Search This Blog
3.7.10
லஞ்சம் பற்றி பெரியார்
(சமீபகாலமாக நாளிதழைத் திறந்தாலே லஞ்சம் வாங்கியவர்கள் கைது என்று தினந்தோறும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த செய்திகளைப் பார்த்துக்கூட லஞ்சப் பேர்வழிகள் திருந்தியதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் கைதாகி வருகிறார்கள். எனவே லஞ்சம் பற்றி புரிந்து கொள்ள பெரியாரின் கட்டுரையை இங்கு பதிவு செய்கிறேன். படியுங்கள்! உண்மையை அறியுங்கள்!!)
நமது நாட்டிடை இதுகாலை அரசாங்க ஊழியர்களுக்குள்ளும் பொது மக்களுக்குள்ளும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் மிகவும் எளிய வழக்கமாகப் போய்விட்டது. மக்களிடையே இவ்வித வழக்கங்களை இழி வாய்க் கருதும் மனப்பான்மையும் மாறிவிட்டது. அரசாங்க ஊழியர்கள் என்போர் ஓர் ஊரினின்றும் மற்றொரு ஊரிற்கு மாற்றப்பட்டு வந்தால் முதன் முதலாக அந்த ஊரில் லஞ்சம் வாங்கிக் கொடுக்கும் தரகர்களைத் தேடுவது தான் அநேகமாய் அவர்களது வேலையாய் இருக்கின்றது. பொதுமக்களும் அரசாங்க நீதிமன்றங்களிலோ, நிர்வாக மன்றங்களிலோ தங்களுக்கு ஏதேனும் அலுவல்கள் ஏற்பட்டால் லஞ்சம் வாங்கிக் கொடுக்கத் தரகர்களைத் தான் முதலில் நாடுகிறார்கள். இவ்விரு கூட்டத்தாரிடையினும் லஞ்சம் வாங்கவும் கொடுக்கவும் தற்காலம் பெரும்பாலும் வக்கீல் கூட்டங்களிலிருந்தே தரகர்கள் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். இதனால் நியாய மன்றங்களில் விவகாரங் களைத் தாக்கல் செய்யவேண்டிய கட்சிக்காரர்கள் நியாயாதி பதிகளுக்குத் தரகர்களாய் இருக்கும் வக்கீல்கள் யாரோ, அவர்களிடமே அதிகம் செல்லு கின்றனர். சில வக்கீல்களும் தங்களுக்கு இவ்வளவு, நியாயாதிபதிக்கு இவ்வளவு என்று பேசியே தொகை வாங்குகின்றனர். சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை என்று சொல்லிக் கொண்டு சிற்சில வக்கீல்களிடம் சிநேகமாகவும், தாட்சண்யமாகவும், பாரபட்சமாகவும் நடந்து கொண்டு, அதன் மூலமாக வக்கீல்களுக்கு வரும்படி செய்து வைத்து அவர்களிடம் பணமாக அல்லாமல் வேறு வழிகளில் தாங்கள் லாபம் அடைகின்றனர். இதை வழக்கத்தில் லஞ்சம் என்று சொல்லாவிடினும், இதுபோன்ற செயல்கள் உண்மையான லஞ்சத்தின் பலனையே உண்டாக்கு கின்றது. தாட்சண்யம் காட்டப்படும் வக்கீல்கள் இதன் பலனாய் லஞ்சம் என்கிற பெயரால் இல்லாவிடினும், வேறு வழியில் கட்சிக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுகின்றனர். இதனால் அநேகமாய் இவ்வழக்கமுள்ள வக்கீல் களிடம்தான் கட்சிக்காரர்கள் செல்லுகின்றனரே அன்றி, கெட்டிக்காரர்களா கவும், யோக்கியமாகவுமுள்ள வக்கீல்களிடம் செல்லுவதில்லை. அரசாங்க ஊழியர் என்று சொல்லும் அதிகாரிகளும் லஞ்சம் வாங்குவதில் பலவித தத்துவங்களை உபயோகிக்கின்றனர். சிலர் இரண்டு கட்சிக்காரரிடம் வியாபா ரம் பேசுவது போல் பேசி, அதிக தொகை கொடுத்தவனுக்கு அனுகூல மாகவே தங்கள் தீர்ப்பைக் கொடுக்கின்றனர். சில சமயங்களில் இரண்டு பேரிடமும் வாங்கிக்கொண்டு இருவரையும் திருப்தி செய்யும்படி ராஜி செய்து அந்த ராஜிக்கு ஏற்றவிதமாய் தங்கள் தீர்ப்பை அளித்து விடுகின்றனர். சில தருணங்களில் ஒரு கட்சிக்காரருக்குத் தெரியாமல் மற்றொரு கட்சிக்காரரிடம் இவ்வளவிற்குக் குறைவில்லாத தொகைக்கோ, தண்டனைக்கோ தீர்ப்புச் செய்கிறேன் என்றும், இன்னொரு கட்சியாரிடம் இவ்வளவுக்கதிகமல்லாத தொகைக்கோ, தண்டனைக்கோ தீர்ப்புச் செய்கிறேன் என்றும் இருவரிடமும் வாங்கிக் கொள்ளுவதும், சில தருணங்களில் பெரிய தண்டனை செய்ய வேண்டியதையோ பெரிய தொகைக்குத் தீர்ப்புச் செய்ய வேண்டியதையோ குறைந்த அளவிற்குச் செய்வதாய்ச் சொல்லி வாங்குவதும், இன்னும் சில சந்தர்ப்பங்களில் தங்களிடமுள்ள விவகாரங்களில் நியாயம் இன்னாருக்குத் தான் என்று தெரிந்து அந்தக் கட்சியாரிடம் வாங்கிக் கொள்ளுவதும் இப்படி இன்னும் அநேக விதமாய் வாங்கப்படுகின்றன. இப்படி வாங்கப்படும் லஞ்சங்கள் பெரும்பான்மையாய் முழுவதும் தாங்களே அடைவதில்லை. மேல் அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்க நேரிட்டு விடுகின்றது. அந்தப் பங்கு என்பது தொகையாகவோ, சப்ளைகள் மூலமாகவோ, சாமான்களாகவோ, வேறுவிதமாய் அவரைத் திருப்தி செய்வதன் மூலமாகவோ பங்கு செலுத்தி யாகிவிடுகின்றது. அப்படிச் செலுத்தி மேலதிகாரிகளுக்கு நல்லவனாய் நடந்து கொண்ட இவ்வதிகாரிகள் வெகு தைரியமாய் தங்களுடைய தீர்ப்புகளைக் கடை வைத்து வியாபாரம் செய்வது போல் விற்று வருகின்றனர். பொது ஜனங்களும் கடைகளில் கத்தரிக்காய், வாழைக்காய் விலைபேசி வாங்குவது போல தீர்ப்பை விலைக்கு வாங்குகின்றனர். இவை பெரும்பாலும் வெளிப் படையான இரகசியங்களாய் விளங்குகின்றன. வியாஜ்யங்களும், விவகாரங் களும் அதிகமாகிக் கொண்டு வருவதற்கு நமது நாட்டு வக்கீல்கள் முக்கியக் காரணமென்று சொல்லுவது ஒரு பக்கமிருந்தபோதிலும், இந்த லஞ்சம் வாங்கலும் கொடுக்கலும் அதற்கு எவ்விதத்திலும் குறைந்தது அல்லவென்றே சொல்லலாம். மேல் அதிகாரிகள் என்று சொல்லப்படுவோர் லஞ்சம் வாங்கும் கீழ் அதிகாரிகளிடம் பங்கு வாங்காவிட்டாலும் குருட்டுத்தனமான அபி மானத்தாலோ, வேறு சிபார்சின் காரணங்களாலோ, தங்கள் இஷ்டம் போல் நடக்கிறார்கள் என்பதினாலோ, அல்லது தாம் வாங்குவது போலவே அவரும் வாங்கிவிட்டுப் போகட்டும் என்று கருணை காட்டுவதினாலோ, தம்முடைய மேல் அதிகாரிக்கு வேண்டியவராகவும் இருக்கின்றார்கள் என்ற காரணத்தி னாலோ, அன்றியும் ராஜீய விஷயங்களில் சர்க்காருக்கு அனுகூலமாய் அவரது மனசாட்சிக்கு விரோதமாய் அநேகம் பேரைத் தண்டனை செய்துள் ளார் என்றோ, வெள்ளையருக்கும் இந்தியருக்கும் நடந்த விவகாரங்களில், வெள்ளைக்காரருக்கு அனுகூலமாகத் தீர்ப்புச் செய்துள்ளார் என்றோ இத்தியாதி காரணங்களால் எவ்வளவு வெளிப்படையாயும், எவ்வளவு மக்கள் வருந்தும்படியாயும், லஞ்சம் வாங்கினாலும் கவனிக்காமல் விட்டு விடுகின் றனர். லஞ்சம் என்று சொல்லுவது சாதாரணமாய் போலீஸ், ரிவனியூ, இஞ்சி னியர், வைத்தியம், பாரஸ்ட், சால்ட் முதலிய இந்த இலாகாக்களுக்குப் பிறவிக் குணமாய் இருந்து அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும் சகஜந்தான் எனக் கருதி கவனிக்காமலே அனுமதிக்கப்பட்டு வந்திருந்த போதிலும், ஜனங் களின் வாழ்வு - தாழ்விற்குப் பெரிதும் காரணமாயிருக்கிற சிவில், கிரிமினல் இலாகாக்களில் கூட தலைவிரித்தாடி வருகின்றன. இவர்களில் சிலர் பணமும், நோட்டும் வாங்கினால்தான் லஞ்சமென்றும், வேறுவித காரியங்கள் என்ன செய்தாலும் லஞ்சம் இல்லை என்கிற எண்ணத்துடனேயே தங்கள் காரியங்க ளைச் செய்கின்றனர். சாதாரணமாய் உத்தியோகஸ்தர்களில் லஞ்சம் வாங்கா தவரை மற்ற அதிகாரிகளும் முட்டாள் என்றே கருதுகின்றனர். அநேகமாய் அவர்களுக்கு மேல் உத்தியோகமும் கிடைப்பதில்லை. தாங்கள் லஞ்சம் வாங்குவதில்லை என்கிற அகம்பாவத்தால் மேல் அதிகாரிகளை இவர்களும் இலட்சியம் செய்யாதிருந்துவிடுவது. அதனால் மேல் அதிகாரிகள் இவர் களைக் கெடுத்து விடுகின்றனர். இவை இப்படியிருக்க, அதிகாரிகளிலேயே சிலரும், படித்தவர்களில் சிலரும் தாங்கள் ஒரு குற்றமும் செய்யாமல் உத்தி யோகமும் மேல் உத்தியோகமும் சம்பாதிப்பதற்காகவே ஆயிரம் பதினாயிரக் கணக்காகவும் கொடுக்க வேண்டி ஏற்பட்டுப் போய்விடுகின்றது. சில உத்தியோகஸ்தர்கள் வாங்க இஷ்டப்படாதவர்களாயிருந்தாலும் மேல் உத்தி யோகஸ்தர்களுக்குக் கொடுக்கவும், செலவு செய்வதற்கும் என்றே லஞ்சம் வாங்க வேண்டியவர்களாய் விடுகிறார்கள். சில இலாகாக்களில் லஞ்சம் மாமூ லாகவே கருதப்பட்டு வருகின்றது. சில அதிகாரிகள் தாம் வாங்காதிருந்தால் போதும் என்று, மற்றவர்கள் வாங்குவது நன்றாகத் தெரிந்திருந்த போதிலும் கவனியாமலே இருந்து விடுகிறார்கள். இவ்விதமாக அதிகாரிகளின் யோக்கியதை கவனிக்கத்தகுந்த அளவிற்குப் பெருகி வருகிறது. எவ்வளவு ரூபாய் சம்பளம் கொடுத்தால் லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்று சொல்லுவ தற்கு ஒரு தொகையே இல்லாமல் போய்விட்டது.
சில்லறை உத்தியோகஸ்தர்கள் வாங்கும் லஞ்சம் அவ்வளவு கெடுதியை உண்டாக்காவிட்டாலும், அதன் விபரங்களைப் பற்றிப் பின்னர் எழுதுவோம். கவுரவ உத்தியோகஸ்தர்களும் லஞ்சம் வாங்குவது சகஜமாகி விட்டதல்லாமல், அரசாங்கமும் அனுமதித்துவிடும் போலிருக்கிறது. லஞ்சம் விஷயமாய் ஒரு பெரிய அதிகாரிக்கும், ஒரு பெரிய மனிதருக்கும் நடந்த சம்பாஷணையை மாத்திரம் எழுதிவிட்டு இதை முடிக்கிறோம்.
பெரிய மனிதர் : என்ன ஐயா, உங்கள் இலாகாவைச் சேர்ந்த ஒரு பெரிய உத்தியோகஸ்தர் இவ்விதமாக லஞ்சம் வாங்குகிறாரே, எங்களுக்கு எல்லாம் வெளியில் தலை நீட்டுவதற்கு வெட்கமாய் இருக்கிறதே, இதைப்பற்றிக் கேள்விமுறை இல்லையா ?
பெரிய உத்தியோகஸ்தர்: ஆம்! எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் நான் என்ன செய்யமுடியும்? வேண்டுமானால் அந்த உத்தியோகஸ்தரை வேறு ஊருக்கு மாற்ற முடியும். கேஸ் எடுத்து நடவடிக்கை நடத்தவே முடியாது. அப்படி ஏதாவது ஆரம்பித்து விட்டால் சாதி அபிமானங்களும், சிபார்சுகளும் வந்து கழுத்தை முறித்து விடுகிறது. அதற்கும் துணிந்தால் நமது பேரில் ஏதேனும் கெட்ட எண்ணத்தைக் கற்பித்துப் பழியையும், ஏதாவது ஒரு கெட்ட பெயரையும் ஏற்படுத்தி விடுவதோடு நம்முடைய விருத்தியையும் கெடுத்துவிடுகின்றனர்.
பெரிய மனிதர் : அப்படி ஆனால் அவரை வேறு ஊருக்காவது மாற்றித் தொலைப்பதுதானே !
பெரிய உத்தியோகஸ்தர்: இதனால் என்ன பொது நன்மை விளையும்? இந்த ஊரில் வாங்குபவர் அங்குபோய் வாங்குகிறார். இப்பொழுது அவர் இருக்கும் ஊராவது பணக்காரர்களும், லஞ்சம் கொடுக்கப் பழகினவர்களாகவும், லஞ்சம் கொடுக்கிறோமே என்று வருத்தப்படாதவர்களும் இருக்கிற ஊராகும். இனி அவரை இதைவிட்டு வேறு ஊரிற்கு மாற்றினால் அங்கு போய் கடைவைத்து வியாபாரம் ஆரம்பிப்பதற்குள் வீண் கெட்ட வாசனை ஏற்பட்டுவிடும்.
பெரிய மனிதர் : சரி, சரி அப்படி ஆனால் ஒத்துழையாதார் பேரில் தப்பிதமே இல்லையே?
பெரிய உத்தியோகஸ்தர் : யார் தப்பிதம் சொல்லுகிறார்கள்?
-------------------- தந்தைபெரியார் - “குடி அரசு” - கட்டுரை - 26.07.1925
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
லஞ்சம் பற்றி பெரியாரின் சிறப்பான கட்டுரை
இங்கே சிலர் லஞ்சம் வாங்க டிப்ஸ் எல்லாம் தாரங்க
மக்கள் திருந்தட்டும்
அறுபதாயிரம் கோடிய சுருட்டுன அல்ப்பைகளை பாராட்டி பதிவெல்லாம் போட்டுட்டு , இப்ப என்ன இது மாதிரி பதிவு. தமிழனுக்கு மறதி அதிகம் தான். அதுக்காக இப்படியா ?
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
karunaa means scientific corruption
Post a Comment