தமிழ்நாடு
தமிழ்நாடு என்று மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்தப் பேரவை உறுதியாகக் கருதுவதுடன், இதுகுறித்து அரசியல் அமைப்புச் சட்டத்தில் தேவை யான திருத்தங்களைச் செய்வதுடன், அதற்கான யாவும் செய்யும்படி மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த அவை பரிந்துரைக்கிறது
என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட வரலாற்றுப் பொன்னாள் இந்நாள்! (1967)
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு வாழ்க! என்று சொல்ல அனைத்து உறுப்பினர்களும் மும்முறை அவ்வாறே முழங்கினார்கள்.
இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் நமது பேரக் குழந்தைகள் நம்மைப் போற்றும் வகையில் தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்றார். அவ்வாறே நிறைவேற்றிக் கொடுக்கவும்பட்டது.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று, 23.11.1968 அன்று நாடாளுமன்றத்திலும் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நிறைவேற்றப்பட்டது.
சென்னை பாலர் அரங்கில் (கலைவாணர் அரங்கில்) தமிழ்நாடு பெயர் மாற்ற விழாவில் அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பிய பின்னர் முதல் அமைச்சர் அண்ணா கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியாகும் இது. (1.12.1968)
அண்ணாவின் உடல் நலனை உத்தேசித்து இந்த விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறிய நிலையிலும் அண்ணா அதற்கு உடன்படவில்லை. இத்தகைய வாய்ப்பு ஒருவரது வாழ்க்கையில் ஒருமுறைதான் வரும். இன்றைய தினம் நான் பேசுவதால் இந்த உடலுக்கு ஊறு நேருமென்றால், இந்த உடல் இருந்தே பயன் இல்லை என்று மருத்துவர்களிடமும் நண்பர்களிடமும் சொன்னதாக இந்த விழாவிலே முதல் அமைச்சர் அண்ணா குறிப்பிட்டார்.
ராஜாஜி அவர்கள் இதில் குறுக்குச்சால் ஓட்டினார். Tamilnadu என்பதற்குப் பதிலாக Tamilnad என்று இருக்க வேண்டும் U என்ற எழுத்து தேவையில்லை என்றார். அதாவது நாடு (NADU) என்று வந்து விடக் கூடாது என்பதில் ஆச்சாரியார் மிகக் கவனமாக இருந்தார். ஆனால் அண்ணா அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த நேரத்தில் இன்னொன்றையும் மறக்காமல் பதிவு செய்ய வேண்டும். காங்கிரஸ்காரரான தியாகி சங்கரலிங்கனார் தமிழ்நாடு என்னும் பெயர் மாற்றம் கோரி 27.7.1956 அன்று பட்டினிப் போராட்டம் மேற்கொண்டு 10.10.1956 அன்று உயிர் நீத்தார். அந்தப் பெருமகனாரையும் இந்நாளில் நினைவு கூர்வோம்!
--------------மயிலாடன் அவர்கள் 18-7-2010 “விடுதலை” யில் எழுதியில் எழுதிய கட்டுரை
1 comments:
ராஜாஜி பற்றி குறிப்பிட்ட நீங்கள் சங்கரலிங்கனார் பற்றியும் குறிப்பிடுவதில் உங்களது நேர்மை புலனாகிறது தோழர் ...
Post a Comment