மரணப் படுக்கையில் இருக்கும் நோயாளி
எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்?
மரணப்படுக்கையில் இருக்கும் நோயாளி எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார் என்பதை தஞ்சை நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார். தஞ்சையில் (9.7.2010) அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
அறிவும் உணர்ச்சியும் போட்டி
போடக்கூடிய வகையில்...
உணர்ச்சியும், அறிவும் போட்டி போடக் கூடிய வகையில் மிகச்சிறப்பாக நடைபெற்று வரக் கூடிய ஓர் அருமையான தமிழ்ச் சமுதாயத்திற்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய இருட்டில் உழலுகின்ற தமிழனை வெளிச்சத்திற்கு கொண்டு வரக்கூடிய இரண்டு அருமையான நூல்கள் இங்கே வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒன்று கீதையும், குறளும் இன்னொன்று தமிழன் என்றும் ஏமாளி ஆகிய இந்த இரண்டு நுல்களையும் யாத்துள்ளவர் பகுத்தறிவு பேராசிரியர் சிவ.வீரையனார் அவர்கள்.
சிவ.வீரையன் அவர்கள் எழுதிய நூலை நான் நீண்ட நாட்களுக்கு முன்பு படித்த பொழுது உணர்ந்தேன். மிகத் துணிச்சலோடு மற்றவர்கள் சொல்ல முடியாத கருத்துகளை மற்றவர்களுக்குத் தெரியாத கருத்துகள் என்று சொல்ல முடியாது. பலருக்கும் பல கருத்துகள் தெரியும்.
துணிச்சல் வருவதில்லை
ஆனாலும் பலருக்குத் துணிச்சல் வருவதில்லை. துணிவு என்பது மிக முக்கியமானது. தமிழகத்தின் முதல் பேராசிரியர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களாலே வர்ணிக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எந்த விமர்சனங்களைப்பற்றியும் அவர்கள் பொருட்படுத்தாமல் எப்படி விருப்பு, வெறுப்பு இல்லாமல் அறிவியல் பார்வையோடு எதையும் பார்த்து கருத்துகளை எடுத்துச் சொல்லி எனக்கு அறிவுபற்று, வளர்ச்சி பற்றுதான் முக்கியமே தவிர வேறு எந்தப் பற்றும் கிடையாது என்று எப்படிச் சொன்னார்களோ அதே குரலை நம்முடைய புலவர் வீரையனார் அவர்கள் அவர்களுடைய எழுத்திலே ஒவ்வொரு நூலிலும் வடித்திருக்கிறார் என்று சொல்லும் பொழுது இது அவருக்குப் பாராட்டு விழா என்று சொல்லுவதைவிட, தமிழ்கூறும் நல்லுலகத்தினுடைய நன்றி காட்டும் விழா என்று சொன்னால்தான் மிகப் பொருத்தமாக இருக்கும்.
எத்தனையோ பேருக்கு ஆற்றல் உண்டு
இப்படிப்பட்டவர்களை காண்பது அரிது. அவர்களுக்காக அல்லது அழைத்துவிட்டார்களே என்பதற்காக அல்ல. எத்தனையோ பேருக்கு ஆற்றல் உண்டு; ஆனால் துணிவு உண்டா? என்றால் கிடையாது. அருள் கூர்ந்து எண்ணிப் பாருங்கள்.
இவருக்கு ஆற்றலும் இருக்கிறது. துணிவும் இருக்கிறது நோயின் தொல்லையும் இருக்கிறது.
கீதையும், குறளும்!
கீதையும், குறளும் என்ற நூலை அவர்கள் எழுதி அதற்கொரு அணிந்துரை வேண்டும் என்று நினைத்தார்கள். பல்வேறு பணிச்சுமைகள் அழுத்தம் எனக்குண்டு. பல நேரங்களில் ஒரு பணி செய்கிற நேரத்தில் இன்னொரு பணி குறுக்கிடும். எதையும் உடனடியாகப் படித்துவிடக் கூடிய பழக்கம் எனக்கு இயல்பாக உண்டு. அதிலே நேரம், காலம் எல்லாம் தேடிக் கொண்டிருப்பதில்லை. பயண நேரத்திலே ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதி நூல்களைப் படித்துவிடுவதுண்டு.
படிக்காமல் தருவதில்லை
அணிந்துரை எழுதுவதற்கு கொஞ்சம் தவக்கம் ஆயிற்று. இன்னொரு பழக்கம் எனக்கு உண்டு. எந்த நூலுக்கும் நான் அதை முழுமையாகப் படிக்காமல் அணிந்துரையோ, கருத்துரையோ தருவதில்லை.
நான் மாறுபடுகின்றேன்
கருத்துகள் மாறுபட நேர்ந்தால் இந்த இடத்தில் நான் மாறுபடுகின்றேன். இது ஒவ்வாத கருத்து என்றும் சுட்டிக் காட்டுவதற்குத் தயங்குவதில்லை. அதற்கு முழுமையாகப் படித்தால்தான் அந்த வாய்ப்பு கிடைக்கும்.
அருமை நண்பர் சுந்தரேசன் அவர்களும் மானமிகு பேராசிரியர் இராமலிங்கம் அவர்களும் மிக அருமையாகப் பேசினார்கள்.
இந்த நூலைப் பற்றி அவர்கள் சொன்ன கருத்துகளை முன் மொழிந்ததாகக் கருதி நான் வழிமொழிகிறேன் அவ்வளவு சிறப்பானது அவ்வளவு ஆழமான கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.
இன்னும் விரிவாக தனியே ஆய்வு செய்ய வேண்டியவர்கள்.
பெரியார் மணியம்மை பல்கலை.யில்...
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பெரியார் சிந்தனைத் துறை இருக்கிறது. அந்தத் துறையின் சார்பாக, பகுத்தறிவுத் துறையின் சார்பாக நிச்சயமாக விரிவாக இந்த நூல் ஆய்வு செய்யப்படும்.
எந்தத் தலைமுறைக்கு இது சொல்ல வேண்டுமோ மாணவச் செல்வங்களுக்கு, அதை விட ஆசிரியப் பெருமக்களுக்கு இந்தக் கருத்துகள் சென்றடைய வேண்டும்.
நம்மை சபிக்கக்கூடும்!
அன்றைய புலவர்களுக்கும், இன்றைய புலவர்களுக்கும் வேறுபாடு உண்டு.
இப்படிச் சொல்வதால் பலர் நம்மை சபிக்கக்கூடும். காரணம் அன்றைக்கு இலக்கு இயம் இருந்தது.
குறிக்கோளோடு இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று கேட்டுச் செல்வது என்பது போல எதை நாம் எழுதுவது? எதை நாம் சிந்திப்பது? ஆனால் சிந்தித்தால் மட்டும் போதாது. அந்த கருத்துகள் நல்ல அளவுக்குப் போய்ச் சேர வேண்டிய இடத்தில் போய்ச் சேர வேண்டும் என்பதுதான் முக்கியம்.
இன்றைக்கு இலக்கியம் என்பதிருக்கிறதே அதை யார் வேண்டுமானாலும் எழுதலாம். எதை வேண்டுமானாலும் சொல்லலாம். இலக்கிய வட்டம் என்று பெயர் வைக்கலாம் என்று ஆரம்பித்து அது எங்கே போய் முடிந்தது என்று சொன்னால் இலக்கியம் என்ற சொல்லே தமிழ்ச் சொல் அல்ல;
தமிழர்கள் ஏமாளிகள்
அது வட சொல்லிலிருந்து வந்தது என்றெல்லாம் அறிஞர்கள் சொல்லக் கூடிய அளவிற்கு தமிழர்கள் ஏமாளிகள் ஆனார்கள்.
எனவே இவருடைய தலைப்பு ரொம்ப அற்புதமான தலைப்பு. மன்னர்களே ஏமாளிகளாக இருக்கும்பொழுது, மன்னன் ராஜராஜன் காலத்தில்தான் பண்பாட்டுப் படை எடுப்பு, மிகக் கொடுமையாக நடந்த ஒரு காலகட்டம் உண்டு. எனவேதான் தமிழ் வளர்ந்தது என்று சொன்னால்_ தமிழ்ச் செம்மொழி என்று சொன்னால் இவர்களையும் தாண்டி வளர்ந்திருக்கிறது.
யாராவது விவாதம் செய்யத் தயாரா?
இவர்களால் வளர்ந்தது என்று சொல்லுவதைவிட, இவர்களையும் தாண்டி வளர்ந்திருக்கிறது என்ற கருத்து மிகப் பெரிய விவாதத்திற்குரிய ஒன்று. யாராவது விவாதம் செய்வதற்குத் தயாராக இருந்தால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏனென்றால் இந்த அரங்கத்தில் முழு நேரத்தை எடுத்துக் கொள்ள முடியாது.
சிந்தனைக்குரிய போர்க்கருவி
அதற்குக் கருவிகள் வேண்டும். அந்த கருவிகளிலே நல்ல ஒரு சிந்தனைக்குரிய போர்க் கருவியாக இந்த இரண்டு நூல்களை ஆசிரியர் அவர்கள் தயாரித்துத் தந்திருக்கிறார்கள்.
நான் இந்த நூலைப்பற்றி எழுதிய பொழுது கடைசியாக ஒரு கருத்தை எழுதி முடித்தேன். உடல் நலிவுற்ற நிலையிலும்_நெஞ்சுரத்துடன், உடல் நோயுடன் போராடுவதைவிட, தமிழ் மக்களின் அறியாமை நோயுடன் போராடுவதே முக்கியம் என்ற புலவரின் துணிவும், உறுதியும் மிகவும் பாராட்டுக்கும், பெருமிதத்திற்கும் உரியது என்றும், வெல்க அவரது முயற்சி! என்றும் இதிலே குறிப்பட்டிருக்கின்றோம்.
அவர்களுக்கு இருக்கின்ற சங்கடம் தொடர்ந்து, இவ்வளவு நேரம்கூட அவரால் உட்கார்ந்திருக்க முடியாத சூழ்நிலை இருந்தாலும் நாம் காட்டுகின்ற அன்பு, நாம் காட்டுகின்ற மகிழ்ச்சி, நாம் அவரைப் பெருமைப்படுத்துவது இவைகள் காரணமாகத் தான் அவர்களால் இவ்வளவு சிறப்பாகச் செய்ய முடிகிறது.
அற்புதமான ஓர் ஆங்கில நூல்
ஆங்கில இலக்கியத்தில் அண்மைக் காலத்திலே ஒரு பத்து ஆண்டுகளுக்குள்ளாக வந்த ஓர் அற்புதமான, புதுமையான இலக்கிய நூல். மோரியுடன் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை என்பது. அதன் தலைப்பாக நாம் தமிழாக்கம் செய்யலாம். மோரி என்று சொல்லக் கூடியவர் ஜப்பானிய அமெரிக்கர். அமெரிக்கா என்பது பல நாட்டவர் குடியேறிய ஒரு நாடு.
அமெரிக்கப் பேராசிரியர் மோரி
ஜப்பான் நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்காவிற்குச் சென்று தங்கிய பேராசிரியர் இவர்.
அந்தப் பேராசிரியர் மிகப்பெரிய அறிவாளி. அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. ஏராளமான மாணவர்களை அவர் ஆய்வு செய்திருக்கிறார். தயாரித்திருக்கிறார். பல லட்சத்தில் அல்லது கோடியில் ஒருவருக்கு வரக்கூடிய நோய் அவர்களைத் தாக்கியது. அந்த நோய்க்கு அறிவியல் ரீதியாக, உடலியல் ரீதியாகப் பெயர் உண்டு.
உறுப்புகள் செயல் இழக்கும் நோய்
அந்த நோயினுடைய தன்மை என்னவென்று சொன்னால், ஒவ்வொரு நாளும், உடலின் ஒவ்வொருபாகம், அதாவது உடலின் உறுப்புகள் படிப்படியாக செயல் இழந்து கொண்டே வரும். அதுதான் அந்த நோயினுடைய உபாதை. எனவே அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை. மற்றவர்களுடைய உதவியோடு மற்றொருவரைச் சார்ந்தே வாழ வேண்டிய நிலை. அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு செயலும் இப்படியாகவே நடந்தன.
நான் வாழ்வியல் சிந்தனையிலே கூட இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றேன். கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன். இப்படியிருந்தால் பல பேருக்கு தாங்க முடியாது. ஆனால் அவருக்குரிய மனத் திண்மை உள்ளவர் ஒரு குறிக்கோளேடு வாழ வேண்டும் என்று நினைத்த காரணத்தாலும் அவர் ஆழ்ந்த சிந்தனையாளர் என்ற காரணத்தாலும் அதை எப்படிப் பார்த்தார் என்றால் மற்றவர்களுக்குரிய பார்வையோடு, கோணத்தோடு பார்க்காமல், முற்றிலும் மாறுபட்ட ஒரு பார்வையோடு பார்த்தார். அவரைப் பிறர் தூக்கி உட்கார வைக்கின்றனர். அவருக்கு உணவு ஊட்டுகிறார்கள். மோரி அவர்களுக்கு இயற்கை அழைப்புகள் என்றெல்லாம் வரும்பொழுது அவருக்கு உதவுகிறார்கள்.
குழந்தைப் பருவத்தை எண்ணிக்கொள்ளுங்கள்
நான் குழந்தையாக இருந்தபொழுது என்னை எப்படித் தூக்கி சீராட்டினார்களோ அதுபோன்ற பருவத்திற்கு என்னை ஆளாக்கியிருக்கிறார்கள். இதை ஒரு வாய்ப்பாக நான் கருதிக்கொள்கின்றேனே தவிர, இதை ஒரு நோயாகக் கருதவில்லை என்று மோரி அவர்கள் சொல்லுகின்றார்கள்.
இதுமுற்றிலும் மாறுபட்டது. அதோடு மோரி அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பார். எந்த நேரத்திலும் அவர் வருத்தம், துன்பம், சோகம் பார்க்க முடியாதவராக இருந்தார். பல்வேறு பணிகளை செய்து கொண்டிருந்தார் எழுதினார், ஆய்வு செய்தார். இவர் எப்படி இவ்வளவு பெரிய சங்கடங்களை வைத்துக்கொண்டு, இவ்வளவு பெரிய உபாதைகளை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு இருக்கிறார் என்பதை அறிய ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அவரைப் பேட்டி காண அனுப்புகிறது. அவருடைய இரகசியத்தை வெளியே கொண்டுவர அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்கிறது.
பல நோயாளிகள் தெரிந்து கொள்ள...
பல நோயாளிகள் இதைப் பார்த்து மகிழ்ச்சியாக வாழக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று கருதுகிறார்கள். நடைமுறையிலே விளையாட்டைப்பற்றி எழுதக்கூடிய ஒரு செய்தியாளர். அவர் இலக்கியவாதி அல்லர்.
இலக்கியம், விமர்சனங்களை எழுதக்கூடிய செய்தியாளர் அல்லர். விளையாட்டுத் துறைக்கென்று எழுதக்கூடிய ஓர் எழுத்தாளர். தொலைக்காட்சி ஆசிரியர் இந்த செய்தியாளருக்கு இந்தப் பணியைக் கொடுத்தவுடன் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்லுகின்றார்.
அந்த செய்தியாளர் மேலும் மகிழ்ச்சியோடு சொல்லுகின்றார். அவர் எனக்குப் பேராசிரியர்.. நான் அவருடைய மாணவன். அந்த வகையிலேகேட்டால் அதை மகிழ்ச்சியோடு ஏற்பார். அவரை நான் பேட்டிகாண முடியும் என்று அந்த செய்தியாளர் சொல்லுகின்றார்.
இந்த செய்தியாளர் பேராசிரியர் மோரி அவர்களிடம் சென்று கேட்கிறார். எனக்கு இடையிடையே சிகிச்சை தரப்படும். என் உபாதைகள் போக்கப்படும். நேரத்தை ஒரே மாதிரி ஒழுங்கு படுத்துவது கொஞ்சம் கடினமாக இருக்குமே என்றெல்லாம் மோரி கேட்கிறார். அதையும் உடனடியாக முடிக்க முடியாது என்றெல்லாம் மோரி சொல்லுகிறார்.
மரணத்தைப் பற்றி கவலைப்படாதவர்
இந்த செய்தியாளர் எவ்வளவு தொல்லை ஏற்பட்டாலும், எவ்வளவு காலதாமதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. எனக்கு தொலைக்காட்சி நிறுவனத்தார் முழுசுதந்திரம் கொடுத்திருக்கின்றார்கள். நீங்கள் என்னை அனுமதியுங்கள் என்று கூறுகின்றார்.
இரண்டு பேரும் விவாதித்து கடைசியாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைச் சொல்லி அந்த நேரம் நீங்கள் வந்துவிடுங்கள் நீங்கள் கேட்கின்ற கேள்விக் கெல்லாம் நான் பதில் சொல்லிவிடுகிறேன் என்று சொல்லுகின்றார்.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அவரைப் பேட்டி கண்ட செய்திகள் நூலாக வடிவெடுத்திருக்கிறது. அதுதான் ஜிமீபீணீஹ் கீவீலீ விஷீக்ஷீக்ஷீஹ் என்பதாகும்.
இந்த நூலிலே மோரி சொல்லுகின்றார். மரணத்தைப்பற்றி நான் கவலைப்படவில்லை. மற்றவர்களுக்குத்தான் அது தொல்லையாக இருக்கும். அதற்காக ஒரு மனிதன் பயத்திலே இருக்க வேண்டிய அவசியமில்லை. தனக்கு எது இன்பம் தருகிறதோ அந்தப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்.
கீதையைப்பற்றி அறிந்திருப்பாரா?
அதே போல இங்கு நமது அருமை அய்யா சிவ.வீரையன் அவர்கள் நோயை வெல்ல வேண்டும் என்று கருதுபவர். நாம் பகுத்தறிவாளர்கள். சிவ.வீரையன் அவர்கள் ஏராளமான நூல்களை எழுதிக் கொண்டிருக்கின்றார். அதுவும் ஒரு மனிதன் கடைசியாகச் சொல்லக்கூடிய உண்மைகள் மிக முக்கியமானது.
இந்த உண்மைகள் உலகத்திற்குப் போய்ச் சேர வேண்டும் என்கிற வகையிலே அவருடைய ஒவ்வொரு நூலும் மிகச் சிறப்பாக இருக்கிறது. எனவே இதற்கு நன்றி காட்ட வேண்டும் என்றுதான் தெளிவாகச் சொன்னேன்.
கீதையும், குறளும் என்று அவர் எழுதியிருக்கின்ற இந்த நூல் அறிவு ஜீவிகள் என்று சொல்லக் கூடிய மக்கள், அல்லது மேல்தட்டு மக்கள் இவர்கள் எல்லாம் இரண்டு குறள் சொல்லுவதை விட, கீதையிலே கண்ணன் சொல்லியபடி என்று ஏதாவது இரண்டு வார்த்தையைச் சொன்னால் உடனே இவரை ஓகோ, இவர் மெத்தப் படித்த மேதாவி போலிருக்கிறது இவர்தான் நமது கலாச்சாரத்தை கரைத்துக்குடித்தவர் என்றெல்லாம் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் தெளிவாக ஒன்றைச் சொல்லுங்கள்.
இந்த கீதையைப் பற்றிப் பேசக்கூடிய யாராக இருந்தாலும், அதைப் பாராட்டிச் சொல்லக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் முழுமையாக 700 சுலோகங்கள் இருக்கிறதே, இவை அத்தனையையும் படித்து முடித்தவர்களா என்று கேளுங்கள். நாணயமாக பதில் சொன்னால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அதை அவர்கள் சொல்ல மாட்டார்கள்.
அவர்கள் அதற்குப் பதிலாக எல்லாம் தெரிந்ததைப் போல சொல்லுவார்கள்.
(தொடரும்) "விடுதலை” 21-7-2010
0 comments:
Post a Comment