Search This Blog

13.7.10

தமிழர் திருமணத்தில் தாலி என்பதே கிடையாது

சுயமரியாதை உள்ளவர்கள் நடத்தும் திருமணமே சுயமரியாதைத் திருமணம்
ந.ம.மதன்-த.ஆர்த்திகா சுயமரியாதைத் திருமண விழாவில் தமிழர் தலைவர் உரை

சுயமரியாதைத் திருமணம் என்பது சுயமரியாதை உள்ளவர்கள் நடத்தும் விழா என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் மு.ந.. மதியழகன் _ தமிழ்மதி ஆகியோரின் மகன் ந..ம. மதன் பி.இ.,எம்.பி.ஏ., சோலையார்பேட்டை சி.தங்கவேல் _ தேவி ஆகியோரின் மகள் த. ஆர்த்திகா பி.டெக்., ஆகியோரின் சுயமரியாதைத் திருமணம் 6.6.2010 ஞாயிறு காலை 11 மணிக்கு சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மணமகன் தந்தையார் மு.ந.மதியழகன் விழாத் தலைவரை முன்மொழிந்து உரையாற்றினார்.

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி. எழிலரசன் அனைவரையும் வரவேற்று உரை-யாற்றினார்.

கழகத் தோழர் மதியழகன் தந்தையார் சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியர் நடராசன் அவர்களுக்கும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கும் இருந்த தொடர்பையும், நட்பையும் எடுத்துக் காட்டிப் பேசினார்.

பாராட்டுரை

மணமக்களைப் பாராட்டி, வாழ்த்தி நீதியரசர் அரிகிருஷ்ணன் உரையாற்றுகையில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று இருந்த நிலையிலும் கூட தந்தை பெரியார் கொள்கையை ஏற்று நாட்டில் ஏராளமான எண்ணிக்கையில் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றதைப் பெருமையாகச் சுட்டிக் காட்டி மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

டாக்டர் ருத்திரன்

பிரபல உளவியல் மருத்துவர் டாக்டர் ருத்திரன் அவர்கள் தனது திருமணமும் சரி, தம் மகனின் திருமணமும் சரி சுயமரியாதைத் திருமணமாக நடந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.

சுயமரியாதைத் திருமணத்தில் பொய் இல்லை: போலித்தனம் இல்லை. வாழ்க்கை ஆரம்பமே இந்தச் சிறப்புடன் துவங்குவது சுயமரியாதைத் திருமணத்தில்தான் என்று ரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.

கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் அவர்கள் தன்னுரையில் குறிப்பிட்டதாவது:

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு மத எதிர்ப்பு, சாஸ்திர புராணங்கள் எரிப்பு என்பதே தமிழர்களின் இன இழிவு ஒழிப்பிலிருந்து தொடங்குகிறது என்று குறிப்பிட்டார்.

தொடக்கத்தில் பார்ப்பனப் புரோகிதர்கள் பார்ப்பனர்களுக்கும், சத்திரியர்களுக்கு மட்டுமே திருமணங்களை நடத்தினார்கள். திருமலை நாயக்கன் காலத்தில் வட மாநிலங்களிலிருந்து ஏராளமான பார்ப்பனர்கள் தமிழ் நாட்டுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது.

அப்பொழுதுதான் திருமலை நாயக்க மன்னனின் முன்னிலையில் கூடி, வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும் கூட பார்ப்பனர்கள் திருமணங்களை நடத்தி வைக்கலாம் என்ற முறை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பார்ப்பனப் புரோகிதர்கள் சூத்திரர்களுக்கு மந்திரங்களைச் சொல்லி கல்யாணத்தை நடத்தி வைக்கும்போது மறக்காமல் ஒரு முகூர்த்த நாழிகைக்கு மணமகனுக்கு பூணூல் அணிவித்து, சடங்குகள் முடிந்த பின் மறக்காமல் அந்தப் பூணூலைக் கழற்றி தண்ணீரில் எறிந்துவிடுவார்கள் என்ற வரலாற்று உண்மையையும் எடுத்துக் கூறினார்.

பொருளாளர் கோ.சாமிதுரை

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் தன்னுரையில், சுயமரி-யா-தைக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி கிடையாது என்று அழுத்த-மாகக் குறிப்பிட்டார்.

சுயமரியாதைக்காரர்கள் நீண்ட நாள் வாழ்வதற்குக் காரணம் அவர்கள் சரியான -_ பகுத்தறிவு ரீதியான வாழ்க்கை முறையே என்றும் கூறினார்.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் அருள்தந்தை மரியா மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி

சுயமரியாதைத் திருமணத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

தோழர் மதியழகன் குடும்பம் பாரம்பரியமான கழகக் குடும்பமாகும். தோழர் கொள்கையில் மிகவும் பிடிவாதக்காரர் _ பெரியார் திடலோடு நெருக்கமாக உறவு கொண்டவர்.

கழகத் தொடர்பான செய்திகளையும், ஆதாரங்களையும் ஆவணமாகத் தொகுத்து வைக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர்.

மணமகன் பி.இ. படிப்போடு எம்.பி.ஏ. பட்டமும் பெற்றிருக்கிறார். மணமகள் பி.டெக். படித்திருக்கிறார்.

இந்த மாற்றங்கள் எல்லாம் வருவதற்கு உழைத்தவர் தந்தை பெரியார் _ இந்த இயக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இங்கு பேசிய நீதிபதி அரிகிருஷ்ணன் அவர்கள் சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு மட்டும்தான் சுயமரியாதை இருக்கிறதா மற்றவர்களுக்குக் கிடையாதா என்று சிலர் கேட்டதாகக் குறிப்பிட்டார்.

உண்மைதான். சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொள்பவர்களுக்குத்தான் சுயமரியாதை உண்டு இந்த முறையில் திருமணம் செய்துகொள்ளாதவர் களுக்கு சுயமரியாதை கிடையாது என்ற அழுத்தமாகச் சொல்லுவதில் எங்களுக்கு ஒன்றும் தயக்கம் இல்லை (பலத்த கைதட்டல்).

இப்படிக் கூறுவது யாரையும் புண்படுத்த அல்ல: மாறாகப் பண்படுத்தத்தான்.

சுயமரியாதைத் திருமுண முறையில் ஒருவர் எஜமானர் அல்ல இன்னொருவர் அடிமையும் அல்லசமமானவர்கள் என்பதே இதன் தத்துவம்.

வைதீக முறையில் இதற்கு என்ன பெயர்? தாரா முகூர்த்தம். அப்படியென்றால் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுப்பதாகும். இன்னொரு பெயர் கன்னிகாதானம் என்பதாகும். பெண்ணைத் தானமாக பண்டமாக நினைத்து இன்னொருவருக்குக் கொடுப்பதாகும்.

வரதட்சணை என்ற சொல்லேகூட தமிழ் கிடையாது. தமிழர்களிடத்தில் இந்த ஏற்றத் தாழ்வு இல்லாதிருந்தது. ஆரியம் புகுந்ததால் பெண்ணை சந்தைப் பொருளாக்கி விட்டனர்.

சந்தையில் மாட்டை விற்கும்போதுகூட பணத்தை வாங்கிக் கொண்டு மாட்டைக் கொடுப்பார்கள். இந்த வரதட்சணை சந்தையில் பணத்தையும் கொடுத்து பொருளையும் கொடுத்து, பெண்ணையும் கொடுக்கிறார்கள்.

நெருப்புக்கும் நமக்கும் சம்பந்தம் உண்டா?

பார்ப்பனர்களை வைத்துக் கல்யாணம் நடத்தினால் தீக்குண்டம் வைப்பார்கள். அதனைச் சுற்றி ஏழு அடி எடுத்து வைக்க வேண்டும். அப்படி வைக்காவிட்டால் அந்தக் கல்யாணம் செல்லாது என்கிறார்கள். யார் எண்ணிப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்?

நெருப்பு என்பது பார்ப்பனர்கள் குளிர் நாடுகளில் இருந்து வந்ததால் குளிர் காய்வதற்கு அவர்களுக்குத் தேவைப்பட்டது. அவர்கள் நடத்தும் சடங்குகளில் நெருப்பை முக்கியப்படுத்துவார்கள். நமக்கும் இந்தச் சடங்களுக்கும் சம்பந்தமே கிடையாது.

இதுகுறித்து தமிழறிஞர் டாக்டர் இராசமாணிக்கனார் போன்றவர்கள் பல வரலாற்றுத் தகவல்களை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதி இருக்கிறார்கள்.

தமிழர் திருமணத்தில் தாலி என்பதே கிடையாது என்று நிறுவியுள்ளார்.

தமிழர் தொன்மை வாய்ந்தவர் என்பதும், அவர்தம் தமிழ் மொழி வடமொழியிலிருந்து வேறுபட்டது என்பதும் ஆரியர்க்கு முற்பட்ட இந்தியருள் தமிழர் சிறந்தவர் என்பதும், பிறவும் மொழி ஆராய்ச்சியாலும், புதை பொருள்களாலும் இந்திய வரலாற்றிலும், பிறவற்றாலும் உறுதிப்பட்டுள்ள செய்திகள் ஆகும். எனவே தமிழர் மொழி வேறு, கலை வேறு, வாழ்க்கை முறை வேறு சுருங்கக் கூறின், தமிழர் ஆரியரின் (வடமொழியாளரின்) முற்றும் வேறுபட்டவர் என்பது ஆராய்ச்சியாற் போந்த உண்மை! பண்டைச் சங்க இலக்கியங்களைக் கொண்டு ஆராயினும், இவ்வுண்மை உணர்தல் கூடும். உண்மை இங்ஙனம் இருப்ப, இடைக் காலத்தே தமிழ் மரபுக்கு மாறான வாழ்க்கை முறை தமிழரிடை புகுந்துவிட்டது; தமிழர் பழக்க வழக்கங்கள் மாறின; மணமுறை மாறிவிட்டது; பிற சடங்குகள் பெருகின; இவற்றின் பயனாக இன்றுள்ள தமிழர்கள் பெயரளவில் தமிழர்களாக இருக்கின்றனரே அல்லாமல் மெய்த் தமிழராக சங்ககாலத் தமிழர்தம் வழித் தோன்றல்களாக இல்லை என்பதை அறிய தமிழர் தலைகுனிய வேண்டுபவராக உளர்.

நம்மிடையே நடைபெறும் இக்காலத் திருமண முறை நமது பண்டைத் தமிழர் மரபுக்கு முற்றும் மாறானதாகக் கருதப்படும் என்று டாக்டர் இராசமாணிக்கனார் கூறியுள்ளார்.

பார்ப்பனரை அழைத்துத் திருமணத்தை நடத்தும் நிலை பிற்காலத்தில் வந்தது. தமிழர் வீட்டுத் திருமணத்தில் தமிழுக்கு இடமில்லை; சமஸ்கிருதம் குடிபுகுந்தது.

பொருள் புரியாமல் புரோகிதர்களும் மந்திரங்களை ஓதினார்கள்.

ஸோம : ப்ரதமோ விவிதே

கந்தர்வோ விவத உத்தர:

த்ருதியோ அக்னிஷ்ட பதி:

துரியிஸ்தே மநுஷ்யஜா

கீழாத்தூர் சீனிவாச ஆச்சார்யார் என்ற பார்ப்பனர் விவாஹ மந்திரார்த்த போதினி என்ற நூல் ஒன்றினை எழுதியுள்ளார். தி லிட்டில் ஃப்ளவர் கம்பெனி அதனை வெளியிட்டுள்ளது.

இந்த மந்திரத்துக்கு பொருள் என்ன? இந்த மணப் பெண்ணின் முதல் கணவன் ஸோமன்; இரண்டாவது கணவன் கந்தர்வன்; மூன்றாவது கணவன் அக்னி. நான்காவது கணவன்தான் மனித ஜாதியில் பிறந்தவன் என்று இந்த மந்திரத்தில் கூறப்படுகிறது. திருமணம் ஆவதற்கு முன் நான்கு பேருக்கு மனைவி என்பது தமிழர் வாழ்வு முறைக்கு உகந்ததுதானா?

நாவலர் சோமசுந்தர பாரதியார் கலந்துகொண்ட ஒரு திருமணத்தில் ஒரு பார்ப்பனப் புரோகிதர் கருமாதி மந்திரத்தைக் கல்யாண வீட்டில் ஓதிக்கொண்டு இருந்ததைக் கண்டுபிடித்து எதிர்த்துக் குரல் கொடுத்த நிலையும் உண்டு.

இந்த மணமக்களைப் பொறுத்தவரை சுயமரியாதைக் கொள்கையில் பூத்த பகுத்தறிவு மலர்கள். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வாழக் கூடியவர்கள்.

முதலில் தங்கள் பெற்றோர்களுக்கு நன்றியும் பாசமும் காட்ட வேண்டும். முதல் வட்டம் என்பது உங்கள் பெற்றோர்களைப் பாதுகாப்பது பாசம் காட்டுவது _ அவர்களுக்கு நன்றியுடன் நடந்து கொள்வது; இரண்டாவது வட்டம் என்பது உங்களுக்கு யார் யாரெல்லாம் உதவி செய்தார்களோ, அவர்களுக் கெல்லாம் நன்றி காட்டுவது; மூன்றாவது வட்டம் தான் உண்டு, தன் குடும்பம் உண்டு, தன் பெண்டு, தன் சுற்றம் என்கிற கடுகு உள்ளத்தோடு நடந்து கொள்ளாமல் தொண்டறம் என்ற வட்டம் மற்றவர்களுக்குத் தொண்டு செய்வது, உதவி செய்வதாகும்.

சமுதாயம் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் சமுதாயத்துக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். மணமக்களை உறுதிமொழி கூறச்செய்து சுயமரியாதைத் திருமணத்தை தமிழர் தலைவர் நிறைவேற்றி வைத்தார். தாலி தவிர்க்கப்பட்டது.

இறுதியில் திருப்பத்துர் மு.ந.அன்பழகன் நன்றி கூறிட சிறப்பான மதிய விருந்துடன் விழா வெகு நேர்த்தியாக நடந்தேறியது. உற்றார், உறவினர்கள், கழகக் குடும்பத்தினர் பல்துறைகளைச் சேர்ந்த பெருமக்கள் ஏராளமானவர்கள் வருகை தந்திருந்தனர்.

-------------- "விடுதலை” 7-6-2010

0 comments: