சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் தலைவாசல் சுற்று வட்டாரத்தில் ஒரு வதந்தீ பரவியது. சமயபுரம் மாரியம்மன் கோயில் பெண் சாமியின் தாலி கழன்று கீழே விழுந்துவிட்டது; அதனால் அண்ணன்மார்களுக்கு ஆகாது என்ற வதந்தீதான் அது.
உடனே என்ன செய்தார்களாம்? அண்ணிக்குத் தாலிக் கயிறு, புடவை வாங்கிக் கொடுத்துப் பரிகாரம் தேடிக் கொண்டு இருக்கிறார்களாம். கடந்த 10 நாள்களாக அந்த வட்டாரத்தில் வீடுகள்தோறும் அண்ணனின் மனைவிக்கு அவர்களின் மைத்துனியும், கொழுந்தனும் சிவப்புப் புடவை, தாலிக் கயிறு, ஜாக்கெட் துணி, குங்குமம் ஆகியவற்றை வாங்கி, தாம்பூலத் தட்டில் வைத்துக் கொடுத்துப் பரிகாரம் தேடி வருகிறார்களாம். ஆத்தூர், தலைவாசல் வட்டாரங்களில் கிட்டத்தட்ட நூறு கிராமங்களில் இந்த மூட நம்பிக்கைக் கூத்து நடந்துகொண்டுள்ளதாம்.
இதனை வெளியிட்ட ஒரு நாளேடு துணிக் கடைகளில் சிவப்புப் புடவை வியாபாரம் சூடு பிடித்துவிட்டது. தாலிக் கயிறு, குங்குமம் விற்கும் விற்பனைக் கடைகளிலும் நல்ல வியாபாரம் என்று எழுதுகிறது.
பக்தி என்பது வியாபாரம் ஆகிவிட்டது என்று சங்கராச்சாரியாரே ஒருமுறை கூறினார். அது எவ்வளவுப் பெரிய உண்மை என்பது இவற்றின்மூலம் விளங்கவில்லையா?
மூட நம்பிக்கை அதிலும் குறிப்பாக பக்தி மூட நம்பிக்கை எவ்வளவு ஆபத்தானது அறிவையும், பொருளையும், காலத்தையும் பாழ்படுத்தக் கூடியது என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?
சில வருடங்களுக்குமுன் திருப்பதியில் தாயாரம்மனின் தாலி கழன்று விழுந்ததாக ஒரு கதையைக் கட்டி விட்டனர். இது ஏதோ கெட்ட சகுனம் என்று நம்பி, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டனர். அதன்பின் ஒரு தகவல் வந்தது; தாயாரம்மன் தாலி கழன்று விழுந்தது என்பது உண்மையான தகவல் அல்ல வதந்தீ என்று கோயில் நிருவாகமே அறிவித்தது.
முதலில் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லவேண்டும். கடவுள்களின் கழுத்தில் தாலி எதற்கு? மனிதர்களில்தான் கணவன், மனைவி, குடும்பம், பிள்ளைக்குட்டிகள் என்றால், கடவுள்களுக்கும் அந்த நிலைதானா?
இதிலிருந்து மனிதன் தன் வாழ்க்கை முறையின் அடிப்படையில்தான் கடவுள்களைப் படைத்திருக்கிறான் உருவாக்கியிருக்கிறான் என்பது புரியவில்லையா?
இன்னொரு கேள்விக்கும் பதில் தேவைப்படுகிறது. சக்தியுள்ள கடவுளின் தாலி கழன்று விழலாமா? ஒரு தாலிக் கயிறைக்கூட கீழே கழன்று விழாமல் பாதுகாத்துக் கொள்ள முடியாத கடவுளச்சி என்ன கடவுளச்சி?
சில வருடங்களுக்குமுன் ஆண்டு பிறந்த நேரம் சரியில்லை; சகோதரர்களுக்கு ஆபத்து என்று சொல்லி, பச்சைப் புடவைகளை சகோதரிகளுக்கு வாங்கிக் கொடுத்தார்கள். விற்காது தேங்கிக் கிடந்த பச்சைப் புடவைகள் எல்லாம் வேகமாகச் செலாவணி ஆகிவிட்டன.
இப்பொழுதும் அதே பாணியில்தான் காரியம் நடந்திருக்கிறது. அட்சய திருதியை என்று சொல்லி, அந்த நாளில் நகை வாங்கினால் ஆண்டு முழுவதும் செல்வம் கொழிக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. கடன் வாங்கியாவது அந்த நாளில் ஒரு கிராம் அளவுக்காவது நகையை வாங்கவேண்டும் என்ற எண்ணம் பாமர மக்கள் முதற்கொண்டு பணக்காரச் சீமாட்டிகள் வரை நகைக் கடைகளை முற்றுகையிடுவதையும் பார்க்கிறோம்.
வியாபாரிகள் செய்த வியாபாரத் தந்திரமாகத் தான் இவற்றைக் கருதவேண்டுமே தவிர வேறு இவற்றில் என்ன உண்மை இருக்கிறது, நியாயம் இருக்கிறது என்பதைக் கடுகு மூக்கு அளவுக்குச் சிந்தித்தால்கூட இதன் பின்னணி பட்டெனப் புரிந்துவிடாதா?
மூடச் சம்பிரதாயங்களால்தான் கடவுள் நம்பிக்கை, பக்தி, கோயில் சமாச்சாரங்கள் கால்கொண்டு நிற்கின்றன. அறிவார்ந்த முறையிலோ, நேர்மையான தன்மையிலோ இவை காலூன்றவில்லை என்பதை முதலாவதாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
இப்படிக் கேவலமாக பொய்யான முறையில் வதந்தீகளைப் பரப்பிப் பக்தியைப் பரப்புவது அயோக்கியத்தனம் அல்லவா! அதனால்தான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன் என்றார்; என்ன புரிகிறதா?
------------------------- "விடுதலை” தலையங்கம், 19-7-2010
0 comments:
Post a Comment