2011ஆம் ஆண்டை தமிழ் செம்மொழி ஆண்டாக அறிவிக்க வேண்டும்
அரசுகளுக்கு தமிழர் தலைவர் முக்கிய வேண்டுகோள்!
2011ஆம் ஆண்டை தமிழ் செம்மொழி ஆண்டாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அதற்கு கலைஞர் முயற்சி எடுக்க வேண்டுமென்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
எங்களுக்கென்ன சண்டை?
எங்களுக்கென்ன தனிப்பட்ட முறையில் உங்களோடு சண்டை போட வேண்டும் என்ற அவசியம்? நம்ம ஆள்கள் புரியாமல் அந்தப் பக்கம் போயிருக்கிறார்கள். நம்ம ஆளும் நம்முடைய கைகளைப் பிடித்து நம்முடைய கண்களையே குத்த முயற்சி பண்ணுகிறான்.
நீங்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தயவு செய்து இந்து முன்னணி, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளில் இருக்காதீர்கள்.
சமத்துவத்திற்கு எதிரான அமைப்பு
காரணம் இந்த நாட்டில் சகோதரத்துவத்தை, சமத்துவத்தை, சுதந்திரத்தை அழிக்கின்ற அமைப்புகள் அவை. பன்னாடு, பன் மதங்கள் பல கலாச்சாரங்கள் பல மொழிகள் இருக்கின்ற ஒரு நாட்டிலே என் மதம் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று சொல்லுவது தானே இந்துத்துவா. மறுக்க முடியுமா?
எந்த மதத்தையும் ஏற்காதவர்கள்
நாங்கள் மதத்திற்கு விரோதி. எந்த மதத்தையும் ஏற்காதவர்கள். ஆனால் எல்லா மதத்தவர்களும் சமமாக இருக்க வேண்டும் என்று சொல்லும் பொழுது ஒருவர், இன்னொருவரை அழிக்க வேண்டும், குத்த வேண்டும், கொலை செய்ய வேண்டும் என்று சொல்ல மாட்டோமே. உனக்கு இருக்கின்ற உரிமை சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த இஸ்லாமியருக்கு இருக்க வேண்டும்.
பெரும்பான்மை சமுதாயத்திற்கு இருக்கக் கூடிய உரிமை சிறுபான்மை சமுதாயத்தினரான கிறிஸ்தவருக்கும் இருக்க வேண்டும் என்று சொல்லுவதுதான் பகுத்தறிவு_மனிதநேயம்.
மனிதநேய இயக்கம்
எனவே இந்த இயக்கம் மனிதநேய இயக்கம். சுயமரியாதை இயக்கம். முழுக்க, முழுக்க மனிதநேய இயக்கம். நாங்கள் இந்த மாநாட்டிலே தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றோம். இங்கே செய்தியாளர் நண்பர்கள் இருக்கிறார்கள்.
இந்தத் தீர்மானத்தைத் தாண்டி ஒரு வேண்டுகோளை நான் சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன். கரூரில் இந்த அறிவிப்பு வந்தால் நிச்சயமாக அது எல்லா இடங்களுக்கும் பரவும்.
இது கரு ஊர்
ஏனென்றால் இது கரு ஊர். கரு தரித்தது என்றால் நிச்சயமாக வெளியே வரும். செம்மொழி என்று அறிவித்தாகிவிட்டது. இனிமேல் இதை யாரும் எந்தக் கொம்பனும் இது நீச்சமொழி, சூத்திர மொழி, என்று சொல்ல முடியாது. எங்களை, எட்டிநில் தொடக்கூடாதவர்கள் என்று சொல்ல முடியாத நிலை வந்தாகிவிட்டது.
இந்தியாவில் மட்டுமல்ல; உலகத்திலேயே ஒரு அய்ந்தாறு மொழிகள் இருக்கின்றன என்று சொன்னால், நடைமுறையில் பேச்சுவழக்கு, எழுத்து வழக்கு இரண்டிலும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கின்ற மொழி என்று சொன்னால், சீனமொழி, தமிழ்மொழி இந்த இரண்டும்தான்.
சமஸ்கிருதம் செம்மொழி என்று....?
சமஸ்கிருதத்தைச் செம்மொழி, செம்மொழி என்று சொல்லி ரொம்ப நாள்களாக ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். யார்? படித்தவர்கள் உள்பட. சமஸ்கிருதத்திற்கு வந்தாகிவிட்டது அந்தஸ்து. தமிழுக்கு இல்லையா என்றுதான் எல்லா புலவர்களும் கேட்டார்கள்.
பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதம். அந்த சமஸ்கிருத்திற்கு செம்மொழி அந்தஸ்து சிறீணீவீநீணீறீ லிணீஸீரீணீரீமீ என்று சொல்லக்கூடிய அந்தஸ்து இருக்கும் பொழுது ஏன் எங்கள் தமிழுக்கு இல்லை என்று எல்லோரும் கேட்டு, ஒரு கலைஞர் அய்ந்தாவது முறையாக முதலமைச்சராகி பொற்கால ஆட்சியை உருவாக்கியதினுடைய விளைவு. இழந்த உரிமையை மீட்டெடுத்தார். கலைஞருடைய சாதனைகளிலேயே உச்சக்கட்ட சாதனை!
கலைஞரின் மணி மகுடத்தில் ஒளி முத்துக்கள்
வரலாற்றில் நிலைத்து நிற்கக்கூடிய கலைஞருடைய மணி மகுடத்திலே முத்துக்களைப் போன்று ஜொலிக்கக்கூடியது. என்றைக்கும், யாராலும் பறிக்க முடியாத வெற்றி ஒன்று இருக்கிறதென்றால் அந்த வரலாறு செம்மொழி_தமிழ்மொழி என்று அவர்கள் வாதாடிப் பெற்றார்.
கலைஞர் நல்ல போராட்ட வீரர் மட்டுமல்ல; தலைசிறந்த அரசியல் விவேகி_ஞானி. ஆகவேதான் அவர் வாதாட வேண்டிய நேரத்தில் வாதாடுவார். போராட வேண்டிய நேரத்தில் போராடுகிறார்.
உறவுக்குக் கை கொடுத்தார்
உரிமைக்கு குரல் கொடுத்தார். உறவுக்கும் கை கொடுத்தார். அதனுடைய விளைவுதான் தமிழ் செம்மொழி வந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மற்றொரு வடிவம்தான் பி.ஜே.பி. சங்பரிவார் குடும்பப் பரிவாரம் என்று சொன்னார்கள். அவர்கள் இருந்தபொழுது_இன்னும் கேட்டால் அவர்கள் ஆதரித்த நிலையில் கூட முரளிமனோகர் ஜோஷி சமஸ்கிருத ஆண்டு என்று யாரையும் கேட்காமல் அறிவித்தார்.
பேச்சு வழக்கில்லாத சமஸ்கிருதம்
அப்பொழுது அதற்கு செம்மொழி அந்தஸ்து கிடையாது. 18 மொழி, 22 மொழிகள் இருக்கின்றன. பட்டியலில் அரசியல் சட்டத்தில். முதலில் 18 மொழிகள் இருந்தன. அதன் பிறகு 22 ஆக்கியிருக்கின்றார்கள். அதிலே ஒரு மொழி பேச்சு வழக்கில்லாத சமஸ்கிருதம் கூட. அரசாங்க புள்ளி விவரம்
அரசாங்கமே புள்ளி விவரம் கொடுத்திருக்கிறது. 0.001 விழுக்காடு என்று. அதில் ஒரு மொழி பேச்சு வழக்கு இல்லாத சமஸ்கிருதம் கூட. எத்தனை பேர் பேசுகிறார்கள்?
ஆனால் அந்த பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதம். எத்தனை பேர் பேசுகிறார்கள்? அதில் உண்மை இல்லை. ஒரு கணக்கிற்காக அந்தப் புள்ளி விவரம் கொடுத்திருக்கின்றான். ஒரு சதவிகிதம் கூட நிறைவு பெறவில்லை. அந்த ஒரு சதவிகித சமஸ்கிருதத்திற்கே அவர்கள் தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள்.
அப்பொழுது செம்மொழி இல்லை. ஒரு பெரிய ரகசியத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட பிற்பாடுதான் அதிகாரபூர்வமாக சமஸ்கிருதம் செம்மொழி என்று மத்திய அரசாலே அறிவிக்கப்பட்டதென்றால் தமிழால் அதற்குக் கிடைத்த அந்தஸ்தே தவிர, கலைஞரால்தான் அவர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது.
பகைவனுக்கும் அருள்வாய்!
பகைவனுக்கும் அருள்வாய் என்று சொல்லுகின்ற மாதிரி செத்த மொழி சமஸ்கிருதத்திற்கும் இந்த வாய்ப்பை அவர் ஏற்படுத்திக்கொடுத்தார்.
ஆனால் அன்றைக்கு திருவள்ளுவர் சிலை திறந்த நேரத்திலே கன்னியாகுமரியிலே 133 அடி உயர சிலை வைத்திருக்கின்றார்.
அரசாங்கத்தினுடைய சின்னமான கோபுரத்திற்குப் பதிலாக வள்ளுவர் சிலையையே போடுங்கள் என்று ஒரு நல்ல முடிவை அறிவித்திருக்கின்றோம். அதை வலியுறுத்தியாக வேண்டும் நாடு தழுவிய அளவிலே.
இந்த அம்மையார் போனார்
கோயிலைக் காணோம்
இதுவரையிலே திராவிடர் கழகம் எடுத்து வைத்த எந்தத் தீர்மானமும் சட்டம் ஆகாமல் இருந்ததில்லை. (கைதட்டல்) வேண்டுமானால் கொஞ்சம் காலதாமதம் ஆகலாம்.
கோபுரத்தில் என்ன ஆபத்து என்றால் வெடிப்பு வரும். திடீரென்று பதவிக்கு வருகிறவர்கள் இந்த ஊரு கோவிலுக்குச் சக்தி இல்லை. ஆந்திர கோவில் காளஹஸ்திக்குப் போனால் ஒருவேளை கை கொடுக்கும் என்று நினைத்தார். இவர் போனபிற்பாடு கோயிலே காணோம். (சிரிப்பு_கைதட்டல்).
இந்தப் பக்தர்கள் கடவுளை எவ்வளவு நம்புகிறார்கள் பாருங்கள். ஏன் எஞ்சினீயர்கள் இதை சரியாகக் கவனிக்கவில்லை என்று கேட்கின்றான். எல்லாம் அவன் செயல்_அதன் பிறகு எதற்கு இவனைக் கேட்க வேண்டும்?
அரசுக்கு மிக முக்கிய வேண்டுகோள்
கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி சிலையைத் திறந்தார். உங்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன். மத்திய அரசுக்கு நம்முடைய முதல்வர் கலைஞர் வேண்டுகோள் விடுத்தார். யார்? நம்முடைய முதல்வர் கலைஞர்.
சமஸ்கிருத ஆண்டு என்று முதலில், அன்றைய மத்திய பா.ஜ.க ஆட்சியில் முரளிமனோகர் ஜோஷி. 30 கோடி அறிவித்தீர்களே, அதே மாதிரி அடுத்த ஆண்டு (2011) தமிழ் ஆண்டு என்று அறிவியுங்கள் என்று கேட்டார் கலைஞர். ஆனால் மத்திய அரசு பதிலே கொடுக்கவில்லை.
இப்பொழுது நாம் இந்த கரூர் மாநாட்டின் வாயிலாக மத்திய அரசுக்கு வைக்கக் கூடிய மிகப்பெரிய வேண்டுகோள் என்னவென்றால். வருகிற 2011ஆம் ஆண்டு தமிழ் செம்மொழி ஆண்டு என்று அறிவிக்கப் பட வேண்டும். (கைதட்டல்). இந்தியா முழுவதும்_உலகம் இதனை வலியுறுத்த வேண்டும்.
அந்த முன் ஏற்பாட்டை கலைஞர் முன்னெடுக்க வேண்டும் என்கிற வேண்டுகோளை கலைஞருக்கும் வைக்கின்றோம். மத்திய அரசுக்கும் வைக்கின்றோம். கரூர் இதற்குத் துவக்க விழா செய்திருக்கிறது. நாடு தழுவிய அளவிலே இந்தப் பிரச்சினை செல்ல வேண்டும்.
சீனமொழிக்கு அடுத்து....
உலகத்திலேயே சீனமொழியைத் தவிர அடுத்து பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு என்று இருப்பது தமிழ்மொழிதான். எனவே தமிழ் மொழிக்கு சிறப்பு ஏற்படுத்துவது நமது கடமை. இதன் மூலம் நமக்குத் தன்மானம் உருவாகிறது. இதன் மூலம் கைகட்டி வாய்பொத்தி எங்கோ நின்றவர்களுக்கு, இன்றைக்குப் பெருமை வருகிறது.
கண்மூடிப்பழக்க மெல்லாம் மண்மூடிப் போக
என்று வள்ளலார் சொன்னார். கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்த மாதிரி. அங்கேயே பார்ப்பான் உள்ளே போய்விட்டான். சத்திய ஞான சபை
அவர் எது கூடாது என்று சொன்னாரோ,
அதை வைத்துவிட்டான்
வடலூரிலிருந்து பார்ப்பனர் வெளியேற்றம்
ஆறாம் திருமுறை பார்த்தீர்களேயானால் கடைசிவரை ஒப்பாரியாகவே இருக்கும். காரணம் அவர் கடைசியில் மிகப்பெரிய மாற்றத்திற்கு ஆளானார்.
அதுவரையில் வெற்றி பெற முடியாத இடத்தில்_ கலைஞர் ஆட்சி சிதம்பரம் கோவிலில் எப்படி ஒரு சாதனை செய்ததோ அதே போலத்தான்--, நண்பர்களே மிகப்பெரிய சாதனையாக நடந்தது. வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையிலிருந்த பார்ப்பனர் வெளியேற்றப்பட்டார்.
அவருடைய கருத்து தெளிவாக வந்தது. சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடுவதற்கு அனுமதி இல்லை. கடவுள் மறுப்பு அல்ல.தேவாரம் ஆறுமுகசாமி தேவாரம் பாடுவதற்கு சிதம்பரம் கோவிலுக்குச் சென்றார்.
தீட்சிதர்கள் அத்துணை பேரும் அவரை அடித்து நமது துரை.சந்திரசேகரன் போன்றவர்கள் ஆறுமுகசாமிக்குத் துணையாக இருந்து எல்லா கட்சிக்காரர்களும் கூட்டம் போட்டு ஆதரவு தந்தார்கள்.
ஆறுமுகசாமிக்கு அரசு ரூ.3000
ஆறுமுகசாமி கோயிலுக்குள் போவதற்கு நாதி இல்லையே. கலைஞர் ஆட்சி இந்த பச்சைத் தமிழருடைய ஆட்சி, பொற்காலஆட்சி இருக்கின்ற காரணத்தால்தான் இன்றைக்கு ஆறுமுகசாமி உள்ளே போய் நின்று தேவாரம், தாராளமாகப் பாடலாமென்று வந்தது. அதற்கு முன்னாலே தாழ்வாரத்தை தாண்ட முடியாமல் இருந்தார். இப்பொழுது சிரம்பரம் கோவிலுக்குள் தேவாரம் பாடக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
பெரியவர் ஆறுமுகசாமி தேவாரத்தைப் பாடுகிறார். மாதா மாதம் மூவாயிரம் ரூபாய் நிதி வைத்துக்கொள்ளுங்கள் என்று கலைஞர் வழங்குகிறார். தாராளமாகத் தமிழ்ப் பாடலைப் பாடுங்கள் என்று ரொம்பத் தெளிவாகச் செய்திருக்கின்றார்.
எனவே இந்த உரிமை உள்ளே போகமுடியவில்லை. போகாதது நமக்கு அவமானம். உங்களைப் பற்றி ஒரு விமர்சனம் செய்யுங்கள் என்று சொன்னவுடனே ஒரே வரியில் கலைஞர் பளிச்சென்று சொன்னார்.
மானமிகு சுயமரியாதைக்காரன்
மானமிகு சுயமரியாதைக்காரன் என்று. இந்த மானமிகு சுயமரியாதைக்காரர் ஆட்சி இருக்கின்ற காரணத்தால்தான் ஒவ்வொரு இடத்திலும் இழந்த சுயமரியாதை அது மொழித்துறையாக இருக்கலாம்; அது மற்ற பல்வேறு துறைகளாக இருக்கலாம். அந்தத் துறைகளில் எல்லாம் நல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.
எவ்வளவு பெரிய ஆபத்து?
மூடநம்பிக்கையினாலே எவ்வளவு பெரிய ஆபத்து? ஒரே ஒரு செய்தியைச் சொல்லுகின்றேன். நிறைய செய்திகளைச் சொல்ல நேரமில்லை. தீர்மானங்கள் தெளிவாக இருக்கின்றன. சேது சமுத்திரக் கால்வாய்த்திட்டம் 2400 கோடி ரூபாய் திட்டம். நூறு ஆண்டுகளுக்கு மேல் கனவுத்திட்டம். எப்படி நாம் செம்மொழிக்குப் போராடினோமோ அதே மாதிரி கனவுத்திட்டம். கட்சிக்கு அப்பாற்பட்ட திட்டம்.
தமிழன் ஆட்சிக்கு வந்த பிறகுதான்...
இந்தத் திட்டம் நிறைவேறினால் தமிழ்நாடு வளம் கொழிக்கும். வேலை வாய்ப்பு பெருகும், அத்தனை சிறப்புகளும் வரவேண்டியதுதான். இந்த சேது சமுத்திர கால்வாய்த்திட்டம். சி.பா.ஆதித்தனார் நல்ல பெயர் வைத்தார். தமிழன் கால்வாய் என்று அழகாகச் சொன்னார்.
அப்பேர்ப்பட்ட தமிழன் கால்வாயை ஒரு தமிழன் ஆட்சிக்கு வந்த பிற்பாடுதான் நடைமுறைக்குக் கொண்டு வரக்கூடிய அளவுக்கு வந்தது.
இராமன் பாலம் என்று சொல்லி தடுத்தனர்
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கப்பல் துறையைப், பெற்று ஆற்றல்மிகு நண்பர் இரவு, பகல் என்று பார்க்காமல் சேதுசமுத்திரத் திட்டப் பணிகளைக் கவனித்தார்.
இந்தத் திட்டம் பி.ஜே.பி ஆட்சியிலிருந்து தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஒன்று. சேதுசமுத்திரத்திட்டம் கூடாது என்று உச்சநீதிமன்றத்தைக் கருவியாகப் பயன்படுத்தி, அதை கிடப்பிலே போடலாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தால் என்ன காரணத்தைச் சொன்னார்கள்?
இராமன் பாலம்
இராமன் பாலம் என்று சொல்லி, அதை நீதிமன்றத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தித் தடுத்தார்கள்.
-------------தொடரும் 11-7-2010காட்சிக்காக ஆட்சி நடத்துபவர் அல்ல முதல்வர் கலைஞர்
தமிழின மீட்சிக்காக ஆட்சி நடத்துபவர்!
கரூர் மாநாட்டில் தமிழர் தலைவர் பேச்சு
காட்சிக்காக ஆட்சி நடத்துபவர் அல்ல நமது முதல்வர் கலைஞர் அவர்கள். தமிழினத்தின் மீட்சிக்காக ஆட்சி நடத்துபவர் என்று கூறி விளக்கவுரையாற்றினார், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
தமிழர்தலைவர் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி....
ராமன் பெயரைச் சொல்லி சேதுதிட்டம் தடுப்பு
சேது சமுத்திர திட்டத்தைத் தடுக்க ராமன் பெயரைச் சொல்லி, ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்று சொல்லி அந்தத் திட்டத்தைத் தடுத்தார்கள்.
ராமன் என்று ஒருவன் இருந்தானா? கலைஞர் தானே கேட்டார். எப்படியடா இராமன் பிறந்தான் யார் போய் பிரசவம் பார்த்தது? என்று கேட்டார் கலைஞர் அவர்கள்.
ஈரோடு குருகுலத்தில் பயிற்சி எடுத்தவர்க்கு மட்டுமே...
இந்த மாதிரி கேள்வி கேட்கின்ற துணிச்சல் ஈரோடு குருகுலத்தில் பயிற்சி எடுத்தவர்களுக்கு மட்டும்தான் இருக்குமே தவிர, வேறு யாருக்கும் இல்லை. அவர் ஆட்சியைப் பற்றிக் கவலைப் படவில்லை. தன்னுடைய ஆட்சியை அவர் காட்சியாக நடத்தவில்லை. அல்லது அதிகாரத் தினுடைய வாய்ப்பாகக் கருதவில்லை.
இனத்தின் மீட்சிக்காக ஆட்சி நடத்துபவர்
மாறாக அவர் நம் இனத்தின் மீட்சியாகக் கருதுகிறார். இன்றைக்கு எல்லா துறைகளிலும் அவருடைய கவனம் சென்றிருக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு எல்லா துறைகளிலும் பயன்படுகிறது.
எனவே நம்முடைய மாநாடு என்பது_திராவிடர் கழகத்தினுடைய மாநாடு என்பது முழுப்பகுத்தறிவை வளர்த்து மூடநம்பிக்கையை அகற்றி முழு மனிதர் களாக ஆக்க வேண்டும். யார் நம்மை எதிர்க்கி றார்களோ அவர்களுக்கும் நாம் எதிரிகள் அல்லர்.
எதிரிகளாக எண்ணிடவில்லை
இந்து முன்னணி என்ற அமைப்பிலே தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சங்கடப்பட்டீர்களே அந்தத் தமிழர்களைத் திருத்துவதற்காக இன்று நாம் இந்த மாநாடு போட்டிருக்கின்றோமே தவிர, அவர்களை நம் எதிரிகளாக மாற்றி சங்கடப்படுத்த வேண்டும் என்பதல்ல.
காரணம் நம்மைப் பொறுத்தவரையிலே இந்த இயக்கம் திருந்து அல்லது திருத்து இந்த இரண்டே சொற்களிலே அமைந்த இயக்கம்தான் இந்த இயக்கம்.
தவறு என்றால் திருத்துங்களேன்....!
நாங்கள் சொல்வது தவறு என்று சொன்னால் எங்களைத் திருத்துங்கள். நீங்கள் தவறாக இருக்கிறீர்கள் என்றால் திருந்துங்கள்.
நாங்களும் திருந்த மாட்டோம். உங்களையும் திருந்தவிடமாட்டோம் என்றால் இந்தக் காலத்தில் இனிமேல் நடக்காது.
குறுகிய காலத்தில் அற்புத மாநாடு
எனவே கரூரிலே இந்த மாநாட்டைக்கூட்டித் தோழர்கள் சிறப்பான பணியை செய்கிறார்கள். இவ்வளவு அற்புதமான இந்த மாநாட்டை மிக குறுகிய காலத்திலே நடத்துவதற்குக் காரணமாக இருக்கக் கூடிய நம்முடைய அருமைத் தோழர்கள் கரூர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மு.க.ராஜசேகரன் மற்றும் நமது கழகத் தோழர்கள் பழ.இராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் அன்பு, பாரதமணி, கார்த்திக், செல்லதுரை, குமாரசாமி, செல்வராஜ், சதாசிவம், அலெக்ஸ், ஜெகநாதன், ராஜு, சங்கரன், துரைசாமி, பெரியார் பெருந்தொண்டர் ஆறுமுகம், கருப்பண்ணன், முத்துவீரன், எஸ்.பி.குப்புசாமி, குமார், சபாபதி, ராமலிங்கம், ஜவஹர்லால், மாவட்டச் செயலாளர் காளிமுத்து ஆகியவர்களுக்கும், மற்றும் இந்த மாநாட்டிற்கு ஒத்துழைப்புத் தந்த திராவிட முன்னேற்றக் கழக முக்கிய பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவருக்கும் நன்றி கூறி, இன்றைக்கு எடுத்த முடிவுகள் சிறப்பானவை.
மூடநம்பிக்கைகள் தன்னம்பிக்கையைக் குறைக்கும். மூடநம்பிக்கையை நாம் ஒழித்தால்தான் தன்னம்பிக்கை வளரும்.
காலாவதியான கருத்துகள்
காலாவதியான மருந்துகளைக் கண்டுபிடித்து இன்றைக்கு ஒழிக்கின்றோம். காலாவதியான உணவுகள் கடுமையான சோதனைக்கு ஆளாக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட பொருள்கள் உடலை மட்டும்தான் கெடுக்கும். ஆனால் காலாவதியான கருத்துகள் அறிவையே கெடுக்கும். ஆகவே காலாவதியான கருத்துகளுக்கு இடமில்லை என்று சொல்லுவதுதான் இந்த மாநாட்டினுடைய முழு தத்துவம். இதை வெற்றிகரமாக ஆக்குவதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி நன்றி என்று கூறி இயக்கத்திற்காக உழைத்த சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு மீண்டும் என்னுடைய வீரவணக்கம், நன்றி.
இவ்வாறு தமிழர்தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.
--------------------"விடுதலை” 12-7-2010
0 comments:
Post a Comment