Search This Blog

10.7.10

எந்த நாமம் போடுவது? வடகலை நாமமா? தென்கலை நாமமா?

நீங்கள் ஒன்று சேருவதற்கு தடையான நாமம்,
ஜாதியை ஒழிக்க முன்வருவீர்களா?
இந்துக்களே ஒன்றுசேருங்கள் என்று கூப்பாடு
போடுவோருக்கு தமிழர் தலைவர் விடுத்த கேள்வி

வகை, வகையாக நாமம் வைத்திருக்கின்ற இருந்துக்களே நீங்கள் முதலில் ஒன்று சேருங்கள். நீங்கள் ஒன்று சேருவதற்குத் தடையாக இருக்கின்ற ஜாதியை ஒழிக்க முன்வருவீர்களா? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஜாதி இல்லாத இந்து மதம் உண்டா?

ஜாதி இல்லாத இந்து மதம் உண்டா? தயவு செய்து சொல்லட்டும். ஜாதிவாரியாகப் பிரிந்து இருப்பதினாலே தானே இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்லுகின்றீர்கள். நம்முடைய இனத்தில் இருப்பவர்தான் பார்ப்பனர்களுக்கு அனுமார்களாக, சுக்ரீவன்களாக, விபீஷ்ணர்களாக இருக்கிறார்கள் என்பதை மாநாடு திறப்பாளர் அவர்களும், நண்பர்களும் இங்கே சொன்னார்கள். அதுவும் வருத்தத்தோடு வேதனையோடு சொன்னார்கள். ஏனென்றால் அவன் மூன்று பேர்; 97 பேர் நாம். 97 பேரையும் தனித்தனியாகப் பிரித்து வைத்து விட்டான். அவர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்று அவர்கள் நினைக்கின்ற காரணத்தால்தான் அவர்கள் இந்தப் பிரச்சாரத்தைச் செய்கிறார்கள்.

இந்துக்களை ஒன்று சேர்த்திருப்பவர் யார் தெரியுமா?

இந்துக்களே, ஒன்று சேருங்கள் என்று நீங்கள் சொல்லும்பொழுது எங்கே போக வேண்டும்? கோவிலுக்குள் போய் சொல்லுங்கள் அதை. ஆனால் அதை நீங்கள் செய்யவில்லையே. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற தத்துவம் இருக்கிறதே, அதைத் தந்தை பெரியார் சொல்லி கலைஞர் சட்டமாக்கி, இன்றைக்கு எல்லா ஜாதியிலிருந்தும் இளைஞர்கள் அர்ச்சகர் பயிற்சிக்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்தான் இந்துக்களை ஒன்று சேர்த்திருக்கிறார். அதே நேரத்தில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலே வழக்குக்குப் போயிருக்கிறார்களே பார்ப்பனர்கள். அவர்கள் என்ன சொல்லுகிறார்கள்?

இல்லை, இல்லை பழைய மாதிரியேதான் இருக்க வேண்டும் என்று சொன்னால், இந்துக்களைப் பிரிக்கிறவர் யார்? எது?

மைக்கேல்-வெங்கடேசுவரன் வழக்கு

உயர்நீதிமன்றத்திலே தலைசிறந்த தலைமை நீதிபதியாக இருந்தவர் வழக்குரைஞர்கள் இங்கே ஏராளம் இருக்கின்றீர்கள். ஜஸ்டிஸ் பி.வி.ராஜ மன்னார் இந்தியாவினுடைய தலைசிறந்த நீதி அரசர்களிலே ஒருவர். அவர் நீண்ட காலத்திற்கு முன்னாலே ஒரு 40,50 ஆண்டுகளுக்கு முன்னாலே வழக்கு வந்தது. மைக்கேல் என்பவருக்கும் வெங்கடேசுவரன் என்பவருக்கும் இடையே ஒரு வழக்கு வந்தது.

இது எல்லாவிதமான சட்ட புத்தகங்களிலும் இருக்கும். இந்து லா என்று வழக்கறிஞர்கள் படிக்கக்கூடிய இந்து சட்டத்தில் தெளிவாக இந்தச் செய்தி இல்லாமல் இருக்காது.

இந்து என்ற சொல் எந்த மொழியில் இருக்கிறது? இதில் தெளிவாக சொல்லுகிறார்கள். இந்து என்ற சொல் அது இந்தியாவினுடைய எந்த மொழியிலும் இருக்கக் கூடிய சொல் அல்ல. இது தீர்ப்பு. இரண்டு சாரார்களுடைய வாதங்களை எடுத்து பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பிலிருந்து எடுத்துச் சொல்லுகின்றேன்.

முதலில் இந்துவை ஒன்றுசேர். வடகலை பார்ப்பான், தென்கலை பார்ப்பான் ஏய்க்கப் பார்ப்பான் என்று வடகலை பார்ப்பான்_தென்கலை பார்ப்பான் சண்டை இன்னமும் முடிந்ததா?

ரொம்ப பேருக்குத் தெரியாது. காரணம் பெரியாருடைய சிந்தனையினாலே நெற்றி சுந்தமாக இருக்கிறது.

நெற்றி சுத்தமாக இருந்தால்....!

யார் யாருடைய நெற்றி எல்லாம் சுத்தமாக இருக்கிறதோ, அவர்களுக்கு புத்தி சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். (கைதட்டல்). பெரியார் சொன்னார். நெற்றி சுத்தமாக இருந்தால் புத்தி சுத்தமாக இருக்கும். நெற்றியில் டிராயிங் போட்டுக்கொள்கிறவன் உலகத்திலேயே நம்மாள் தான். ஒருவன் குறுக்கே கோடு, இன்னொருவன் நெடுக்கே கோடு. இதிலே உன்னுடைய இந்து மதத்தின் சிறப்பு என்ன?

எங்களுக்கு சில கேள்விகள்

இங்கே சில கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். இந்தக் கேள்விக்கெல்லாம் ரொம்ப சாதாரணமாகச் சொல்லலாம். நாங்கள் மனிதர்களை வித்தியாசப் படுத்தக்கூடாது என்று சொல்லுகின்றோம். சமத்துவம் பேசும் தி.கவே! என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள் அதைத்தான் பேசுகின்றோம். உனக்கும் சேர்த்துதான் சமத்துவம். இதிலே பார்ப்பானும் இருக்கக் கூடாது. பறையனும் இருக்கக் கூடாது. பிராமணனும் இருக்கக்கூடாது. சூத்திரனும் இருக்கக் கூடாது.

உயர்ஜாதிக்காரனும் இருக்கக் கூடாது. தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரனும் இருக்கக் கூடாது. மனிதன்தான் இருக்க வேண்டும்.

நீண்ட காலத்திற்கு முன்னாலே தந்தை பெரியார் சொன்னாரே. இதே மாதிரி வந்தவுடனே அய்யா அவர்களிடம் கேள்வி கேட்டார்கள். அய்யா, இந்து மதத்தில் பிரம்மா முகத்தில் இருந்து பிறந்தவன் பிராமணன். தோளிலே இருந்து பிறந்தவன் சத்திரியன். தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன். காலிலிருந்து பிறந்தவன் சூத்திரன் என்று சொல்லுகிறீர்களே, இதற்கும் கீழே அய்ந்தாவது ஜாதி பஞ்சமன், பறையன், என்று எங்களுடைய சகோதரர்களை சொல்லி வைத்திருக்கின்றார்களே. கால் வரைக்கும் சொன்னீர்களே! இந்த பஞ்சமன் எங்கேயிருந்து பிறந்தான். உங்களுக்குத் தானே தெரியும்? என்று இப்படி ஒரு கேள்வி கேட்டார்கள்.

பெரியார் பட்டென்று பதில் சொன்னார்

பெரியார் இந்தக் கேள்வியைப் படித்தார். வயதானவர்களுக்குத் தெரியும். இளைஞர்களுக்குத் தெரியாது. இது எத்தனையோ முறை சொன்ன செய்திதான். இருந்தாலும் திரும்பத் திரும்ப சொல்லவேண்டியிருக்கிறது. அய்யா அவர்கள் பட்டென்று பதில் சொன்னார். அவன் தண்டா அவங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிறக்கவேண்டிய இடத்தில் பிறந்தவன் என்று சொன்னார். (சிரிப்பு கைதட்டல்).

அதாவது தலையிலிருந்து பிறக்க முடியுமா? தோளிலிருந்து பிறக்க முடியுமா? தொடையிலிருந்து பிறக்க முடியுமா? காலிலிருந்து பிறக்க முடியுமா? இயல்பாக, அதனால்தான் அவர்களைத் தனியாக வைத்திருக்கிறார்கள் போலியிருக்கிறது என்று சொன்னார். அப்படி ஒரு காலத்தில் இருந்த சூழ்நிலையை மாற்றி இன்றைக்கு இதிலே போய் சண்டை.

உன் மதத்தின் பெருமை உலகத்திற்குச் சொல்ல முடியுமா? உன் மதத்தினுடைய பெருமையை உலகத்திற்குச் சொல்லமுடியுமா? வெளிநாட்டுக்காரன் பார்த்து சந்தி சிரிக்கிற அளவுக்கு வந்ததே. இந்தச் சண்டையை மனிதர்களுக்குள்ளே போட்டுக்கொண்டால் பரவாயில்லை. மிருகத்து வரைக்குமா போவது? காஞ்சிபுரம் கோவில் யானைக்கு எந்த நாமம் போடுவது? வடகலை நாமமா? தென்கலை நாமமா?

ரொம்ப பேருக்கு வடகலை, தென்கலை என்றால் தெரியாது. அதாவது பாதம் வைத்த நாமமா? பாதம் வைக்காத நாமமா? என்பது தான் வடகலை தென்கலை என்பது.

நண்பர்களே, இந்த வழக்கு யாருக்கு? காஞ்சிபுரம் கோவில் யானைக்கு சிறீரங்கம் கோவிலிலே யானை இருக்கிறது. யானைக்கு நாமம் போட்டிருப்பான்.

வடகலை-தென்கலை

இதில் வடகலை நாமமா? தென்கலை நாமமா? என்ற சண்டை எவ்வளவு நாள் நடக்கிறது? 150 வருடங்களாக நடக்கிறது. இன்னமும் அந்த வழக்கு முடியவில்லை. நமது ஊர்களில் வழக்கு என்றால் அது எப்பொழுதுமே வெள்ளிவிழா, பொன்விழா, வைர விழா, நூற்றாண்டு விழாவை எல்லாம் முடித்து விடுவார்கள். வழக்கு போட்டவரும் இருக்கமாட்டார். வழக்கை விசாரித்தவரும் இருக்கமாட்டார். வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் வழக்கு மட்டும் இருக்கும். அதே மாதிரி காஞ்சிபுரம் யானைப் பிரச்சினை இருக்கிறது பாருங்கள், இது 150 வருடமாக இருக்கிறது. இதுவரையில் 5 யானை, 10 யானை மாறிப்போய் விட்டது. (சிரிப்பு _கைதட்டல்) ஆனால் அந்த வழக்கை நிறுத்தவே இல்லை, வெள்ளைக்கார நீதிபதிக்குப் புரியவில்லை

இப்பொழுதுதான் உச்ச நீதிமன்றம் என்றால் டில்லிக்குப் போகிறோம். இதற்கு முன்னால் பிரிவி கவுன்சில் என்ற வெள்ளைக்காரர்கள் அமைப்புதான் நீதிமன்றம். வெள்ளைக்கார நீதிபதிகள் House of Lords தான் பிரிவி கவுன்சில். இதில் வெள்ளைக்கார வழக்கறிஞர்கள் தான் இரண்டு கட்சிக்காரர்களுக்கும் வாதாடுவார்கள்.

வெள்ளைக்காரர்களுக்கு வடகலையும் தெரியாது. தென்கலையும் தெரியாது. நீதிபதி கேட்டார், ‘‘What is Vadakalai and Thenkalai. I Cant understand. சுருக்கமாக சொல்லுங்கள் என்று சொல்லுகின்றார். இவர்கள் அதில் இருக்கிறது. இதில் இருக்கிறது என்று எதை எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கறிஞர்களுக்கு இந்த மாதிரி புத்திசாலித் தனம்தான் வேண்டும். வழக்கு வெற்றி பெறுவதற்கு. அவர் உடனே சொன்னார். ஓ மை லார்டு மிக சுருக்கமாகப் புரியும்படி சொல்லிவிடுகிறேன் என்று அப்படியா? சொல்லுங்கள் என்று ஆங்கில நீதிபதியும் கேட்டார். These two fight between ‘Y’ and ‘U’ என்று சொன்னார் (சிரிப்பு) பாதம் வைத்த நாமம்

பாதம் வைக்காத நாமம்

ஏ.பி.சி.டி ஆகிய 26 எழுத்துகளில் அதாவது Y என்கிற எழுத்து பாதம் வைத்த நாமம். U என்கிற எழுத்து பாதம் வைக்காத நாமம். இன்றைய வரையில் அந்த சண்டை முடியவில்லை. நீதிபதி வீராசாமி அண்மையில் தான் இறந்தார். 95வயது வரைக்கும் இருந்தார். தலைமை நீதிபதியாக இருந்தவர். அவரிடம் ஒருமுறை இந்த வழக்கு வந்தது. அவர் ரொம்ப கெட்டிக்காரத்தனமாகச் சொன்னார். ஒருவாரம் இந்த நாமம் போடுங்கள். ஒருவாரம் அந்த நாமம் போடுங்கள் என்று சொன்னார்.

அப்படி சொல்லி கூட இந்த வழக்கு முடியவில்லை. இந்துக்களே ஒன்று சேருங்கள், ஒன்று சேருங்கள் என்று சொல்லுகின்றீர்கள். முதலில் இரண்டு நாமக்காரனையும் ஒன்று சேர்ப்பதை விட்டு விட்டு எங்களிடம் சண்டைக்கு வந்தால் என்ன அர்த்தம்?

தலித் ஒருவரை மாநிலத் தலைவராக ஆக்கத் தயாரா?

நேரடியாக விசயத்துக்கு வரவில்லை. அதற்கடுத்து கேள்வி கேட்கின்றான். தலித் ஒருவரை மாநில தலைவராக ஆக்கத் தயாரா? அதற்கு பதில் எங்களுடைய அறிவுக்கரசு பொதுச்செயலாளர் பதில் சொன்னார். நிச்சயமாகத் தயார். அவ்வளவுதானே பதில் வேண்டும். ஆக்கத் தயார் நாங்கள். எங்களிடம் யார் தலித்? யார் தலித் அல்லாதவர்கள் என்று நாம் பிரிப்பதே இல்லை.

தி.மு.க -தி.க

இந்த நாட்டிலேயே இருக்கின்ற அரசியல் கட்சிகளிலேயே ஆதிதிராவிடர் அமைப்பு, மீதி திராவிடர் அமைப்பு என்ற வேறுபாடே இல்லாத ஒரே அரசியல் கட்சி தி.மு.க. (கை தட்டல்). ஒரே சமுதாய இயக்கம் திராவிடர் கழகம்தான். இங்கே எல்லோரும் திராவிடர்கள் தான் என்றும் விளக்கம் சொன்னார். அந்த விளக்கம் ஒரு வேளை சமாதானம் ஆகவில்லையென்றால் நான் இன்னொரு விளக்கம் சொல்லுகின்றேன்.

காஞ்சிபுரத்தில் முதலில் நடக்கட்டும்

தயாரா? என்று கேட்டார். ஆக்கத் தயார். ஒரே ஒரு நிபந்தனை. என்றைக்கு காஞ்சிபுரத்தில் இருக்கிற சங்கரமடத்தில் ஒரு தலித் குருவாக அங்கு வருகிறாரோ. அடுத்த நாள் திராவிடர் கழகத்தில் தலித் என்று நீ யாரைச் சொல்லுகிறாயோ அவரை ஆக்கலாம். தலைவன் என்பது யானை கழுத்தில் மாலையிட்டு கொண்டு வருவதல்ல ஒரு இயக்கத்திற்கு. அடுத்த கேள்வி. மசூதிகளில் வழிபாடு நடத்தப் போராடத் தயாரா? தாராளமாக அவர்கள் தமிழில் வழிபாடு நடத்தத் தயாராக இருக்கின்றார்கள்.

செம்மொழி மாநாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ஒரு இஸ்லாமிய தலைவர் அல்ல. கலைஞர் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கக் கூடியவர். உலகத்தமிழ் செம்மொழிச் மாநாட்டில் மட்டும் நான்கைந்து தலைவர்கள் பேசினார்கள். வாய்ப்பு வந்தது என்றால் தாராளமாக செய்து விட்டு போகிறார்கள். இல்லையில்லை போராடித் தான் ஆக வேண்டும் என்று அக்கறை இருந்தால் நாங்கள் இதற்குப் போராடுகிறோம். நீங்கள் அதற்குப் போராடுங்கள் நமக்குள் பிரித்துக் கொள்வோம் வேலையை. அதனுடைய விளைவை நீ சந்தி. இதனுடைய விளைவை நான் சந்திக்கின்றேன். நமக்குள் எதற்கு சண்டை? முதலில் எங்கள் வீட்டில் இருக்கின்ற குப்பையை நான் சுத்தப்படுத்த வேண்டும். மசூதிக்குள் தேவநாதன் வேலை நடக்காதே!

நீங்கள், அந்தத் தெருவில் குப்பை இருக்கிறது. இந்தத் தெருவில் குப்பை இருக்கிறது என்று சொன்னால் என்ன அர்த்தம்? மசூதிக்குள் காஞ்சிபுரம் வேலை நடக்கவில்லையே, அதற்குரிய வாய்ப்புகள் கிடையாதே. (கை தட்டல்). முதலில் நீங்கள் அதைப்பற்றி அல்லவா கவலைப்பட வேண்டும்! கிறிஸ்துவத்திலும், இஸ்லாத்திலும் உள்ள மூட நம்பிக்கைகளைக் கண்டிக்கத் தயாரா? இந்தக் கேள்வியை சோ கூட என்னிடம் கேட்டார். ரொம்ப நாளைக்கு முன்னாலே. ஒரு வரியில் சொல்லுகிறேன்.

பிராக்கெட் போட்டிருக்கின்றோமோ?

பெரியார் அவர்களுடைய கடவுள் மறுப்பு வாசகத்தை நன்றாக கவனியுங்கள். கடவுள் இல்லை. கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள். கடவுளை பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்கு கிறவன் காட்டுமிராண்டி. என்பது தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகம்.

நான் இதையே அவருக்கு சொன்னேன். நாங்கள் ஏதாவது பிராக்கெட் போட்டு சொல்லியிருக் கின்றோமா? இந்து கடவுள் மட்டும் இல்லை. முஸ்லிம் கடவுள் உண்டு என்று போட்டிருக்கின்றோமா? இல்லை கிறிஸ்தவ கடவுள் உண்டு என்று போட்டிருக்கின்றோமா? கடவுள் இல்லை என்றால், எல்லா கடவுள்களும் இல்லை என்பதுதானே அதற்கு அர்த்தம்! அவர் கவலைப்படவில்லை. கடவுளுக்கு உருவம் இல்லை என்பது அவருக்கு தெரியும். ஏனென்றால் அவர் எங்களிடம் கோபித்துக் கொள்வதில்லையே. இன்னொருத்தர் பரம மண்டலத்திலிருக்கிற பரமபிதாவே என்று சொல்லிக் கொண்டு போகிறார். அவர் கோபித்துக் கொள்வதில்லையே.

ஒரு கடவுளுக்கு துதிக்கை இருக்கிறது. இன்னொரு கடவுள் அந்தத் துதிக்கையை எங்கேயோ விட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு கடவுள் வேறு விதமாக இருக்கிறது. ஆயிரம் கடவுள்கள்.

மூடநம்பிக்கை எங்கிருந்தாலும் எதிர்ப்பதுதான்

எனவே மூட நம்பிக்கையை எங்கிருந்தாலும் எதிர்ப்பதுதான் எங்களுடைய வேலை. அதற்கு விதி விலக்கே கிடையாது. அது நித்யானந்தாவாக இருந்தாலும் சரி, இன்னொரு ஆனந்தாவாக இருந்தாலும் சரி, சங்கராச்சாரியாராக இருந்தாலும் சரி. ஒரே அளவுகோல்தான். எங்களிடம் இரண்டு அளவுகோல் கிடையாது. சிலை வழிபாடு கூடாது. எனில், பெரியாருக்கு சிலை வைத்தது ஏன்? இது பெரிய கண்டுபிடிப்பய்யா (சிரிப்பு கைதட்டல்)

இந்த கேள்வியைக் கூட சரியாக எழுதத் தெரியவில்லை. அதற்காகத்தான் நான் வருத்தப் படுகிறேன். சிலை வழிபாடு கூடாது

சிலை வழிபாடு கூடாது என்பது. எங்களுடைய கொள்கை. இன்னமும் அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. நாங்கள் பெரியார், அண்ணா ஆகியோருக்கு சிலை வைப்பது வழிபாட்டிற்கா? இல்லை, அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கு!

பின்பற்றுவது வேறு, வழிபாடு வேறு, நாங்கள் பெரியாருக்கு சிலை வைத்து விட்டு இதனால் கரூர் மக்களுக்கு அறிவிப்பது யாதெனில் யார் யாருக்கு குழந்தை இல்லையோ அவர்கள் எல்லாம் பெரியார் சிலையை ஒரு முறை சுற்றி வந்தால் உடனடியாக கர்ப்பம் தரிக்கும் என்பதற்காகவா பெரியார் சிலை வைத்திருக்கின்றோம்.

அல்லது யார் யாருக்கு வறுமை இருக்கிறதோ அவர்கள் எல்லாம் பெரியார் சிலையை ஒருமுறை சுற்றி வந்து அட்சய திரிதியை அன்றைக்கு தங்கம் வாங்கினால் குட்டி போடும் என்று சொல்லுகிற மாதிரி ஏதாவது நடக்குமா? கிடையாது. நீங்கள் இப்படி ஒரு கேள்வி கேட்டு, இப்படி ஒரு வாய்ப்பை, கொடுத்தமைக்காக முதற்கண் உங்களுக்கு நன்றி.

------------------தொடரும் “விடுதலை” 10-7-2010

2 comments:

ssk said...

தமிழர் தலைவர் இவ்வளவு தெளிவாக சொல்லியும் மக்கள் ஏற்க மறுப்பது முளை சங்கிலியலே... என்று அறும் இந்த மூளை சங்கிலி..பிறக்கும் குழந்தைக்கு கடவுளை தெரியாது.. பெரியவரை பார்த்து கற்று கொள்கிறது.. பெரியவர்கள் தெளிந்தால் சரியாகலாம்.
கடவுள் இல்லை என்று கூட்டம் போட்டு சொல்லியும் (இல்லாத) கடவுளுக்கே கோபம் வராதபோது இங்குள்ள மனிதருக்கு கோபம் வருவதேன்.. பார்பனுக்கு பிழைப்பு கெடுகிறது.. மற்றவருக்கு?

ttpian said...

உங்கள் கட்டுரை சில வார்த்தைகள் யோசிக்கவேண்டியவை !
ஆனால், காலம் கடந்துவிட்டதுபோல் தோன்றுகிறது!
நமக்கு முன்பே சிங்களன் பேசி விட்டானே?