Search This Blog

15.7.10

காங்கிரஸ்காரனை எப்படி பெரியார் ஆதரிக்கலாம்?



( பச்சைதமிழர் காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ,பெரியார் அவர்கள் காமராசர் அவர்களைப் பற்றியும், அவரின் ஆட்சியைப் பற்றியும் ஆற்றிய சொற்பொழிவை இங்கு பதிவு செய்கிறோம். படியுங்கள்! உண்மையை உணருங்கள்!! ---நன்றி)


பார்ப்பனரின் பலமிக்க ஆயுதம் கடவுளும் - மதமுமே!

தோழர்களே! நான் பொதுத் தொண்டு பேரால் பிழைக்க வேண்டிய நிலையில் இல்லாது, போதுமான அளவு வசதி உள்ளவன் பொதுத் தொண்டுக்கு வந்தேன் என்றாலும் பொதுத் தொண்டால் நான் பெருமை பெற்றேன் என்று கூறுவதைவிட, பொதுத் தொண்டு என்னால் பெருமை பெற்றது என்று எண்ணும்படியே இருந்து வந்துள்ளது. நான் ஒன்றும் கிணற்றுத் தவளையாக எதையம் எடுத்துச் சொல்லவில்லை. உலகின் பல பாகங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து நாட்டில் என்னுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லி வருபவன்.

நாட்டில் ஒருவன் திருடனாகவோ, ஒழுக்கக் கேடாகவோ நடந்து கொண்டாலோ நான் அதுபற்றிக் கவலைப்பட மாட்டேன். ஏதோ ஏமாந்தவன் இருந்தான். இவன் அடித்துக் கொண்டான் என்று எண்ணுவேன். ஒருவன் ஒழுக்கக்கேடாக நடந்தான் என்றால் அவனுக்குப் பொதுமக்கள் புத்தி கொடுப்பார்கள் என்று கருதிக் கொள்வேன்.

ஆனால், பொதுவாழ்வின் பெயரால் ஒழுக்கக் கேடாக, வஞ்சகராக, திருடர்களாக நடப்பவர்களை ஒருநாளும் நாம் விட்டு வைக்கக் கூடாது.

தோழர்களே! நாம் (திராவிடர்) இப்படி இழி மக்களாகக் காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம் என்றால், இந்தப் பார்ப்பன சாதி இந்த நாட்டில் இருப்பதால்தான். வெளிநாடுகளில் பார்ப்பான், பறையன் சாதி இழிவுகள் இல்லை என்றால் அங்குப் பார்ப்பான் இல்லாததுதான் காரணம்.

தோழர்களே! சிலர் நினைக்கலாம் 'என்ன இந்தப் பெரியார் 100 க்கு 3 பேர் உள்ள பார்ப்பானையே சும்மா ஒழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று கூறித் திரிகின்றாரே' என்று. துப்பாக்கிப் பிடித்த 3 பேர் முன்பு 97 துப்பாக்கி இல்லாத நிரபராதிகள் என்ன செய்ய முடியும்? துப்பாக்கி கண்டு ஓடவேண்டும் அல்லது அடிபணிய வேண்டும். இதுதானே நடக்கக் கூடியது. அதுபோலவே, பார்ப்பனர்களின் கையில் கடவுள், மதம், சாஸ்திரங்கள், அரசியல் என்ற துப்பாக்கிகள் உள்ளன. இதற்குப் பயந்து, அடிபணிந்துதான் 97 பேராக உள்ள நாம் அடிமையாக இருந்து வருகின்றோம். எனவே, நமது இழிநிலை மாற நாம் வாழ்வு பெற மானம் உள்ள மனித இனமாக ஆக, இந்தப் பார்ப்பனர்களின் ஆயுதங்களான கடவுள், மதம், சாஸ்திரம், அரசியல் ஆகிய ஆயுதங்களை எல்லாம் ஒடிக்க வேண்டியதை ஒடித்து எறிய வேண்டும். ஒடிக்க முடியாததைக் கூர் மழுங்கும்படியாவது செய்ய வேண்டும். அவர்கள் கையில் இருந்து பிடுங்க முடிகின்றதைப் பிடுங்கி ஆகவேண்டும். புராணக் காலத்தில், பார்ப்பனர்களின் எதிரிகளான இரணியன், இராவணன், சூரபத்மன் முதலியவர்களை ஒழிந்ததுபோல இன்று இந்தப் பார்ப்பனர்களால் எங்களை ஒன்றும் அவ்வளவு எளிதில் ஒழித்து விட முடியாது. எந்த முயற்சி செய்தாலும் தோல்வியே அடைவார்கள்.

தோழர்களே! இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் வருகின்றது. இதில் பார்ப்பனர்கள் எல்லாரும் காங்கிரசை ஒழிக்க வேண்டும், காமாசரை ஒழிக்க வேண்டும் என்று பாடுபடுகின்றனர். மற்றக் கட்சிக்காரர்களையும் தங்கள் காலடியில் விழும்படிச் செய்து, அவர்களையும் கூட்டிக் கொண்டு பிரயத்தனப்படுகின்றனர்.

நாங்கள், காமராசர் அரசாங்கம் நம் மக்களுக்குச் செய்து வந்து இருக்கும் சாதனைகளை எல்லாம் எடுத்துச் சொல்லிக் காமராசரும், காங்கிரசும் வெற்றி பெற வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றோம்.

உண்மையிலேயே இந்தப் பார்ப்பனர்கள் காமராசரையும், காங்கிரசையும் ஒழிக்க வேண்டும் என்றுக் கூப்பாடு போடுகிறார்களே! இவர்கள் "காங்கிரசை மக்கள் தேர்தலில் ஆதரிக்க வேண்டும், காமராசர் அமைச்சரவை ஏற்பட வேண்டும்" என்று கூறிவரும் எனக்கு அல்லவா பதில் சொல்ல வேண்டும்? நான் பேசுவது தவறு; இந்த இடத்தில் தவறு என்று அல்லவா எடுத்துக் காட்ட வேண்டும்? ஆனால், இந்தப் பார்ப்பனர்கள் என்னிடம் ஒன்றும் பேச முடியாமல், எனக்குப் பதில் சொல்லாமல், நான் காங்கிரசை ஆதரிக்கிறேன் என்ற காரணத்திற்காகக் காங்கிரஸ்காரனிடம் போய் முட்டிக் கொள்கின்றனர். காமராசரையும், காங்கிரசையும் அழிக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர்.

"காங்கிரஸ்காரனை எப்படி இராமசாமி ஆதரிக்கலாம் அவனை ஆதரித்துப் பேச ஏன் இந்தக் காமராஜர் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்? இந்தக் காமராஜர் ராமசாமியுடன் அல்லவா சேர்ந்து கொண்டது. எனவே, ஒழித்தாக வேண்டும்" என்று கூப்பாடு போடுகின்றனர் - பத்திரிகையில் எழுதுகின்றனர்.

இந்தப் பார்ப்பனர்களும், பத்திரிகைகளும் என்னை எதிர்த்துப் பார்த்து முனை மழுங்கிவிட்டனர். என்னிடத்தில் அவர்கள் ஆயுதங்களைச் செலுத்த முடியவில்லை. எனவே காமராசர் மீதும், காங்கிரஸ் மீதும் தங்கள் ஆயுதங்களைச் செலுத்தி ஒழிக்கப் பாடுபடுகின்றனர்.

நீங்கள் நன்கு சிந்திக்க வேண்டும். நான் ஆதரித்து எவரின் வேண்டுகோளும் இன்றிப் பிரச்சாரம் செய்கின்றேன் என்றால், அதற்காகக் காங்கிரஸ் மீதும், காமராசர் மீதுமா முட்டிக் கொள்வது?

தோழர்களே! எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. எங்கள் பக்கத்தில் வேளாளக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர் என்ற இரண்டு சாதிகள் உண்டு. வேட்டுவக் கவுண்டர்கள் கொஞ்சம் முரடர்கள்; வேளாளக் கவுண்டர்கள் சற்றுப் பயந்த சுபாவம் உடையவர்கள். ஓர் இடத்தில் வேளாளக் கவுண்டனுடைய பிள்ளையார் இருந்தது. ஒரு வேட்டுவக் கவுண்டன் அந்தப் பிள்ளையார் தலையில் கால் பாடுபடிக் காலை நீட்டிப் படுத்து இருந்தான். அந்தப் பிள்ளையார், அந்த வேட்டுவக் கவுண்டனை "ஏண்டா இப்படிச் செய்கின்றாய்?" என்ற கேட்பதை விட்டு விட்டு, வேளாளக் கவுண்டனிடம், "கவுண்டா! கவுண்டா! இந்த வேட்டுவக் கவுண்டன் என் மூஞ்சில் கால்படும்படிக் காலை நீட்டிக் கொண்டு படுத்து இருக்கின்றான். நீ அந்த வேட்டுவக் கவுண்டன் காலை எடுக்கச் சொல்லுகின்றாயா இல்லையா? இல்லாவிட்டால் உன் கண்ணைக் குத்திவிடுவேன்" என்ற மிரட்டியதாம். நீங்கள் சிந்திக்கணும். காலை நீட்டி இருக்கும் வேட்டுவக் கவுண்டன் காலை மடக்கச் சொல்லச் சக்தியற்ற இந்தப் பிள்ளையார், பயந்த சுபாவம் உடைய வேளாளனை எப்படி மிரட்டுகின்றதோ, அதுபோலத்தான் இந்தப் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனமும் உள்ளது. கடவுள், மதம், சாஸ்திரங்கள் முதலியவற்றை ஒழிக்க நான் பார்ப்பனர்களை வெளுத்து வாங்குகின்றேன். இவைகளின் புரட்டுப் பித்தலாட்டங்களை எல்லாம் அம்பலப்படுத்திக் கொண்டு வருகின்றேன். காமராசர் ஆட்சியின் காரணமாக நாம் அடையும் நன்மைகளை எல்லாம் எடுத்துக்காட்டிக் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்று கூறிவருகின்றேன்.

இதற்காக என்னை எதிர்க்கத் தைரியமில்லாத இந்தப் பார்ப்பனர்கள் பயந்து சுபாவம் உடைய காங்கிரஸ்காரனையும், காமராசரையும் பார்த்துக் கூறுகின்றார்கள். "இராமசாமி நாய்க்கன் ஏன் உன்னை ஆதரித்துப் பேசுகின்றான்? அவனை நிறுத்தச் சொல்லுகின்றாயா? அல்லது அவனுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை விடுகின்றாயா? என்ன? இல்லையானால் உன்னை ஒழித்துவிடுவேன்" என்று மிரட்டுகிறார்கள். பத்திரிகையில் நாள் தவறாமல் எழுதியும் கேலிச் சித்திரங்கள் தீட்டியவண்ணமும் ஆகவே இருக்கின்றனர். காமராசர் கூறுகின்றார். "அவரை எங்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யச் சொல்லி நாங்கள் ஒன்றும் கேட்கவில்லை. அவராகவே ஆதரித்தால் நான் என்ன செய்யட்டும்?"

"நான் செய்யும் காரியங்கள் எல்லாம் அவருடைய கருத்துக்கு அவருக்குச் சரி என்று படுகின்றன. ஆகவே அவைகளை எல்லாம் புகழ்ந்து பிரச்சாரம் செய்கின்றார். அதற்கு நான் என்ன செய்யட்டும்?" என்கிறார். அவ்வளவு தான் அவரால் சொல்ல முடியும். ஆதரித்தால் என்னடா தப்பு என்று அவரால் சொல்ல முடியாது?

என்னைப் பார்த்து, "நீ தான் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று கூறியவன் ஆயிற்றே, ஏன் இன்று அந்தக் காங்கிரசை ஆதரிக்கின்றாய்?" என்று எவனுமே கேட்க மாட்டான். எங்கோ சந்திலோ பொந்திலோ புரியாத மக்களிடம் உளறுவான். என்னைக் கேட்கமாட்டான். கேட்டால் பட்டென்று கூறுவேன்.

"ஏன்டா, இராஜாஜீ, அன்று காங்கிரஸ் வாழவேண்டும் என்று பாடுபட்டாரே; காங்கிரசில் யாருமே வகிக்காத கவர்னர் ஜெனரல் முதலிய பதவிகள் பெற்றாரே; அவர் ஏன் அந்தக் காங்கிரசை இப்போது ஒழிக்க வேண்டும் என்று அவரைப் போய்க் கேட்டு விட்டு வா; பிறகு, நான் ஒழிக்க வேண்டும் என்ற முதலில் கூறிய காங்கிரசை, ஏன் இன்று ஆதரிக்கின்றதற்கான காரணங்களைச் சொல்லுகின்றேன்" என்று தான் கூறுவேன்.

-------------------- 06-02-1961- அன்று திருச்சி கீரனூரில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு- “விடுதலை”, 17-02-1961

0 comments: