Search This Blog

26.7.10

பக்தர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!


நாம் வணங்கும் கடவுள்கள்

நாம் கடவுளை வணங்குகின்றோம் என்றாலும் பல கடவுள்களை வணங்குகின்றோம்.

இவற்றுள் உயர் கடவுள்கள் மூன்று, அவர்கள் சிவன், விஷ்ணு, பிரம்மா (மும்மூர்த்திகள்) ஆவார்கள். இம்மூவருள் இருவரையே சிறந்தவர்கள் ஆகக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்கள் சிவன் விஷ்ணு என்பவர்கள் ஆவார்கள். இவர்கள் இருவர்களேயானாலும் இவ்விருவர்களும் பல உருவங்களையும் பல பிறவிகளையும் பல பெயர்களையும் கொண்டவர்கள் ஆவார்கள்.

அதோடு கூடவே பல தனிப்பட்ட செயல்களைக் கொண்டு அவற்றிற்கு ஏற்ற உருவங்களைக் கொண்டவர்கள்.

இவ்விரு கடவுள்களும் அவை சம்பந்தப்பட்ட ஆதாரங்களின்படி ஒருவரோடொருவர் போட்டி, பொறாமை, ஒருவரைவிட ஒருவர் பெரியவர் என்கின்ற அகம்பாவமான கருத்துக் கொண்ட விரோதபாவம் உடையவர்களாகவே இருந்து இருக்கிறார்கள். அவை மாத்திரம் அல்லாமல் இவர்களைக் கடவுள் என்று சொல்லும்படியான லட்சணத்திற்குச் சிறிதும் பொருத்தமில்லாததான பல எதிரிகளைக் கொண்டு எதிரிகளோடு போர் புரிந்தும் பலரைக் கொன்றும் பல ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்தவர்களாகவும் ஆதாரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவர்களது வாழ்வும் ஒரு சாதாரண மனித வாழ்வாகவே இருந்து வருவதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது.

இப்படிப்பட்ட நிலையிலேயேதான் நமது நாட்டில் இருந்து வருகின்ற பல்லாயிரக்கணக்கான கோயில்களில் அமைத்திருக்கும் கடவுள் தன்மைக்கு ஏற்ற இலட்சணத்தோடு கூடியதாக ஒரு கோயிலாவது அமைக்கவே இல்லை.

ஆகவே, நாம் வணங்கும் இப்படிப்பட்ட கடவுள்கள் சிறு தெய்வங்களா? துஷ்டதேவதைகளா? அல்லது உண்மையான தெய்வங்களா என்பது விளக்கப்பட வேண்டியதாகிறது.

இன்றைய காலம் விஞ்ஞானக் காலம் என்பதோடு அறிவு ஆராய்ச்சிக் காலமாகும். மக்கள் சமுதாயத்திற்கு ஒரு கடவுள் இருக்கவேண்டியது அவசியம் என்ற தத்துவத்திற்கு ஏற்பக் கடவுள் உணர்ச்சியை மக்களுக்குள் ஏற்படும்படிச் செய்ய வேண்டியது இன்றியமையாதது என்றால் இன்றைய மனித நிலைமைக்கு ஏற்றபடி அதை மக்களுக்கும் பழக்கினால் ஒழிய மற்றப்படி அந்தந்தத் தத்துவம் நிறைவேறுவதோ பயன்படுவதோ, எளிதான காரியமாகாது என்பதே எனது கருத்து.

இது சமய ஆச்சாரியர்களால் அவசியம் கவனிக்கவேண்டிய காரியமாகும். அப்படிக்கில்லாமல் மேற்கண்ட மாதிரியான கடவுள் தன்மைகளுக்குத் தத்துவார்த்தங்கள் சொல்வதும், சமயச் சம்பிரதாயங்களை வலியுறுத்துவதுமான காரியங்களில் பயத்தைக் கொண்டும், பேராசையைக் கொண்டும் பெரும்பான்மையான மக்களை மேற்கண்ட கடவுள் தன்மைகளை ஏற்க, நம்பச் செய்வது என்பது கஷ்ட சாத்தியமான கரியமாகவே முடியும் என்று கருதவேண்டி இருக்கின்றது.

இது ஒரு புறம் இருக்கக் கோயில்களில் கடவுள் பூசனைகளில் இருகுறைபாடுகள் மக்களுக்குப் பெரும் மானக்கேடான காரியமாக இருந்து வருகின்றது.

அவை: ஒன்று கடவுள் பூசைகளின் போது சொல்லப்படும் தோத்திரச் சொற்களைத் தமிழில் சொல்லாமல் நாட்டுக்கும், நாட்டு மொழிக்கும் சம்பந்தமில்லாத சமஸ்கிருத மொழியில் சொல்வது.

எந்த விதத்தில் பூசாரி பக்தனைவிட உயரந்தவனாக இருக்கின்றான்?
ஒழுக்கத்திலோ, நாணயத்திலோ, உடல் சுத்ததிலோ மேம்பட்டவன் என்று
யாராவது எந்தப் பூசாரியையாவது குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா?

மற்றொன்று:- வழிபடுகின்றவர்களைக் கடவுள் இருக்கும் அறைக்குள் சென்று வழிபட அனுமதிக்காமல் வெளியில் நின்றே வழிபட வேண்டும் என்று சொல்லி இழிவுபடுத்துவது.

பின்னையதானது முன்னையதைவிட மிகவும் சிந்திக்க வேண்டிய காரியமாகும். ஏனெனில், பின்னையது அதாவது கடவுள் இருக்கும் அறைக்குள் வழிபடுபவர் பக்தர் செல்லக்கூடாது என்று தடைவிதித்திருப்பது வெறும் பிறவியைக் காரணமாய் வைத்துத் (ஜாதி காரணமாய்) தடுப்பதைத் தவிர வேறு காரணம் ஒன்றும் இருப்பதாகக் கொள்ளமுடியவில்லை.

ஏனெனில், பூசாரிக்கும் பக்தனுக்கும் உள்ள பேதம் என்னவென்று பார்த்தால் பிறவியை ஜாதியைத் தவிர எதுவும் தடையாக இருக்கவில்லை. எந்த விதத்தில் பூசாரி பக்தனைவிட உயர்ந்தவனாக இருக்கின்றான்? ஒழுக்கத்திலோ, நாணயத்திலோ, உடல் சுத்தத்திலோ மேம்பட்டவன் என்று யாராவது எந்தப் பூசாரியையாவது குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா? அன்றியும் இந்தப் பழக்கம் வடநாட்டுக் கோயில்கள் பலவற்றில் இல்லாமல் இருக்கின்றதையும் கண்டுவந்திருக்கின்றேன்.

நாம் மக்களுள் பிறவியால் உயர்வுதாழ்வு இல்லை என்பதையும் இருப்பதாகக் காணப்படுவதை ஒழிக்க வேண்டுமென்பதையும் கொள்கையாகக் கொண்டவர்கள் என்பதோடு, பலர் கடவுளுக்கு முன்னால் மக்கள் யாவரும் சமம் என்கிற கொள்கை உடையவர்களாகவும் இருக்கின்றோம். இந்த நிலையில் பிறவி உயர்வு, தாழ்வு (ஜாதி) முறையைக் காப்பாற்றவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற காரியமான கோயிலில் கடவுள் அறைக்குள் ஒரு ஜாதி மக்கள் போகக்கூடாது என்று தடுத்து வைத்திருப்பதை எதற்காகப் பொறுத்துக் கொண்டு நாங்கள் கீழ் பிறவி (ஜாதி) மக்கள் என்று தங்களை ஆக்கிக் கொண்டு இருப்பது என்பது அதுவும் இன்றைய நிலையில் இருப்பது என்பதைச் சிறிது சிந்தித்தாலும் அது ஒரு மாபெரும் மானக்கேடான விஷயமாகவே எனக்குக் காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினையினை நான் வலியுறுத்துவதில் இதில் கடவுள் உண்டா இல்லையா என்கிற பிரச்சினை சிறிதும் சம்பந்தப்படவில்லை என்பதை வலியுறுத்திக் கூறுகின்றேன். அது ஒவ்வொரு மக்களுடைய சொந்த விஷயம். ஆனால், மானக்கேடு என்பது எல்லா மக்களையும் பொறுத்த விஷயமாகும்.

இந்த நிலையில் பக்தர்கள் கோயிலுக்குப்போவது என்பதை நான் தடுக்க ஆசைப்படவில்லை. ஆனால், கடவுளை வணங்கக் கோயிலுக்குப் போவதாலேயே தன்னுடைய பிறவியை இழி பிறவியாக ஆக்கிக் கொள்ளத் துணிகின்றானே என்பதைப்பற்றித்தான் நான் கவலைப்படுகின்றேன்.

கடவுளைக் கும்பிட வணங்க பிரார்த்திக்கக் கோயிலுக்குப் போகவேண்டும் என்கிற அவசியம் என்ன? அவர் அவர் வீட்டிலேயே இருந்துகொண்டு ஏன் வணக்கம் பிரார்த்தனை செய்யக் கூடாது? உருவக் கடவுள் வேண்டுமென்றாலும்கூட அதையும் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமே! நீ கடவுள் அறைக்குள் வந்தால் கடவுளுக்குத் தீட்டு ஏற்பட்டுவிடும்: தீட்டுக்கழிக்கும் காரியம் செய்யாவிட்டால் கடவுள் சக்தி போய்விடும் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கோயிலுக்கு ஏன் போக வேண்டும்? அப்படிப் போகின்றவன் மானம் இல்லை; ஈன உணர்ச்சி இல்லை; நான் ஈனப்பிறவி இழிமகன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்; கீழ்மகனாக. மான மற்றவனாக இருக்கச் சம்மதிக்கிறேன் என்ற துணிவு கொண்டவனாவான் என்பதைத் தவிர வேறு என்ன கருத்தைக் கொண்டவனாவான்?

பழி என்றால் மானக்கேடு என்றால் இழிவு என்றால் உயிர் விடவும் வேண்டும் என்ற நீதிக்கு ஆளாக வேண்டிய தமிழ் மகன் வலியப்போய் இழிவையும் பழியையும், மானக்கேட்டையும் சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றான் என்றால் இதற்குச் சமயத்தின் பேரிலும் கடவுளின் பேரிலும் சாக்குச் சொல்வதென்றால் அது எப்படி அறிவுடைமையாகும்?

இதைப் பக்தர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

-------------------தந்தை பெரியார் "தமிழகம்" பொங்கல் மலர்

0 comments: