Search This Blog

2.7.10

பூஜை வேளையில் தமிழில் பேசினால் தோஷமாம்!

கரூரில் கர்ச்சனை!

கருஞ்சிறுத்தைகளே கழகத் தோழர்களே, தமிழின உணர்வுள்ள பெருமக்களே, மொழி மானம் போற்றும் மூத்த தமிழ்க் குடி மக்களே!

கோவை உலகத் தமிழ் மொழி மான மீட்பு மாநாட்டுக்குப் பின் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் உங்களையெல்லாம் கரூருக்கு அழைக்கிறார்.

காரணம் என்ன?

தமிழை நீஷ பாஷை என்று சொல்லும் ஒரு கூட்டம் இன்னும் தமிழ் மண்ணில் இருக்கத்தான் செய்கிறது.

தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் வந்து குதிக்குமா? என்று தமிழை தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் கொச்சைப்படுத்தும் குள்ளநரிகள், அன்றாடம் ஊளையிட்டுக்கொண்டுதான் திரிகின்றன.

பூஜை வேளையில் தமிழில் பேசினால் தோஷம் என்கிற ஜெகத்குருக்களும் நாட்டில் உண்டு.

தமிழில் பேசும் ஒவ்வொரு முறையும் தமிழ்ப் பேசிய தோஷத்தின் காரணமாகக் குளியல் போடும் காமக்கோடிகளும் உண்டு.

தமிழ் அர்ச்சனை மொழி என்றால் எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற வி.எஸ்.சிறீகுமார்கள் யார்?

தமிழர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட அர்ச்சகர் ஆக உரிமையுண்டு என்று அரசு சட்டம் செய்தால், உச்சிக்குடுமி மன்றம்வரை சென்று உலுக்கும் உளுத்தர்கள் யார்? யார்?

இதே கரூரையடுத்த திருமுக்கூடலூரில் உள்ள சிவன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்ததால் கோயில் தீட்டாகிவிட்டது என்று தீக்குழியில் விழுந்ததுபோல துடிதுடித்தவர்கள் யார்?

கோயிலை இழுத்துப் பூட்டி தோஷம் கழித்த துன்மார்க்கர்கள் யார்?

அந்தக் கரூரில்தான் இந்து முன்னணியினர் மாநாட்டை நடத்தியுள்ளனர்.

செம்மொழி மாநாட்டை வரவேற்றுத் தீர்மானம் போட்டதுண்டா? கோயிலில் தமிழ்தான் வழிபாட்டு மொழி என்ற கோரிக்கைதான் உண்டா? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பு உண்டா?

பாலைவனத்தில் பலாவை எதிர்பார்க்க முடியுமா? பார்ப்பனர்களிடத்தில் பைந்தமிழ்பற்றி பரப்புரையைத்தான் காண முடியுமா?

குதிரை குப்புறத் தள்ளினாலும் பரவாயில்லை, குழியும் பறிக்கிறது என்றால் சும்மாவிட முடியுமா?

இந்து முன்னணியினர் கரூரில் ஊர்வலம் நடத்தி மானமிகு முதலமைச்சர் கலைஞர் உருவம் தாங்கிய செம்மொழி மாநாட்டுப் பதாகைகளை எல்லாம் கீழே தள்ளிப் பந்தாடியிருக்கின்றனர்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையும் கடித்த மிருகம் போல ஆடித் தீர்த்துள்ளனர். தி.மு.க. தொண்டர்களை,பிரமுகர்களைத் தாக்கியும் இருக்கின்றனர்.

தூங்கும் புலியை இடறிப் பார்த்துள்ளனர். தி.மு.க. மட்டுமல்ல - கட்சிகளைக் கடந்த தமிழர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பு.

திராவிடர் கழகம் உடனடியாக ஒரு மாநாட்டை நடத்தாதா என்று எதிர்பார்த்த நிலையில், மிகவும் ஆச்சரியமாக அதே நேரத்தில் கரூரில் கழக மாநாடு என்று கழகத் தலைவர் அறிவித்தாரே அடடே! கரூர் வட்டாரத்தில் எத்துணை கலகலப்புத் தெரியுமா?

எப்பொழுது வரும் ஜூலை 6 என்ற எதிர்பார்ப்பு. இன எதிரிகளே வீதிக்கு வந்து ஏளனம் செய்யும்போது இனமானத் தமிழர்கள் ஏதிலிகளாகத் திண்ணையில் உறங்கிக் கிடக்கலாமா?

சோற்றால் அடித்த பிண்டங்களா நாம் சுருண்டு கிடப்பதற்கு?

கிளம்பிற்றுக் காண் தமிழினத்தின் சிங்கக் குட்டிகள் என்று நாடே வியப்புக் குறியாய் எழுந்து நிற்க,

கழகக் குடும்பத்தினரே, இனமானத் தமிழர்களே,

கரூர் கருங்கடலாயிற்றோ என்று கருதும் வண்ணம் கூடுவீர்! கூடுவீர்!!

நமது அடுத்த நிலையம் கரூர்தான். விடுப்பு எடுப்பதாக இருந்தாலும், வீட்டு வேலைகளாக இருந்தாலும், இப்பொழுதே அதைப் பற்றி சிந்தித்துப் பயணத்திற்கு ஆயத்தமாகுங்கள்!

கர்ச்சனை முழக்கத்தால் கரூர் நகரமே காதடைத்துப் போகட்டும்! வாரீர்! வாரீர்!!

--------------- மின்சாரம் அவர்கள் 30-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: