Search This Blog

25.7.10

பெரியார் சொத்து யாருக்கு? பெரியார் விளக்கம் - 3


நான் செய்து வந்த தொண்டும் செய்து வருகின்ற தொண்டும் நீங்கள் அறிந்ததேயாகும்.அத்தொண்டு யாருக்காக என்பதும், அதனால் நான் ஏதாவது நன்மை, சுயநலம் அடைந்தேனா என்பதும் உங்களுக்குத் தெரியும். எனது நலத்தை, செல்வத்தை, செல்வாக்கை பொதுநலத்தொண்டுக்குக் கொடுத்தேனா அல்லது எனது பொதுத் தொண்டால் எனது நலத்தை, செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டேனா என்பது உங்களுக்குத் தெரியும்!

இராஜாஜி அவர்களும், இரு கவர்னர்களும், இரு கவர்னர் ஜெனரல்களும் வேண்டியும், கேட்டுக் கொண்டும் மந்திரிப் பதவியை வெறுத்தவன் நான். தவிர, எந்தப்பதவியையும் நான் விரும்பியவன் அல்லன்.இன்னும் இனியும் நண்பர்களால், பெரியோர்களால் புகழுரை பெற்றதைத் தவிர யாராலும் ஒரு நலனும் பெற்றதில்லை; விரும்பியதில்லை.

எனக்குப் பொதுத் தொண்டு வரும்படி என்பது என் சொந்தக் காசில் பிரயாணம் செய்து 1930 இல் கூட்டமொன்றுக்கு 50 ரூபாய் வாங்கி, 1950 இல் 100 ரூபாய் வாங்கி 1960 இல் 150 ரூபாய் வாங்கி, 1970 இல் 200 ரூபாய் வாங்கினதுதான். மற்றும், மாநாடுகள் நடத்தியதில் சுமார் 1,00,000 ரூபாய் மீதமிருக்கும். மற்றபடி, எனக்கு இன்றுள்ள அவ்வளவும், மற்றும் இயக்கத்தின் பேரில் உள்ள சொத்துக்கள், செல்வங்கள் அவ்வளவும் என்னால் என் தகப்பனாரைக் கொண்டு செய்யப்பட்ட டிரஸ்ட் தர்ம சாசனம் ஆக்கப்பட்ட எங்கள் குடும்பச் சொத்தே அல்லாமல் பிறர் சொத்து, ஒரு காசளவும் இல்லை.அப்படி இருந்தாலும் நான் அவைகளில் இருந்து பொதுநலத்திற்கு என்று திருச்சியில் காலேஜுக்கு 5 இலட்சமும், திருச்சி குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு ஒரு இலட்சமும், ஈரோடு பொது ஆஸ்பத்திரிக்கு - குழந்தைகள் வார்டுக்கு ஒரு இலட்சமும், மற்றும் இந்த 50, 60 வருடகாலமாக 1000 ரூபாய், 2000 ரூபாய், 3000 ரூபாய், 10,000 ரூபாய் என்கிற கணக்கில் பொதுநலத்திற்கு (தர்மத்துக்கு) என்று கொடுத்துவந்தது 2,3 இலட்ச ரூபாய்க்கும் குறையாது.இயக்கத்திற்கு நான் வாங்கி இருக்கின்ற சொத்துக்கள் இன்று, 30,00,000 (முப்பது இலட்சம்) ரூபாய்க்கும் குறையாமல் பெறும். எங்கள் டிரஸ்ட் சொத்துக்கள் சுமார் 20,00,000 ரூபாய் 30,00,000 ரூபாய் பெறும்.
இவ்வளவும் இயக்கத்தின் பெயராலேயே இருக்கின்றன. இருந்தாலும், தலைவன் என்கிற முறையில் என் ஆதிக்கத்தில் தான் இருக்கின்றன. இதனால் இயக்கத்திற்கு இலாபம் என்னவென்றால் வருமானம் பெருகுகின்றது; சொத்து வளருகின்றது; அவ்வளவு தான். எனக்கென்ன பயன் என்றால் கவலை, தொல்லை அதிகமாக இருப்பதுதான். ரொக்கமும் பல இலட்சம் இருக்கின்றது.சர்க்கார் சட்டத்தால், இன்கம்டாக்ஸ் கொடுமையால் இவற்றில் எவ்வளவு குறைந்தாலும் குறையலாம்.

இனி எனது தொண்டினால் ஏற்பட்ட பலன் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் ! மற்றும் எனது தொண்டில் எனக்கு உதவியாய் இருந்தவர்கள் பலர் - அவர்களால் கனவில் கூட நினைத்திருக்க முடியாத பதவியையும், அந்தஸ்தையும் செல்வாக்கையும் அடைந்தார்கள்; அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் கூட நான் யாரையும் ஒரு காசு அளவுகூடக் கேட்காமலும், எவரிடத்திலும் நானாகக் கைநீட்டாமலும் இயக்கத்துக்காக வருவாய் சம்பாதித்துக் கொண்டு தான் வருகிறேன்.

