அன்புள்ள சகோதரிகளே! சகோதரர்களே!! நான் இங்கு வந்தது முதல் இதுவரையிலும் எனக்காக வென்று செய்யப்பட்ட ஆடம்பரங்களையும், ஊர்வலங்களையும் என்னைத் தலைவனாக பிரரேபிப்பதன் முகத்தான் என்னைப் பற்றி பலர் பேசிய புகழுரைகளையும் எனக்காக என்று இப்போது வாசித்துக் கொடுத்த உபச்சாரப் பத்திரங்களில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியங்களையும் கவனித்து பார்த்ததில் நான் மிக்க வெட்கப்பட வேண்டியவனாய் இருக்கிறேன். ஏனெனில் எந்த மூட நம்பிக்கை களையும், குருட்டு பக்தியையும் அடியோடு ஒழிக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறேனோ அவற்றை அதை ஒழிப்பதற்காகக் கூடிய இந்த மகாநாட்டில் உங்களாலேயே என் விஷயத்தில் உபயோகப்படுத்தப்படுவதை நான் பிரத்தியட்சமாகப் பார்க்கிறேன். இவற்றை அனுமதித்துக் கொண்டிருக்கிற நான் எந்த விதத்தில் இத்தொண்டில் வெற்றியடைய முடியும்? அல்லது என்னைப் பொறுத்த அளவிலாவது அவற்றிலிருந்து திருத்தமடைகிறேனென்று எப்படிச் சொல்ல முடியும்? ஆகவே இம்மாதிரியான செய்கைகளைத் தயவுசெய்து அடியோடு இனி விட்டுவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். மக்களுடைய உணர்ச்சிக்காகவும் பிரசாரத்திற்காகவும் செய்யப்படுகிறதென்று சொல்லப்படுவதனாலும் அதற்கும் சிறிதாவது அளவும் பொருத்தமும் வேண்டும். இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்க வேண்டுமாய்க் கோருகிறேன்.
இந்தச் சிறிய கிராமத்தில் இவ்வளவு பெரிய எதிர்ப்புக்கிடையில் இத்துணை பெரிய கூட்டம் பெண்களும், ஆண்களும் தாழ்த்தப்பட்டவர்களுமாய் கூடி இருப்பதானது நமது கொள்கையிலுள்ள உணர்ச்சி சிறிதும் இந்தக் கிராமத்துப் பார்ப்பனர்களின் கிளர்ச்சி பெரிதுமாய்ச் சேர்ந்துதான் இவ்வளவு கூட்டம்கூட நேர்ந்தது என்று கருதுகிறேன்:
சகோதரர்களே! நான் மகாநாட்டுக்கு வரும் வழியில் கண்ட காட்சிகளானது எனது கொள்கையிலும் அபிப்பிராயத்திலும் என்னை மிக்க உறுதிபடுத்தி விட்டது. வழி நெடுக போலீஸ் உதவியின் பேரில் ஒவ்வொரு கிளைப் பாதைக்கும் நூற்றுக்கணக்கான பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாதார்களும் வேஷ்டியை வரிந்து கட்டிக் கொண்டு கையில் தடியுடன் நின்றதையும் திருவாவடுதுறை கோயிலுக்கு முன்னால் நூற்றுக்கணக்கான பார்ப்பனரல்லாத ஆட்கள் கழிகளுடன் நின்றுக் கொண்டிருந்த தையும், இவைகளுக்கெல்லாம் சர்க்கார் அதிகாரிகளும் பண்டார சந்நிதிகளும் உள்ளூர உடந்தையாயும் சகாயமாகவும் இருப்பதையும் பார்க்க இந்த நாடானது என்றென்றைக்கும் அன்னிய ஆட்சியிலிருப்பதற்கு தகுதியானதே ஒழிய இந்த நிலையில் ஒரு நாளும் சுதந்திரத்திற்கு அருகதை இல்லையென்றே நினைக்கிறேன்.
இன்றைய தினம் இங்கு வெள்ளைக்கார ஆட்சியில்லாமல் பண்டார சந்நிதிகளாட்சியோ, பார்ப்பனராட்சியோ, இவர்களைக் குருவாய்க் கொண்ட இந்துக்கள் ஆட்சியோ இருந்திருக்கு மானால் நான் இங்கு வந்து சேர்ந்திருக்க முடியுமா வென்று யோசித்துப் பாருங்கள். இந்த அதிகாரிகளும் ஏறக்குறைய எல்லாம் பார்ப்பனர்களாகவே இருந்ததின்மூலம் வெள்ளைக்கார ஆட்சியின் பயம் அவர்கட்கு இல்லாதிருக்குமேயானால் நம்மை ஒரு நாயை அடிப்பதுபோல் அடித்து இழுத்தெறிந்து இருப் பார்கள். என்னுடைய இந்தப் பத்து பதினைந்து வருஷத்திய பொது வாழ்வு சுற்றுப் பிரயாணத்தில் ஒரு இடத்திலாவது இந்த மாதிரி பார்ப்பனர்கள் வரிந்து கட்டிக் கொண்டு தடியுங்கையுமாய் நின்று கொண்டிருந்ததை யான் எங்கும் பார்த்ததில்லை. நம்முடன் வந்த கூட்டமானது சற்று நிதானம் தவறியிருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அதிகாரிகளுடைய சலுகை இல்லாதிருந்திருக்குமானால் அவர்களுக்கு இவ்வளவு துணிவு ஏற்பட்டிருக்க முடியுமா?
நாம் என்ன அக்கிரமங்களைச் செய்ய இந்த மகாநாட்டைக் கூட்டியிருக்கிறோம் அல்லது இதுவரையில் யாருக்கு எவ்விதமான அநீதி நமது தொண்டால் ஏற்பட்டது? நமது உரிமைகளை நாம் எதிர்பார்ப்பதும், நமது சுயமரியாதையை நாம் அடைய முயற்சிப்பதும் இவ்வளவு பெரிய ஆத்திரத்திற்கும் மூர்க்கத்தனத்துகும் இடங் கொடுக்குமானால் இந்த நிலையில் நமது நாட்டின் ஜனநாயக ஆட்சியை எதிர்பார்க்க முடியுமாவென்று யோசித்துப் பாருங்கள். இந்த நாட்டில் உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த காலம் முதல் எனக்கு அதனிடம் சிறிதும் அநுதாபமில்லாதிருந்தது உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததேயாகும். அது விஷயத்தில் எனது அபிப்பிராயத்தையும் சிறிதும் மறைக்காமல் வெளியிட்டு வந்ததோடு அதனால் ஏற்படும் கெடுதிகளையும் துணிந்து விளக்கிக் கொண்டுதான் வந்திருக்கிறேன். அதன்மூலம் எனக்கு அனேக கஷ்டங்களும், நஷ்டங்களும் ஏற்பட்டிருப்பதையும் சகித்துக் கொண்டுதான் வந்திருக்கிறேன். எங்களூரில் மகாநாடு நடந்த காலத்தில் அதிகாரிகளால் எவ்வளவோ கஷ்டங்கள் ஏற்பட்டன. மற்றும் நான் செல்லுகிற இடங்களிலெல்லாம் பார்ப்பன அதிகாரிகள் இருக்குமிடங்களில் மிக்க தொல்லைகள் ஏற்பட்டு வருவதையும் பார்த்து வருகிறேன். பல மொட்டைக் கடிதங்களும் வந்து கொண்டு இருப்பதோடு பிரசாரத்துக்கும், பத்திரிகைக்கும் இடையூறுண்டாகும்படி பல முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஊருக்கு வருவதற்கு முன் எனக்கு ஒரு மிரட்டுதல் கடிதம் வந்தது. ஆகவே இந்த நாட்டுப் பார்ப்பனராதிக்கமும், பார்ப்பனிய உணர்ச்சியும் ஒழியும் வரை இன்றைய அரசாங்கத்தை எப்படி எதிர்க்க முடியும்? அதன் உதவியை எப்படி தள்ளமுடியும்?]
இந்த நிலையில் நம்மைப் பார்ப்பனராதிக்கத்தினிடமும், பண்டார சந்நிதிகளாதிக்கத்தினிடமும், பணக்கார ஆதிக்கத்தினிடமும் விட்டுவிட்டு இந்தச் சர்க்கார் போய் விடுகிறோமென்று சொன்னால் தாழ்த்தப்பட்ட மக்கள் போகவேண்டாமென்றுதான் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமேயொழிய போகச் செய்யும் சத்தியாகிரகத்தில் ஒருக்காலும் சேர்ந்து கொள்ளமுடியாது. இந்தக் கிராமத்து அக்கிரகாரமானது தஞ்சாவூர் மகாராஜாவால் தனது முன்னோர்களின் எலும்புகளைக் கங்கையில் கொண்டு போய் போடுவதை விட பிராமணர்கள் என்பவர்களின் வயிற்றிற்போய் சேரும்படி அரைத்துக் குடிக்க செய்து விட்டால் அதிகப் புண்ணியமென்பதாகக் கருதி பிராமணர்களும் அப்படியே அரைத்துக் குடித்ததற்காக அக்காலத்தில் சில பார்ப்பனர்களுக்கு இந்த அக்கிரகாரங்களையும் கட்டிக் கொடுத்து நூறு வேலி (500 ஏக்கர்) நஞ்சை நிலமும் கொடுத்ததாக சொல்லப்படுவதுடன் ஏதோ ஒரு பிராமணன் என்பவன் தீண்டாதான் ஒருவனுக்குத் தன் வீட்டிலழைத்து சாப்பாடு போட்டதின் பயனாய் அவனை இந்தவூர் பிராமணர்கள் எல்லாம் சேர்ந்து ஜாதியை விட்டு விலக்கி கங்கையில் போய் ஸ்நானஞ் செய்து விட்டு வரும்படி ஊரை விட்டு விரட்டினதாகவும் அந்த பிராமணன் கங்கையைத் தன் வீட்டுப் புழக்கடையிலே வருவித்துக் காட்டினதாகவும் பிறகு அவனைச் சேர்த்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே எப்படிப் பார்த்தாலும் இந்த, தலப் பெருமையின்படி ஒன்று இங்குள்ளவர்கள் எலும்பைத் தூளாக்கிக் கரைத்துக் குடித்தவர்களாயிருக்க வேண்டும். அல்லது பறையனை வீட்டில் வைத்து சாப்பாடு போட்டதின் பயனாய் கங்கை இந்த கிராமத்துக்கு வரத்தகுந்த அவ்வளவு நன்மையடைந்ததாகயிருக்க வேண்டும். அப்படியிருக்க இதை நம்புகிற பார்ப்பனர்கள் எப்படி வீதியில் பறையன் நடந்து விடுவான் என்று தடி எடுத்துக் கொண்டு தெருவில் நிற்கிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. இது மூர்க்கத்தனமா? அல்லது ஆச்சாரமா? அந்த வீதியில் எல்லா மிருகங்களும் செல்வதைப் பார்க்கிறோம். இந்துக்களில் ஒரு சாரார் தவிர மற்றவர்கள் எல்லாரும் செல்வதையும் பார்க்கிறோம். மற்றத் தெருக்களில் நடக்கும் போது எவ்வளவோ அசிங்கங்களை மிதித்துக் கொண்டேதான் காலைக் கழுவாமல் அத் தெருவில் யாவரும் நடப்பதைப் பார்க்கிறோம். அந்தத் தெருவிலுள்ள பார்ப்பனர்களுக்கு அவர்கள் வயலில் வேலை செய்து நெல் விளைத்துக் கொடுத்த அவர்களது மதத்தைச் சேர்ந்த மக்கள் போகக் கூடாதென்றும் அவர்களுடைய மதத்திற்கெதிராயிருந்து அவர்களது கோயில்களையும், சாமிகளையும், சாஸ்திரங்களையும் உடைத்து இடித்து கொளுத்திய மகமதியர்களைத் தாராளமாகப் போக விட்டுக் கொண்டும் இருக்கிறார்க ளென்றால், இதானது மதத்தையும் சாத்திரத்தையும் ஆதாரமாகக் கொண்டு தடுக்கப்படுகிறதாவென்று ஆலோசித்துப் பாருங்கள்.
பறையன் சக்தியற்றவனாக யிருக்கிறான். படிப்பில், செல்வத்தில், சுயமரியாதையில் கேவலமாக அழுத்தப்பட்டிருக்கிறான். மகமதியன் சகல சவுகரியத்துடனும் வீரியத்துடனும் சுயமரியாதை யுடனுமிருக்கிறான். பறையனை வேண்டாம் என்று சொன்-னால் பறையன் பயந்து கொள்வான். யோக்கியப் பொறுப்பற்ற சர்க்காரும் அதற்கு இடங்கொடுத்துக் காவலாளை அனுப்பிக் கொடுக்கும். மகமதியனோ தெருவில் நடக்கவேண்டாமென்று சொல்லிவிட்டால் உடனே உதை கொடுப்பான். வேண்டாம் என்று சொல்பவர்களின் பெண்டு பிள்ளைகளையும் கட்டியணைவதோடு மாத்திரம் நில்லாமல் தூக்கிக் கொண்டு போய் விடுவான் அப்போது சர்க்காரும் வாலை யொடுக்கிக் கொள்ளும். ஆகவே தீண்டாமையும் தெருவில் நடக்காமையும் எதிலே இருக்கின்றதென்று யோசித்துப் பாருங்கள். இந்து மதத்திலும் சுயமரியாதை யற்ற தன்மையிலுந்தானே தீண்டாமை இருந்து வருகின்றது. இந்தக் கிராமத்தில் மகமதியர்களின் எண்ணிக்கை எவ்வளவு சுருக்கம். தாழ்த்தப்பட்டவர்களுடைய எண்ணிக்கை எவ்வளவு அதிகம்? அப்படி இருந்தும் மகமதியர்களுக்குச் சுதந்திரமும், இந்துக்களுக்குத் தடையும் ஏற்பட்டிருப்பது மதம் காரணமா? அல்லவா? அப்படிப்பட்ட மதம் எதற்காகயிருக்க வேண்டுமென்றால் மக்களுக்கு வெறும் கோபம் வருகிறதேயொழிய மற்றபடி எவ்வித சமாதானமும் சொல்லுகிறவர்களைக் காணோம். இப்படிப்பட்டவர்களை நாம் மூடர்களென்றும், மூர்க்கர்களென்றும், அயோக்கியர்கள் என்றும் சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது?
சகோதரர்களே! கண்டிப்பாக நான் ஒன்று சொல்லுகிறேன். இந்து மதம் என்பது ஒழிகின்ற வரையில் குறைந்தது வெள்ளைக்காரன் ஆட்சியாவது இருந்து தான் ஆக வேண்டும். இந்த நாட்டில் அநேகருடைய மனதைத் தேசியக் கிளர்ச்சி கவர்ந்து இருப்பது எனக்குத் தெரியும். அவர்களில் பெரும்பாலோர் பொறுப்பற்றவர் களும், அறியாதவர்களும் சுயநலக்காரர்களும், சிலர் உண்மையறியாதவர்களுமேயாவார்கள். இந்த ஒரு சிறு கிராமத்தில் தெருவில் நடப்பதைத் தடுப்பதற்காக பார்ப்பனர்களும் அவர்களுடைய கூலிகளாகிய பல பார்பனரல்லாதார்களும் அவர்களைக் காக்க போலீசுகளும் மேஜிஸ்ட்ரேட்டுகளும் நூற்றுக்கணக்காக நின்று கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் இந்த நாட்டு மக்களின் ஈனத் தன்மைக்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்?
இந்தியனும் அய்ரோப்பியனும் அல்லாத ஒரு மனிதன் இன்றைய தினம் இந்தியாவுக்கு வந்து திருவிசலூர் அக்கரகாரத்துப் பார்ப்பனர்களின் காட்சிகளையும் நகரங்களிலும் பட்டினங்களிலும் நடக்கும் சட்டமறுப்பு மீட்டிங்குகளின் பேச்சுகளையும் காண்பானேயானால் எள்ளி நகையாட மாட்டானாவென்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நான் ஏதாவது சத்தியாகிரகத்துக்குப் பயந்து கொண்டு பேசுகிறேன் என்று கருதுகிறீர்களா? நானும் ஒரு காலத்தில் சட்ட மறுப்பு மறியலும், சத்தியாகிரகமும் செய்து பார்த்து அதற்காக பல தடவை சிறை சென்றுமிருக்கிறேன். இந்நாட்டில் எல்லாரையும் விட பெரிய தேசப் பக்தனாகயிருந்து பார்த்துமிருக்கிறேன். வருணாசிரம தருமிகளெல்லாம் என்னை ராஜரிஷி என்றும் பிரமரிஷி என்றும் சொன்னதோடு உற்சவங்களில் தேர்களில் கூட எனது படத்தை இழுத்திருக்கிறார்கள்.
ஆகவே ஒரு மாசமோ, மூன்று மாசமோ, ஆறு மாசமோ ஜெயிலுக்கு போவதால் எனக்கொன்றும் ஆபத்து வந்து விடாது. சத்தியாகிரகத்தில் சேர்ந்து கொள்வதால் எனக்கொன்றும மரியாதையுங் குறைந்து விடாது. ஆதலால் நான் எவ்வித சத்தியாகிரகத்திற்கும் எந்த ஜெயிலுக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. பின்னை ஏன் அதை ஆதரிக்கவில்லை என்றால் அதன் உண்மையும் அனுபவமும் எனக்குச் சிறிதாவது தெரியும். சுமார் பத்து வருடத்திற்கு முன் ஏற்பட்ட ஒத்துழையாமையின்போது முப்பதினாயிரம் பேர்கள் சிறை சென்றோம். ஒரு கோடி ரூபாய் செலவுஞ் செய்தோம். ஒரு வளைந்துபோன பின் (யீ) ஊசிக்கும் பயன்படவில்லை. நான் அவ்வளவு பாடுபட்டும், எவ்வளவோ தேசியப்பிரசாரம் செய்தும் இன்றும் திருவிசலூர் அக்கரகாரத்தில் தடியும் கையுமாய் பார்ப்பனர்கள் நின்று கொண்டிருப்பதை மாற்ற முடியவில்லையென்றால் யோக்கியனுக்கு வேலை அங்கா? இங்கா? என்று பாருங்கள். உண்மையில் எந்த வைதீகர்களும் வருணாசிரம தருமிகளும் என்னைப் பெரிய ராஜரிஷி என்றும், பிரமரிஷி என்றும், தேசப் பக்தன் என்றும், தேசிய வீரனென்றும் அழைத்தார்களோ அவர்களேதான் இன்றைய தினம் என்னைத் தேசத்துரோகி என்றும், மத துவேஷி என்றும் அழைக்கப்படுவதை நான் பார்க்கிறேன்.
ஆகவே இதிலிருந்தே நான் முன் செய்த தொண்டு வைதீகர்கட்கும், வருணாசிரமிகட்கும் அனுகூலமான தென்றும் இப்போது நான் செய்வது அவர்களுக்கு விரோதமானதென்றும் நன்றாய் விளங்கவில்லையா?
இவற்றிலிருந்து தான் எனது தொண்டில் எனது அபிப்பிராயத்தில் நாளுக்கு நாள் உறுதிப்பட்டுக் கொண்டு வருகின்றது. என்றையதினம் அரசியல் என்பதாக நம் நாட்டில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டதோ அன்றயதினமே படித்த மக்கள் என்பவர்களிடம் நாணயக் குறைவும் சுயநலமும் ஏற்பட்டு விட்டது. அதன் பயனாய் பாமரமக்கள் ஏமாற்றமைடைந்து பழைய அரசியல் நிலை-மையைவிட அதிக மோசமான நிலைமை ஏற்பட்டு விட்டது. நமது நாட்டைப் பொறுத்தவரையில் அன்னிய ஆட்சியையொழிக்கும் அரசியல் கிளர்ச்சி என்பது உதவவே உதவாது; முடியவே முடியாது. ஏனெனில் நமது நாடானது அன்னியராட்சிக்கு அநுகூலமாகவே ஆதியிலிருந்தே அமைக்கப்பட்டு விட்டது. அதற்கு உதாரணமாக நமது நாடு அன்னிய ஆட்சி இல்லாதிருந்த ஒரு காலத்தை நம்மால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
உதாரணமாக இந்தியாவானது அய்ரோப்பியராட்சிக்கு முன், துருக்கியராட்சியிலே தான் சுமார் ஆயிரம் வருஷம் வரை யிருந்து வந்திருக்கிறது. அதற்குமுன் ஆட்சிக்குக் சரித்திரங்களையோ புராணக் கதைகளையோ ஆதாரமாய் எடுத்துக் கொள்வதாய் இருந்தால் ஆரியர்களுடைய ஆட்சியாகத்தான் இருந்திருக்கிறது. அதற்குமுன், அல்லது அதன் மத்தியில் ஏதாவது ஆட்சி சொல்ல வேண்டுமானால் காட்டு ராஜாக்களும், ஆரியக் கொள்கைக்கு அடிமையாயிருந்த மூட ராஜாக்களும் இருந்த ஆட்சியில் தான் நாடு சின்னாபின்னப்பட்டுக் கிடந்திருக்கிறது. இந்த நிலையில் எப்பொழுது இந்தியா அன்னிய ஆட்சியின் கீழ் இருந்-திருக்கவில் லையா யென்பதை யோசித்துப் பாருங்கள். இவைகளில் எந்த ஆட்சியை நாம் சுய ஆட்சி என்று சொல்லுவது? எந்த ஆட்சியை அன்னிய ஆட்சி என்று சொல்லுவது என்பவைகளை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
மனு தர்மம்
நீதி வழுவாமல் நடந்த ராஜ்ஜிய பாரங்கள் என்பது மநுதரும சாஸ்திர கொள்கைபடிக்கு நடந்ததாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. தரும ராஜ்ஜியங்கள் என்று சொல்லுவது ராமனும், அரிச்சந்திரனும் போன்றவர்கள் ஆண்ட ராஜ்ஜிய பாரத்தையும் அவர்களின் கதைகளிலிலுள்ள கொள்கைகளையும் தான் சொல் லப்பட்டிருக் கின்றன. சாதாரணமாக இராமனைக் கடவுளாக நம்பி இருப்பவர்களையும் இராமன் கதையை உண்மை என்று கருதிக் கொண்டிருப்பவர்களையும் இராம ராஜ்ஜியத்தை இன்றயதினம் ஒப்புக்கொள்ளுகிறார்களாவென்பதைக் கேட்கிறேன்? இராம ராஜ்ஜியம் வருணாசிரம ராஜ்ஜியமா அல்லவா? ராமராஜ்ஜியத்தில் மக்களுக்குச் சம சுதந்திரம் இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா? அதுபோலவே அரிச்சந்திரன் ராஜ்ஜியத்தில் நீதியோ நாணயமோ சிறிதாவது இருந்ததாக யாராவது சொல்ல முடியுமா? இந்தக் கதைகள் உண்மையாகயில்லாவிட்டாலும் இதைத்தானே நல்லரசாட்சிக்கு அறிகுறியாய் சொல்லப்படுகிறது. அரிச்சந்திரன் தன் பெண்ஜாதியை மற்றொருவனுக்கு விலை கூறி விற்றான் என்பதினாலேயே பெண்கள் விற்கப்படும் சாதனம் என்பதும் அடிமை என்பதும் உறுதிப்படவில்லையா? பறையனிடம் அரிச்சந்திரன் அடிமை யானான் என்பதினாலேயே தீண்டாமையும் ஜாதி ஆணவமும் அடிமை விற்பனையும் உறுதிப்படுத்தபடவில்லையா? யாகத்திற்காக முனிவர்களுக்குப் பணம் கொடுத்தார்களென்பதும், மற்றும் பிராமணர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்தான் என்பதும் பார்ப்பனராதிக்கத்தையும் அவர்களுக்கு எல்லா சொத்தும் உரிமை என்பதும் உறுதிப்படவில்லையா? அதுபோலவே, ராம ராஜ்ஜியமும், ராமாயணத்திலுள்ளபடி உண்மையாயிருக்குமானால் அது வெறும் ஜாதி வித்தியாசத்தையும் பார்ப்பன உயர்வையும் கற்பிக்கின்றதல்லாமல் வேறு என்ன நீதி அதனுள் அடங்கியிருக்கின்றதென்பதை யோசித்துப்பாருங்கள். பெண் கொடுமை ராமாயணத்தைப் போல் வேறெதிலும் காண்பதரிது. உதாரணமாகத் தாடகையைக் கொன்றது, சூர்ப்பனகையை மூக்கையும், முலையையும் அறுத்தது, கைகேயியையும் கூனியையும் இழிபடுத்தியது முதலியவைகளும், சீதை கர்ப்பமாக இருக்கும்போது அவளினது கர்ப்பத்தில் சந்தேகம் ஏற்பட்டதாக அவளைக் கொண்டுபோய் வனாந்திரத்தில் தனியே விட்டுவிட்டு வரச்செய்தானென்பதும் கடைசியாக அவள் உயிருடன் புதைக்கப்பட்டதுமான காரியங்களிலிருந்து பெண்களின் உயிரை எவ்வளவு அலட்சியமாகக் கருதப்பட்டிருக்கிறதென்பது விளங்கவில்லையா? அது போலவே ஒரு பார்ப்பனரல்லாதான் தவஞ் செய்ததற்காக அவனை ராமன் கொன்றானென்றால் அதில் ஜாதி ஆணவம் விளங்கவில்லையா? மற்றும் தசரதன் அறுபதனாயிரம் பெண்ஜாதிகளோடு இருந்தானென்பதிலிருந்து பெண்களை எவ்வளவு கொடுமைபடுத்தி இருக்கிறார்கள் என்பது விளங்கவில்லையா? மற்றும் பாதரட்சையைச் சிம்மாசனத்தில் வைத்து பரதன் பதினான்கு வருஷம் ராஜிய பாரஞ் செய்தானென்பலிருந்து அந்த நாட்டு மக்களின் சுயமரியாதையைப் பற்றி சிறிதாவது அவ்வாட்சிக்குக் கவலையிருந்ததா என்பனவாகியவை விளங்கவில்லையா? இதுபோலவே சேர, சோழ, பாண்டியர்களின் அரசாங்கத்தின் யோக்கியதையும் சமணர் கழுவேற்றப்பட்டதிலிருந்து எவ்வளவு மூர்க்கத்தனமான காட்டுமிராண்டித்தனமான ராஜ்ஜியமாயிருந்திருக்கின்றதென்பது விளங்கவில்லையா?
ஆகவே வெள்ளைக்காரர்கட்கும் முகமதியர்கட்கும் முன்னால் இந்தியாவில் ஒரு நாளும் சுயேச்சையான இராஜியமோ யோக்கியமான இராஜியமோ இருந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. மகமதிய அரசாட்சியும், ஆங்கிலேய அரசாட் சியும் இந்த நாட்டுக்கு யாரால் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது நாமெல்லோரும் அறியாத விஷயமா? பார்ப்பனீயமும் மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னா லும் தீராது என்றுதான் சொல்ல வேண்டும். (அதிக நேரமாய் விட்டதால் மற்றதை முடிவுரையில் சொல்வ தாகச் சொல்லி சாப்பாட்டிற்காக மகாநாடு கலைக்கப்பட்டது).“பார்ப்பனரல்லாதாருக்கு நன்மை செய்பவர்களுக்கே வோட் செய்ய வேண்டு”மென்ற தீர்மானம் குறித்து பேசுகிறேன். இப்படிப்பட்ட தீர்மானம் வரவேற்பு கமிட்டியால் ஏன் கொண்டுவரப்பட வேண்டும் என்று நினைக்கையில், பொதுவாகப் பார்ப்பனரல்லாதாருக்குத் தற்சமயம் உள்ள எந்தக் கட்சி யாரிடமும் நம்பிக்கையில்லையென்றே தெரிகிறது. நமது நாட்டில் அநேக கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் இன்றைய தேர்தல்களில் இரண்டு கட்சி களே முக்கியம். மிதவாத கட்சி, காங்கிரஸ் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி, சுயேட்சை கட்சி என இப்படிப்பட்ட பலகட்சிகளெல்லாம் இருந்தும், இப்போது ஜஸ்டிஸ் கட்சியார் என்பவரும், தேசீயக் கட்சியார் என்ற மந்திரி கட்சியாரும் தேர்தலில் பெரும்பாலும் நின்று போட்டிபோடப் போகிறார்கள்.
அந்த இரண்டு கட்சியாரும் தம் தம் அறிக்கையை வெளியிட்டிருக் கிறார்கள். அவற்றில் எது உயர்வு எது தாழ்வு என்று கண்டுப்பிடிப்பது கஷ்டமான காரியம். இரு கக்ஷியாரும் தேர்தல் காலம் தவிர மற்ற காலங் களில் எந்தவித கொள்கையையும், ஒழுங்கையும் கொண்டு எவ்வித பிரசார மும் செய்தவர்கள் அல்ல.
அவர்கள் இரு திறத்தாரும் தம் தம் அறிக்கையை எழுதியபோது அதை எப்படி எழுதினால் பொது ஜனங்கள் ஏமாறுவார்களோ அப்படி எழுதவேண்டுமென யுக்தி செய்து எழுதியிருக்கிறார்கள். ஏனெனில் நமது மக்கள் தம் வோட்டுக்களைத் தகுதியானபடி உபயோகப்படுத்தப் போதிய அறிவு பெற்றில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். தேர்தல் நடக்கும் போது ஜனங்கள் தாக்ஷண்யத்திற்காகவும், பணத்திற்காகவும், நிர்பந்தத் திற்காகவும் கட்டுப்பட்டே வோட் பதிவு செய்ய வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். அறிக்கையில் கூறப்பட்ட கொள்கைகளில் உள்ள ரகசியத் தைக் கண்டுபிடிப்பது மிகக் கஷ்டமான காரியமல்ல. ஜஸ்டிஸ் கட்சியார் ஆட்சியில் இருந்த 6 வருஷத்திலும், மந்திரி கட்சியார் ஆட்சியில் இருந்த சென்ற 4 வருஷத்திலும் இரு வகையார்களும் தவறுதல் செய்திருக்கிறார்கள். இரண்டு வகையாரும் நன்மையும் செய்திருக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியார் பார்ப்பன ஆதிக்கத்தைக் குறைக்கப் பாடுபடுகிறார்கள், மந்திரி கட்சியாரும் பாடுபட்டிருக்கிறார்கள், சிலசமயம் ஜஸ்டிஸ் கட்சியாரும் பார்ப்பனரல்லா தார் நலத்தை அலட்சியம் செய்திருக்கிறார்கள் என்றும், சில சமயம் மந்திரி கட்சியாரும் பார்ப்பனரல்லாதாரது நலத்தை அலட்சியம் செய்திருக்கிறார் களென்றும் சொல்லுவதற்கு இடம் ஏற்படக் காரணம் என்னவென்றால் அநேகமாக அவையெல்லாம் முதலில் தம் நிலைமைக்கு ஆபத்து வராமல் காப்பாற்றிக் கொள்வதற்குச் செய்து கொண்ட நடவடிக்கைகளேயாகும். அவர்கள் தம் நிலைக்குப் பந்தோபஸ்து தேடிக் கொண்ட பிறகுதான், மற்றவர் களுக்கு நன்மைகளை நாடிச் செய்ய முடியும். தனிப்பட்ட நபர்களின் சுயநலத்திற்காக கொள்கைகளை விட்டுக் கொடுத்து துரோகம் செய்த சங்கதி யும் இரு கக்ஷியாரிடமும் ஏராளமாய்க் கண்டு பிடிக்கலாம். ஏதாவது நன்மை செய்ய வேண்டுமென்பவர் முழுவதும் பரிசுத்தமான வராகவே இருந்தாரென்பது இது வரைக்கும் செத்துப் போனவர்களுக் குள்ளும் இருந்திருக்க முடியாது. உயிரோடு இருக்கிறவர்களுக்குள்ளும் இருக்க முடியாது. “கடவுளே” அவர்களது ஸ்தானத்தில் வந்து அமர்ந்தாலும் அவரும் அப்படித்தான் செய்ய முடியும். யாரும் முதலில் தம் நிலைக்கு பந்தோபஸ்து செய்து கொள்வார் என்றே நான் சொல்லுவேன். இப்படி இரண்டு கட்சி மந்திரிகளும் பலரை சுயநலத்திற்காக ஆதரிக்கையில் அயோக்கியர்களையும், திருடர்களையும் கூட ஆதரிக்கிறார்கள். இதன் ரகசியத்தை நான் அறிந்திருக்கிறேன். பொறுப்பில்லாதாரும் ஆதரிக்கப் பட்டிருக்கிறார்கள். சுயநல உருக்கொண்டாரும் நாணயமும் பொறுப்பும் இல்லாதாரும் ஆதரிக்கப் பட்டிருக்கிறார்கள். நான் இங்கு இத்தீர்மானத்தின் மீது எந்த வகையான மந்திரிமார்களைப் பற்றியும் குற்றம் சொல்லவோ, தூற்றவோ வரவில்லை. நம்முன் இருப்பதைக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட தன்மையில் இரண்டு கட்சி மந்திரி களாலும் துன்ப முற்றவர்கள் எப்படியும் இருக்கத்தான் நேரும்.
