Search This Blog

22.7.10

கிறிஸ்துவ மதத்தில் ஜாதியுண்டா?




இந்து மதத்தில் தான், சாஸ்திர சம்மதமாகவும், தெய்வ சம்மதமாகவும், பலர் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாய் அந்த மதத்தை விட்டு வெளி யேறினாலொழிய மனிதத் தன்மை பெறமுடியாதவர்களாய் கோடிக்கணக்கான மக்கள் இருப்பதாக உலக முழுதும் தெரிந்திருக்கிறது. ஆனால் மிகவும் நாகரிகம் பெற்ற மதமாக அன்பு மதமாக - சகோதரத்துவம் நிறைந்த மதமாகப் பிரசாரம் பண்ணப்பட்டு வரும் கிறிஸ்துவ மதத்தில் இத்தகைய சாதிக் கொடுமை இல்லை என்று பறை சாற்றப்பட்டு வருகிறது. உண்மையிலேயே அந்த மத வேதத்தின் படி அந்த மத கர்த்தாவான யேசு நாதரின் கொள்கைப் படி அந்த மதத்தில், சாதி வித்தியாசம் பாராட்டவோ, சாதி வித்தியாசம் காரண மாகத் தாழ்த்தப் பட்ட மக்களைக் கொடுமைப் படுத்தி வைத்திருக்கவோ ஒரு ஆதாரமும் இல்லையென்பதை நாம் அறிவோம்.

இத்தகைய ஒரு மதம் ஜாதி வித்தியாசங்களும், கொடுமைகளும் நிறைந்த இந்தியாவில், அதிலும் தென்னிந்தியாவில் எந்த நிலையிலிருக்கிறது என்று பார்த்தால், இந்து மதத்தின் அண்ணனாகவோ, அப்பனாகவோ பாட்ட னாகவோதான் இருந்து வருகிறதென்று கூறலாம். இந்து மதக்கோயில்களில் எப்படி ஜாதிக்கு ஒரு இடம் ஒதுக்கப் பட்டிருக்கிறதோ அது போலவே கிறிஸ்துவ மதக் கோயில்களிலும் ஜாதி வித்தியாசம் பாராட்டப்பட்டுத் தனித் தனி இடங்கள் ஒதுக்கப்படுகின்றனவாம். ஆனால் அரசாங்கக் கணக்கில் கிறிஸ்தவர்களுக்கு ஜாதி வாரிக்கணக்கு போடாமல் எல்லாக் கிறிஸ்தவர்களையும் பொதுவாகக் “கிறிஸ்தவர்கள்” என்ற தொகுதியிலே சேர்க்கப்பட்டி ருக்கின்றது. இக்காரணத்தால், தீண்டாத சாதியினராகக் கருதப்படும் கிறிஸ்தவர்கள், பொது ஸ்தாபனங்களில் ஒருவித உரிமையும் பெற முடியாமல், எல்லா உரிமைகளையும் உயர்ந்த சாதியாராக இருந்து கொண்டிருக்கும் கிறிஸ்து வர்களே அடைந்து வருகிறார்கள்.

எப்படி இந்து மதத்தில் ஒவ்வொரு சாதிக்காரர்களும் தங்கள் தங்களுக்குக் கீழுள்ள சாதியார்களின் மேல் வெறுப்பும் வித்தியாசமும் பாராட்டி வருகின்றார்களோ அதுபோலவே கிறிஸ்தவ மதத்தில் புகுந்துள்ளவர்களும், நாயுடு முதலியார், பிள்ளை, அய்யர் முதலிய ஜாதி வித்தியாசங்களை விடாமல் வைத்துக் கொண்டு, ஆதிதிராவிடக் கிறிஸ்தவர்களையும், மற்ற தாழ்த்தப்பட்ட வகுப்புக் கிறிஸ்தவர்களையும் வித்தியாசமாக வைத்துக் கொடுமை செய்து வருகின்றனர். இவ்வாறு செய்து வருவதைப் பற்றிய கிளர்ச்சி நீண்டநாளாக நடைபெற்றுங்கூட இன்னும் அம்மத குருமார்கள் இவ்வேற்றுமைகளை ஒழித்து உண்மையான கிறிஸ்தவக் கொள்கைகளை நிலை நிறுத்த முயற்சி செய்யாமலிருந்து வருகிறார்கள்.

ஆகவே இதுவரையிலும் பொறுமையோடு கொடுமைகளை அனுபவித்து வந்த தீண்டாத வகுப்புக் கிறிஸ்தவர்கள் இப்பொழுது கண் விழித்துக் கொண்டு அதிக ஊக்கத்துடன் கிளர்ச்சி செய்வதைக் கண்டு நாம் பாராட்டுகின்றோம். இதற்கு உதாரணமாகச் சென்ற 23. 1. 32 ல் லாலு குடியில் தீண்டப்படாத கிறிஸ்துவர்கள் மகாநாடு கூடியிருப்பதைக் கூறலாம். அம் மகாநாட்டுத் தலைவர் திரு. ஞானப்பிரகாசம் அவர்களும், திறப்பாளர் திருமதி நீலாவதி ராமசுப்பிரமணியம் அவர்களும் வரவேற்புக் கழகத்தலைவர் திரு ஆரோக்கியசாமி அவர்களும் மற்றும் உள்ள உபந்யா சகர்களான திருவாளர் கள் டி. வி. சோமசுந்தரம், டி. பி. வேதாசலம் வி. ஐ. முனிசாமி பிள்ளை முதலிய பலரும் தீண்டப்படாத கிறிஸ்தவருக்குள்ள குறைகளை எல்லாம் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆகையால் இனியாவது அம்மத குருமார்கள் தீண்டாதவர்களுக்குள்ள குறைகளை நீக்கி மதக் கொள்கைப்படி யாதொரு வேற்றுமையையும் பாராட்டாமல் அவர்களையும் நடத்துவதற்குரிய ஏற்பாடு களைச் செய்ய வேண்டும், அல்லது அரசாங்கத்தார் அவர்கள் விரும்புகிறபடி தீண்டப்படாத கிறிஸ்துவர்களும் மற்ற ஆதிதிராவிடர்களுக்குக் காட்டு வதைப் போலத் தனிச் சலுகை காட்ட முன் வரவேண்டும் என்று எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.

கடைசியாகத் தீண்டப்படாத கிறிஸ்தவர்களுக்கும் ஒரு வார்த்தை சொல்லி முடிக்கிறோம். தீண்டப்படாத கிறிஸ்துவர்களின் குறைகள் நீங்கா விட்டால் அம்மதத்திலுள்ளவர்கள் நீக்க முற்படா விட்டால், இந்து மத ஆதி திராவிடர்கள் எந்த வகையில் தங்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும் மதக் கொடுமைகளையும் ஜாதிக் கொடுமைகளையும் நீக்கிக் கொள்ள விரும்புகின்றார்களோ, அந்த வகையிலேயே தீண்டப்படாத கிறிஸ்துவர்களுக்கும் தங்கள் குறைகளை நீக்கிக் கொள்ள முயலுவதே சமத்துவம் பெறுவதற்கு ஏற்ற வழியாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

----------------------- தந்தைபெரியார் - “குடி அரசு” - துணைத் தலையங்கம் - 31.01.1932

3 comments:

Bala said...

கிறித்துவ மதத்தில் சாதி இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. இந்து மதத்தில் இருப்பது மாதிரியான சாதிகள் இல்லை என்று சொல்லலாம் இல்லையா? கிறித்துவர்களிடமும் ஆர்சி, பெந்தகொஸ்தே, ஓபஸ்டே போன்ற பிரிவுகள் இருக்கிறதே?

// அம்மத குருமார்கள் இவ்வேற்றுமைகளை ஒழித்து உண்மையான கிறிஸ்தவக் கொள்கைகளை நிலை நிறுத்த முயற்சி செய்யாமலிருந்து

பெரும்பாலான கிறித்துவர்கள் அதாவது பிறந்ததில் இருந்தே கிறித்துவர்களாக இருப்பவர்கள் மதம் மாறுபவர்களை கிறித்துவர்களாகவே ஏற்று கொள்வதில்லை. இது தானே உண்மை.

நம்பி said...

//கிறித்துவ மதத்தில் சாதி இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.//

சரியாப் படிக்கலை.... அங்கே பெரியார் சொல்லியிருப்பதை அப்படியே மீண்டும்...

""எப்படி இந்து மதத்தில் ஒவ்வொரு சாதிக்காரர்களும் தங்கள் தங்களுக்குக் கீழுள்ள சாதியார்களின் மேல் வெறுப்பும் வித்தியாசமும் பாராட்டி வருகின்றார்களோ அதுபோலவே கிறிஸ்தவ மதத்தில் புகுந்துள்ளவர்களும், நாயுடு முதலியார், பிள்ளை, அய்யர் முதலிய ஜாதி வித்தியாசங்களை விடாமல் வைத்துக் கொண்டு, ஆதிதிராவிடக் கிறிஸ்தவர்களையும், மற்ற தாழ்த்தப்பட்ட வகுப்புக் கிறிஸ்தவர்களையும் வித்தியாசமாக வைத்துக் கொடுமை செய்து வருகின்றனர். இவ்வாறு செய்து வருவதைப் பற்றிய கிளர்ச்சி நீண்டநாளாக நடைபெற்றுங்கூட இன்னும் அம்மத குருமார்கள் இவ்வேற்றுமைகளை ஒழித்து உண்மையான கிறிஸ்தவக் கொள்கைகளை நிலை நிறுத்த முயற்சி செய்யாமலிருந்து வருகிறார்கள்.""

//கிறித்துவர்களிடமும் ஆர்சி, பெந்தகொஸ்தே, ஓபஸ்டே போன்ற பிரிவுகள் இருக்கிறதே? //

இது பிரிவுகள் என்று நீங்களே வைத்து விட்டீர்களே...எப்படி இசுலாம், இந்து மதத்தில் பிரிவுகள் இருக்கிறதோ (சாதியைத் தவிர) அதே போன்று தான்...இதுவும்.

Unknown said...


உண்மையிலேயே அந்த மத வேதத்தின் படி அந்த மத கர்த்தாவான யேசு நாதரின் கொள்கைப் படி அந்த மதத்தில், சாதி வித்தியாசம் பாராட்டவோ, சாதி வித்தியாசம் காரண மாகத் தாழ்த்தப் பட்ட மக்களைக் கொடுமைப் படுத்தி வைத்திருக்கவோ ஒரு ஆதாரமும் இல்லையென்பதை நாம் அறிவோம்.