Search This Blog
2.7.10
பார்ப்பனனுக்கும் சைவனுக்கும் சம்பாஷனை
சைவன் :- ஓய்! என்னாங்காணும்! அய்யரே! நீர் இப்போது மாமிசம் சாப்பிடுகின்றீரே! என்ன இப்படி கெட்டுப் போய்விட்டீர்.
பார்ப்பனன் :- வாரும், வாரும், பிள்ளைவாள்! எனக்கு வரவர ஜீவ ஹிம்சை என்றால் சற்றும் பிடிப்பதே இல்லை. இன்றைக்கு சாகின்றோமோ, நாளைக்கு சாகின்றோமோ; இதற்குள் ஏன் அநியாயமாய் பல ஜீவன்களை இம்சை செய்ய வேண்டும் என்பதாகக் கருதியே இனிமேல் காய்கறிகள் சாப்பிடுவதில்லை என்று தீர்மானித்து மாமிசம் சாப்பிட துணிந்துவிட்டேன்.
சைவன் :- என்னங்காணும் பார்ப்பனர் ஜீவ இம்சை கூடாது என்கின்றீர். அதற்காக மாமிசம் சாப்பிடுகின்றேன் என்கின்றீர். இது என்ன, போக்கிரித்தனமா அல்லவா?
பார்ப்பனன்:- கோபித்துக் கொள்ளாதீர் ஐயா! நீர் சைவர் அல்லவா? உமக்கு வெறும் கோபம்தான் வருமேயொழிய விஷயம் புலப்படுவதுதான் கஷ்டம்.
சைவன்:- என்ன பார்ப்பனக் குறும்பு நம்மிடம் காட்டுகிறாய். பார்ப்பான் மாமிசம் சாப்பிட்டுத்தான் இந்த நாடு பாழாச்சுது.
பார்ப்பனன் :- இந்த நாடுதான் பார்ப்பனன் மாமிசம் சாப்பிட்டு பாழாச்சுது, சரி வெள்ளைக்கார நாடு என்ன சாப்பிட்டு நல்லா ஆச்சுது? தவிரவும், இந்தியாவில் உள்ள 33 கோடி மக்களில் மாமிசம் சாப்பிடுகின்றவர் கள் எத்தனைப் பேர்? சாப்பிடாதவர்கள் எத்தனையோ பேர் என்பது உமக்குத் தெரியுமா? 7 கோடி மகமதியர் மாமிசம் சாப்பிடுகிறார்கள்! ஒரு கோடி கிறிஸ்த வர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். 6 கோடி தீண்டாதார் என்கின்றவர்கள் மாமி சம் சாப்பிடுகிறார்கள். க்ஷத்திரியர் என்கின்றவர்களில் சிங்கு க்ஷத்திரியர்கள் மராட்டா க்ஷத்திரியர்கள் நாடார் க்ஷத்திரியர் வன்னிய க்ஷத்திரியர், நாயுடு க்ஷத்திரியர், செங்குந்த க்ஷத்திரியர் ஆகியவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். ³ வகுப்பார்களில் வாணிய வைசியர் மாமிசம் சாப்பிடு கிறார்கள். நாட்டுக் கோட்டை தன வைசியர் வகுப்பார்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். வேளாளர் களில் கொங்கு வேளாளர்கள், கார்காத்த வேளாளர்கள், உடையார் வேளாளர் கள், மறவ வேளாளர்கள், படைத்தலை வேளாளர்கள், வடுக வேளாளர்கள், நாட்டார் வேளாளர்கள் ஆகியவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். திருநெல் வேலி தஞ்சாவூரில் உள்ள சில வேளாளர்கள் அவர்களைச் சேர்ந்த வெளியில் உள்ள சிலர்கள் தவிர மற்ற எல்லா வேளாளர்களும் மாமிசம் சாப்பிடுகிறார்கள். கடைசியாக, பிராமணர்கள் என்பவர்களிலோ சௌராஸ்டிர பிராமணர்கள், விஸ்வ பிராமணர்கள், தேவாங்க பிராமணர்கள், சாலிய பிராமணர்கள், கொங்கிணி பிராமணர்கள் கவுடப் பிராமணர்கள், காஷ்மீரப் பிராமணர்கள், மச்சப் பிராமணர்கள், அம்பஷ்ட்டப் பிராமணர்கள் முதலிய பல பிராமணர்களும் மாமிசம் சாப்பிடுகின்றார்கள். இந்தியாவில் இவர்கள் எண்ணிக்கைகளை யெல்லாம் சேர்த்தால் குறைந்தது 15 கோடிக்கு குறையாது. அடியோடு மாமிசம் சாப்பிடாதவர்கள் சுமார் ஒரு கோடி இருக்கலாமா என்பது சந்தேகம். 35 கோடியில் 1 கோடி அதாவது 100-க்கு 3 பேராகலாம். தவிர, இந்தியர் தவிர உலக மக்கள் எல்லோரும் மாமிசம் சாப்பிடுகின்றார்கள். எனவே மொத்த ஜனத் தொகையில் 100-க்கு 99 1/2 பேர்களை ஜீவ காருண்யமற்றவர்கள் என்று நீர் சுலபத்தில் சொல்லிவிட முடியுமா? சொல்லும் பார்ப்போம்.
சைவன் :- என்னங்காணும்! பார்ப்பனன் நீர் மாமிசம் சாப்பிடுகின்றீரே இது யோக்கியமா? என்றால் ஊர் கதையெல்லாம் பேசுகிறீர்!
பார்ப்பனன் :- சொல்லுவதை கவனமாய் கேளும் சைவரே, வெறும் கோபம் ஒரு காசுக்கும் உதவாது. அதெல்லாம் அந்த காலம். இது அறிவு ஆராய்ச்சி சைன்சு காலம் தெரியுமா? நான் மாமிசம் சாப்பிடக் கூடாது என்று நினைத்து வெகுநாளாய் சாப்பிடாதிருந்தது உண்டு. அது எதற்காக என்றால் ஜீவகாருண்யத்தை உத்தேசித்து தானே ஒழிய வேறு இல்லை. பிறகு இத்தனை பேர்கள் மாமிசம் சாப்பிடுவதை கணக்குப் பார்த்து உலகத்தில் 100-க்கு 99 1/2 பேருக்கு ஜீவகாருண்யம் இல்லாமல் இருக்குமா? இப்படி ஒரு கடவுள் மக்களை பிறப்பித்து இருப்பார் என்று யோசித்து, யோசித்து மயங்கிக் கிடந்தேன்.
கடைசியாக திரு.சர்.ஜகதீச சந்திரபோஸ், மரம் செடி கொடி புல் பூண்டு ஆகியவைகளுக்கு உயிர் இருக்கின்றது. அவைகள் தொட்டாலும், நாடினாலும், முறித்தாலும், பறித்தாலும் கஷ்டப்படுகின்றன என்பதைக் கண்டு பிடித்தபிறகுதான் சரி, எது ஜீவ காருண்யம்? என்பதை ஆராயப் புகுந்தேன்.
காய்கறிகள் சாப்பிடுவதைவிட மாமிசம் சாப்பிடுவதுதான் அதிகமான ஜீவகாருண்யம் என்பதாக உணர்ந்தேன். எப்படி என்றால், உயிர் இருப்பதால் அது ஜீவனாகின்றது. ஜீவனை வதைத்துச் சாப்பிடுவது மாமிசமாகின்றது. ஆகவே, ஒரு செடியின் தழைகளை கிள்ளிப் பிடுங்கும் போதும், காய்களை அறுக்கும்போதும், கிழங்குகளைப் பறித்து வாடவைக்கும்போதும் அவைகள் படும்பாடு சித்திரவதைக்கு ஒப்பாகிறது என்று போஸ் சொல்லுகிறார். எனவே ஒரு ஜீவனை தினம் தினம் பல தடவை வதை செய்து அதைத் துன்புறுத்து கின்றோம் என்பதை உணர நேரிட்டது. இப்போதும் அதை நினைத்தால் சகிக்க முடியாத துக்கம் வருகிறது. ஆனால் மாமிசம் அப்படியல்ல ஒரு ஜீவனை சாப்பிடுவதனால் ஒரு தடவைக்குமேல் யாரும் தொந்திரவு செய்யமாட்டார்கள். அதுவும் க்ஷணத்தில் முடிந்து போகும். ஆதலால்தான் கிழங்கு, கீரை, காய், கறியைவிட மாமிசம் சாப்பிடுவது ஜீவகா ருண்யமாகும் என்று சொன்னேன். ஆதலால் ஓய்! சைவரே நான் உம்மை விட குறைந்த ஜீவகாருண்யம் உடையவன் என்று எண்ணிவிடாதீர். தவிர, திரு.போஸ் காய், கறிகளுக்கு உயிர் இருப்பதை இன்று கண்டுபிடித்தார். ஆனால் மாமிசம் சாப்பிடும் மக்கள் வெகுகாலத்திற்கு முன்பே கண்டுபிடித்துத் தான் மாமிசம் சாப்பிடுகின்றார்கள் என்பதாகத் தெரிகின்றது. அன்றியும், வேதமும் மனுதர்ம சாத்திரமும் கண்ணப்ப நாயனாரை ஒப்புக் கொண்ட சைவப் புராணங்களும் இதை அறிந்துதான் மாமிசத்தை அனுமதித்திருப்பதோடு மாமிசத்தை மறுக்கும் பிராமணன் இருபத்தொரு தலைமுறைக்கு நரகத்தை அடைவான் என்று மனுதர்ம சாஸ்திரமும் வேதமும் கூறுகின்றன தெரிந்ததா? சைவரே.
சைவன் :- ஓய், ஓய், பார்ப்பனரே சரி தான், கடையைக் கட்டுங்காணும் உம் ஆராய்ச்சியையும், சயன்சையும், சாஸ்திரத்தையும், வேதத்தையும், புராணத்தையும் கொட்டை அடுப்பில் வைத்துக் கொளுத்தும். என்றைக்கு ஆராய்ச்சியும் சயன்சும் உலகத்தில் தோன்றிற்றோ அன்றே எல்லாம் கெட்டுது. கடைசியாக முழுமுதற் கடவுளான சிவன் தலையில் கைவைக்க வந்து விட்டது. இந்தப்பாழும் அறிவும், ஆராய்ச்சியும், சயன்சும் என்றைக்கு ஒழியுமோ அன்றுதான் சைவம் தழைக்கும். ஆதலால், இவை ஒழிய தவம் கிடப்போம். போம், போம், பார்ப்பானே! போம் உம்மைப் பார்த்ததற்கும், உம் பேச்சைக் கேட்டதற்கும் கண்களையும் காதுகளையும் கழுவ வேண்டும்.
பார்ப்பான் :- அய்யா சைவரே! நன்றாய் தவம் கிடங்கள். அதுவும் திரு. ஜகதீஸ் சந்திரபோசும் இயற்கை ஆராய்ச்சியும் சுயமரியாதை இயக்கமும் ஒழியட்டும் என்று தவம் கிடங்கள். இதில் எது மீதியானாலும் உங்கள் சைவ மும், உங்கள் ஜீவ காருண்யமும் சிறிதுகூட நிலைக்காது. தவிர, என்னைப் பார்த்ததற்கும், என் பேச்சுக்களைக் காதில் கேட்டதற்கும் மகா பாதகம் தீர்த்த குளத்தில் போய் குளியுங்கள். கழுவினால் மாத்திரம் போதாது.
----------------- சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய உரையாடல் - “குடி அரசு” - 16.06.1929
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
// எனவே மொத்த ஜனத் தொகையில் 100-க்கு 99 1/2 பேர்களை ஜீவ காருண்யமற்றவர்கள் என்று நீர் சுலபத்தில் சொல்லிவிட முடியுமா? சொல்லும் பார்ப்போம்.//
போட்டாரே ஒரு போடு! பெரியார் பெரியார் தான். =)
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment