Search This Blog

3.7.09

பெரியாரும் - மதுவிலக்கும்




கள்ளுக்கடைகள் திறப்பு

தஞ்சையில் 2.1.1972 அன்று காலை 10.30 மணி அளவில் மேலத்தஞ்சை சில்லறை சாராயக்கடை லைசென்சுதாரர்கள் சங்கத் துவக்க விழாவில் தந்தை பெரியார் அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய உரை 12.1.1972 விடுதலை நாளேட்டில் வெளிவந்துள்ளது!
அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டு உரையாற்றினேன். தஞ்சை நகரத்தலைவர் திரு.கா.மா.குப்புசாமி அவர்களும் சங்கப் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

ஒரு காலத்தில் காங்கிரசில் தீவிர காந்தியின் தொண்டராக, கள்ளுக்கடை மறியலுக்கு தனது குடும்பப் பெண்களையே முதன்முதலாகக் கலந்து கொள்ளச் செய்த, சேலம் அருகே உள்ள தாதம்பட்டி என்ற சிற்றூரில் இருந்த - தந்தை பெரியாருக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தி, அதிதீவிர மதுவிலக்கு பிரச்சாரராக இருந்த தந்தை பெரியாரா இந்த மாறுதலுக்கு ஆளானார் என்று அதிசயமாக இருந்திருக்கும். சிலர் நம்பவும் மறுக்கக்கூடும்.

அனுபவ ரீதியாக அவர்கள் பல ஆண்டுகள் நேரில் கண்ட காட்சிகள் அவரை மாற்றி விட்டன. தனிப்பட்ட முறையில் எப்போதும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகாதவரான தந்தை பெரியார் அவர்கள் அன்று இதுபற்றி பேசிய வரையில் கூறிய சில கருத்துகளே; சந்தேகப்படுவோர்க்கு அய்யம் போக்கும் அருமருந்தாக அமையும் அதற்குமுன் அந்தக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு முன்னர் உரையாற்றிய நான் குறிப்பிட்ட சில கருத்துகள் ஏன் தந்தை பெரியார் தனது கருத்தை பிற்காலத்தில் மாற்றிக் கொண்டார் என்பதை விளக்கிய உள் அடக்கமாகும். அவை இதோ:-

அண்மையில் பட்டுக்கோட்டைப் பக்கத்தில் ஒரு கள்ளுக்கடையைத் திறந்து வைக்கும்போது தந்தை பெரியார் அவர்கள் அழகாகக் குறிப்பிட்டார்கள். இன்றைய தினம் நாடெங்கும் கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் நான்தான் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள். அது ஓரளவிற்கு உண்மையும்கூட என்ற குறிப்பிட்டார்கள்.

கடந்த 25 ஆண்டு காலமாக தந்தை பெரியார் அவர்கள் மதுவிலக்குப் போலிக் கொள்கையை எதிர்த்து வந்ததன் காரணமாக - இன்றைக்கு நமக்கு ஏற்பட்ட நம் ஆட்சி என்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அரசியல் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதை வைத்துக் கொண்டு இந்த கட்சிக்குத் தொல்லை கொடுக்க எல்லாம் முற்பட்டு இறுதியில் இன்றைக்குத் தோல்வியைத்தான் தழுவிக்கொண்டு இருக்கிறார்கள்.

விடுதலையும் திராவிடர் கழகமும், தந்தை பெரியார் அவர்களும் மதுவிலக்கை எதிர்த்து வந்ததன் காரணமெல்லாம் இந்த மதுவிலக்கு என்பது பொதுஒழுக்கத்தைப் பெரிதும் பாதிக்கச் செய்தமையாலும், கள்ளச் சாராயம் பெருகியதாலும் அதனாலே சமுதாயத்திற்கு எற்பட்ட கெடுதல்களுமேயாகும். மதுவிலக்கு சட்டம் வந்ததால் குடிக்கின்ற பழக்கம் உள்ள எவரும் குடியை நிறுத்திவிடவில்லை. மாறாக கண்டதையும் கடித்து வயிற்றைப்புண்ணாக்கிக் கொள்ளும் நிலைமைதான் உருவாயிற்று . இதை உணர்ந்துதான் தந்தை பெரியார் அவர்கள் மதுவிலக்கை ரத்து செய்யவேண்டும் என்று இடைவிடாது கூறிவந்தார்கள். இன்றைக்கு அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.

இன்றைய தினம் இந்தச் சங்கத்தின் துவக்கவிழாவை ஏற்பாடு செய்தவர்கள் நடைமுறையில் உள்ள சில சங்கடங்களை முறையிட்டார்கள்.

அய்யா அவர்களின் வாயிலாக குறைபாடுகளை எடுத்துச் சொல்வதன் மூலம் அரசாங்கம் உரிய கவனத்தோடு பிரச்சனைகளை ஆராயும் என்பதால்தான் இன்றையதினம் தந்தைபெரியார் அவர்களை அழைத்திருக்கிறீர்கள். உங்கள் குறைபாடுகளில் முக்கியமானதாக தேவைக்கேற்ற சரக்கு சப்ளை இப்போது இல்லை. இதனால் அதிக விலைக்கு விற்க வேண்டியிருக்கிறது. அதிக விலையில் விற்பனை செய்வதால் குறைந்த விலையிலே சப்ளை செய்யக்கூடிய கள்ளச்சாராயத்தைத் தேடிச்செல்கிறார்கள். இந்த நிலைமை பெருகுமானால் மதுவிலக்குச் சட்டம் எந்தக் காரணத்திற்காக ரத்துச்செய்யப்பட்டதோ அந்தக் காரணம் தோற்விட்டதாக அர்த்தம். எனவே இந்த விஷயத்தை நாங்கள் அரசின் கவனத்திற்கு எடுத்துக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம். நிச்சயமாக எடுத்துரைப்போம் என்று கூறி என்னுரையை நிறைவு செய்தேன்.

அய்யா அவர்கள் உரையாற்றுகையில்,


இன்றைய தினம் துவக்கப்பட்டிருக்கும் சங்கம் தேவையான ஒரு சங்கமாகும். இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

இன்றைய தினம் இங்கே பேசியவர்கள் எல்லாம் போதிய அளவு சாராயம் சப்ளை ஆகாததனால் வியாபாரம் தடைபடுவதோடு கள்ளச் சந்தையும் பெருகிவிட்டது என்பதாகக் குறிப்பிட்டார்கள்.

இந்தக்குறைபாடு ஒழிக்கப்பட வேண்டியதுதான். கள்ளச்சாராயம் பெருகுவதற்குக் காரணம் ஒன்று கள்ளச்சாரயத்தின் விலை குறைந்ததாக இருப்பதோடு மட்டுமல்ல - போதை அதிகம் தரும்படியான கலப்படமும் அதில் இருக்கிறது. இது ஒரு பெரிய இயற்கைத் தொல்லை. இது இப்போதுதான் என்பது மட்டுமல்ல.

முன்பு தமிழ் நாட்டில் கடைகள் எல்லாம் தாராளமாகத் திறக்கப்பட்டுக் கிடந்ததே அப்போதுகூட இந்தத்திருட்டு சாராய வியாபாரம் இருந்து வந்துதான் இருக்கிறது. இன்றைக்கக் கடுமையான பரிகாரம் செய்ய வேண்டியதெல்லாம் இந்தத் திருட்டு வியாபாரிகளைக் கடுமையாக அரசாங்கம் தண்டித்தாக வேண்டும். இது ஜனநாயக அரசாங்கமாதலால் எதையும் கண்டிப்பாக கடுமையாக அனுசரிக்க முடியவில்லை. காரணம் ஒருவனுக்கு ஒருவன் ஓட்டு வாங்கி நடப்பதுதானே ஜனநாயகம். இது சமுதாயத்தில் உள்ள ஓர் அடிப்படைக் குறைபாடு. நமது முதல்வர் அவர்கள் எதையும் நிதானமாகச் சிந்தித்து தீர்க்கமாகச் செய்யக்கூடியவர். இந்தப் பிரச்சனையில் அவர் கவனம் செலுத்துவார் என்றே கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் எது எப்படி இருந்தாலும் இந்த மதுவிலக்கை கான்சல் செய்தார்களே அதைப் பற்றி நான் பெரிதும் திருப்தி அடைகிறேன். குடிப்பது என்பது கெடுதலான ஒன்றல்ல; ஒருவனுடைய உரிமைப் பிரச்சனை. குடிப்பதனால் ஒரு மகிழ்ச்சி அடைகிறான். மற்றவனுக்கு அதனாலே எந்தவிதத் தொல்லையும் இல்லை.
பணக்காரனுக்குத் திருப்தி அடைய எவ்வளவோ வழிகள் உண்டு. ஏழைகளுக்கு இதுபோன்ற வகைகளால்தான் திருப்தி அடைய முடியும். அதற்கென்று அளவுக்கு மேல் அதிகமும் போய்விடக்கூடாது எதுவுமே அதிகம் போனால் கெடுதிதான். அந்த அளவிற்கு ஒரு கட்டுப்பாடு வேண்டும். சர்க்காரைப் பொறுத்தவரையில் இந்தக் கள்ளுக்கடைப் பிரச்சனையில் போதிய அனுபவம் இருக்க வாய்ப்பு இல்லை. போகப்போகத்தான் அனுபவம் கிடைக்க, கிடைக்க நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள் தீர்க்கப்பட்டுவிடும் அரசாங்கம் வெறும் போலீசையே நம்பி இருக்காமல் இந்தத்துறையில் வேறு இலாகா ஒன்றை ஏற்பாடு செய்து குறைபாடுகளைப் போக்க தக்க முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று அய்யா அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.


அதன் பிறகு திரு. ச. ஜனார்த்தனம் அவர்கள் நன்றி நவில நண்பகல் 12 மணிக்கு, விழா முடிவுற்றது. கழகத் தோழர்களிடமிருந்து விடைப் பெற்று சென்றோம்.

பார்வார்டு பிளாக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மூக்கையா தேவர் சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 13.1.1972 அன்று முதல்வர் கலைஞர், அமைச்சர்கள் நாவலர், என்.வி.நடராசன், சாதிக்பாட்சா ஆகியோர் உடல்நலம் விசாரித்தனர். நானும் சென்று அவரது உடல்நலம் விசாரித்துத் திரும்பினேன்.

9.1.1972அன்று காரைக்குடி பகுத்தறிவாளர் கழகச் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் க.ராசாராம் அவர்களுடன் நானும் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினேன்.
18.1.1972 அன்று மாலை சேப்பாக்கம் ஆடம் சாலையிலுள்ள - சென்னைப் பல்கலைக்கழக மண்பத்தின் முன்புறம் தற்போதுள்ள சென்னைத் தொலைக்காட்சி நிலையம் அருகில், தமிழ்நாடு பொறியாளர் பேரவைச் சார்பில் நடைபெற்ற பொறியாளர் பா.வே.-மாணிக்க நாயக்கர் நூற்றாண்டு விழா, பொறியாளர் பொள்ளாச்சி, நா.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அதில் ஒரு முக்கிய பேச்சாளர்களில் ஒருவனாக நானும் அழைக்கப்பட்டு, கலந்துகொண்டு உரையாற்றினேன்.

டாக்டர் ந.சஞ்சீவி, தமிழரசுக் கழக தலைவர் ம.பொ.சிவஞானம், பொறியாளர் பூண்டி குமாரசாமி, பொறியாளர்கள், மாணவர்கள் பி.டி.ஜெயராமன் (இவர் சிதம்பரத்துக்காரர் - கடலூரில் மணம் முடித்தவர்) கொடுமுடி சண்முகம் மற்றும் பலர் பேசினர்.
19.1.1972இல் இந்தியப் பொதுவுடைமை கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரானசுயமரியாதை வீரர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களது ஒன்பதாவது நினைவு நாள் புதுவண்ணையில் பொதுக்கூட்டமாக நடைபெற்றது. அதில் காமராசர், சட்டப்பேரவைத் தலைவர் கே.ஏ.மதியழகன், கே.டி.கே.தங்கமணி, எம்.கல்யாணசுந்தரம், ஈ.வெ.கி.சம்பத், டி.கே.சண்முகம் ஆகியோருடன் திராவிடர் கழகம் சார்பில் நானும் கலந்துகொண்டு உரையாற்றி தோழர் ஜீவாவின் தொண்டின் சிறப்புபற்றி பேசினோம்.

கடலூரில் பிரபல வழக்குரைஞர் ச. ஜெனார்த்தனம் அவர்கள் கட்டிய புதிய இல்லத்தை எனது தலைமையில் தந்தை பெரியார் அவர்கள் 23.1.1972 ஞாயிற்றுக்கிழமை மரியசூசை நகரில் மாலை 4.30 மணிக்கு (ராகுகாலம் என்று வைதிகர்கள் நம்பும் - நடுங்கும் நேரத்தில் திறந்துவைத்து சிறப்பாக உரையாற்றினார். அன்றுமாலை மஞ்சை நகர் மைதானத்தில் தந்தை பெரியார் அவர்களுடன் நானும் உரையாற்றினேன். பிறகு, தோழர் ச. ஜனார்த்தனம் மாவட்ட நீதிபதியாகி, அதன்பின் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவிஉயர்வுபெற்று பலஆண்டுகாலம் பணிபுரிந்து பிறகு பணி ஓய்பு பெற்றார்.

முதல்வர் கலைஞர் அவர்கள் காலத்தில் நியமிக்கப்பட்ட முதல் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய நேரடி மாவட்ட நீதிபதியாவார் அவர்! அய்யா அவர்கள் மறைவுக்குப்பின், அம்மா தலைவராக இருந்தபோது அவர்கள் இந்த மாவட்ட நீதிபதியாக தமிழ்நாடு தேர்வாணையம், உயர்நீதிமன்றம், அரசால் தேர்வு செய்யப்பட்டவர். சமூக நீதியின் வெற்றிக்கொடி கலைஞர் முதல்வராக இருந்தபோது இப்படி பறக்கத் தொடங்கியது.

-----------நினைவுகள் நீளும்...
--------------- கி.வீரமணி அவர்கள் எழுதிவரும் அய்யாவின் அடிச்சுவட்டில்..... -இரண்டாம் பாகம் - 20

2 comments:

hayyram said...

அதே போல ராமசாமி எப்படியெல்லாம் குடித்துக் கூத்தடித்தான், விபச்சாரியின் வீட்டிலும் ஆடல் அழகிகளுடனும் கொட்டமடித்தார், அவரது அட்டூழியம் தாங்க முடியாமல் தான் அவன் தந்தை அவனுக்கு முதல் திருமணம் செய்து வைத்தார். அதை எல்லாம் கூட நல்ல விளக்கமாக எழுது.

தமிழ் ஓவியா said...

பெரியாருக்கு குடிப்பழக்கம் இல்லை என்பது மிகப் பெரிய உண்மை.

ஆனால் பார்ப்பனர்கள் குடிப்பதற்கு என்றே ஒருகடவுளை உருவாக்கியிருக்கிறார்கள் அவந்தான் சோமன்.

ராமனே ஒருகுடிகாரன் என்பதற்கான ஆதாரக் கட்டுரை இந்த வலைப்பூவில் உள்ளது. அதைப் படிக்க விரும்புவோர் தேடிப்பிடித்து படிக்க வேண்டுகிறேன்.