Search This Blog

14.7.10

பார்ப்பனர்கள் புத்திசாலிகளா?தந்திரசாலிகளா?


காக்கை குருவி சம்பாஷணை

குருவி:- ஓ, காக்கையே! நீ எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் பார்ப்பனர்களை ஜெயித்து விடலாம் என்றோ அல்லது அவர்களுடைய புரட்டுகளை வெளியாக்கிவிடலாம் என்றோ நினைப்பாயே யானால் அது அவ்வளவும் பகற்கனவுதான். காரியத்தில் சுலபத்தில் முடியும் காரியம் அல்ல. அடியோடு தடியடியாய் அடித்தால் அதுவும் ஒரு சமயம் முடியும்.

காக்கை :- என்ன குருவியே! நீ இப்படிச் சொல்கின்றாய்? பார்ப்பான் சங்கதி எடுத்ததெல்லாம் புரட்டாயிருக்கின்றது. அவன் சொல்வதெல்லாம் புழுகாயிருக்கின்றது. இதை வெளிப்படுத்த முடியாது என்கின்றாயே, உனக்கு என்ன அவனிடத்தில் அவ்வளவு பயம்?

குருவி :- எனக்கு பயம் ஒன்றுமில்லை, நீ பார்ப்பன தந்திரத்தை சரியாய் உணரவில்லை. தெரிந்திருந்தால் இவ்வளவு லேசாக அவனை மதித்திருக்க மாட்டாய்.

காக்கை :- சரி, நீ உணர்ந்த விஷயத்தைத் தான் சொல்லு பார்ப்போம்.

குருவி :- சொல்லட்டுமா?

காக்கை :- சொல்லு, சொல்லு.

குருவி :- முதலாவது, பார்ப்பான் எந்த விஷயத்தைச் சொல்ல வந்தாலும் ‘அது உன் கண்ணுக்கும் மனதுக்கும் அறிவுக்கும் எட்டாதது’ என்று சொல்லி விடுவான். இரண்டாவது, இந்த லோகத்தில் பிரத்தியக்ஷத்தில் கண்டு பிடிக்கக் கூடியதாகவோ இப்போது நடந்ததாகவோ எந்த விஷயத்தையும் அவன் சொல்லி சிக்கிக் கொள்ளாமல் அவன் எது சொன்னாலும் மேல் ஏழு லோகத்தில் உண்டு என்றும் கீழ் ஏழு லோகத்தில் உண்டு என்றும் தான் சொல்வான்.’ ‘கண்ணுக்குத் தெரியாத சூக்ஷம சரீரத்தோடு இருக்கின்றார்கள்’ என்றுதான் சொல்லுவான்.

“போன யுகத்தில் நடந்தது. அதற்கு முந்தின யுகத்தில் நடந்தது, பிரளய காலத்தில் நடந்தது” என்றுதான் சொல்லுவான். ‘அசரீரியாய் சொல்லிற்று, மாயா ரூபியாய் இருந்தது’ என்று தான் சொல்லுவான். நம்பினால்தான் உண்டு, நம்பாவிட்டால் பாவம்’ என்று சொல்லுவான். ‘இவைகளில் நீ எதைக் கண்டு பிடித்து பார்ப்பானைப் பொய்யன் என்று சொல்லி விட முடியும்? சொல்லு பார்ப்போம்.

காக்கை :- நீ சொல்லுவது ஒரு விதத்தில் வாஸ்தவம் தான். அதனாலேயே எல்லாம் பொய் என்று சொல்லிவிட முடியுமா?

குருவி :- அதுதான் நானும் சொல்லுகின்றேன். அதாவது பார்ப்பான் சொல்லுவதில் ஒன்றைக் கூட நீ பொய்யென்று ருஜுப்படுத்த முடியாது? உதாரணமாக, இந்த உலகம் எத்தனையோ யோசனை தூரம் விஸ்தீரணம் என்கின்றான். நீ எப்படி அளந்து பார்த்து தப்பு என்று சொல்ல முடியும்? எத்தனையோ மனுக்கள், பிர்மாக்கள், விஷ்ணுக்கள், சிவன்கள் பிறந்து இறந்தாய்விட்டது. ஒவ்வொருவருக்கு எத்தனையோ யுகங்கள் ஆயுள் என்று சொல்லுகின்றான். அதில் ஒரு வினாடி கம்மி என்று உன்னால் சொல்ல முடியுமா?

‘எத்தனையோ சிரஞ்சீவிகள் இருக்கின்றார்கள். ஆனால் ஒருவரும் உன் கண்ணுக்கு தென்பட மாட்டார்கள்’ என்கின்றான். இவற்றுள் ஒரு சிரஞ்சீவியாவது இல்லை என்று உன்னால் சொல்ல முடியுமா?

‘நீ இதற்கு முன் இத்தனை ஆயிரம் ஜன்மம் எடுத்தாய் விட்டது. ஆனால் அது உனக்கு இப்போது தெரியாது’ என்று சொல்லுகின்றான். அதை நீ இல்லை இல்லை என்று சொல்ல முடியாது.

‘நீ எங்களுக்கு கொடுக்கும் சிரார்த்தம் முதலியவைகளை உனது பிதுர்க்கள் சூக்ஷம சரீரத்துடன் வந்து பெற்றுப் போகின்றார்கள். ஆனால் அது உன் கண்ணுக்குத் தெரியாது’ என்கின்றான். நீ அவற்றுள் ஒரு கடுகளவாவது போய்ச் சேரவில்லை என்று சொல்லி அவனிடம் தப்பித்துக் கொள்ள முடியுமா? சொல்லு பார்ப்போம்.

பார்ப்பனியம் இத்தனை காலமாய் நமது நாட்டில் இருப்பதற்கு காரணமே இதுதானே. எதை எடுத்தாலும் ‘உனக்கு தெரியாது, உன் கண்களுக்கு படாது, உன் புத்திக்கும் மனதுக்கும் எட்டாது, நீ அதைப் படிக்க அருகனல்ல, யுக்தி வாதங்களால் தர்க்கம் பண்ணுவது நாஸ்திகம், சூக்ஷம சரீரம், இதெல்லாம் சோதனை, சிவன் பார்வதிக்கு சொன்னார், ராமருக்கு வசிட்டர் சொன்னார், சூத புராணிகா நைமி சாரண்ய வாசிகளுக்கு சொன்னார் சுசர் சொன்னார், ஜனமே ஜயர் சொன்னார், பகவான் கீதையில் சொன்னார்’, என்றே சொல்லுவார்கள். ‘யார் சொன்னார்? எப்பொழுது சொன்னார்? யார் ஒண்டிக் கேட்டுக் கொண்டிருந்தது? உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டால், அது நாஸ்திகம் என்று சொல்லி விடுகின்றான். நீயோ நாஸ்திகம் என்றால் நடுங்கி விடுகின்றாய். பிறகு எப்படி நீ அவனை ஜெயிக்க முடியுமென்று சொல்லு பார்ப்போம்.

காக்கை :- ஆமாப்பா நீ சொல்லுவதெல்லாம் சரியாய்த் தான் இருக்கின்றது. மனுஷனை குண்டா முண்டா கட்டிப் போட்டு விடுகின்றான். ஒன்றையாவது யோசித்துப் பார்ப்பதற்கு இடம் கொடுப்பதில்லை. ஆனாலும் பார்ப்பனர்கள் புத்திசாலிகள்தான் அதில் சந்தேகமில்லை.

குருவி:- அவர்களை புத்திசாலிகள் என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். தந்திரசாலிகள் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்.

காக்கை :- ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? அவர்கள் புத்திசாலித்தனம் உனக்கு விளங்கவில்லையா?

குருவி :- அவர்கள் புத்திசாலிகளா என்கிற விஷயத்தை சற்று கவனித்துப்பார். நீ எந்தப் புராணத்தையோ சாஸ்திரத்தையோ வேதத்தையோ வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு நன்றாய் ஆராய்ச்சி செய்து பார். இமயமலைக்கு அப்புறம் அவர்கள் ஒன்று கூடத்தெரிந்து கொண்டிருப்பதாய்க் காண முடியாது. அது மாத்திரமல்லாமல் பார்ப்பானுக்கு கைலாயமே இமயமலை தானே. அது பனிக்கட்டியில் மூடியிருப்பதால் அதை வெள்ளியங்கிரி என்று சொல்லிவிட்டான். அந்தக் காலத்தில் அங்கு யாரும் போக முடியாமல் இருந்ததால் ‘சிவன் அங்குதான் இருந்தான், உமை அந்த மலைக்குத்தான் பிறந்தாள், பிர்மா அங்குதான், ரிஷிகள் அங்குதான், தேவர்கள் அங்குதான், சுவர்க்கம் அங்குதான் என்று எல்லாவற்றையும் அந்த மலையின் தலையிலேயே போட்டுவிட்டான். அது மாத்திரமா? நதியைப் பார்த்தால் அது ஒரு தேவதை, சமுத்திரத்தைப் பார்த்தால் அது ஒரு தேவதை, மழை பெய்தால் அது ஒரு தேவதை, காற்றடித்தால் அது ஒரு தேவதை, நெருப்பெரிந்தால் அது ஒரு தேவதை, சூரியன் ஒரு தேவதை, சந்திரன் ஒரு தேவதை, நட்சத்திரம் ஒவ்வொன்றும் தனித்தனி தேவதை. இது போலவே அந்தப் பயல்களுக்கு (சையன்ஸ்) விஞ்ஞான சாஸ்திரம் தெரியாததால் தொட்டதெல்லாம் தேவதை தேவதை என்று பேர் வைத்து ஒவ்வொன்றின் பேராலும் நம்ம தலையில் கையை வைத்து கொள்ளையடிக்க சவுகரியம் செய்து கொண்டான். அவன் முட்டாள் தனமும் அவனுக்கு உதவியாக இருக்கின்றது. ஆனால் நம்முடைய அறிவோ நமக்கு நாஸ்தீகமாவும் எமனாகவும் இருக்கின்றது. இதெல்லாம் கிடக்க, உன் தலையில் கையை வைத்திருப்பது உனக்கு தெரியுமா? ஓ காக்கையே! நீ ஒரு காலத்தில் சீதையினுடைய முலைக் காம்பைக் கொத்திவிட்டாயாம். சீதையின் புருஷனாகிய இராமன் உன் கண் விழிகளில் ஒன்றைப் பிடுங்கிவிட்டானாம். அதனால் நீ ஒற்றைக் கண் குருடாய் இருக்கிறாயாம். இந்தப்படி எழுதி வைத்திருக்கின்றான். உன் பேரில் அவர்களுக்கு இருந்த கோபத்தினால் பெண்களிடம் கூட மரியாதை இல்லாமல் சீதை, ஒரு காக்கை வந்து கொத்தும்படி அவ்வளவு மெய்மறந்து தனது மார்பைக் காட்டிக் கொண்டு படுத்திருந்தாள் என்று எழுதியிருக்கின்றான்.. எனவே அவர்கள் சங்கதி சுலபத்தில் சரிபடுத்தக் கூடியதல்ல.

காக்கை :- நேரமாய்விட்டது சாவகாசமாய் பேசிக் கொள்ளலாம்.

குருவி :- சரி போய் வருகிறாயா?

--------------- சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தைபெரியார் எழுதிய உரையாடல் - “குடி அரசு” - 20.01.1929

1 comments:

மாசிலா said...

பாப்பான் புத்திசாலியும் கிடையாது தந்திரசாலியும் கிடையாது. அப்பாவி மக்களின் குடிகளை கெடுக்க புறப்பட்டிருக்கும் பழம் பெருச்சாளிகள்தான்.