இந்தத் தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் திரு. பன்னீர் செல்வத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர் கூட சில சமயம் தவறியிருக்கலாம். ஆயினும் அவர் பார்ப்பனரல்லாருடைய நன்மைகளைக் கவனிப்பதில் பிடிவாதமாக இருந்து காரியம் செய்தவர். இந்த மாகாணத்தில் எந்த ஒரு ஜில்லா போர்டின் தலைவரும் செய்யாத அவ்வளவு பெரிய அபூர்வமான வேலைகளை அவர் இந்த ஜில்லாவில் செய்திருக்கிறார். அவ்வளவுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் வேறு எந்த ஜில்லாவிலும் இல்லை. கூடுமான வரைக்கும் கஷ்டப்பட்டிருக்கிறார். மக்கள் அதை உணர வேண்டும். திரு. சௌந்திரபாண்டியரைப் பற்றியும் அப்படியே ஒப்பிட்டுச் சொல்லலாம். ஆகவே அவ்விருவரும் எந்தக் கட்சியிலிருப்பினும் நீங்கள் அந்த இருவருக்கும் “வோட்” செய்ய வேண்டியது உங்கள் கடமையாகும். இல்லா விட்டால் நீங்கள் பொது நன்மைக்கும் பொது ஜனங்களுக்கும் விரோதம் செய்தவர்களாவீர்கள்.
இங்கு நம் நண்பர் ஒருவர் கனம் முத்தையா முதலியார் பற்றி பேசினார். அதாவது, அவர் கனம் முத்தையா முதலியார் நமக்கு பெருத்த நன்மை செய்திருக்கிறாரானாலும் ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாய் நின்று காங்கிரஸ்காரர்களின் சார்பில் இருந்தார் என்று சொன் னார். அப்படிப் பார்த்தால் இங்கே இருக்கும் நம் சின்னையா அவர்களையும் கழுத்தைப் பிடித்துத் தள்ளி விடவேண்டும் என்றல்லவா ஆகும். ஏனெனில் அவரும் தாம் காங்கிரசிலிருந்த போது ஜஸ்டிஸ் கட்சியை வைதேன் என்று சொல்லியிருக்கிறார். நேற்று ஒரு மாதிரியாக இருந்தவர் இன்றைக்கு வேறு மாதிரியாக ஆகலாம். காங்கிரசில் டாக்டர். நாயர் அவர்களும், திரு. செட்டி யார் அவர்களும் எவ்வளவு உழைத்து இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். கடைசியில் அவர்களும் ஏமாற்றமடைந்தவர்கள் தான். இதற்கு யார் என்ன செய்வது? ஜஸ்டிஸ் கட்சியார் தமது ஆட்சியில் செய்யாததும், செய்ய நினைக்காததுமாகிய அற்புதமான காரியத்தை நமது கனம் முத்தையா முதலியார் செய்திருக்கிறார். அதற்காக நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு “முத்தையா” என்று அவருடைய பெயரை இட வேண்டு மென்பேன். நமது எதிரிகள் பார்லிமெண்டிலும், இந்தியா சட்டசபையிலும் அவர் செய்த நன்மையை அழிப்பதற்காக பாடுபடுகிறார்கள். இந்தியா சட்டசபையிலுள்ள அங்கத்தினர்களில் 100-க்கு 99 பேர் பார்ப்பனர்களாக நம் மாகாணத்தினின்றும் போய் உட்கார்ந்து கொண்டு கனம் முதலியார் வீதாச்சாரமுறைப்படி உத்தியோகம் பிரித்த செயலைத் தாக்குகிறார்கள். அவர் பிரித்திருக்கிற முறையினால் எல்லாருக்கும் பங்குவீதம் கிடைத் திருக்கிறது. இதற்காகவே பார்ப்பனர்கள் இவருடையத் தலையில் கை வைக்கப் பெரிய முயற்சிகள் செய்கிறார்கள்.
நம் பிள்ளைகள் படிப்பது, வேலைகள் கிடைக்க வேண்டும் என்ப தற்கே. பிள்ளைகளின் உத்தியோகத்தை நம்பியே பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள். கனம் முத்தையா முதலியார் உத்தியோகங்களை பங்கு பிரித்து கொடுக்க செய்திருக்கிற ஏற்பாட்டினால், ஒரு வகுப்பான் தன் கொள்கையை விட்டுக் கொடுத்தோ, நாணயமற்றத் தன்மையிலோ யோக்கிய தன்மைக்கு மீறியோ, உத்தியோகம் பெற முடியாது. வெகு காலமாய் தாழ்த்தப்பட்டு தீண்டாதார் ஆக்கப்பட்டவருக்கும் பங்குகிடைத்திருக்கிறது. முகமதியர்களுக்குப் போதிய பங்கு பெற முடிந்திருக்கிறது. கிறிஸ்தவர் களுக்கும் போதிய பங்கு பெற வாய்த்தது. கிறிஸ்தவர்களில் சிலர் இதற்கு விரோதமாக இருந்தார்கள். ஏனெனில் அவர்களில் படித்தவர் அதிகம். உத்தியோகம் எல்லாம் விகிதாச்சாரத்தில் வந்து விட ஏதுவாய் விட்டது. ஆகையால் அதை புதுப்பிக்காவிட்டாலும் சரி அதை அழிக்கவே கூடாது. ஒருவர் செய்த நன்றியை மறப்பது எல்லாவற்றைவிட இழிகுணமாகும். இதை கவனித்து கனம் முத்தையா முதலியார் எந்தக் கட்சியிலிருந்தாலும் அவருக்கு நீங்கள் வோட் செய்யுங்கள் என்று நான் சொல்லுகிறேன். அவர் செய்தது யாரோ ஒரு சில நண்பர்களுக்கு கெடுதலாக இருந்தால் அதைப் பொருட்படுத்தக் கூடாது.
கட்சி பிரதானமல்ல
ஜஸ்டிஸ் கட்சியார் ஆட்சியிலிருந்தபோது ஈரோடு முனிசிபாலி டியில் எவ்வளவோ திருட்டு புரட்டுகள் நடந்திருக்கின்றன. அதனால் பலருக்கு எவ்வளவோ கெடுதல்கள் நடந்திருக்கின்றன. அதற்கெல்லாம் அவர்கள் தெரிந்தும் உடந்தையாய் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் (ஜஸ்டிஸ் கட்சியார்) அநேக துறைகளில் பொதுவாக நன்மைகள் செய்திருக் கின்றார்கள். இந்த காரணங்களையெல்லாம் கவனிக்கையில் நாம் கட்சியைப் பிரதானமாகக் கவனிக்காமல் தனிப்பட்ட நபர்களின் திறமையையும், உணர்ச்சியையும், அவர்கள் செய்யக் கூடிய சௌகரியத்தையும் பிரதான மாகக் கவனித்து வோட் செய்ய வேண்டும். மிகவும் கண்டிப்பாகப் பார்த் தால் ஒருவரும் மிஞ்சமாட்டார்கள். உதாரணமாக ராவ்பகதூர் சி. எஸ். இரத்தினசபாபதி முதலியார் தம் மகள் கலியாணத்தில் பார்ப்பன புரோகிதர் களைக் கொண்டு கலியாணம் நடத்தினார். ஆனால் அவரே முன் செய்த கலியாணத்தில் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டு நடத்தினார். அவர் இப்படி ஏதாவதொன்றில் தவறினார் என்று கருதி அவர் மக்களுக்குச் செய்கிற மற்ற நன்மைகளை தியாகங்களை எல்லாம் மறந்து விடுவதா? அவரைக் குற்றம் சொன்னால் அவர் “சுயமரியாதை” இயக்கத்தை விட்டு விடுவாரா? கனம் முத்தையா முதலியாரைப் பாருங்கள்; அவர் கூட திவசம் செய்து பார்ப்பனர் காலில் விழுந்தார். அவர் பண்டார சன்னதி ஒருவரையும் வணங்கினார். அவர் செய்த மற்ற காரியங்களுக்கு நாம் நன்றியறிதல் உடையவர்களாக இருக்க வேண்டாமா?
இப்போது நம் திரு. பன்னீர் செல்வம் சுயமரியாதைக் கட்சியில் உதவித் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். காரணம் அவர் அதில் இருந்தால் தேர்தலில் பாதிரிமார்கள் அவருக்கு உதவி செய்ய மறுக்கின்றார்கள். ஏனெனில் பாமர மக்களுக்கு நன்மை தீமைத் தெரியாது. நாம் கட்சியின் பெயரைக் கவனிக்காமல் பார்ப்பனரல்லாதாருக்கு நன்மை செய்யக் கூடியவர் யாராயிருந்தாலும் அவருக்கு வோட் செய்தே தீர வேண்டும். யோக்கியர்களுக்கே வோட் செய்ய வேண்டும்.
நான் காங்கிரசில் இருந்தபோது, “காங்கிரஸ்காரர்களாயிருப்பினும், பார்ப்பனரல்லாத கட்சியாக விருப்பினும் யோக்கியர்களுக்கே வோட் செய்ய வேண்டும். கட்சியின் பெயரைக் கவனிக்க வேண்டாம்” என்றேன். இதற்காக,
மதுரை காங்கிரஸ் கமிட்டியில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து என்னைக் கண்டனம் செய்தார்கள். என்னை ராஜினாமா செய்யும்படி கேட்டார்கள். நான் அதுதான் எனது கொள்கை என்று சொல்லி சும்மா இருந்து விட்டேன்.
இப்பொழுது காங்கிரசின் பேரால் நின்றால் வோட் கிடைக்கும் போல் இருந்தால் சிலர் அதன் பேராலும் தேர்தலுக்கு நின்றிருப்பார்கள். ஆனால் இப்பொழுது காங்கிரஸ் கட்சியாருக்கு இங்கு செல்வாக்கும், மதிப்பும் இல்லை. அந்த லேபில் ஒட்டிக் கொள்வதனால் அவர்களுக்குச் சவுகரியம் இல்லை. ஒவ்வொருவர் தத்தம் கடமையையும் சவுகரியத்தையும் உணரு கையில் ஒவ்வொரு கட்சியிலும் சேரத்தான் செய்வார்கள். கனம் முத்தையா முதலியார் காங்கிரஸ் டிக்கட்டினால் தேர்ந் தெடுக்கப்பட்டாரென்று குற்றம் சொன்னால் போதுமா? பொதுவாக அவர் அப்படிச் செய்தது நமக்கு நன்மையா? தீமையா? ஜஸ்டிஸ் கட்சியாரும் மற்ற கட்சியார்களையெல்லாம் ஜஸ்டிஸ் கட்சிக்கு இழுக்கத்தானே பாடுபட்டிருக்கிறார்கள். இதெல்லாம் அரசியல் தந்திரமாம். நான் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். உங்க ளைக் கட்டாயப்படுத்தவில்லை. திரு. பன்னீர் செல்வத்தைப் பற்றியும், கனம் முத்தையா முதலியாரைப் பற்றியும் ஏதோ என் அபிப்பிராயத்தை தெரிவிக் கவே சொன்னேன். இவர்கள் மட்டுமல்ல இதுபோல இன்னும் மற்ற ஜில்லாக் களிலும் அநேகர் இருக்கிறார்கள். ஆகவே நான் இந்த தீர்மானத்தை உங்கள் அபிப்பிராயத்துக்கு விடுகிறேன்.
முடிவுரை
சகோதரர்களே! அபிப்பிராயப் பேதம் இல்லாமலே எல்லாத் தீர்மா னங்களும் நிறைவேறிவிட்டன. முடிவுரையாக நான் என்ன சொல்லப் போ கிறேன் என்று எதிர்பார்க்கின்றீர்கள். இப்போதைய நிலைமை எப்படி இருக் கிறது? எப்படி நடந்தால் - என்ன முயற்சியில் ஈடுபட்டால் நம் நிலைமை மேன்மையாக இருக்கும்? உலகில் நம் நாடு தாழ்ந்த நிலையிலிருக்கிறது. கல்வி, செல்வம், விவசாயம், சுகாதாரம், அறிவு, மனிதத்தன்மை ஆகிய இந்த முக்கிய அங்கங்களில் நான் காலையில் சொன்னது போல் நம் நிலைமை மாற வில்லை. நாம் தெய்வத் தன்மை என்று எவ்வளவோ சொல்லிக் கொண்டு வாழ்கிறோம். ஆனால் நாம் காட்டுமிராண்டித் தனமாய்த் தான் இருக்கிறோம். நம் நாட்டு யோக்கியதையைப் பாருங்கள். முதலாவதாக,
கல்வி
கல்வியை எடுத்துக் கொள்ளுங்கள். உலகத்தில் மேனாட்டாரெல்லாம் 100க்கு 100பேர் கல்வியறிவுடையவராக இருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் 100க்கு 7 பேர்தான். அடுத்த கணக்கில் அது 10 ஆகலாம். ஆனால் இந்த 100க்கு 7 பேர் என்றதும் பொய் கணக்கே. எப்படி என்றால் தீண்டாத வகுப்பாரில் 1000க்கு 5 பேர்தான். நாயுடு, செட்டியார், முதலியார், கவுண்டர் முதலியதாகிய சாதிப்படி பார்த்தால் 100க்கு ஒன்றரை, 2 அல்லது இரண்டரையாகத்தான் இருக்கும். இன்னும் நம் சகோதரிகள் கணக்கு 1000க்கு 1 அல்லது ஒன்றரை தான் இருக்கும், இதெல்லாம் எப்படி 100க்கு 7 வீதம் சராசரி கணக்கானது என்றால், அது 100க்கு 100 வீதம் படித்த பார்ப்பனர் கணக்கை நம்முடன் சேர்த்து கணக்குப் போட்டதால் வந்த விகிதமாகும். வண்ணார், பரியாரியார், இன்னும் மற்ற வகுப்பாரில் படித்தவர்கள் 100க்கு 2 பேர் கூட இருக்க முடியாது. இம்மாதிரி 100க்கு 7 பேர் படித்திருக்கும் நம்மிடை கல்வி பரவாததற்கு வெள்ளைக்காரர்கள் தான் காரணம் என்று நமது தேசீயவாதிகள் சொல்லுகிறார்கள். ஆனால் பார்ப்பனர் மட்டும் 100க்கு 100பேர் படித்ததற்கு யார் காரணம் என்பது அவர்களுக்கு புரிவதில்லை. பஞ்சாங்கப் பார்ப்பனர்கள் படித்து வாழவே நம்நாட்டில் தேசீயமும் பொது நல சௌகரியங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
மதக் கொடுமை
நம் மதமும், நம் நீதிகளும், நம் தெய்வங்களுமே நமது கல்வியற்ற நிலைமைக்குக் காரணமாகும். உதாரணமாக வேத தர்ம சாஸ்திரங்களைப் பாருங்கள். அவற்றில் இன்னார்தான் படிக்கலாம், இன்னாருக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்கின்றதான நிபந்தனையிருக்கிறது. இதனாலேதான் நம் நாட்டில் கல்வி இல்லை.
“சூத்திரன்” படிக்கக் கூடாது. அவனுக்குப் படிப்பு சொல்லிக்கொடுக் கக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிற இந்து மதத்திற்கு நாம் கட்டுப் பட்டதால் “சூத்திரர்” என்ற நாமத்தை நாம் ஏற்றுக் கொண்டதால் படிக்க முடியாமல் போய் விட்டது.
மிஸ் மேயோ பனகால் அரசரைக் கண்ட போது “பார்ப்பனரல்லாதா ருக்கு மூளையில்லையா? ஏன் படிக்கவில்லை” என்றார். அதற்கு பனகால் அரசர் “அது பார்ப்பனர் மூளையின் சூழ்ச்சியாலேயே” பார்ப்பனரல்லாதார் படிக்க முடியாமல் போயிற்று என்றார். அப்படியே மேயோ அம்மையாரும் எழுதி விட்டார்.
திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரி இந்தக் குற்றத்தை மறுக்கையில் மாட்டிக் கொண்டார். அவர் “சூத்திரர்கள்” வேத சாஸ்திரந்தான் படிக்கக் கூடாதே யொழிய மற்றவற்றைப் படிக்கலாம் என்று இருப்பதாகச் சொன்னார். முன் காலத்தில் வேதம், சாஸ்திரம் இவைதவிர வேறு படிக்க நூல் இல்லை. இங்கிலீஸ்காரன் வந்த பிறகு தான் புஸ்தகம் ஏற்பட்டது. முன் காலத்தில் படிப்புக்கு வேறு வசதி இல்லை. நீதி நூல்கள் தான் இருந்தன. புராணங்கள் தவிர வேறு இலக்கியம் இல்லை. அவைகளும் வடமொழியில்தான் இருந்தன. இப்படியெல்லாம் இருந்ததால் நாம் படிக்க முடியவில்லை. வெள்ளைக்காரர்கள் வந்த பின்பே நாம் இப்போது 100க்கு 7 வீதமாவது படிப்பு அனுபவிக்க முடிந்தது.
இக்காலத்திலும் பார்ப்பனர்கள் கேள்வியின்றி ஆட்சியிலிருந்ததால், அவர்கள் மாத்திரமே படிக்கச் சௌகரியமாக விருக்கும் படியாக வழிகளை வகுத்து வந்தார்கள்.
வீண் செலவால் தரித்திரம்
பயனில்லாத வழியில் மதத்தின் பேரால் நமது பணத்தையெல்லாம் பாழாக்குகிறோம். ஒரு மனிதன் தினம் 8 அணா சம்பாதித்து 4 அணா மிச்சம் பிடித்தால் அவன் அதை பிதிர்களுக்கும், சடங்குகளுக்கும், சாமிகளுக்கும், பொங்கல்களுக்கும் செலவு செய்யவே வழி காட்டப்படுகிறான். அவன் ஒரு வாரத்தில் சேர்த்ததை குடியில் செலவு செய்கிறான். ஒரு மாதத்தின் மீதத்தை பண்டிகையில் செலவு செய்கிறான். ஒரு வருஷ மீதத்தைத் திதியில் செலவு செய்கிறான். 10 வருஷ மீதத்தை கலியாணம், கருமாதியில் செலவு செய்து விடுகிறான். இவையன்றி சில்லரைச் சடங்குகளும், சில்லரைத் தேவதை களும் உற்சவங்களும் நம் செல்வத்தை விழுங்கிவிடுகின்றன. மேற்கொண்டு கடனும் வாங்கச் செய்கின்றன. இவைகளே நாம் நிரந்தர கடனாளியாகவும் தரித்திரவான்களாகவும் இருப்பதற்குக் காரணங்களாகும். இதையெல்லாம் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. படிப்புக்குப் போதுமான பணம் இல் லையா? நமது தஞ்சாவூர் ஜில்லாவை எடுத்துக்கொள்ளுங்கள். உற்சவங்கள் காரணமாய் வருடம் 40 ஆயிரம், 50 ஆயிரம், லட்சம் ரூ. வரை வருஷ வருமானமுடைய 30, 40 கோயில்கள் இருக்கின்றன. சமயங்கள் காரணமாய் வருடத்தில் 5 லட்சம், 10 லட்சம் வரும்படியை உடைய பல மடங்கள் இருக் கின்றன. கணக்குப் போட்டால் எவ்வளவு ரூபா மொத்த மதிப்பு ஆகிறது. உற்சவ செலவும் ஜனங்கள் போக்குவரத்து, ரயில் முதலிய செலவும் சேர்த்து எல்லாம் பார்த்தால் எந்தக் காரணத்தினாலும் 1 கோடிக்கு குறையாது. திருச்சிராள்ளி ரங்கநாதர், தென்னாற்காடு நடராஜர், மதுரை மீனாட்சி, ராமனாதபுரம் ராமலிங்கம் ஆகிய சாமிகளும், மற்றும் வட ஆற்காடு ஜில்லா அருணாசலம்; செங்கற்பட்டு வரதராஜ உடையவர்; சென்னப் பட்டினம் கபாலீசர்; சித்தூர் வெங்கிடாசலபதி ஆகிய சாமிகளின் உற்சவங்கள் கணக்கு எவ்வளவு. திருப்பதி கோயிலில் 20 லட்ச ரூ. காணிக்கை; ஏழரைக் கோடி ரூபாய் சொத்து, நகை, பாண்டுகள், வாகனங்கள், கட்டிடங்கள் இவற்றை எல்லாம் விற்றுக் கணக்குப் போட்டுப் பார்த்து 100க்கு 6 வட்டி வீதம் 40 லட்சம் ரூபாய் வட்டி அடையலாம். இந்த ஜனங்கள் காணிக்கைகள், உண்டி யலில் கொடுத்தல், போக வர செலவு எல்லாம் 60 லட்சம் ரூபாய் ஆகும். அவ்வளவும் நம் மக்கள் வீண் செலவு செய்து விடுகிறார்கள். திருப்பதிக்குப் போய் மொட்டை அடித்துக் கொள்ளுகிறவர்களின் செலவு எல்லாம் சேர்த்து மொத்தத்தில் 1 கோடி ரூபாய் ஆகிறது. இது போலவே இந்த இரண்டு ஜில்லாவிற்கு மாத்திரம் மேற்படி 2 கோடி ரூபாயாலும் எவ்வளவு கல்வி பரப்ப முடியும்? மற்ற சாமிகள் பணத்தாலும் எவ்வளவு கல்வி பரப்ப முடியும்? என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த ஜில்லாவிலுள்ள மடங்கள் என்ன போதிக்கின்றன? என்ன அறிவை வளர்க்கின்றன?
தலைக்கு நாள் ஒன்றுக்கு, 2, 5, 10, 15 ரூபாய் வரை, சராசரி சம்பாதிக்கக் கூடிய மக்களையுடைய ஐரோப்பிய தேசங்கள் இருக்கின்றன. நம் தேசத்தில் ஒருவன் சராசரி ஒன்றரை அணாதான் சம்பாதிக்கிறான். இது கூட இரண்டரை அணா செலவு செய்ய கற்ற பிறகுதான். இத்தனைக்கும் நாம் ஒரு செல்வக் கடவுளைக் கும்பிடுகிறோம். விளக்கமாறு, முறம், அம்மிக் குழவி, சாணிச் சட்டி உள்பட எல்லாம் லட்சுமி என்கிறோம். அப்படிக் கும்பிடும் நாம் இன்னும் ஏழையாகவே இருக்கிறோம். நம் மக்கள் சிங்கப்பூர், கொளும்பு, நெட்டால், தென்னாப்பிரிக்கா முதலிய இடங்களுக்குக் கூலி ஆட்களாகப் போகிறார்கள். இத்தனை லட்சுமிக் கடவுள்கள் இருந்தும் இந்த தரித்திர நிலைமையில் தான் இருக்கின்றோம். இதற்கு நம் சோம்பேறித்தனமும் நம் மக்கள் பணம் அனாவசியச் செலவு செய்யப்படுவதுமே காரணம். பணக்காரன் தொழில் துறையில் பணம் செலவு செய்வதில்லை. பணம் சேர்ந்தவன், “கடவுள் தந்தார்” என்கிறான். ஏழையானவன் “கடவுள் நமக்குக் கொடுக்கவில்லை” என்று நினைக்கிறான். ஏழை மக்கள் “கடவுள் கொடுக்க வில்லை” என்கின்றார்களே யொழிய அப்படிப்பட்ட கடவுளை ஒரு கை பார்ப்போம் என்று நினைப்பதில்லை. எதற்கும் “கடவுள் செய்வான்” என்ற கொள்கையே இருக்கிறது.
செல்வமானது கல்விக்கும் தொழிலுக்கும் உபயோகமாகும்படி செலவு செய்யப்படாமல் பணக்காரர்களால் சாமிக்கும், கோயில்களுக்கும் சடங்கிற்கும் போய்விடுகிறது. சாமிக்கு 3 வேளை 6 வேளை பூசை செய்தல், தாசி, மேளம் ஏற்படுத்தல், மரக்கட்டைகளின் மேல் பொம்மைகளை ஏற்றி தேர் என்று சொல்லி இப்படியாக 5000, 10000 பேர் இழுப்பதில் பணத்தைப் பாழ் செய்கிறார்கள். இது மோட்சமாம்! இப்படியெல்லாம் ஏழை மனிதன் தலையில் கை வைத்து மேனாட்டார் சாமிக்கு கொடுப்பதில்லை. அவர்கள் குழவிக் கல்லை நட்டுக் கும்பிடுவது மில்லை. ஒரு மேல் நாட்டான் தன் சொத்தைத் தர்மம் செய்ய எண்ணினால், மருத்துவ ஆஸ்பத்திரி கல்வி அபிவிருத்திக்குக் கொடுப்பான். ஒரு கண் ஆஸ்பத்திரிக்குக் கொடுப்பான். குஷ்டரோக ஆஸ்பத்திரிக்குக் கொடுப்பான். தொத்து வியாதிகள் வராமல் தடுக்கக் கூடிய ஆஸ்பத்திரிக்காகவும் கொடுப்பான். இத்துடனில்லாமல் அவன் தன் நாட்டையும் படிக்க வைத்தப் பின் நம் நாட்டிலுள்ள ஏழை களும், அனாதைகளும் உயர்த்தப்படுவதற்காக மிஷன் பாடசாலைகள் ஏற்படுத்தியிருக்கிறான். தொழிற்சாலை வைக்கிறான். நாமும் அதில் பங்கு அனுபவிக்கிறோம். நம் பிள்ளைகளையும் அவர்களுடைய பள்ளிக் கூடங்களுக்கு அனுப்புகிறோம். அவர்களது ஆஸ்பத்திரிகளுக்கும் செல்லுகிறோம். நாமோ தவறான வழியாகக் குழவிக் கல்லின் தலையில் நம் செல்வத்தைப் பாழாக்குகிறோம். நம்மிடம் அறிவு இல்லை. ஆகையினால் செல்வ விருத்தியும் இல்லை.
திருடனுக்கு திருடி பணம் வந்தாலும் அவன் காத்தானுக்கும், காளிக்கும் பொங்கல் போட்டு பாழாக்குகிறான். புதையல் எடுத்தாலும் சாமி தலையில் போட்டு விடுகிறான். இந்த நிலைமைக் கெல்லாம் நம் மூட நம்பிக்கைகளே காரணம். மற்ற நாட்டான் நம் நாட்டின் இந்த நிலைமை யைக் கண்டு சிரிக்காமல் இருக்க முடியாது. கல்லுக்கு 15 தேவடியாள், 20 ஆயிரம் ரூபாய் செலவில் உற்சவம்! அது தினம் 10 வேளை தின்பது! இவை போன்றவைகளுக்கு நம் முட்டாள் தனமே காரணம். நம் முட்டாள் தனத்தை யெல்லாம் வெள்ளைக்காரன் உணர்ந்து கொண்டான். இந்த நிலையில் அவன் எப்படி நமக்குப் பயப்படுவான்? நாம் இப்படியிருக்க இருக்க வெள்ளைக்காரனுக்குத்தான் நன்மை. இப்பொழுது எங்கும் நூல் நூற்கப் படுகிறது. ஒரு கொட்டங்கச்சியில் உப்புத் தண்ணீரை முகந்து 2 அணா விறகைச் செலவு செய்து உப்பு காய்ச்சினால் வெள்ளைக்காரன் ஓடிப் போய் விடுவானா? தக்ளியில் நூல் நூற்பதால் வெள்ளைக்காரன் நடுங்கி விடுவானா? நமது குற்றங்களை உணர்ந்து நாம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டாமா?
கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்
உங்களுடைய தெய்வமும், மதமும் விடப்பட்டொழிந்தாக வேண்டும். நான் கடவுளை உண்டு என்றோ, இல்லை என்றோ சொல்ல வர வில்லை. கடவுள் இருந்தால் அது இருக்கட்டும். அது இந்த ராமசாமிக்காக ஓடிப்போய் விடாது. அதற்கு எவனும் வக்கீலாக இருக்க வேண்டியதில்லை. “ராமசாமி கடவுள் இல்லை என்கிறான். பூசை வேண்டாம் என்கிறான்” என்றெல்லாம் பேசுகிறார்கள். நல்ல கடவுளாக இருந்தால் அது உங்களது பணச் செலவை எதிர்பார்க்குமா? அல்லது உங்கள் எண்ணெயையும், பாலையும், பஞ்சாமிர்தத்தையும் குளிப்பாட்டுதலையும் எதிர்பார்க்குமா? கடவுள் உண்டு, இல்லை என்ற சண்டை உலகம் தோன்றிய நாள் முதல் நடக்கிறது. நமக்கு அதை முடிவு செய்ய அவசியமில்லை. உன் அறிவையும் முயற்சியையும் உன் வாழ்க்கைக்கு உபயோகப்படுத்து. உன் செல்வத்தை வீணாக கடவுளுக்கென்று அழிக்காதே என்றே சுயமரியாதை இயக்கம் சொல்லுகிறதே தவிர வேறில்லை. உங்கள் தெய்வங்களது நிலைமையில் நான் இருக்க சம்மதிக்கமாட்டேன். ஏனெனில் நீ குளிப்பாட்டும் போது தான் குளிக்கவேண்டும். நீ வேஷ்டி கட்டிவிடும் போது தான் கட்டிக் கொள்ள வேண்டும். நீ எண்ணெய் தேய்த்து விடும்போது தான் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு யார் சம்மதிப்பார்கள்? கடவுள் உன் பூசையையும் உற்சவத்தையும் நகைகளையும் விரும்புகிறது என்று சொல்லுவது வெட்கக்கேடு.
ஆலயங் கட்டியவர்கள் கதி
தஞ்சாவூர் ராஜாக்களை விட உலகத்தில் இன்னொருவன் கோயில் கட்டியிருக்கிறானா? சத்திரங்கள் கட்டியிருக்கிறானா? மான்யங்கள் விட்டி ருக்கிறானா? அந்த கடவுள் தர்மம் அந்த ராஜாக்களுக்கு என்ன செய்தது? வம்சம் இருந்ததா? அவர்கள் வாரிசுதாரர்களுக்குக் கடவுள் தர்மம் ஒன்றும் செய்யவில்லை. வெள்ளைக்காரன் தான் சொத்துகள் கொடுக்கிறான். அந்த சாஸ்திரங்களுக்கு மதிப்பு இருந்தால் அந்த தஞ்சாவூர் முதலிய அரசர்கள் இப்படி அழிந்து போயிருப்பார்களா?
பழனியில் குடம் குடமாய்ப் பாலைக் கொட்டுகிறார்கள். அது தொட்டியில் விழுந்து துர்நாற்றம் எடுத்துப் போய் காலரா ஏற்பட வழி யாகிறது. ஏழைகளின் குழந்தைகள் பால் இல்லாமல் குரங்குக் குட்டிப்போல் மெலிந்து தவிக்கையில் குழவிக்கல்லின் தலையில் அதைக் கொட்டி வீணாக்குகிறார்கள். “அந்தக் குழந்தைகளின் வாயில் கொட்டு என் தலை யில் கொட்டாதே” என்று தான் யோக்கியமான கடவுள் சொல்லுமே யொழிய எந்த கடவுளும் அதில்லை என்று கோபித்துக் கொள்ளாது. அப்படி கோபித்துக் கொண்டால் கோபித்துக் கொள்ளட்டுமே. அது நம்மை என்ன செய்ய முடியும்? (சிரிப்பு) இப்படி இருந்தால் மக்களுக்கு ஜீவகாருண்யம், பரோபகார சிந்தை, இரக்கம் இவை எப்படி ஏற்படும்? கைலாசம், வை குண்டம், சொர்க்கம் என்ற இவை கற்பிக்கப்பட்டது முதல் மனிதன் அயோக் கியனானான். இவற்றின் பெயரால் மனிதனை மனிதன் இம்சித்தான், கொடுமை செய்தான். ஒரு சிம்டா “விபூதி”க்காக எல்லாப் பாவமும் போக்கி மோக்ஷம் கொடுத்ததால் மனிதனது அறிவு மயங்கிப்போயிற்று. இந்த மோட்ச நம்பிக்கைகள் ஒரே அடியாய் ஒழிய வேண்டும். இவ்வுலக அனு பவங்கள் லட்சியம் செய்யாமல் நாம் எப்பொழுது மேல் உலகமே பெரிது என்று கருதினோமோ அப்பொழுதே ஜீவகாருண்யத்திற்கும் ஒழுக்கத் திற்கும் இடமில்லாமற் போய் விட்டது. தான் மோட்ச மார்க்கத்தை நாடு வதற்காக ஒருவன் அயோக்கியனாகவும், கொடுமைசெய்பவனாகவும் இருக்க வேண்டியதாயிற்று. இது ஒருக்காலும் உண்மையான நாகரீகம் அல்ல. அன்பு அல்ல, இரக்கம் அல்ல, பரோபகாரம் அல்ல.
--------------------கும்பகோணம் தாலுகா திருவிசலூரில் 2.8.1930-இல் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு-- “குடிஅரசு” -10.08.1930, 17.08.1930
0 comments:
Post a Comment