இந்து முன்னணியே, ஓடாதே - நில்!
செம்மொழி மாநாட்டு விளம்பரப் பதாகையைக் கிழித்து தங்களின் தமிழ் வேஷத்தினை துல்லியமாகக் காட்டிவிட்டனர். கலைஞரின் உருவப்படத்தைக் சிதைத்ததன் மூலம் தங்களின் ஜென்ம விரோதத்தனத்தை விளம்பரப் படுத்திக்கொண்டனர்.
மாநாட்டில் அவர்கள் போட்ட காட்டுக் கூச்சல் கரூர் மக்களை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அந்த நேரம் பார்த்து திராவிடர் கழகத் தலைவர் கரூரில் திராவிடர் கழக மண்டல மாநாடு என்று வெளியிட்ட அறிவிப்பு கரூர் மக்களைக் களிப்படையச் செய்துவிட்டது.
கடந்த செவ்வாயன்று (6-.7-.2010) கரூரைச் சிறுக்கச் செய்து கருஞ்சட்டைக் கடல் பெருக்கெடுத்து ஓடியது. கருஞ்சட்டைச் சேனை பெருத்தது கரூர் சிறுத்தது. ஆத்திரம் வராதோ ஆரியக் கும்பலுக்கு? எரிச்சல் முட்டாதா இந்து முன்னணிக் கூட்டத்துக்கு?
கழக மாநாடு நடக்குமுன் கரூர் இந்து முன்னணியினர் சில வினாக்களைத் துண்டு வெளியீடுகள் மூலமாகவும், சுவரொட்டிகள் மூலமாகவும் எழுப்பியிருந்தனர்.
வினாக்கணைகள்தானே கருஞ்சட்டைச் சேனைக்கு விருப்பமான உணவு? எதிர்ப்புதானே எங்களுக்கு இன்பத் தேனிலா?
இந்து முன்னணி எழுப்பிய வினாக்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மாநாட்டில் பதில்களைக் கூறிவிட்டார் என்று தினமணி (9.-7.-2010) மரியாதையாக ஒப்புக் கொண்டிருக்கிறது - அதனைப் பாராட்டலாம்தான்!
இந்து முன்னணியினர் புதியதாக சில வினாக்களை எழுப்பியதாக அதே தினமணி வெளியிட்டுள்ளது.
(1) காஞ்சி சங்கரமடத் தலைவராக தலித் ஒருவர் தலைவராக நியமிக்கப்படும்பொழுது தி.க.விலும் நியமிப்போம் என்று வீரமணி தெரிவித்துள்ளார்.
காஞ்சி சங்கர மடம் பிராமணர்களாலும், மதுரை ஆதீனம் மடம் பிள்ளைமார்களாலும், கோவை மருதாச்சலம் அடிகளார் மடம் கவுண்டர்களாலும், கோவிலூர் மடம் செட்டியார்களாலும் பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு சமுதாய வாரியாக மடங்கள் உள்ளன.
தி.க. கடவுள் மறுப்பு இயக்கமாக இருந்து வந்ததா? இல்லை, ஒரு ஜாதி சார்ந்த இயக்கமா என்பதைத் தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வேண்டுகோளுடன் கூடிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இதன் மூலம் காஞ்சி சங்கர மடம் பிராமணர்களுக்கு மட்டும், பிராமணர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதற்கு வேண்டுமானால் கரூர் இந்து முன்னணியினரை ஒரு முறை கைதட்டிப் பாராட்டலாம்.
காஞ்சி மடம் என்பது பார்ப்பனர்களின் மடம் பார்ப்பனர்களுக்காகவே உள்ள மடம். சூத்திர பஞ்சம தமிழர்களே, அங்கு ஏன் செல்கிறீர்கள்? அவர்களின் கால்களில் ஏன் மண்டியிடுகிறீர்கள்? ஏன் காணிக்கையைக் கொட்டுகிறீர்கள்.
சங்கர மடத்தினால் நிறுவப்பட்ட அத்தனை அறக்கட்டளைகளும் பார்ப்பனர்களுக்காகத்தான் அத்தனை உதவிகளும், சலுகைகளும். சமாராதனைகளும் பார்ப்பனர்களின் வயிற்றில் அறுத்துக் கட்டுவதற்குத்தான் என்று திராவிடர் கழகம் சொல்லும் பொழுதெல்லாம் எழுதும்போதெல்லாம் இது குறுகிய கண்ணோட்டம், பிராமணத் துவேஷம் என்று சொல்லி வந்ததெல்லாம் பசப்பு வார்த்தைகள்; பகட்டு வார்த்தைகள் என்பது புரியவில்லையா? கரூர் கொடுத்த அடியில், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கொடுத்த சாட்டையடியில் விழி பிதுங்கி, மண்டைக் காய்ந்து, மளமளவென்று உண்மைச் சரக்கை ஊரறிய உலகறிய உளறிக் கொட்டி விட்டது. இது சங்கர மடத்துக்கும், சங்கர மடப் பக்தர்களுக்கும் மறைவிடத்தில் தேள் கொட்டியது போன்றதுதான். இந்து முன்னணி வகையறாக்களுக்கு மிக முக்கியமான கேள்வி ஒன்று செங்குத்தாக எழுந்து நிற்கிறது.
இனி சங்கராச்சாரியாரை ஜெகத்குரு என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லப்படுவதற்கு அவர் அருகதை உடையவர்தானா?
இனி கண்டிப்பாக அழுத்தம் திருத்தமாக ஜெகத்குரு என்று சொல்லுவதை வாபஸ் வாங்கிக் கொண்டு, பார்ப்பன குரு என்றுதான் அழைக்க வேண்டும். ஏன் என்றால் இந்து முன்னணியே ஒப்புக் கொண்டுவிட்டது சங்கர மடம் பார்ப்பனர்களுக்கானது என்று. அவாள் அவாளை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும் தாராளமாக தூக்கிச் சுமக்கட்டும். சுயமரியாதைக்காரர்கள் அப்பொழுது கண்டிப்பாக குறுக்கிடவே மாட்டார்கள் மாட்டவே மாட்டார்கள். அப்பொழுதும் கூட பார்ப்பன குரு என்று அழைக்க வேண்டுமே தவிர பிராமணக் குரு என்று அழைக்கக்கூடாது. அப்படி அழைத்தால் பார்ப்பனர் அல்லாத எங்களை சூத்திரர்கள் என்று மறைமுகமாக அழைப்பதாகப் பொருள்படும். அதன் காரணமாக சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி! என்ற முழக்கம் எங்களை உசுப்பிவிடும்.
இன்னொன்றும் இருக்கிறது. இந்துக்களின் தலைவர் சங்கராச்சாரியார் என்றும் குறிப்பிடக்கூடாது; இந்துக்களே ஒன்று சேர்வீர் என்று அழைப்பு கொடுக்கும் யோக்கியதையும் அவாளுக்குக் கிடையவே கிடையாது; வேண்டுமானால் பார்ப்பனர்களே ஒன்று சேருங்கள் என்று கூப்பிட்டுத் தொலையட்டும்!
இனிமேல் சைவக் கோயில்களில் குடமுழுக்கு செய்ய சங்கராச்சாரியார்கள் வரக்கூடாது. அப்படி ஒரு தடைச் சட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். சைவர்கள் வேறு பார்ப்பனர்கள் வேறு என்பதை ஆயிரம் ஆயிரம் எடுத்துக் காட்டுகளுடன் தமிழரான சைவ மெய்யன்பரான, தமிழ்க்கடல் மறைமலை அடிகள் எம்.எல். பிள்ளை என அழைக்கப்பட்ட கா.சு.பிள்ளை போன்றவர்கள் கறாராகவே எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இனிமேல் சங்கராச்சாரியார் உபந்நியாசம் செய்ய வேண்டுமானால் பார்ப்பனர் வட்டத்துக்குள் தான் சுருங்கிக் கொள்ள வேண்டும்.
ஆன்மீகம் என்ற போர்வையில் பார்ப்பனர் அல்லாதாரை வளைக்கும் அயோக்கியத் தனத்தில் ஈடுபடக்கூடாது - அதற்கான அடிப்படைத் தகுதி அவர்களுக்குக் கிடையாது என்பதை இந்து முன்னணி தினமணி வாயிலாகத் தெரிவித்துக் கொண்டு விட்டது.
திராவிடர் கழகத்துக்குத் தலித் ஒருவர் தலைவராக வருவதில் எந்த விதத் தடையும் கிடையாது. தலித் வரக்கூடாது என்ற விதிகளும் இல்லை.
இயக்கத்தின் கொள்கைகளில் தோய்ந்து, இயக்கத்திற்காகப் பாடுபடும் இயக்கத் தோழர்களின் மதிப்பைப் பெறும் எந்தத் தலித்தும் திராவிடர் கழகத்தின் தலைவராக வருவதில் தடையில்லை. கழகப் பொறுப்புகள் என்பது வேலை வாய்ப்பு அலுவலகமும் அல்ல - இடஒதுக்கீடு சுழற்சி முறைக்கு. தொண்டு செய்வதற்குரிய துல்லியமான இடம்.
பார்ப்பனர்கள் கழகத்தில் உறுப்பிரான முடியவே முடியாது. கழகத்தில் உறுப்பினராகும் எவரும் அதன் தலைமையிடத்துக்கு வர வாய்ப்பு இருக்கும் போது திராவிடர் கழகத்திற்குத் தலித் தலைவர் என்ற கேள்விக்கே இடமில்லை.
ஜாதி உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு சமூகப் புரட்சி இயக்கம் திராவிடர் கழகம் என்பது எதிரிகளும் ஒப்புக்கொள்ளக்கூடியதாகும். இதில் ஜாதிப் பிரச்சினையைத் திணிக்கப் பார்ப்பது பரிதாபத்திற்குரியது.
தலித் ஒருவர் திராவிடர் கழகத்திற்குத் தலைவராக வருவதற்குத் தடையில்லை என்பது போல, சங்கர மடத்திற்கு அப்படி ஒரு விதி சம்பிரதாயம் உண்டா - இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதில் தேவை.
(2) கடவுள் இல்லை என்பதை மாநாட்டில் பங்கேற்கும் அரசியல் கட்சியினரைத் தேர்தலில் போட்டியிடும்போது கடவுள் இல்லை என்று கூறுவோரின் வாக்குகள் மட்டுமே போதும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் வாக்களிக்க வேண்டாம் என்று கூறமுடியுமா என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளதாக தினமணி கூறுகிறது. இது தேர்தலில் நிற்கக் கூடியவர்களைப் பார்த்து எழுப்பப்பட வேண்டிய கேள்வி.
இன்னொன்று, - தேர்தல் என்பது கடவுள் உண்டா இல்லையா என்பதற்காக நடத்தப்படுவது அல்ல. ஆட்சியை அமைப்பதில் அந்தந்தக் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. அங்கே அரசியலைப் பார்க்கிறார்களே தவிர ஆன்மிகவாதிகளா, நாத்திகர்களா என்று பார்ப்பதில்லை. அரசியல் கட்சிகளில் ஆன்மிகவாதிகளும் உண்டு. நாத்திகவாதிகளும் உண்டு. அப்படி இருக்கும் போது அரசியல் கட்சிகள் இதனை முன்னிறுத்த வாய்ப்பே கிடையாது.
அதே நேரத்தில் இந்து முன்னணியினர் கவனத்தை 1971-ஆம் ஆண்டிற்கு இழுத்துப் போக வேண்டியதுதான்.
சேலத்தில் 23-.1.-1971 அன்று மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. அன்றைய ஜனசங்கத்தினர் (இன்றைய இந்து முன்னணி - பா.ஜ.க. வகையறா) தந்தை பெரியார் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவதாகக் கூறி, தந்தை பெரியார் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அலங்கார வண்டியின் மீது செருப்பை வீசினார்கள். அந்தச் செருப்பை இலாவகமாகப் பிடித்து ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இராமன் உருவத்திற்குப் பாதுகா பட்டாபிஷேகம் (செருப்படி) செய்தனர். கழகத் தோழர்கள்! ஊர்வலத்தின் முடிவில் இராமர் உருவமும் கொளுத்தப்பட்டது. அதன் மூலம் தமிழர்களின் தன்மான உணர்வுத் தீயின் உக்கிரம் வெளிப்பட்டது.
அவ்வளவுதான்! மார்ச்சு முதல் வாரத்தில் நடைபெற விருந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.-வுக்கு எதிராக இந்தப் பிரச்சினையைத் திருப்பினார்கள். இராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டு என்று பெரிய பெரிய சுவரொட்டிகளை வெளியிட்டனர். துக்ளக்கும் இதே தினமணியும் நிர்வாண ஆட்டம் போட்டன. அய்யப்பனையும் முருகனையும் பிரார்த்தித்தது தினமணி - தி.மு.க. தோற்க வேண்டுமாம்
முடிவு என்ன தெரியுமா? ராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரித்த தி.மு.க. 183 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 இல் அதற்குக் கிடைத்த இடங்கள் 138 தான். இராமனை செருப்பாலடித்த நிலையில் 45 இடங்களைக் கூடுதலாகப் பெற்றது. அப்போது ராஜாஜி என்ன அறிக்கை வெளியிட்டார்? தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக்கிறது. மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வபக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப் படுத்திக் கொள்வோரின் திருமுன்னரே அவரது ஆசியும் அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரிசபை.
இனித் தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி யிழந்துவிட்டது; இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறிட வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்று கல்கியில் (4.-4.-1971) தமது கருத்தை வெளியிட்டார் ஆச்சாரியார்.
இந்து முன்னணியே! இந்து முன்னணியே! இதற்கு என்ன பதில் சொல்கிறாய்?
ஆஸ்திகம் - நாஸ்திகத்தை முன்னிறுத்தி நடைபெற்ற தேர்தலில் நாஸ்திகம் வென்றுவிட்டதே - நாக்கைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறாயா? வீண் சவடால் வேண்டாம்! ஓடாதே, நில்!
------------மின்சாரம் அவர்கள் 10-7-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
2 comments:
அப்பாடியோவ் !
வைகோ
திருமா
கருணாநிதி
ஜெயா
அறிக்கையை பார்த்து
மகிந்தா மலஜலம் கழிக்கவில்லையாம்!
அப்பாடியோவ் !
வைகோ
திருமா
கருணாநிதி
ஜெயா
அறிக்கையை பார்த்து
மகிந்தா மலஜலம் கழிக்கவில்லையாம்!
Post a Comment