுதானே இதன் திரைமறைவு நோக்கம்?

தமிழன் தனி அடையாளத்தோடு, தன்மானத்தோடு வாழக்கூடாது. மாறாக இந்து என்ற அடையாளத்தை ஏற்றுக்கொண்டு சூத்திரனாக பார்ப்பனர்களுக்குத் தாசர்களாக வாழ்ந்தால் பிழைத்துக் கொள்வீர்கள் என்று இதோபதேசம் செய்வதல்லாமல் இதன் பொருள் என்ன?

அவர் கூறுகிறபடி பார்த்தாலும் ஈழத்தில் அழிக்கப்பட்ட தமிழர்கள் இந்துக்கள் என்றால், அதற்காக இந்த இந்துத்துவா சக்திகள் துரும்பைக் கிள்ளிப் போட்டிருப்பார்களா?

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்ததே அப்பொழுது ஈழத்தமிழர்ப் பிரச்சினையில் மத்திய ஆட்சி எப்படி நடந்து கொண்டது? இலங்கை சிங்கள அரசுக்கு ஆயுத உதவி செய்யவில்லையா? அப்பொழுது எங்கே போனது இந்து மத அடையாளமும், உணர்வும்?

உலகில் முதல் மனிதர்கள் தோன்றியது தமிழ் நிலத்தில்தான் என்றும், மூத்த முதல் மொழி தமிழ் என்றும், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொழிக்கு இலக்கணம் கண்ட இனம் என்றும் பெருமைக்குரிய தமிழினம் தன் இன அடையாளத்தை இழந்துவிடவேண்டுமாம் மாறாக இந்து என்ற போர்வைக்குள் புகுந்துகொண்டு உயிர் பிழைக்க வேண்டுமாம்.

இல. கணேசன்கள், தமிழன் என்ற உணர்வு உள்ளவர்களாக இருந்தால் இப்படி ஒரு சிந்தனை ஏற்படுமா என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்வார்களா?

இந்து என்று சொல்லுகிறாரே அதிலாவது ஒருமைப்பாடு உண்டா? இந்துக்களுக்குள்தான் எத்தனை எத்தனைப் பிரிவுகள் பிளவுகள் பிளவுகளுக்குள் ஏற்பட்ட வடகலை தென்கலை சண்டைகள் சாதாரணமானவைகளா?

வீடு எரியும்போது சுருட்டுக்கு நெருப்புக் கேட்பது போல, தமிழினம், ஈழத்தில் பற்றி எரியும்போது இந்து மதச் சுருட்டுக்கு நெருப்புக் கேட்கும் கேவலத்தை என்ன சொல்ல!

--------------------- “விடுதலை” தலையங்கம் 1-7-2010

6 comments:

smart said...

இவ்வளவு பேசும் திராவிடக் கட்சிகள் என்ன செய்தது? தமிழன் என்ற உணர்வுக்கு கூட மதிப்பளிக்காமல் மாநாடு நடத்தில் கொண்டாடிக் கொண்டிருந்தது. இப்படி இருப்பதை விட அப்படி இருக்கலாமே.
மேலும் மதம் வேண்டாம் என்பவர்கள் இனம் வேண்டாம் எனச் சொல்லும் காலம் வெகுத் தொலைவில் இல்லை. உண்மையான தமிழர்கள் மதத்தையும் இனத்தையும் நேசிப்பார்கள்.

nerkuppai thumbi said...

அன்பர் சொல்வது சரி தானே.
அவர்களை இந்துவாகப் பார்த்து அதிக கூட்டம் சேர்த்தால் அதிக சத்தம் போட்டு நன்மை செய்யாமலாமே என கருத்து சொன்னால் தவறு சொல்கிறீர்களே. இலங்கையோ, மலேசியாவோ, நேபாளமோ அவர்களை இந்துவாகப் பார்த்து இந்திய அரசை நடவடிக்கை செய்யத் தூண்டுவது நல்ல எண்ணமே அல்லவா? நம் விருப்பம் இலங்கையில் வாடும் நம்மவருக்கு உதவி செய்ய வேண்டும்; அதை இந்திய அரசு செய்ய வேண்டும் என்பது தானே? காயம் பட்டு கதறும் மனிதருக்கு என்ன சொல்லி செய்தாலும் உதவி உதவியே அல்லவா?

தமிழ் ஓவியா said...

இன்னொருமுறை கட்டுரையைப் படியுங்கள் உண்மை புரியும்

தமிழன் என்று சொல்லுவதற்கும் இந்து என்று சொல்லுவதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு

Nedu said...

யோவ் மொதல்ல கருணாநிதிக்கு சொம்பு அடிக்கிறதை நீங்க நிறுத்துயா. பிஜேபி இருந்துருந்தா எதாவது பண்ணி இருப்பாங்க. காங்கிரஸ் கூட சேர்ந்துகிட்டு உங்க கருணாநிதி தமிழர்களை கொன்னது பத்தாதா. எப்பவும் சொம்பு அடிக்கிறதே உங்க வேலைய பொச்சுயா . . பெரியார் பேரை கெடுகுறதுகுனே இருக்குறீங்க . . .

Nedu said...

யோவ் மொதல்ல கருணாநிதிக்கு சொம்பு அடிக்கிறதை நீங்க நிறுத்துயா. பிஜேபி இருந்துருந்தா எதாவது பண்ணி இருப்பாங்க. காங்கிரஸ் கூட சேர்ந்துகிட்டு உங்க கருணாநிதி தமிழர்களை கொன்னது பத்தாதா. எப்பவும் சொம்பு அடிக்கிறதே உங்க வேலைய பொச்சுயா . . பெரியார் பேரை கெடுகுறதுகுனே இருக்குறீங்க . . .

தமிழ் ஓவியா said...

//பிஜேபி இருந்துருந்தா எதாவது பண்ணி இருப்பாங்க.//

அதான் பி.ஜே.பி ஆட்சியில் இருக்கிறப்ப பார்த்தோமே.அதன் தலைவர்கள் கலைஞருக்கு எப்படியெல்லாம் கூஜா தூக்குனாங்கன்னு