எந்த நிலையிலும் எனது நிலை ஒரு சிறிது கூடத் தாழாமல் ஏதோ சிறிதாவது வளர்ந்து கொண்டே தான் வருகிறது.நண்பர்களே! இவற்றையயல்லாம் ஏன் சொல்லுகின்றேன்? யாரிடத்திலும் எவ்வித உதவியையும் கேட்பதற்கல்ல. மற்ற எதற்கு? மன்னிப்பு கேட்பதற்கு என்ன மன்னிப்பு என்றால், நான் இனிச் சுற்றுப்பிரயாணப் பிரச்சாரத்திலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

சென்னையிலோ, திருச்சியிலோ வேறு தொல்லையற்ற இடத்திலோ இருந்து கொண்டு துண்டுப் பிரசுரம், வால் போஸ்டர், சிறு சித்திரப் புத்தகம் முதலியவை பிரசுரித்துக் கொண்டு இருக்கலாம்; அலையவேண்டாம் என்று கருதுகிறேன்.ஆகஸ்ட் முடிந்தால் 93 வயது முடிந்துவிட்டது; செப்டம்பர் பிறந்தால் 94 வயது ஆண்டு பிறக்கின்றது.

யார் தயவையும் விரும்பாமல், யார் விசயத்திலும் தயவு தாட்சண்யம் காட்டாமல் சுதந்திரமாய் இருந்து பார்க்கலாம் என்று கருதுகின்றேன்.நான் சென்னைக்கு வந்தால் “உண்மை” மாத இதழையும் சென்னைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று கருதுகின்றேன். சென்னைக்கு வருவதில் வேறு பல சங்கடங்களும் இருக்கின்றன. திருச்சியில் பயிற்சிப் பள்ளிகள் இரண்டு இருக்கின்றன; பிரைமரிப் பள்ளி ஒன்று இருக்கின்றது; அநாதைப் பிள்ளைகள் விடுதி ஒன்று இருக்கின்றது; வரும் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளி ஒன்று ஏற்படுத்த அனுமதி பெற்று நடத்தப்படப்போகின்றது. ஈரோட்டில் ஒன்று ஏற்படுத்த உத்தேசம். இவையயல்லாம் திருமதி. மணியம்மையார் முயற்சியில் தான் நடை பெறுகின்றன. 10, 12 ஏக்கர் தோட்டப்பண்ணை ஒன்றும் நடை பெறுகின்றது. பல ஆயிரக்கணக்கில் வாடகை வரும் பல கட்டிடங்களும் திருச்சியில் இருக்கின்றன. ஆகவே, மணியம்மை அவர்கள் திருச்சியில் இருக்க வேண்டி இருக்கிறது. நான் சென்னைக்கு வந்தால் மணியம்மையார் என்னைத் தனியாய் இருக்கச் சம்மதிக்கமாட்டார்கள்; அவர்கள் சென்னைக்கு வந்து விட்டால், திருச்சி நடப்புக்கள் பாதிக்கப்பட்டு விடும்.இது ஒரு சங்கடமான நிலைமை என்றாலும் ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது.எனது உடல்நிலை, மனநிலையைப் பொறுத்துத்தான் இந்தச் சிந்தனைகள் ஏற்பட்டன.

தமிழ்ப் படிப்புள்ள புலவர் ஒருவர் எனக்கு உதவிக்கு வேண்டியிருக்கிறது. பேச்சில் இருக்கின்றவைகளை எழுத்தில் புத்தகத்தில் ஏற்படுத்திவிட்டுப் போக வேண்டும் என்று கருதுகின்றேன். ஆகவே, தோழர்களே ! என்னைக் கூப்பிடாதீர்கள் ! கூப்பிட்டால் அது மாநாடாக இருக்க வேண்டும், பணம் ரூ.500 கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கின்றேன். மன்னியுங்கள்!

நாடு பூராவும் நல்ல பேச்சாளர்கள் இருக்கின்றார்கள். நான் எதையும் குறைவில் விட்டு விட்டுப் போகவில்லை. மக்கள் நல்ல உணர்ச்சி பெற்று இருக்கிறார்கள். ஆனால் காரியத்தில் இறங்க வில்லை. அதற்குத் துண்டுப் பிரசுரம் செய்யலாம் என்று இருக்கின்றேன். மற்றொரு முக்கிய விசயம்; நமக்கு இப்போது சினிமா ஒரு தொல்லையாக ஆகிவிட்டது. அதற்காக ஒரு சினிமா பகிஷ்கார மாநாடு போட்டு சினிமா பார்க்காதே என்று வேண்டுகோள் பிரச்சாரம் ஆரம்பிக்க வேண்டும்.

கோவில் பகிஸ்காரம் சாதித்து விட்டாயா என்ற கேட்பார்கள். அது எனக்கு அவமானம்தான். ஆனாலும், நான் கலைஞர் அவர்களுக்கு ஆட்பட்டதால் ஏற்பட்ட நிலை என்றாலும், கலைஞர் தடையை நீக்கும் போது ஆரம்பிப்பேன். ஆனால், சினிமா பகிஷ்காரத்திற்கு யாருக்கும் ஆட்பட மாட்டேன். அது அண்மையில் துவக்கப்படும். இவை பற்றிய திட்டங்களை அடுத்து வெளியிட இருக்கிறேன்.


---------------- தந்தை பெரியார் - “விடுதலை” - 19-07-1972

0 comments: