Search This Blog
3.7.09
உலக நாடுகள் - தூரப்பார்வை - லெசோத்தோ-லைபீரியா-லிபியா
லெசோத்தோ (Lesotho)
பூர்வகுடிகளின் தலைவர் மோஷோஷோ என்பார் நிறுவிய நாடு பசுடோலாண்டு. அவர்தான் 1820 ஆம் ஆண்டில் லெசோத்தோ நாட்டின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். 1860இல் இந்நாட்டைக் காப்பதற்காக பிரிட்டன் முன் வந்தது. அதன் ஆதிக்கத்தில் நாடு இருந்து 1966இல் விடுதலை பெற்றது.
விடுதலை பெற்ற நாட்டின் மன்னராக இரண்டாம் மோஷோஷோ ஆனார். லீபுவா ஜொனாதன் என்பார் பிரதமர் ஆனார்.
ஆப்ரிக்காவின் தென்கோடியில் தென்ஆப்ரிக்க நாட்டின் உள்பகுதியில் அமைந்துள்ள இச்சிறு நாட்டின் பரப்பு 30 ஆயிரத்து 335 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கள் தொகை 21 லட்சம்.
80 விழுக்காடு கிறித்துவர்களும் பழங்குடி நம்பிக்கைகளுடன் 20 விழுக்காடு மக்களும் நிரம்பிய நாடு. இங்கிலீசு மொழி ஆட்சி மொழியாக இருந்தாலும், செசோதா, ஜூலு முதலிய மொழிகள் பேசப்படுகின்றன. 84 விழுக்காட்டினர் மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்தவர்.
குடிக்கோனாட்சி நடைபெறும் இந்நாட்டில் மன்னரும் உண்டு. நாடாளுமன்றமும் உண்டு. பாதி அளவு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 45 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.
இரண்டு கிலோ மீட்டருக்கும் சிறிது கூடுதலான தூரத்திற்கு மட்டுமே இருப்புப் பாதை உள்ள நாடு.
லைபீரியா
லைபீரியா 1822 இல் அமெரிக்க நாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட அடிமைகளைக் குடி அமர்த்த அமெரிக்க குடியேற்றச் சங்கம் எடுத்த முடிவின்படி லைபீரிய நாடு உருவாக்கப்பட்டது. ஆப்ரிக்காவின் மேற்குப் பகுதிகளில் விடுவிக்கப்பட்ட அடிமைகள் குடியமர்த் தப்பட்டால், மீண்டும் அடிமைகளாக்கப்படும் அபாயம் ஏற்படும் என உணர்ந்த காரணத்தால் மேற்படி சங்கம் இவர்களை லைபீரியாவில் குடியமர்த்த முடிவு செய்தது. 12 ஆயிரம் பேர்களை மொன்ரோவியா என்று அழைக்கப்பட்ட நாட்டிற்குக் கொண்டு சென்றது. அந்நாடுதான் லைபீரியா என அழைக்கப்பட்டது.
25 ஆண்டுகள் கழித்து 1847இல் விடுதலை அடைந்து சுதந்திர லைபீரியா எனும் பெயர் பெற்றது. இதுதான் ஆப்ரிக்கக் கண்டத்தின் மிக மூத்த சுதந்திர நாடு.
ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 370 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 31 லட்சம் ஆகும். 40 விழுக்காடு கிறித்துவர்கள். 20 விழுக்காடு இசுலாமியர்கள் உள்ள நாட்டில் 40 விழுக்காட்டினர் தம் பழமைக் கொள்கைகளையே பின்பற்றி வருகின்றனர். 20 விழுக்காடு மக்கள் பேசும் இங்கிலீசு மொழி ஆட்சி மொழியாக இருக்கிறது. மக்களோ 20 விதமான இனக்குழு மொழிகளைப் பேசுகின்றனர்.
58 விழுக்காட்டினர் மட்டுமே கல்வி அறிவு பெற்றவர். 80 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 85 விழுக்காட்டினர் வேலையில்லாமல் இருப்பவர்கள் என்றால் நாட்டின் நிலையை உணர்ந்து கொள்ளலாம். நெடுங்காலத்திற்கு முன்பே விடுதலை பெற்று என்ன பயன் என நினைக்கத் தோன்றுகிறது அல்லவா?
லிபியா
லிபியா லிபியாவின் மேற்குப் பகுதியில் போனீசியர்கள் குடியேறி வசிக்கத் தொடங்கினர். பொது ஆண்டுக் கணக்குக்கு ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பே இக் குடி-யேற்றம் நடந்தது. 300 ஆண்டு காலத்திற்குப் பிறகு லிபியா-வின் கிழக்குப் பகுதியில் சிரெய்னிகா குடியேற்றத்தைக் கிரேக்கர்கள் செய்தனர். அவர்கள்தான் லிபியா எனும் பெயரைச் சூட்டினார்கள். பைஜான்டைன் பேரரசின் ஒரு பகுதியாக லிபியா இருந்தது. 643 ஆம் ஆண்டில் அரபியர்-கள் லிபியாவைக் கைப்பற்றி இசுலாம் மதத்தைப் பரப்பினார்கள்.
16 ஆம் நூற்றாண்டில் லிபியா நாடு ஒட்டோமான் பேரரசின் ஓர் அங்கமானது. திரிபோலிடானியா, சைரனய்கா, பெஜ்ஜான் மாகாணங்களுடன் சேர்ந்து ஒரே ராஜ்யமாக திரிபோலியில் அமைந்தன. 1911 இல் லிபியாவை இத்தாலி கைப்பற்றியது. 1942 இல் நேச நாடுகள் இத்தாலியை லிபியாவிலிருந்து விரட்டின. அதன் பிறகு லிபியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பிரான்சு நாடு கைப்பற்றிய பகுதியான பெஜ்ஜான் பிரான்சிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கிலாந்தின் ஆட்சியில் இருந்த சைரனாய்காவும் திரிபோலிடானியாவும் பிரிட்டம் வசம் ஒப்படைக்கப்பட்டன.
1951இல் லிபியா சுதந்திர நாடானது. அரசராக இதிரிஸ் அல்கனூசி முடி சூடிக்கொண்டார். 1969 இல் அரசரை அகற்றிவிட்டு போர்ப்படைத் தளபதி முவாம்மர் அபுமின்யார் அல் கடாபி அதிபரானார். அரபு நாடுகளுடன் லிபியாவைச் சேர்த்திட முயன்றார். நாட்டில் சமதர்மத்தை நிலவச் செய்தார். நாட்டின் பல பொருளாதார நிறுவனங்களை நாட்டுடைமை ஆக்கினார். எண்ணெய்த் தொழிலை நாட்டுடைமை ஆக்கினார். லிபியாவில் அமெரிக்காவும் பிரிட்டனும் அமைத்து வைத்திருந்த வானூர்தித் தளங்களை மூடி ஆணையிட்டார். 1986இல் அமெரிக்க அரசு லிபியா மீது வான்வழித் தாக்குதல் நடத்தி திரிபோலி, பெங்காஜி நகரங்களின் குடியிருப்புப் பகுதிகளிலும் குண்டுகள் வீசி 101 பேரைக் கொன்றது. அதிபர் கடாபியின் வீடும் கூடத் தாக்கப்பட்டது. அமெரிக்கப் போர்ப்படை வீரர்கள் சென்று வரும் பெர்லின் கேளிக்கை நடன விடுதியில் லிபியா தாக்குதல் நடத்தியதாகவும் அதற்கான பதில் நடவடிக்கை இது எனவும் அமெரிக்கா கூறியது. 1992இல் லிபியா மீது பொருளாதாரத் தடைகளை அய்.நா. விதித்தது. பான் அமெரிக்கன் விமானத்தின் மீது தாக்குதல் நடத்திய இருவரை ஒப்புக் கொடுப்பதற்காக இது விதிக்கப்பட்டதாக நொண்டிச் சாக்கு சொல்லப்பட்டது. ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள லாக்கர்பி நகரின் மீது பறந்து கொண்டிருந்த விமானத்தை 1998 டிசம்பரில் தாக்கியதற்குப் பதிலடி எனக் கூறப்பட்டது. எனினும் 2003 ஆகஸ்ட் மாதத்தில் 270 கோடி டாலர் இழப்பீடு தருவதற்கான ஒப்பந்தம் ஒன்றினை தாக்குதலில் இறந்து போன ஸ்காட்லந்துக்காரர்களின் வழக்குரைஞரோடு லிபியா செய்து கொண்டது. அய்.நா. பாதுகாப்புக் குழுவுக்கு லிபியா எழுதிய கடிதத்தில், தாக்குதல் நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது. அதன்பிறகு லிபியா மீதான தடைகளை அய்.நா. விலக்கிக் கொண்டது.
வடஆப்பிரிக்காவில், மத்திய தரைக்கடல் ஓரத்தில் எகிப்துக்கும், டுனிசியாவுக்கும் இடையில் உள்ள இந்-நாட்டின் பரப்பளவு 17 லட்சத்து 59 ஆயிரத்து 540 சதுர கி.மீ. ஆகும். இந்நாட்டில் 60 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். வெளி நாட்டினர் ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர்களும் இதில் அடக்கம்.-மக்களில் 97 விழுக்காட்டினர் சன்னி முசுலிம்கள். மக்களில் 83 விழுக்காடு கல்வியறிவு பெற்றவர். அரபி, இத்தாலி, இங்கிலீசு மொழிகளை மக்கள் பேசுகின்றனர். 30 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாமல் உள்ளனர்.
------------------------"விடுதலை" 3-7-2009
Labels:
உலக நாடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment