மற்ற மக்களைப் போன்ற வாழ்வுரிமை முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு வரவேண்டும்
மத்திய அரசு இலங்கையை நிர்பந்திக்க வேண்டும் சென்னை ஆர்ப்பாட்டத்தில்
தமிழர் தலைவர் வலியுறுத்தல்
ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஒலி முழக்கமிடுகிறார்; ஆர்ப்பாட்ட முடிவில் தமிழர் தலைவர் பேட்டியளித்தார் (16.2.2010)
( ஆர்ப்பாட்டம்
ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமைகளை மீட்க திராவிடர் கழகத்தின் சார்பில் 16.-2.-2010 அன்று மாலை 4 மணிக்கு சென்னை பொதுமருத்துவமனைக்கு எதிரில் உள்ள மெமோரியல் ஹால் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி திராவிடர் கழகத்தினர் முரசு கொட்டி ஆர்ப்பரித்து முழங்கினர்.
வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி, செங்கற்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத் தோழர்கள், தோழியர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் உணர்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி உரையாற்றினார். பின்னர் அவர் ஒலி முழக்கங்களை முழங்க தோழர்கள்ஆவேசத்தோடு பின்பற்றி முழங்கினர்.)
மற்ற மக்களைப் போல வாழக்கூடிய வாழ்வுரிமை இலங்கை முள்வேலி முகாம்களில் இருக்கின்ற தமிழர்களுக்கு இருக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்தி செயல்பட வைக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விளக்கவுரை யாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
30 கல் தொலைவில் உள்ள இலங்கையில்
இங்கிருந்து 30 கல் தொலைவிலே இருக்கக் கூடிய, தமிழகத்தின் கோடியக்கரையிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கக் கூடிய இலங்கையிலே தமிழர்கள் வாழக்கூடிய சூழ்நிலையிலே இருக்கின்றார்களா?
ஏற்கெனவே சிங்கள ராணுவத்தினர் நடத்திய இனப்படுகொலையால் அழிந்து கொண்டிருக் கிறார்கள் தமிழர்கள்.
இலங்கை அதிபர் ராஜபக்சே பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என்ற பெயரில் விடுதலைப் புலிகளை அழித்தார்.
ராஜபக்சே அரசு விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே தமிழினத்தையே அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
முள்வேலிக்குள் இரண்டு லட்சம் தமிழர்கள்
இலங்கையிலே சிங்கள ராணுவத்தின் கட்டுப் பாட்டில் உள்ள முள்வேலி முகாம்களுக்குள் இன்னமும் ஒன்றரை லட்சம் இரண்டு லட்சம் தமிழர்கள் சிக்கி வதைபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்னமும் முள்வேலிக்குள் இருக்கும் தமிழர்கள் பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் இருந்து கொண்டு சிங்கள ராணுவத்திடம் வதைபட்டுக் கொண்டு வாழ்வுரிமை இழந்து தவிக்கிறார்கள்.
அங்குள்ள தமிழர்கள் அவரவர்களுடைய இருப்பிடங்களுக்குத் திரும்பவில்லை. மத்திய அரசு இதைத் தட்டிக் கேட்கவேண்டாமா? இதற்கு மத்திய அரசுதான் விடை காணவேண்டும்.
பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள்
சிங்கள இராணுவத்தால் கொண்டு செல்லப் பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை.
இலங்கையிலே நடைபெற்ற தேர்தலில் பொன்சேகா எதிர்த்து நின்றார். பல்லாயிரம் தமிழர்களுடைய உயிருக்குக் குறி வைத்த அவருடைய நிலையே இன்றைக்குப் பரிதாபத்திற்குரிய நிலையாக ஆக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் போர் நடைபெற்ற பொழுது என்ன நிலைமை அங்கு நிலவியது என்ற சில உண்மைகளை அவர் வெளியிட்டார். பல உண்மைகள் வெளிவந்தன.
வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்கள்
வெள்ளைக்கொடி ஏந்தி விடுதலைப் புலி வீரர்கள் சமாதானத்திற்கு வந்தார்கள். ஆனால் அவர்களை உலக போர் நெறிக்கு மாறாக சிங்கள ராஜபக்சே அரசு ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றது.
தமிழர்களுக்கு வாழ்வுரிமை அளிக்கப்படும் என்று இலங்கை அரசு சொன்னதே. உண்மையிலேயே தமிழர்களுக்கு இவர்கள் வாழ்வுரிமையை அளித்திருக் கின்றார்களா?
தமிழின உணர்வு என்பது மங்கிவிடவில்லை, மறைந்துவிடவில்லை. தமிழர்கள் வாழ்வுரிமை கிடைக்கின்ற வரை நாங்கள் ஓயப் போவதும் இல்லை. இது போன்ற ஆர்ப்பாட்டங்களை நடத்தி வெளி உலகத்திற்குக் காட்டுவோம்.
இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினை தீர்ந்துவிடவில்லை. தமிழர்களின் சார்பில் நாங்கள் மத்திய அரசை வலியுறுத்துகின்றோம். தமிழக அரசுக்கு என்று சில வரைமுறைகள், எல்லைகள் உண்டு. குறிப்பிட்ட அளவுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. தமிழக அரசுக்குரிய பங்கை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களே! ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்காதீர்கள். ஈழத் தமிழர்கள் என்று கூட பார்க்கவேண்டாம். கொல்லப் படுகிறவர்கள், வாழ்வுரிமை மறுக்கப்பட்டு சிறையில் இருப்பவர்கள் தமிழர்கள். அவர்கள் மனிதர்கள் என்றாவது எண்ணிப் பாருங்கள்.
அய்.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன்
அய்.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் நடைபெறுகின்ற மனிதாபிமானமற்ற செயலை பொறுத்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று அவர் இலங்கை அரசை தட்டிக் கேட்டாரே, கண்டித்தாரே! அந்த உணர்வு இங்குள்ள மத்திய அரசுக்கு இல்லையே. இலங்கை அரசு வெளியிடுகின்ற தகவல்கள் பொய்யானது. இலங்கையிலே ராணுவத் தீர்வு கூடாது அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்று மத்திய அரசு சொன்னது.
போர் முடிவுக்கு வந்த பிறகு கூட
இலங்கையிலே போர் முடிவுக்கு வந்த பிறகும் அங்கு அரசியல் தீர்வு காணப்பட்டதா? இல்லையே. தமிழர்களுடைய வாழ்வுரிமைக்காக இலங்கை அரசு என்ன செய்தது? முள்வேலி முகாம்களிலிருந்து தமிழர்கள் அவரவர்களுடைய இருப்பிடங்களுக்குத் திரும்பினார்களா? வாழ்வுரிமையைப் பெற்றார்களா?
இலங்கையில் இனப்படுகொலை
இலங்கையிலே நடைபெற்றது ஒரு இனப் படுகொலை. விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் தமிழர்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு பல காரியங்களை இன்றைக்கும் சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது.
இதை எல்லாம் தமிழர்கள் இனி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.
எரிமலை வெடிக்கும்
உலகத்தில் உள்ள அத்துணை தமிழர்களுடைய உள்ளத்திலும் இந்த உணர்வு நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் வெடிக்கும் என்பது தெரியாது.
ஆர்ப்பாட்டம் தொடரும்
இந்த ஆர்ப்பாட்டம் இத்தோடு முடிந்துவிடக் கூடிய ஆர்ப்பாட்டம் அல்ல. எங்களுடைய ஆர்ப்பாட்டம் தொடரும். இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்கள் அவரவர்களுடைய வாழ்விடங்களுக்கு, இருப்பிடங்களுக்குச் செல்லுகின்ற வரை நாங்கள் ஓயமாட்டோம்.
இட்லரையும் மிஞ்சி
சர்வாதிகாரி இட்லர் கூட இந்த அளவுக்கு கொடுமை செய்ததில்லை. இட்லரையும் மிஞ்சி தமிழின அழிப்பு வேலையை ராஜபக்சே அரசு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் மீது அய்ரோப்பிய யூனியனுக்கு, அமெரிக்க நாட்டிற்கு இருக்கின்ற மனித நேயம் கூட இந்தியஅரசுக்கு இல்லையே. உலக நாடுகளில் போர் முடிந்தவுடன் அவரவர்கள் அவரவர்களுடைய வாழ்விடங்களுக்குச் செல்லக் கூடிய உரிமை இருந்து வருகிறது. ஆனால் இலங்கையில் இன்னும் அந்த நிலை ஏற்படவில்லையே. இந்திய அரசு, இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்கள் வாழ்வுரிமையைப் பெறுவதற்கு தமிழர்கள் என்ன விலையைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்தி இதற்கு ஒரு தீர்வு கண்டாகவேண்டும்.
மற்ற மனிதர்களுக்குள்ள உரிமை வேண்டும்
மற்ற மனிதர்களுக்கு இருக்கின்ற உரிமைகள் என்னென்ன உண்டோ அவை அத்தனை உரிமைகளும் இலங்கைத் தமிழர்களுக்கும் கிடைத்தாக வேண்டும். இந்த உணர்வு குன்றிவிடாது. மத்திய அரசே உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். அடுத்தடுத்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
இலங்கை தூதரகம் இயங்க முடியாது
இன்னும் சொல்லப்போனால் இங்குள்ள இலங்கைத் தூதரகத்தை இழுத்து மூடக்கூடிய இயங்க முடியாத அளவுக்குக் கூட சூழ்நிலைகள் ஏற்படும்.
இந்தியஅரசே, நீங்கள்தான் இலங்கை அரசுக்கு ஆதரவாக இருந்திருக்கிறீர்கள். நீங்கள்தான் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கினீர்கள். நீங்கள்தான் பலவகையான உதவிகளை இலங்கைக்குச் செய்தீர்கள்.
எனவே, தமிழர்களை அழித்ததற்கு உங்களுக்கும் அதிக பங்குண்டு.
ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்
தமிழர்கள் வாழ்வுரிமை பெற அனைத்துக் கட்சிகளும் ஒரே நோக்கத்தோடு நின்று போராட வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த நேரத்தில் நாங்கள் வேண்டுகோளாக வைக்கின்றோம்.
கலைஞர் சொல்லியிருக்கின்றார்
தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கூட ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை பெறவேண்டும் இலங்கையில் நடைபெறும் சம்பவங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று சொல்லியிருக்கின்றார்.
எனவே தமிழக அரசும் மத்திய அரசை வலியுறுத்தி செயல்பட வைக்க வேண்டும்.
தமிழக முதல்வர் அவர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் ஈழத் தமிழர் பிரச்சினையை ஒருவருடைய செயலை இன்னொருவர் விமர்சனம் செய்யாமலாவது இருக்க வேண்டும். அவரவர்களுடைய வழியில் நின்றாவது ஈழத் தமிழர்களுக்காக நாம் போராட வேண்டும்.
கோடி கைகள் உயரட்டும்!
கோடி கைகள் உயரட்டும்! நமது கோரிக்கைகள் வெற்றி பெறட்டும். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணிஅவர்கள் உரையாற்றினார்.
------------------- “விடுதலை” 17-2-2010
2 comments:
இப்ப வாது சிங்கம் கர்ஜிக்குதே,சந்தோசம் தான்.
கி.வீரமணி ஐயாவின் நகைச்சுவைக்கு அளவே இல்லையா!?
:)
Post a Comment